பிச்சைக்காரர்கள் இல்லாமை இயலுமா?

குமுறும் நெஞ்சம்:10                   

 

இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றும் முக்கியமானவற்றில் ஒன்று பிச்சைக்காரர்களின் தொல்லை. வெளிநாட்டுப் பயணிகள் பலர் இவர்களால் சுற்றுலாத் தலங்களிலும், கடைவீதிகளிலும், ஆலயங்களிலும், போக்குவரத்து நிறுத்தங்களிலும்  பட்ட சங்கடங்களைக் கண்டு கொதித்துப்போய் இனி இந்தத் தேசத்தின் பக்கமே தலைவைத்துப் படுக்கக்கூடாது என்று செய்த பதிவுகள் நிறைய உள்ளன.

உலகின் இரண்டாவது பழைய தொழிலான பிச்சையெடுப்பதை உலகநாடுகள் பலவும் ஒழித்துள்ள நினையில் விண்வெளிச்சாதனைகளைச் சொல்லிப் பெருமையடிக்கும்     நம்நாட்டில் இந்த இழிவு அவமானகரமாகத் தொடர்கிறது. இந்தியாவெங்கும் 4,13,617 பிச்சைக்காரர்கள் இருப்பதாக அரசே நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது.

ஒருபுறம்-  ஊனமுற்று, நோய்வாய்ப்பட்டு, முதுமை அடைந்து  குடும்பத்தினரால் நிராகரிக்கப்படுவோர் பிச்சையெடுக்கிறார்கள். இவர்கள் பரிதாபத்திற்குரியோர். பிச்சையெடுப்பதை நோகாமல் பணம் ஈட்டும்  ஒரு பிழைப்பாக எண்ணித் திட்டமிட்டு ஒரு தலைமையின் கீழ்ச் செயல்படும் தொழில்முறைப் பிச்சையர் இன்னொரு புறம்.  மும்பையில் மட்டும் இதுபோன்ற பிச்சைக்காரர்கள் ஆண்டுக்கு 180 கோடிவரை ஈட்டுகின்றனர்.  மும்பையில் பாரத் ஜெயின் என்ற பிச்சைக்காரருக்கு பரேல் பகுதியில் 140 இலட்சம் மதிப்புள்ள இரு அடுக்ககங்கள் உள்ளன.

பிச்சையெடுப்பது குற்றமென்று சட்டமிருந்தும் இதனை ஏன் இதுவரை எந்த அரசும் ஒழுங்காக நடைமுறைப்படுத்தவில்லை? ஒரேமூச்சில் பாடுபட்டுப் பிச்சையெடுப்பதை ஒழித்துக்கட்ட என்ன பிரச்சினை? ஊனமுற்ற பிச்சைக்காரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதும், ஆதரவற்றவர்கள் இல்லத்தில் கட்டாயமாகச் சேர்ப்பதும்,  மாற்றுவேலை தருவதும், எதற்கும் சரிப்படாது பிடிவாதமாகப் பிச்சையெடுப்பவர்களுக்குச் சிறை தண்டனை வழங்குவதும் முடியாத பெரும் செயலா? வெறும் 5 இலட்சத்திற்கும் குறைவான பிச்சைக்காரர்களுக்குப் புதுவாழ்வு தர ஏன் எந்த அரசும் தீவிரமாக முனையவில்லை?

பிச்சையெடுப்பதும், பிச்சை வழங்குவதும் நம் பண்பாட்டு அவலம் என்பதும் ஒரு காரணம். நம் சமயங்கள் அனைத்தும் பிச்சையெடுப்பதையும் பிச்சையிடுவதையும் ஆதரிக்கின்றன. தாம் புண்ணியம் தேடிக்கொள்வதற்குப் பிச்சைக்காரர்கள் இருக்கவேண்டும் என்பதால் பிச்சைக்காரர்களை ஒழிக்கும் மனோபாவத்திற்கு வர மக்கள் தயங்குகின்றனர், அண்மையில் டில்லி உயர்நீதிமன்றமே பிச்சையெடுப்பது கிரிமினல் குற்றமாகாது என்று  பிச்சைக்காரர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆனால் நம் தமிழ்ச்சான்றோர்கள் பலரும் பிச்சையெடுக்கும் கேவலத்தைக் கண்டித்தே வந்துள்ளனர். பிச்சையெடுத்து உயிர் வாழும் நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டால் இந்த உலகை உருவாக்கியவன் அழியட்டும் என்று சீற்றத்தின் உச்சியில் நின்று திருவள்ளுவர் கதறுகிறார்(1068). நீரின்றித் தவிக்கும் பசுவுக்காக நீர் வேண்டும் என்று கூட யாசிக்காதே என்கிறார்(1062).  பிச்சையெடுப்பதை நியாயப்படுத்தும் சமண சமயத்தின் காவலர்களான துறவிகள் எழுதிய நாலடியாரே  இரு பாடல்களில் பிச்சையெடுப்பதை விடச் சாவதே மேல் என்று  கூறுகிறது.(4:10, 31:2) 'பிச்சையெடுப்பவன் துரும்பைவிடச்  சிறியவன்; பஞ்சைக்காட்டிலும் இலேசானவன், ஆனால் பஞ்சைப் பறக்கடிக்கும் காற்றுகூட பிச்சைக்காரன் தன்னிடம் பிச்சைகேட்டுவிடுவானோ என்று அவனை அடித்துச்செல்ல அஞ்சும்' என்கிறது நீதிவெண்பா (8) 'ஏற்பது இகழ்ச்சி' என்கிறது ஆத்திசூடி. யாசித்தவர்களைக் கண்டு பாரதி மனம் வெடித்தே “தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்“  என்று ஆவேசப்படுகிறார்..

