கொரோனாவை விடக் கொடிய நோய்

குமுறும் நெஞ்சம்:21

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா மிகவும் ஆபத்தானதுதான். ஆனால் அதற்குத் தடுப்பூசியும், மருந்தும் கண்டுபிடிக்கப்போவது உறுதி. வந்த வேகத்தில் கோவிட்-19 வைரசை அறிவியல் உலகம்   ஒழித்துக்கட்டி விரட்டப்போவதும் உறுதி. ஆனால் பல நூற்றாண்டுகளாகப் பலரும் போராடியும் தீர்க்கமுடியாத- கொரோனாவை விடப் பலமடங்கு கொடியதான சாதி என்ற தொற்று நோய் இன்னும் அழியாமல் உயிரோட்டமாக இருந்துகொண்டிருக்கிறது.

இந்த நோயை எதிர்த்து இந்தியாவில், பெருமதங்களான சமணமும், பௌத்தமும், சீக்கியமும், வள்ளலாரும், பாரதியும்,  அம்பேத்காரும், பெரியாரும்  இன்ன பிற சமூக சீர்த்திருத்த பெருமக்களும் செய்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுவிட்டன. நம்மை ஆண்ட முகலாயர்களும், வெள்ளையரும் இதோடு சமரசம் செய்துகொள்ளவேண்டியவர்களாயினர். சாதிப்பெயர்களை எல்லாத் தெருக்களிலிருந்து நீக்கியும், சாதிப் பெயர் போடுவது அநாகரிகம் என்ற உணர்வை ஏற்படுத்தியும் இந்த அறிவியல் நூற்றாண்டிலும், இந்த  வைரஸ்  அழிக்கப்படமுடியாமல் சமூக நீதிக்கு சவால்  விட்டுகொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், தொழில் வேறுபாடுகளும்  உள்ளன.  பல நாடுகளில் இந்த வேறுபாடுகள் அடக்கப்பட்டுள்ளன.  ஆனால், இந்தியாவைத்தவிர உலகில் எங்கும் சாதிகள் உருவாகவில்லை. 30  இலட்சம் ஆண்டுகால மனித வரலாற்றில்  சாதியின்  ஆயுள்  காலம்  என்ன? சில ஆயிரம் ஆண்டுகள்  முன்பே தோன்றி இன்னும்  சில ஆண்டுகளில் முடியப்போகிற இந்த அவலத்தை எப்பாடுபட்டாலும் எதிர்காலத்தில் காப்பாற்ற முடியாது என்பதே இயற்கை விதி. சாதியின்  முடிவை  விரைவுபடுத்துவதே இப்போதைய தேவை. 

பிறப்பின் அடிப்படையில் மனிதனைப் பிரிக்கும் இந்தச் சாதிச் கொடுமை இந்த நாட்டினை மட்டும்  எவ்வாறு பீடித்து உருக்குலைத்து வருகிறது என்பதற்கான காரணங்களை ஆயும் ஆயிரம் நூல்களும், ஆய்வுகளும் வந்துள்ளன. காரணங்களைக் கண்டறிவது ஒரு புறம் இருப்பினும் இதற்கான மருந்தை விரைவில் கண்டுபிடித்து நடைமுறைப்படுத்துவதே இன்றைய சவாலாகும்.

தமிழகத்தைப் பொருத்தவரை சாதி இங்கு  இறக்குமதியான ஒரு நச்சரவம். சாதி என்ற சொல்லே தமிழ்ச்சொல் அன்று. இதற்கு இணையாக ஒரு  தமிழ்ச் சொல்கூட இல்லை.  குலம், குடி என்று சொற்கள் வேறு பொருளுடையன. துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகிய 4 குடிகளைத் தவிர வேறு குடிகள் இல்லை என்கிறது புறநானூறு (புறம்:335). திணை சார்ந்த தொழில் வேறுபாடுகள் இங்கு இருந்தன. ஆனால் பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை. குலத்தொழிலும்  கட்டாயம் இல்லை, நக்கீரனாருக்குப் புலவர் பணி. அவர் தந்தைக்கோ கணக்காயர் பணி. புலவர் சீத்தலைச் சாத்தனாரின் தந்தையோ கூல வணிகர். கீழடி அகழ்வாய்வில்  கிடைத்த 12,000க்கும் மேற்பட்ட பொருள்களில் சாதி, சமயக் குறிப்புகள் ஏதும் இல்லவே இல்லை.

சங்க காலத்திற்குப்பின்  சங்கம் மருவிய சிலப்பதிகாரக் காலத்தில் நுழைந்த சாதி (நால்வகை சாதியும், நலம்பெற நோக்கி- வேனிற்காதை-41) நூற்றாண்டுதோறும்  சாக்கடைச் சிறுதுளிப் பெருவெள்ளமாய்ப் பெருகி இன்று  நாற்றமெடுத்துள்ளது. இனியேனும்  இதை ஒழிக்கச் தீவிரமாகச் சிந்தித்துச் செயல்படவேண்டும்.

சாதியை ஒழிப்பதாகக்கூறும் அரசியல் கட்சிகள் பலவும் மறைமுகமாகச் சாதியை ஆதரித்துவருவது கொடுமையானதாகும். தேர்தல் நேரத்தில் கட்சிகளின் முகத்திரை கிழிக்கப்பட்டு சாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தும்  அவலம் வெட்டவெளிச்சமாகிறது. சாதியைப் பயன்படுத்தும் கட்சிகளைத் தடை செய்யவேண்டும் என்ற சட்டம் வரவேண்டும்.

