என்று தணியும் இந்தக் கிரிக்கெட் மோகம்?

குமுறும் நெஞ்சம்:16                 

 

அண்மையில் இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன்  சுனில் சேத்ரி, தைபே அணியுடன் நடக்கவிருந்த உலகக் கால்பந்து போட்டிக்கு நேரில் வந்து ஆதரவு தாருங்கள் என்று தம் டிவிட்டர் பக்கத்தில் மன்றாடிக்கேட்டுக்கொண்டார். மும்பையில் நடந்த அப்போட்டியில் இந்திய அணி தைபே அணியை வீழ்த்தி (5-0)  வெறிச்சோடிக்கிடந்த மைதானத்தில் தம் வெற்றியைப் பதிவு செய்தது.  அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய  கிரிக்கெட் போட்டி காவிரிப்பிரச்சினைக்காகத் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தடை செய்யப்பட்டபோது கிரிக்கெட் பித்தர்கள் அது நடைபெற்ற புனேவிற்கே ரயிலேறி வந்து ரசித்தனர். ‘ நீங்கள் ஒருநாள் மாறுவீர்கள் ’ என இந்திய கால்பந்தணி கேப்டன் தம் பதிவில் மனம் வருந்தி  குறிப்பிடிருந்தது நம் கவலைக்குரியது.

17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் மாடு மேய்க்கும் சிறுவர்கள் விளையாடத் தொடங்கிய கிரிக்கெட், பின் நிலப்பிரபுகள் மட்டுமே விளையாடும் மேல்தட்டு ஆட்டமானது. மாடுமேய்க்கும் சிறுவர்கள் விளையாட முடியாதவாறு அதன் விதிமுறைகள்  வகுக்கப்பட்டன. அதில் முக்கியமானது வெள்ளை ஆடை.

இப்படித் தொடங்கிய கிரிக்கெட் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் அடிமை நாடுகளில் பரவியது. அடிமைத்தனத்தின் நீட்சியாக ஆங்கிலேயன் ஆதிக்கம் செலுத்திய நாடுகளில் மட்டுமே பெரும்பாலும் விளையாடப்படுகிறது. பிரேசில் நாட்டின்  ரியோடி ஜனரோவில் நடந்த 2016 ஒலிம்பிக் போட்டிகளில் 207 நாடுகள் கலந்துகொண்டன, அதில் இடம்பெற்ற  41 விளையாட்டுகளில் கிரிக்கெட் இடம்பெறவில்லை. நாம் கேள்விப்படாத ஆட்டங்களெல்லாம் ஒலிம்பிக்கில் இடம் பெற்றும் கிரிக்கெட்டை ஒரு பொருட்டாக மதிக்காமல் புறம்தள்ளுவதற்குக் காரணம் விளையாட்டுக்குரிய குறைந்த பட்ச தேவைகளான - மூன்று எஸ் கள்- - ஸ்கில், ஸ்பீட், ஸ்டேமினா ஆகியன கிரிக்கெட்டுக்கு இல்லை என்பது உலகின் தீர்ப்பு. மேலும் உலகில்       12 நாடுகளில் மட்டுமே போட்டியிடத் தகுதிபெற்ற கிரிக்கெட் அணிகள் உள்ளன. கடந்த 100 ஆண்டுகளாக பிரிட்டன் இதற்கு வக்காலத்து வாங்கியும் சீந்துவாரில்லை. காரணம் பிரிட்டனின் அடிமைகளாக இருந்த பெரும்பாலான குட்டி நாடுகளில் மட்டுமே கிரிக்கெட் பிற விளையாட்டுகளோடு உயிர் வாழ்கிறது. பூமியெங்கும் மற்ற இடங்களில் வாழும் மக்களுக்குக் கிரிக்கெட் என்றால் என்னவென்றே புரியாது. 2020 இல் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 5 புதிய விளையாட்டுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டும் கிரிக்கெட்டுக்கு இடமில்லை.

