புறநானூற்றில் போர் மறுப்புச் சிந்தனைகள்
புறநானூற்றின் இன்னொரு முகம்
எட்டுத்தொகை நூல்களில் போர்கள் பற்றி விரித்துரைக்கும் நூல்கள் புறநானூறும் பதிற்றுப்பத்தும் மட்டுமே ஆகும். சங்க காலப் போர்கள் பற்றிய போதிய புறச்சான்றுகள் இன்னும் கிடைக்கப் பெறாத நிலையில் புறநானூறு வழி அறியலாகும் செய்திகள் அதனை ஓரளவு ஈடு செய்கின்றன. போர் பற்றிய செய்திகளை மிகுதியாகத் தெரிவிக்கும் போர் நூலாகப் புறநானூறு கருதப்படுகிறது. ஆனால் போர்முகம் மட்டுமன்றி அமைதியான முகமும் இந்நூலுக்கு உண்டு. இந்நூலில் போர் மறுப்புச் செய்திகளும் உள்ளதை இந்நூலின் இன்னொரு சிறப்பாகக் கொள்ளலாம். கிடைத்த 398 புறப்பாடல்களில் 232 பாடல்களில் ஏதோ ஒரு வகையில் இரத்தக்கறை படிந்தே உள்ளதாயினும் அறவே போர் மற்றும் அது தொடர்பான எந்தச் செய்திகளையும் குறிப்பிடாத 166 பாடல்கள் புறநானூற்றின் இன்னொரு முகமாக உள்ளன.1 போருக்கு எதிர்மறைச் சிந்தனைகளை உருவாக்கும் இத்தகைய புறநானூற்றுப் பாடல்கள் போரில்லா உலகைப் படைக்க விழைவோருக்கு உதவுவனவாகும்.
போர்க்கொடுமைகள் ஒப்பீடு
வீர ஊழிக்காலத்தில் உலகெங்கும் போர்கள் இயல்பாகவும், நியாயப்படுத்தப்பட்டும் நிகழ்ந்துள்ளன. இறைவன் என்பது அரசனுக்கும் கடவுளுக்கும் பொதுப்பெயர். அரசு இறைமை ஆக்கப்பெற்று அரசன் இறைவன் ஆக்கப்பட்டமையால் அரசரைச் சார்ந்து எழும் போருக்கும் இறைமை ஏற்கப்பட்டது.2. எனவே போர் புனிதமானதாக மாறியதால். அதில் நிகழும் கொலைகளும் வன்முறைகளும் கொடுமைகளும் சிறப்பிக்கப்பட்டன. எதிரியைக் கொல்வது வீரம்; அவன் சொத்தைச் சூறையிடுவது போர்ச்செலவுகளை ஈடுகட்ட; எதிரியின் நிலத்தை, அரண்மணையை இடிப்பது அவனுக்குப் பாடம் புகட்ட என நியாயங்கள் கற்பிக்கப்பட்டன. சங்க கால அறநோக்கு இன்றைய அறநோக்கிலிருந்து மாறுபட்டது என்ற புரிதலோடு புறநானூற்றை அணுகவேண்டியுள்ளது.
இவ்வகையில் புறநானூறும் போர்க்கொடுமைகளை வீரச்செயல்களாகவே சித்திரிக்கிறது. இக்கண்ணோட்டத்துடன்தான் புலவர்கள் போர்க்கொடுமைகளைப் பாடியுள்ளனர். அவற்றில் சில வருமாறு:
பயனற்ற செடிகளைப் பசு மேய்ந்தமைக்குப் பசுவின் உடைமையாளரின் கண்ணைக் குருடாக்கி ஒறுத்த செய்தியை அகநானூறு கூறுகிறது (அகம்:262). ஆனால் நெல்விளையும் கழனியை அழிக்கும் மன்னர்களின் செயல்கள் பாராட்டப்படுகின்றன. போரில் செய்யும் கொடுமைகள் அன்றைய நிலையில் தவறாகக் கருதப்படாமல் வெற்றிபெற்றவனின் சிறப்பாகப் பார்க்கப்பட்டன. இஃது அக்காலத்தின் கோலமாகும். மற்றும் மன்னனிடம் பரிசிலை நாடிச்செல்லும் புலவர்கள் பலருக்கு இப்படி மன்னனைப் பாராட்டுவது தேவையும் தவிர்க்கமுடியாததுதாகும்.