வைதீகத்தையும், சாதியையும் மறுப்பது சைவம். ’சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்’ என்கிறார் அப்பர்.  ஆனால் நடைமுறையில் சைவ மடங்கள் சாதியை விட்டு விலகுவதாக இல்லை. திருவாவடுதுறை முதலிய பல சைவ ஆதீனங்களில் பிள்ளைமார்களும், பேரூர் ஆதினத்தில் வெள்ளாள கவுண்டரும், கோவிலூர்  ஆதீனத்தில்  நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களும், சாமி தோப்பில் நாடார்களும் மட்டுமே ஆதரிக்கப்பட்டுத் தலைமை வகிப்பதாகக் கூறப்படுகிறது. சைவ அறவோர் இதனைக்கண்டித்து நாயன்மார்கள்  வழியில் சாதியை ஒழிக்கும் பணியில் ஆதீனங்களை  ஈடுபடுத்தவேண்டும்.

அயலகத்திலிருந்து வந்த கிறித்துவத்திலும் சாதி தொற்றிக்கொண்டுள்ளது. கிறித்துவ நெறியில் சாதிக்கு அறவே இடமில்லை. எனினும் தாமஸ் பிள்ளை என்றும் மிக்கேல் ரெட்டியாரென்றும், சூசை நாடாரென்றும் சாதிப்பட்டங்களைக் கிறித்துவர்கள் சூட்டிக்கொண்டு இருப்பதைக் கிறித்துவ மேலிடம் கண்டித்தாக வேண்டும். கிறித்துவத் துறவியர் மடங்களிலேயே சாதிப்பிரிவினைகள் இருப்பது இன்னும் கொடுமையானதாகும். சாதிப்பற்றுள்ளவர்களை, ‘இது யேசுவின் போதனைக்கெதிரான பெரும்பாவம்’ எனக் கிறிஸ்துவத் தலைமை ஆணையிட்டுச் சாதிப்பற்றுள்ளவன் கிறித்துவன் இல்லையென அறிவிக்கவேண்டும்.

தமிழ் இதழ்களும், ஊடகங்களும் சாதி தொடர்பான விளம்பரங்களைக் கூச்ச நாச்சமின்றி வெளியிட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு புகழ்பெற்ற  வார இதழ் சாதி சிறப்பிதழ்களைச் சமூகச்சிந்தனையுடைய எழுத்தாளர் ஒருவர் ஆசிரியராக இருந்த காலத்திலேயே வெளியிட்டது வெட்கக்கேடானது. இச்சூழலில்  மலேசியாவின் தலைசிறந்த நாளிதழான மலேசிய நண்பனில் சாதி விளம்பரங்களோ, சாதிச் சங்கச் செய்திகளோ எவ்வளவு கோடி கொடுத்தாலும் வெளியிடமாட்டோம் என்று ஒரு கொள்கை முடிவை அதன் தலைவர் அமரர் ஆதி . குமணன் சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்தார். பலரும்  இதனைப் பின்பற்றி அங்கு சாதிக்கு எதிரே குரல் எழுப்பினர்,  இத்தொண்டால் மலேசியாவில் உள்ள சாதி உணர்வைச் சற்றேனும் மழுங்கடிக்க முடிந்தது. சமூகப்பொறுப்புடைய தமிழக இதழ்களும், ஊடகங்களும் இந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றினால் என்ன?

எல்லா வழிமுறைகளையும் விட இந்தச் சாதிச்சனியனைத் தலைமுழுகச் சரியான  தீர்வு, சாதிமறுப்புத் திருமணங்களை அரசும் ஆன்றோரும் ஆதரிப்பதாகும்.  நெருக்கத்தில் செய்யும் அகமணமுறை ஆரோக்கியமற்ற ஒரு தலைமுறையை உருவாக்குவதுடன்  சாதியையும் காப்பாற்றிக்கொண்டிருக்கின்றது. மேலைநாட்டினரின் உடல் வளத்திற்கும், மன நலத்திற்கும் கலப்பு மணங்களே  காரணம்.  சங்க காலத்தில் குறிஞ்சி நில ஆடவன் முல்லைநிலப் பெண்ணை  மணப்பது போன்ற கலப்பு மணங்கள் அங்கீகரிக்கப்பட்டதை அக இலக்கியங்கள் பலவும் ஐயமின்றிக் காட்டுகின்றன. குறுந்தொகையில் உள்ள  செம்புலப்பெயனீராரின் ’யாயும் ஞாயும் யாராகியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்’ என்ற பாடலே இதற்குச் சிறந்த சான்று.

இயற்கை, மானிடருக்குக் காதல் உணர்வைச் சாதி, சமய, இன வேறுபாடு பார்த்து வழங்குவதில்லை. இனக் கலப்பே இயற்கையின் நோக்கம். பல நூற்றாண்டு   மானிட  வரலாற்றில் நெருங்கிய  உறவில் பிறந்த  மனிதர்கள் நோயுற்றோ, சந்ததியின்றியோ அழிந்து போயினர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பல இனக்கலப்பில்தான் இப்போதுள்ள ஒவ்வொருவரும் வெற்றிகரமாக  உருவாகியிருக்கிறோம் என்ற வரலாற்று, அறிவியல் உண்மையைச்  சாதி வெறியர்கள் காதில் பறையடித்து முழங்கவேண்டும்.

கடைசி மருந்தான கலப்புத் திருமணத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தாவிடின் சாதி என்ற நச்சரவம் இன்னும் பல உயிர்களைக் காவு வாங்காமல் விடாது.

                                                                                                                               தொடர்பிற்கு: ejsundar@gmail.com

(சாதிக்குள் திருமணம் கேடானது என்ற அறிவியல் உண்மை அறிய இதனைச் சொடுக்கிக் காண்க: https://www.youtube.com/watch?v=6IWAkmXa5RU&list=LLDfqgMvkXDV93ocPkc-AHmg&index=4108 )

 

 

.