பிச்சைக்காரர்கள் இல்லா உலகைக் காண்பதே இவர்களின் கனவு. ஆனால் இன்றைய நிலையில் கண்ணில் இரத்தம் வருமளவு பிச்சையெடுத்தலில் பல கொடுமைகள்  நிகழ்கின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 40,000 குழந்தைகள் கடத்தப்படுகின்றன. 11,000 பேர்களைப் பற்றித் தகவலே இல்லை. வலுக்கட்டாயமாக 3 இலட்சம் குழந்தைகள் பிச்சையெடுக்க அனுப்பப்படுகின்றனர். இவர்கள்- திருடப்பட்ட குழந்தைகள்! அனாதையான குழந்தைகள்! வறுமையால் பெற்றோரிடமிருந்து வாடகைக்கு பெறப்பட்ட குழந்தைகள்! அடித்தும், வதைத்தும், சுட்டும், கீறியும்  இவர்களுக்குச் செயற்கையாக உடலில் ரணங்களை ஏற்படுத்துகின்றனர். பாலில் போதை மருந்தைக்கலந்து நாள்முழுவதும பிச்சைகாரப்பெண்ணின் மார்பில் தூங்க வைக்கின்றனர். பரிதவிக்கும் இக்குழந்தைகளைக் காட்டிப் பரிதாபம் ஏற்படுத்தி ஒரு கூட்டம் பிச்சைக்காரப் படையை உருவாக்கியுள்ளது.  போக்குவரத்து நிறுத்தங்களில் இவர்களின் வணிகம் செழித்து வளர்ந்துகொண்டிருக்கிறது. தாயின் தோளில் படுகாயங்களுடன் காணப்படும் குழந்தையைக்கண்டு மனமிரங்கி அப்பாவி மக்கள் வழங்கும் காசு அக்குழந்தையின் பசியைத் தீர்ப்பதில்லை; இந்தக் கொடுமனத்தோரின் மதுவிற்கும், களியாட்டங்களுக்கும்,  ஆடம்பர வாழ்வுக்கும் போய் சேருகிறது, இவர்களுக்குப்பின் யாரெல்லாம் இருக்கிறார்களோ தெரியவில்லை. இனி பிச்சைப்போடுவதில்லை என்ற நாம்  சபதம் ஏற்பதே பிச்சைக்காரர்களை ஒழிக்கும் மாற்று வழியாகும்

தலைநகர் டில்லியில் உள்ள 36 'சிக்னல்'களில் 600 சிறுவர்கள் பிச்சையெடுப்பதாக அண்மையில் செய்தி வந்தது. எல்லா இந்திய நகரங்களிலும் இந்தக்கொடுமை நிகழ்கிறது. பிச்சையெடுக்க மட்டுமல்ல பாலியல் வன்கொடுமைக்கும் இவர்கள் ஆளக்கப்படுகிறார்கள். குழந்தைகளைச்  சக்கையாகப் பிழிந்தெடுத்தபின் கொன்று புதைத்தாலும் கேட்க நாதியில்லை.

மும்பைக்கும் அகமதாபாதிற்கும் சீமான்களை சுமந்துசெல்ல ஒரு இலட்சம் கோடி ரூபாய் செலவிட்டு புல்லட் ரயில் விடும் தேசத்தில், இக்கொடுமையை ஒழிக்க இன்னும்  இயலவில்லையெனில் இதயமற்ற தேசம் இந்தியா என்ற அவச்சொல்லால் நம் சாதனைகள் அனைத்தும் செல்லாக் காசாகும்.