நெகிழி மட்டும் தான் ஆபத்தா?

குமுறும் நெஞ்சம்:7                   

பிளாஸ்டிக் என்ற நெகிழி  மக்கள் வாழ்விலிருந்து முற்றிலும் நெகிழ்ந்து போகுமா?. 14 வகை நெகிழி பயன்பாட்டுப் பொருள்களுக்குத் தமிழக அரசு தடைவிதித்து பயனாளிகளைத் திணறடித்துள்ளது.. நெகிழியால் சுற்றுச்சூழல் மாசும், உடல்நலக் கோளாறுகளும் ஏற்படுவதாகக் கூறப்படுவது உண்மையாக இருக்கலாம்.  

ஆனால் நெகிழியைவிடப் பன்மடங்கு ஆபத்தை விளைவிக்கும்  நகர சாலைகளின் இலட்சணம் என்ன? சாலைகளே ஒரு நாட்டின் நாகரிகத்தின் அடையாளம் எனக் கணிக்கப்படுவதுண்டு. 

ஆனால் இங்கோ சாலைகள். கூட்டம்போடும் அரங்கமாக, விளையாட்டு மைதானமாக, கழிப்பிடமாக, குளியலறையாக, கட்சிக்கொடிகளும், வளைவுகளும் நாட்டுமிடமாக, அரட்டை அரங்கமாக, படுத்துறங்கும் இடமாக இன்னும் இப்படி பலவற்றிற்குமாக விளங்கும் அவலத்தை  ஏன் எந்த அரசும் கண்டும் காணாமல் இத்தனை காலம் இருக்கின்றன?

சாலைகளைக் கடைக்காரர்கள் ஆக்கிரமித்துத். தம் கடைக்கு முன்னால் பந்தல் போடுகிறார்கள். விளம்பர பலகைகளை நிற்கவைத்து நடப்போரை நடுவீதிக்குத் துரத்துகிறார்கள்.

நகரின் எந்தச் சாலையிலும் 10 அடிக்குமேல் நிம்மதியாக வண்டியோட்ட முடியுமா?. சாலையை எப்படிப் போடக்கூடாது என நம்மிடம்  வந்து உலக நாடுகள் பாடம் கற்கலாம்.   குறும்பள்ளம்; சாக்கடை மூடியின் உப்பல்; பார்க்கமுடியாதபடி மறைந்து திடீரென வீழ்த்தும் பெரும்பள்ளம்; சாலையோரத்து வெட்டுகள், கீறல்கள், திடீர் மேடுகள்! மழைவந்தால் எல்லாப் பள்ளங்களும் மறைந்து வாகனங்களை நிலைகுலையச்செய்யும் விபரீதம்!

மாநகராட்சி, மின்சார வாரியம், வடிகால் வாரியம், ஊடக நிறுவனங்கள் என ஆளுக்கு ஆள் தோண்டிப் போட்டுவிட்டுச் செல்லும் பள்ளங்கள் பொறுப்பற்ற முறையில் பலமாதங்கள் மூடப்படாமல்  மக்களைக் காவு வாங்கக் காத்திருக்கின்றன. அதுவும் மழை காலம் தொடங்கும்போதுதான் அதிதீவிரமாக இந்தப் பள்ளம் தோண்டும் பணியில் இவர்கள் கொடூரமாக இறங்குகிறார்கள். .

விபத்திற்கு முக்கிய காரணம் வாகன ஓட்டிகளின் மிகுவேகமும், கவனக்குறைவும் மட்டுமன்று சாலைகளின் அவலநிலையும்தான் என்பதை உச்சநீதிமன்றமே உறுதிப்படுத்தியுள்ளது. 2013- 2017 காலக்கட்டத்தில் மட்டும் நம் நாட்டின் சாலை அவலங்களால் 14,926 மனித உயிர்கள் பலியாகியுள்ளதை நீதிமன்றம் வருத்தத்துடன் பதிவுசெய்துள்ளது.

பலருக்கும் இலாபம் கொழிக்கும் ஒப்பந்தங்களில் சாலைபோடலும் ஒன்று. அடிக்கடி சாலை போடமுடிந்தால்தான் வருவாய் பெருகும் என்பதாலேயே அட்டை சாலைகளை அறிந்தே போடுகிறார்கள். அரசு இதற்கு ஒதுக்கும் நிதியில் மிக நல்லமுறையில் சாலை போடலாம். ஆனால் பல படிகளில் கமிஷன் தொகை பறிமாறப்படுவதால்  கடைசியில் கால் பங்கே மிஞ்சுகிறது. ஐஸ்கட்டியை ஒவ்வொருவராகக் கைமாற்றிக்கொண்டே போனால் கடைசியில் என்ன மிஞ்சும்?

மக்களைக் கொல்லும் இன்னொரு அவலம் புகைமாசு. நம் பெருநகரங்களின் வாயிலாக 800-1000 டன்  மாசுக்காற்று வெளிக்குள் செல்கிறது. இதில் சரக்கு வாகனங்கள் மட்டும் 64% கார்பன் மோனாக்சைட் எனும் நச்சு வாயுவைக்  கக்குகின்றன. அரசின் கட்டுப்பாடுகளில் உள்ள அரசு பேருந்துகளும் தம் பங்கிற்கு  நிறைய  புகை மாசை இலவசமாக வழங்கத் தவறுவதில்லை. சாலை சிவப்பு விளக்கில் காத்திருப்போரே முதல் நிலையில் இந்நச்சுப்புகைக்கு ஆளாகின்றனர். நுரையீரல் செயலிழப்பு, புற்றுநோய், தோல் அரிப்பு, முடி உதிர்தல் ஆகிய நலக்கேடுகளைப் பலருக்கும்    இப்புகை தோற்றுவிப்பது உறுதி..

பொதுப் போக்குவரத்தின் தோல்வியின் விளைவாகவே திரும்பும் திசையெங்கும் இரு சக்கர வாகனங்கள் மலிந்துள்ளன. இவை விளைவிக்கும் புகைமாசு ஏற்படுத்தும் தாக்கம் அச்சத்துக்குரியது. மிதிவண்டியோட்டலும், பொதுப் போக்குவரத்தை விரிவுபடுத்தலும் முன்னேறிய நாடுகளில் மிகுந்துள்ளன.. இலண்டன். நியூயார்க், பீஜிங், டோக்கியோ முதலிய பெருநகரங்களில் இலட்சக்கணக்கான மக்கள் மிதிவண்டிகளில் செல்வது பெருகி வரும் நிலையில் இங்கு மிதி வண்டி ஓட்டலே அநாகரிகமாகப் பார்க்கப்படுகிறது. அப்படியே ஓட்டினாலும் நம் நெரிசலான சாலைகளில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

நெகிழி மேலாண்மையைச் சரியாகக் கையாளத் தெரியாமையால் நெகிழியை ஒழிக்கமுன்வரும் அரசு நெகிழி ஒழிப்பை மறுபரிசீலனை செய்து முதலில் சாலை பிரச்சனைக்கும், புகை பிரச்சினைக்கும் முன்னுரிமை கொடுத்து மக்களைக் காப்பாற்றுவது அவசியம். 

நெகிழி நின்று கொல்லும். ஆனால் சாலைசீர்கேடோ அன்றே கொல்லும், புகை வதைத்துக்கொல்லும்,  என்பதே பேருண்மை.