போர்க்கொடுமையைப் புகழ்ந்து பாடிய நெட்டிமையாரும் ஔவையாரும் பெண்பாற் புலவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமகாலத்தில் உலகின் நான்கு பழம்பெரும் நாடுகளில் நிகழ்ந்த போர்க்கொடுமைகளில் சிலவற்றைத் தமிழக நிலையோடு ஒப்புநோக்குவோம்:
உலகம் முழுவதும் நிலவிவந்த போர்க்கொடுமைகளுக்குத் தமிழகமும் தப்பவில்லையாயினும் இந்தக் கொடுமைகள் இடையே இங்குள்ள மனித நேயமும் ஊடறுத்துச்சென்றதால் போர்க்கொடுமைகளின் வீச்சுத் தணிந்துள்ளதை உணர முடிகிறது.
போர்க்காரணங்களும் போர்த்திணைகளும்
ஆதிக்க விரிவாக்கம் (புறம்:7,8), பொறாமை (புறம்:109), குடும்ப மனவேறுபாடு (புறம்:165), மகள் மறுத்தல் (புறம்: 336,349), குலத்துக்குள் உட்பூசல் (புறம்: 45,73), தன்மானம் காத்தல் (புறம்:72) முதலிய காரணங்களால் போர் தவிர்க்கமுடியாது என்ற பேருண்மையை உணர்ந்ததால்தான் ‘ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும் புதுவது அன்று; இவ்வுலகத்து இயற்கை’ (புறம்:76) என்று இடைக்குன்றூர் கிழார் குறிப்பிடுகிறார். தவிர்க்கமுடியா இப்போரை முறைப்படுத்தும் முயற்சியாகவே போர்த்திணைகள் வகுக்கப்பட்டன.
மனிதரின் பாலியல் உணர்வுகள் தவறான திசைநோக்கிச் செல்கையில் அதனை முறைப்படுத்த ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ (தொல்:கற்பியல்-4) என்று தொல்காப்பியர் திருமணம் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்வைக் குறிப்பிடுவார். அதன் தொடர்சியாக அகத்திணைகள் ஐந்தும் தமிழ்ச்சான்றோரால் நிறுவப்பட்டன. இதே வழித்தடத்தில் மனிதர்களின் மறச்செயல்கள் அத்துமீறிச்செல்வதை அடக்கி முறைப்படுத்தவே புறத்திணைகள் ஏழும் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு புறத்திணை நிகழ்வுக்கும் ஒவ்வொரு பூ அணிந்து செல்லும் முறை இந்த ஒழுங்குபடுத்தலின் ஓர் அங்கமாகும்; நிகழ்வுகளுக்கேற்ப சீருடை அணியும் இன்றைய முறைக்கு ஒரு முன்னோடியுமாகும்.
வெட்சி, வஞ்சி. உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி. பாடாண் என்று தொல்காப்பியம் கூறும் 7 புறத்திணைகளில் காஞ்சி. பாடாண் திணைகளும் பின்னர் சேர்க்கப்பட்ட பொதுவியல் திணையும் புறநானூற்றில் போரைப் பற்றி மிகுதியாகப் பாடாத திணைகளாக உள்ளன. போர்ச்சூழலை எதிர்க்கும் பாடல்களாகவும் இத்திணைப்பாடல்கள் சில அமைந்துள்ளன. எனவே போர்த்திணைகளை வகுத்தவர்களுள் சிலர் போருக்கு எதிரான கருத்துகளையும் கொண்டவர்களாக விளங்கியதால்தான் இந்த 3 திணைகளையும் சேர்த்துள்ளனர் என்பதைத் தெற்றெனப் புரிந்துகொள்ளமுடியும்.