 

1980 வரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை இந்தியா ஹாக்கிக்காகத் தங்கம் வென்றதும், இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியே விளங்கியதும் பழங்கதையாகிப்போனது. 1983 இல் இந்தியா முதல்முறையாக கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றபின் ஹாக்கி புறந்தள்ளப்பட்டது. எல்லா விளையாட்டுகளும் ஓரங்கட்டப்பட்டதன் விளைவாகக் கேள்விப்படாத சின்னஞ்சிறு நாடுகள் கூட தங்கம் வெல்லும்போது இந்தியா  பலசமயங்களில் தகரமெடலுக்கும் லாயக்கற்ற நிலையில் விளையாட்டுத்துறையி்ல்  சீரழிவதற்குக் கிரிக்கெட்டிற்குத் தரும் தகுதியற்ற முன்னுரிமையே காரணம்..

 

விளையாட்டு என்றே ஒப்புக்கொள்ளப்படாத ஒரு விளையாட்டைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நம் நாட்டின் பிரதமர், முதலமைச்சர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பேணிச்சீராட்டி வருகிறார்கள். எதற்கு விடுமுறை விடாவிட்டாலும் முந்திக்கொண்டு அரசுகள் கிரிக்கெட் மாட்ச் பார்க்க தொடர்விடுமுறைகள் நல்குகின்றன. நாட்டுப்பற்றை அளக்கும் அளவுகோலாகக் கிரிக்கெட் ஆட்டங்கள் சித்திரிக்கப்படுகின்றன.

 

ஆனால் ஓர் அதிர்ச்சிதரும் செய்தி என்னவெனில் இந்திய கிரிக்கெட் அணி உண்மையில் இந்திய கிரிக்கெட் அணியே இல்லை. அது BCCI என்னும் தனியார் கிரிக்கெட் கிளப்பிற்குச் சொந்தமானது. எந்த மாநிலத்திலும் நடத்தப்படும் அதிகாரப்பூர்வமான எந்தக் கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் அதனைக் கட்டுப்படுத்துவது இந்த BCCI தான். இந்தியாவின் அனைத்து விளையாட்டுகளும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளன. இந்த அமைச்சகம் பரிந்துரை செய்தால் தான் அனைத்துலக விளையாட்டுப்போட்டிகளுக்குச் செல்லமுடியும், ஆனால் கிரிக்கெட் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. உலக அளவில் கிரிக்கெட்டைக் கட்டுப்படுத்தும் பன்னாட்டுக் கிரிக்கெட் வாரியமான ICC- இன் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பாட்டு தம் சொந்த நிதி ஆதாரத்தில் இயங்கும் BCCI கடந்த 10 ஆண்டுகளில் ரூ12,000 கோடி இலாபம் ஈட்டியுள்ளது. கிரிக்கெட் பித்துப்பிடித்த ரசிகர்கள் கொட்டும் பணத்தால் கொழிக்கும் ஒரு தனியார் நிறுவனம் இந்தியாவின் பெயரைப் பயன்படுத்தி  இந்திய தேசிய கீதத்தையும், கொடியையும் பயன்படுத்தி இந்தியாவின் சார்பாக விளையாடுவது தார்மீக ரீதியாகச் சரியா?

 

BCCI நாட்டுடமைக்கப்பட வேண்டும் அல்லது இவற்றைப்பயன்படுத்த தடை விதிக்கவேண்டும். நாட்டுடமையாக்கப்படாமலிருப்பதற்கு அதில் அளவற்ற காசு கொழிப்பதும், அதன் முக்கிய நிர்வாகிகள் அரசியல் வாதிகளாக, பெரும் பணமுதலைகளாக இருப்பதுமே காரணம். எடுத்துக்காட்டிற்கு லலித் மோடி, அருண் ஜேட்லி முதலியோர் இதன் நிர்வாகிகளாக இருந்துள்ளனர். BCCI-இன் கீழ் இயங்கும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அரசு கட்டுப்பாட்டில் கிரிக்கெட் இல்லாமையால்  இதுபோன்றவற்றைத் தடுக்க வழியின்றியுள்ளது.