மேலும் தொல்காப்பியம் தெரிவிக்கும் போர் பற்றிய செய்திகள் பழங்காலச்சமூகத்தின் எச்சங்களாகவும், நினைவுகளாகவும் இருந்து எழுதப்பட்டவையே அன்றி உண்மையில் சங்க காலத்தில் நிகழ்ந்தவை அல்ல என்கிறார் அருட்திரு தனிநாயகம் அடிகளார்.7
போர் மேலாண்மை
போரினால் வன்மை அற்றோருக்கு இடுக்கண் நிகழாவண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் போர் மேலாண்மை பற்றியும் புறநானூறு கூறுகிறது.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி தாம் முற்றுகையிடும் நகரங்களில் போருக்கு ஈடு கொடுக்கமுடியா உயிரினங்களைப் பாதுகாப்பான இடங்களுக்குப் போய்ச்சேர எச்சரிப்பானென இதே மன்னனின் போர்க்கொடுமைகளைப் பாராட்டிய நெட்டிமையார் இந்தப் போர் அறத்தையும் பாராட்டுகிறார்:
‘ ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம் அம்பு கடிவிடுதும், நும் அரண் சேர்மின்’ (புறம்:9)
இது பண்டைய மன்னர் பலரும் பின்பற்றிய மனித நேய நடவடிக்கை என்பதை இப்பாட்டின் மூலம் உணரலாம்.
போர் அழிவைத் தடுக்கக் கோட்டையை முற்றுகையிட்டிருப்பவர்களுக்கு அறம் உணர்த்தும் வகையில் கோட்டைக்குள் இருப்போர் கரும்பு அம்பு எய்து காட்டுவர். சோழன் நலங்கிள்ளி இம்முறையைப் பின்பற்றியதாக உறையூர் முதுகண்ணன் சாத்தனார் கூறுகிறார் (புறம்:28).
போர்த்தடுப்பு முயற்சிகள்
போர் மூள்வதையே தடுக்கும் முயற்சிகளை மன்னர்கள் மேற்கொண்டுள்ளனர் என்பதற்குச் சான்றுகள் உள. அன்றைய ஊடகவியலாளர்களான புலவர்களும், பார்ப்பனர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதியமானுக்காக ஔவையார் தொண்டைமானிடம் தூது சென்று போர்த்தடுப்பு முயற்சியில் சூசகமாக ஈடுபட்டார் (புறம்:95). ஒரு பகை மன்னனிடம் இரவு நேரத்தில் போய்ச்சேர்ந்த ஒரு பார்ப்பன இளைஞன் தன் திறமையான உரையாடலால் போரைத் தடுத்து நிறுத்துகிறான். மதிலைக் கைப்பற்றுவதற்கு ஆயத்தமாக இருந்த அம்மன்னன் ஏணி, சீப்பு ஆகியவற்றையும் யானைகளின் மணிகளையும் உடனே நீக்கியதாக பார்ப்பன வாகைத்துறையில் மதுரை வேளாசன் கூறுகிறார் (புறம்: 305)
போரில்லா நாட்டின் மகிழ்ச்சி
போர் அச்சமின்றி மன்னன் அமைதியாக ஆட்சி நடத்தும் நாட்டில் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் என்பதை விளக்கிக்காட்டி புலவர்கள் போருக்கு எதிரான கருத்தாடல் செய்த பாடல்களையும் புறநானூற்றில் காண முடிகிறது. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் நாட்டில் சோறாக்கும் நெருப்பையும், செஞ்ஞாயிற்றின் வெம்மையையும் தவிர போர், வறுமை ஆகிய வெம்மைகளை மக்கள் அறியார். இந்திர வில்லையன்றிக் கொலைவில்லை அவர்கள் கண்டதில்லை. கருவுற்ற பெண்டிர் மண்ணை உண்பாரேயன்றி பகைவர் மண்ணைக் கைக்கொள்ளார். கம்பத்தில் கட்டப்பட்ட போர் யானை வெண்கொற்றக்குடை நிழலில் நின்று சுகம் காணும். இது கண்ட வாள் இல்லாதோர் அக்குடையே காவலாக அதன் கீழ் உறங்குவர். நாடு போரின்றி இருப்பதால் பொன்னால் செய்த தும்பை மாலையணிந்த போர்வீரர்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடுவர். சுற்றிக் கரும்பால் கட்டப்பட்டு நெற்கதிரால் வேயப்பட்ட பாடிவீடுகள் எங்கும் மிளிரும். அரிசி குற்றுவோரின் உலக்கையொலி அங்கே முழங்கும். அங்குப் பாசறைக்கே காவல் போடுவதில்லை. இப்படிப் போரில்லா நாட்டில் மகிழ்ச்சி நிறைந்திருப்பதைப் புலவர் குறுங்கோழியூர் கிழார் விளக்குகிறார் (புறம்:20,22). இப்பாடல்கள் போரின்றி நாடுகள் வாழவேண்டும் என்ற விழைவைத் தூண்டுவனவாகும்.
போர் விளைவித்த குற்றவுணர்ச்சி
போரில் ஒருவர் நிகழ்த்தும் கொலைகள் போர் அறத்தின்படி ஏற்கக்கூடியதாயினும் மனித நேயம் மிக்கவர்கள் மனதில் இக்கொலைகள் குற்ற உணர்ச்சியை விளைவித்தே தீரும். மாமன்னர் அசோகர் மனதில் ஏற்பட்ட இக்குற்றவுணர்ச்சியே அவரின் பெரும் மனமாற்றத்திற்குக் காரணமாகி நாடெங்கும் பௌத்தம் தழைக்க வழிவகுத்தது. புறநானூற்றில் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி, இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆகிய 3 மன்னர்களும் பகைவர் நாடுகளை அழித்து பலரின் இறப்புக்குக் காரணமாக இருந்தவர்கள்; அதேநேரத்தில் பெரும் யாகங்களையும் நிகழ்த்தியவர்கள். இவர்களில் இருவரின் பெயர்களோடு யாகச்செயல்பாடு சிறப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. போர் கொடுமைகள் விளைவித்த குற்ற உணர்ச்சியே இவர்களைப் பெரும் யாகங்கள் நிகழ்த்த தூண்டியிருக்கக்கூடும். அவர்கள் மனித நேயர்களாக விளங்கியதை அவர்களைப் பாடும் புலவர்கள் புகழ்ந்துரைத்திருக்கின்றனர் (புறம்:15,16,26).
பாண்டிய நெடுஞ்செழியன் போரில் பகைவரை அழித்தபோது அவர் மனைவியர் கூந்தல் களைந்து கைம்மை பூணுவதைக்கண்டு மனம் இரங்கி தொடர்ந்து போரிடுவதை அவன் கைவேல் நிறுத்திற்று எனக் குறிப்பிடுகிறார் புலவர் கல்லாடனார் (புறம்:25).
இனிப் புலவர்கள் நேரடியாகப் போரைத் தணிக்கும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்ட நிகழ்வுகளை விரிவாகக் காண்போம்
அன்பும் அருளும் காட்டுக
மனிதவாழ்வின் உயர்பண்புகளை அரசர்களுக்கு எடுத்துரைப்பது அவர்களிடம் உறைந்துள்ள மனிதநேயத்தை வெளிக்கொணரும். சிறப்பாக அன்பும் அருளும் இருக்கும் இடத்தில் பகை மறையும். அதன் விளைவாக அவர்கள் போர்வெறி தணியும்.
போர் இல்லா அருளாட்சியே புலவர்களின் மனமார்ந்த விழைவு என்பது இதனால் பெறப்படும்.
வேளாண்மைப் போற்றுக
நாட்டின் அடிப்படை தேவையான உணவை உருவாக்கும் வேளாண்மைக்குச் சிறப்பளிக்கும் சிந்தனையை மன்னர்களிடம் தோற்றுவித்தால் அவர்கள் கவனம் போரிலிருந்து திசை திரும்பும். இதனைக் காவலர்களுக்கு உணர்த்தும் பாடல்கள் சில புறநானூற்றில் மிளிருகின்றன.
மண்ணாசை வேண்டா
எல்லா அதிகாரமும் அரசன் கையில் குவிந்துள்ள சமூக அமைப்பில் மன்னனுக்கு நற்சிந்தனைகளை உணர்த்த பெரும் எச்சரிக்கையைக் கையாளவேண்டியுள்ளது. மன்னன் சீற்றத்திற்கு ஆளானால் சொல்ல வந்த அறிவுரை வீணாவதுடன் உயிரை இழக்கவும் நேரிடலாம். எனவே சில மனம் வருத்தும் அறிவுரைகளை வெல்லத்துள் கசப்பு மருந்திட்டு வழங்குவதுபோலப் புலவர்கள் வழங்கினர். மாற்றான் மண்ணைக் கவர மன்னன் அவா உறும்போது அவன் போருக்கான பேராசையைத் தவிர்க்க இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
போரே வேண்டா
இலைமறை காய்மறையாகக் கூறாமல் நேரடியாகவே போரை நிறுத்த அறிவுறுத்தும் பாடல்கள் சில உள்ளன. புறநானூற்றில் இடம்பெற்ற 157 புலவர்களின் சிலர் நாட்டு நலன் கருதி எதற்கும் அஞ்சாது மன்னனுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். மேம்பட்ட அறிவுலகச்சூழல் அன்று இருந்ததை இத்தகைய சான்றோர் பாடல்கள் உணர்த்துகின்றன.
மன்னன் போரை நிறுத்தியதோடு புதல்வர்களின் போக்கிற்கு எதிராக வடக்கிருந்து உயிர்நீத்து அறவழியில் பாடம் புகட்டினான்
போர்த்தீயைத் தணிக்கும் நிலையாமை
வறுமையுற்ற பாலை நிலத்து மறவர் ஆநிரையைக் கவர்ந்து செல்ல, அதனை முல்லை நிலத்து ஆயர் மீட்டுவர, ஆநிரை காரணமாக வெட்சி, கரந்தை திணை போர்களாக மாறிய சூழல் வலுப்பெற்று கால மாற்றத்தில் வேறு உருவம் கொண்டு மன்னரிடையே கடும் போரிடும் நிலை உருவாகி பேரழிவிற்குக் காரணமாயிற்று.
இதனை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியே காஞ்சித்திணை ஆகும். காஞ்சித்திணையின் 20 துறைகளில் மாற்றுவதற்கரிய கூற்றுவனின் கொடுமையக்கூறும் ஒரு துறையாக பெருங்காஞ்சி உள்ளது. புறநானூற்றில் உள்ள 9 பாடல்கள் (194,357,359,360,362,364,363,365,366) பெருங்காஞ்சித் திணையில் அமைந்துள்ளன. போர்வெறி நோய் மன்னவர்க்கும் மற்றவர்க்கும் தலைக்கேறாமல் தடுப்பூசியாகச் செயல்படுவது நிலையாமையை உணர்த்தும் பெருங்காஞ்சித்துறைப் பாடல்களாகும். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
மண்ணாசையால் விளைந்த போர்த்தீயை இதுபோன்ற பாடல்கள் தணித்திருக்கும் என்பது உண்மை.