 

 

உலகின் முன்னேறிய நாடுகள் ஒதுக்கித்தள்ளிய கிரிக்கெட்டில் இந்தியர்கள் மட்டும் வெறித்தனமாக ஈடுபாடு செலுத்துவது ஏன்? இந்தியாவின் வரலாற்று, சமூக, உளவியல், சமய போக்கிற்குக் கிரிக்கெட் என்ற விளையாட்டு ஆயத்த ஆடை போலப்பொருந்துவதே இதற்குக்காரணம். நேரப்பஞ்சம் நிறைந்த இந்த அவசர யுகத்தில் கிரிக்கெட் நாள்முழுவதும் விளையாடப்படுகிறது. விளையாடியும் முடிவில் யாருக்கும் வெற்றியோ,தோல்வியோ இல்லாமல் போகலாம். 'கடமையைச்செய்; பலனை எதிர்பாராதே' என்ற கீதையின் போதனை நம் சமயக்கலாச்சாரத்தில் ஊறிப்போயிருப்பதால் இந்நிலை ஏற்கப்படுகிறது.. நமக்குப் பிடித்தமான, கூட்டங்கூடுவது, மகிழ்வுலா போவது இவற்றிற்கெல்லாம் கிரிக்கெட் ஸ்டேடியம் ஈடுகொடுக்கிறது. நேர உணர்வின்மை, மந்தப்போக்கு, தலைமை வழிபாடு, கேளிக்கையில் இடைவிடா ஈடுபாடு போன்ற நம் பிற்போக்குத்தனங்கள் அனைத்திற்கும் கிரிகெட் பொருந்துகிறது..

 

மதுவைப் போல  கிரிக்கெட் எல்லா உணர்வுகளையும் மழுங்கடிக்கும் போதையாக இருப்பதை விளக்க இன்றைய சூழலில் ஆதாரம் தேவையில்லை. ஈழத்தில் நிகழ்ந்த கொலைவெறித்தாக்குதலில் குழந்தைகளும். பெண்களும், முதியவர்களும் அன்றாடம் பலியாகிக்கொண்டிருந்த நிலையில் அங்கு இந்தியாவும் ஸ்ரீலங்காவும் ஆடிய கிரிக்கெட் போட்டியில் ஃபோர்களுக்கும், சிக்சர்களுக்கும் இந்திய இளைஞர்கள் கைதட்டிக்கொண்டிருந்தனர். இன்று கிரிக்கெட், விளையாட்டு என்ற நிலையிலிருந்து மிகப்பெரும் வர்த்தகச்சூதாட்டமாகவும், ஊழலின் சுரங்கமாகவும் மாறிப்போயிருக்கிறது. பெரும் தொகை வாங்கிக்கொண்டு வெற்றியை முன்பே தீர்மானிக்கிறார்கள்; விளையாட்டு வீரர்கள் கைமாறிய காசுக்காகக்  கிரிக்கெட் ஆடுவது போல நடிக்கிறார்கள். இதை உணர்ச்சிப்பூர்வமாகப்   பார்க்கும் முட்டாள் பார்வையாளர்கள்  மேலும் முட்டாள்களாகி வருகின்றனர். அரசியல்வாதிகளின் பின்னணியில் இயக்கும் நிறுவனங்கள் இந்த முட்டாள்கள் வாங்கும் டிக்கெட்  பணத்தால் கொழிக்கின்றன.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு கால்பந்து, ஹாக்கி, கபடி,வாலிபால் முதலிய வீரவிளையாட்டுகளை எங்கும் காணமுடிந்தது. இன்று குக்கிராமங்களில் கூட கோலியும், பம்பரமும் மறைந்து கோவணம் கட்டிய சிறுவர்களும் சுவரில் மூன்று கரிப்பட்டைகளைப்போட்டு மாங்கொட்டையை வைத்து மட்டையடிக்கும் காட்சியைக் காண முடிகிறது. இந்நாட்டு இளைஞர்கள் பிற விளையாட்டுகளை ஆடவே தெரியாதவர்களாகி வருகிறார்கள். இப்படி இந்தியாவின் பல சீரழிவுகளுக்கும், விளையாட்டு வளர்ச்சியின்மைக்கும் காரணமாக விளங்கும் தீய சக்தியான கிரிக்கெட்டிற்குத் தடைவிதித்தால் என்ன தவறு?  பணமுதலைகளும் அரசியல்வாதிகளும் தம் சுயநலத்திற்காக முன்னிலைப்படுத்தும் கிரிக்கெட்டை ஒழிப்பது அவ்வளவு எளிதில்லை. இதனைச் சாதிக்க கிரிக்கெட்டை எதிர்க்கும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஓர் அணியில் இணைந்து  கிரிக்கெட்போதை விடுதலை இயக்கம் காண்பது அவசியம்; அவசரம்!