மூவேந்தரை ஒருமைப்படுத்தும் முயற்சி
புறநானூற்றில் நமக்குக் கிடைத்துள்ள 398 பாடல்களில், 138 பாடல்களில் 43 மூவேந்தர்களும், 141 பாடல்களில் 48 குறுநில மன்னர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டதை விளக்கும் பாடல்கள் மிகுதியாக உள்ளன. ஆனால் இவர்கள் போர்க்களத்திற்கு வெளியே ஒன்றிணைந்து செயல்பட்ட நிகழ்வுகள் அரிதாகவே உள்ளன. தமிழ் மன்னர்கள் போரின்றி ஒன்றுபட்டுச் செயல்பட்டிருந்தால் பல நூற்றாண்டுகள் தமிழகம் அந்நியர் ஆட்சிக்கு அடிமைப்பட்டிருந்ததைத் தவிர்த்திருக்கலாம். ஒற்றுமையின் இன்றியமையைத் தமிழறிஞர்கள் கூட உரிய அளவு எடுத்துரைக்கவில்லை. பல உயர் பண்புகள் பற்றிப் பாங்குடன் பாடிய திருவள்ளுவர் கூட ஒற்றுமை பற்றி ஓர் அதிக்காரம் அமைக்காமல் விட்டது வியப்பளிக்கிறது. அறக்கருத்துகள் பலவற்றை வற்புறுத்திய புலவர்கள், மன்னரகள் போரின்றி ஒற்றுமையாக வாழவேண்டும் எனப் பாடிய பாடல்கள் எத்தனை? இரு பாடல்களில் மட்டும் ஒன்றாகக் காட்சியளித்த மன்னர்களைப் புலவர்கள் பாராட்டிப் பாடும் அரிதினும் அரிதான நிகழ்வு காணப்படுகிறது.
‘நீங்கள் இருவரும் பலராமனும், திருமாலும் போல ஒன்றாக இருப்பதைக் காண்பதைவிட இனியது எனக்கு வேறில்லை. நீங்கள் இப்படி ஒற்றுமையாக இருந்தால் கடல் சூழ்ந்த உலகம் முழுவதும் உங்கள் கைப்படும். நீங்கள் ஒருவருக்கொருவர் உதவுங்கள். உங்கள் அன்பு நெஞ்சத்தைப் பிரிப்பதற்கு முயல்வோரின் சிறப்பற்ற சொற்களைக் கேட்டுவிடாதீர்கள்! இன்று போல் என்றும் இணைந்தே வாழுங்கள்’’ என்று புலவர் இந்த ஒன்றிப்பை அளவற்ற மகிழ்வோடு வரவேற்றுப் போற்றுகிறார். ( புறம்:58)
’நிலவுலகம் நம்முடையதே என்று ஆள்வோர் எந்நாளும் கூற முடியாது. மன்னர் மறைந்தபின் அவர்களோடு தொடர்பில்லா வலியவர்களுக்கு அது போய்ச் சேரும். எனவே அந்தணர்க்கும், இரவலர்க்கும் வழங்கி நிலையான புகழ்பெறுங்கள். பார்ப்பார் வளர்த்துள்ள முத்தீ போல மூவேந்தர்களும் ஓரிடத்தில் இருக்கிறீர்கள். வானத்து மீன்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மழையில் உள்ள நீர்த்துளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஒருங்கிருக்கும் உங்களது வாழ்நாள் பெருகவேண்டும். ஞாயிறு, திங்கள் ஆகிய இரண்டு சுடர்களும் இணைந்து செல்வதில்லை. நீங்களோ மூவரும் இணைந்து காட்சி தருகிறீர்கள். இது பெரும்பேறு. பிறரை வாழச்செய்வதுதான் நல்வினை. இந்த நல்வினை உங்களை ஏற்றிச் செல்லும் மிதவையாக உதவும். வாழ்க்கைத் துன்பத்தில் மூழ்கும்போது உற்றத் துணையாகும். இந்த நல்வினை போல வாழ்க்கைக்கு இன்பம் தந்து உதவக்கூடியது வேறு ஒன்றும் இல்லை.’ இந்தப் பாராட்டுக் கலந்த அறிவுரையில் போரில்லா அமைதியான தமிழகம் மலரவேண்டும் என்ற ஔவையின் வேட்கை புலப்படுகிறது.(புறம்:367)
மூவேந்தர் ஒற்றுமைக் காப்பியமாக சிலப்பதிகாரத்தை உருவாக்க இளங்கோவடிகளுக்கு இப்பாடல் வழிகாட்டியிருக்கக்கூடும்.
போரில்லா உலகிற்கு வழிகாட்டும் பாடல்
‘மனித உள்ளங்களில்தான் போருக்கான காரணங்கள் தோன்றுவதால் மனித உள்ளங்களில்தான் அமைதிக்கான அரண்கள் அமைக்கப்பெறல் வேண்டும்’ என்பது ஐநாவின் முகப்பு வாசகம்.8 இந்த முகப்பு வாசகத்திற்கு அருகே புறநானூற்றில் போரில்லா உலகிற்கு வழிகாட்டும் ‘ யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகளும்(புறம்:192) இடம்பெறத் தகுதியானதாகும். போரில்லா உலகிற்குப் புறநானூறு அளித்த மிகப்பெரும் கொடை இதுவாகும். உலக மக்கள் அனைவரையும் உறவினர்களாக ஒன்றிணக்கும் இப்பாடல் போர் மறுப்புப் பாடல்களில் தலைசிறந்ததாகும். இன, சாதி, சமய பூசல்களை நிரந்தரமாக சாய்க்கவும் இப்பாடல் வழிகாட்டும். எனவேதான் இப்பாடல் உலக அரங்கில் பல சிறப்புகளைப் பெற்றுத் தமிழ்ச்சமூகத்திற்குப் பெருமையளிக்கிறது. அமேசான் அனைத்துலக இசைப்பட்டியலில் இப்பாடல் முழுவதும் இசையுடன் இடம்பெற்றுள்ளது.12
போர் மறுப்புக்குப் புறநானூற்றின் பங்களிப்பு
புறநானூற்றில் உள்ள பல பாடல்கள் மனித நேயத்தை வளர்த்துப் போரில்லா உலகைப் படைக்கும் பணிக்குத் துணைநிற்க முடியும். அவற்றில் சில வரிகள்:-
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்கென முயலுநர் ஓம்புமின் (புறம்: 182)
நெல்லும் உயிர்அன்றே நீரும் உயிர்அன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் (புறம்; 186)
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம்:187)
உண்பது நாழி, உடுப்பவை இரண்டே ( புறம்: 189)
இன்னாது அம்மஇவ் வுலகம்
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே (புறம்:194)
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் (புறம்: 195)
உலகெங்கும் 2020 ஆம் ஆண்டில் இராணுவச்செலவுகள் $2 டிரில்லியன் அளவை எட்டிய நிலையில் அதில் இந்தியாவின் பங்களிப்பு 3வது நிலையில் உள்ளது.13 குடிநீருக்கும்,வறுமை ஒழிப்பிற்கும், கல்விக்கும் செலவிடுவதை விட இராணுவத்திற்குச் செலவிட நாடுகள் மிகுந்த அக்கறை காட்டுகின்றன. $24 பில்லியன் மட்டுமே செலவிட்டால் பூமிப்பந்து முழுவதும் தூய்மையான நீரும் சுகாதார வசதிகளும் அனைவருக்கும் வழங்க முடியும்.14 ஆகவே உலக நாடுகள் ஒன்றுகூடிப் போர்நிகழும் சூழலைக் கைவிட்டால்தான் வளமான வாழ்வு கைகூடும். எனவே ‘கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என்ற பாரதிதாசனின் கூற்றை உண்மையாக்க வேண்டும். அதற்குப் புறநானூறும் சிறப்பான பங்களிப்பை வழங்கமுடியும்.
சான்றெண் விளக்கம்
1.புறம்:1,5,10,18,20,30,34,46,47,49,50,55,56,58,67,70,75,83,101,102,105-108,112,113,117-119,121-124,127,129,131-138,140,141,143-155,157,159-166,168,171-173,175,176,182-197,199,201,202,204-210,212,214-223,228,231,232,234-238,240-252,256,266,312,313,320,328,331,333,335,358-361,363-367,374-376,379,381,383-386,388,389,391,393-395,398,399=166 பாடல்கள்
2. க.ப. அறவாணன், தமிழ் இலக்கியச் சமூகவியல்- முதற் பதிப்பு பக்:70
3. The End of the Bronze Age p 50-51 by Robert Drews. Drews himself references The Historical Records of Ramesses III by William Edgerton and John Wilson
4. Siege of Carthage (Third Punic War) – Wikipedia
5. Siege of Melos – Wikipedia, List of massacres in Greece - Wikipedia
6. Battle of Changping – Wikipedia, Bai Qi – Wikipedia
7.ஆச்சாரி, சங்ககாலப் போர்முறைகளும், விதிகளும், சிறகு இணைய இதழ் மே 5,2021
8. நா.சங்கரராமன், போர் இல்லாத பூமி வேண்டும் இன்று உலக அமைதி தினம்- தினமலர் செப் 21,2015
9. தமிழில் ஒரு புரட்சி என்ற முகநூல் பக்கப்பதிவு: https://www.facebook.com/தமிழில்- ஒரு- புரட்சி
10. தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்- தமிழச்சி தங்கப்பாண்டியன் பேச்சு – தினமலர், அக்09,2010
11. தமிழில் ஒரு புரட்சி என்ற முகநூல் பக்கப்பதிவு: https://www.facebook.com/தமிழில்- ஒரு- புரட்சி
12. கணியன் பூங்குன்றனார் - தமிழ் விக்கிப்பீடியா
13. https://www.sipri.org/media/press-release/2021/world-military-spending-rises-almost-2-trillion-2020
14. Scilla Elworthy, Working for a world without war, Resurgence & Ecologist magazine issue 302, May/June 2017
துணைத்தூண்கள்
1.புறநானூறு - மூலமும் உரையும்- உ.வே. சாமிநாதய்யர்
2. புறநானூறு - மூலமும் உரையும்- ஔவை சு. துரைசாமிப் பிள்ளை
3. புறநானூறு தெளிவுரை- புலியூர்க் கேசிகன்
4. புறநானூறு – மூலமும் எளிய உரையும் இரு பகுதிகள், முனைவர் பிரபாகரன், காவ்யா வெளியீடு
5. புறநானூறு – தமிழ்த்துளி- வலைப்பதிவு- vaiyan.blogspot.com
6. பண்டைத்தமிழர் போர்நெறி- புலவர் கோவிந்தன்
7. பேராசிரியர் இ. பாலசுந்தரம், சங்ககாலத் தமிழர் பண்பாட்டில் மானுடம், மனிதராய் இருத்தல்-, கருத்தியல் நிலை- புறநானூறு தழுவிய ஓர் ஆய்வு, வலைப்பதிவு: TamilAuthors.com
8. Nazir Ali, Decoding the battlelust: A Note of the Provocation to war in the Purananuru, International Journal of Tamil Research
9. முனைவர் ப.சு. மூவேந்தன், ஆய்வு: புறநானூற்றில் வாழ்வியல் அறம், பதிவுகள், Pathivukal.com
10. முனைவர் அ.ஹெப்சி ரோஸ் மேரி, புறநானூறு காட்டும் போர் நிர்வாகமும் மேலாண்மையும், வல்லமை வலைப்பதிவு, Vallamai.com
11. பெ. பெருமாள் சாமி, புறநானூற்றில் ஒலித்த போர் எதிர்ப்புக் குரல், செம்மலர், பிப்ரவரி 06, 2010
12. சங்ககாலப் போர்முறை, தமிழ் விக்கிப்பீடியா
13. புறநானூறு- முக்குல மன்னர்கள், வலைப்பதிவு: mukkulamannargal.weeby.com
14.புறநானூறு, தமிழ் விக்காஸ்பீடியா, ta. Vikaspedia.in