தமிழ்சூழ் உலகு

வீசட்டும் புதுத்தென்றல்: 4

தமிழ்சூழ் உலகு

இந்த உலகம் ஒருநாள் அழியும் என்கிறது அறிவியல். ஆனால் அதன் பின்னும் தமிழ் வாழவேண்டும் என்பதே நம் ஆசை.

 

தாயகமாம் தமிழகத்திலும் ஈழத்திலும் மட்டுமன்றி உலகின் 159  நாடுகளில் பரவிக்கிடக்கும் தமிழினம் தம் தாய்மொழியாம் தமிழைப் பேணிக்காப்பதில் செய்கின்ற முயற்சிகள் இந்த ஆசையை நீரூற்றி வளர்க்கின்றன.

 

அண்டை நாடாம் மலேசியாவில் 1816 ஆம் ஆண்டில் முதல் தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டு இன்று 527 தமிழ்ப்பள்ளிகளில் 8638 ஆசிரியர்கள் பணிசெய்ய 80,569 மாணவர்கள் தமிழ் கற்கின்றனர். அத்தனை தமிழ்ப்பள்ளிகளும் அரசின் நிதி உதவியுடன் இயங்குமளவு செல்வாக்குப் பெற்றுள்ளன. இதற்காக மலேசியத் தமிழர்கள் காலங்காலமாக நடத்திவரும் பெருமுயற்சிகள் அளவிடற்கரியன. மலாய் பல்கலைக்கழகத்திலும் தமிழ் பட்ட வகுப்புகள் மற்றும் ஆய்வுகள் தொடங்கப்பட்ட நிலையில் இன்று பாலர் பள்ளி முதல் முனைவர் பட்டம் வரை தமிழ்மொழியைப் படிக்கும் வாய்ப்பும் உரிமையும் அங்கு உண்டு.

 

சிங்கப்பூரின் மக்கட்தொகையில் தமிழர்கள் 5% ஆயினும் தமிழ் அங்கு அரசு மொழிகளில் ஒன்று. தமிழர்கள் தமிழ் படிப்பது கட்டாயம். எல்லா அரசு நிறுவனப் பெயர்பலகைகளிலும், அறிவிப்புகளிலும்  தமிழ் பளிச்சிடுகிறது.

 

3.5 இலட்சம் தமிழர்கள் வாழும் கனடாவில் ஏறத்தாழ 300 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. தமிழ்மொழி வாரம் கொண்டாடி நாடெங்கும் தமிழ்ப்பற்றைப் புதுப்பிக்கிறார்கள். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தோடு செய்துள்ள ஒப்பந்தப்படி தமிழ்ப்பட்டப்படிப்பை அங்கிருந்தே படிக்கும் வசதி கூட உள்ளது.

 

60,000 தமிழர்கள் வாழும் ஜெர்மனியில் 600 தமிழ்ப்பள்ளிகளை நிறுவி 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழ் பயிற்றுவிக்கிறார்கள். கேம்பிரிட்ஜ் அனைத்துலகப் பாடத்திட்டத்தில் உயர், மேல் நிலைத்தேர்வுகளுக்குத் தேர்வு செய்யப்படும் மொழிப்பட்டியலில் தமிழும் உள்ளது. 25 நாடுகளின் முன்னணிப் பல்கலைக்கழகங்களின் உயர்கல்விக்கான நுழைவு மதிப்பீட்டில் தமிழில் பெறும் மதிப்பெண்ணும் கணக்கிடப்படுகிறது.

 

நார்வே, ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அரசுப்பள்ளிகளில் தமிழ் வகுப்புகளை அந்தந்த நாட்டு அரசுகளே நடத்திவருகின்றன. அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் சில பகுதிகளில்  தமிழ் மதிப்பெண் பல்கலைக்கழக நுழைவு மதிப்பீட்டில் கணக்கில் கொள்ளப்படுகிறது. டென்மார்க்கில் ஒரு மாணவன் ஒரு சிற்றூரில் தமிழ் கற்க முன்வந்தாலும் அவனுக்காக வாகனம் அனுப்பி பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார்கள். நார்வேயில் தமிழ்மொழி பாடத்தில்பெறும் மதிப்பெண் மருத்துவக் கல்வி நுழைவுக்கே உதவுகிறது.

 

ஏறத்தாழ 2.5 இலட்சம் தமிழர்கள் வாழும்  அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 30,000 மாணவர்கள் 300 பள்ளிகள் வாயிலாகத் தமிழ் படிக்கிறார்கள். பதிவுபெற்ற பல பள்ளிகளில் தமிழ் கற்போரின் மதிப்பெண்கள் உயர்கல்வியின் நுழைவுக்கு மதிப்பிடப்படுகிறது. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையில்(Fetna) உள்ள ஏறத்தாழ 70 தமிழ்ச்சங்கங்களும், தமிழ் கற்பிக்கும் தன்னார்வ அமைப்புகளும்   பேராற்றலுடன் தமிழ்ப்பணி புரிகின்றன.

 

ஆஸ்திரேலியாவில் 1977 ஆம் ஆண்டு  முதல் தமிழ்க்கல்வி நடைபெறுகிறது. பெரும் நகரான சிட்னியில் மட்டும் 12 தமிழ்ப்பள்ளிகளில் 1400 மாணவர்கள் கற்கின்றனர் தேசிய கல்வித்திட்டத்தில் தமிழ் ஒரு பாடமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசு  வாரநாள்களில் தமிழ்ப்பள்ளிகள் நடத்த உதவுவதுடன் தமிழ் கற்போருக்கு நிதி உதவியும் அளிக்கிறது.

 

இந்தியாவோடு நல்லுறவில்லாப்  பாகிஸ்தானிலும் சில ஆயிரம் தமிழர்கள் வாழ்கின்றனர். 1947 ஆம் ஆண்டு மதராஸ், மைசூர் மாகாணங்களிலிருந்து 18,000 பேர் பாகிஸ்தானில் குடியேறினர்.  கராச்சியில் மட்டும் இன்று 2000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். அங்கு மதராசி பரா என்ற பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் வாழ்கின்றன; பெரும்பாலான  தமிழர்கள் இந்து மதத்தினர். அங்குள்ள மாரியம்மன் கோயிலில் சமயச்சடங்கள் அவர்களை இனணக்க,  தன்னார்வலர்களால்  அங்கு இளம் தலைமுறையினருக்குத் தமிழ் சொல்லித்தரப்படுகிறது.

 

சீனாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் வானொலி இயங்குகிறது. வணிகத்திற்கும் பணிகளுக்குமாகச் சென்று வாழும்  5000  தமிழர்கள் பெரும்பாலும்  பீஜிங் மற்றும் சென்ஞேன் பகுதிகளில் வாழ்கின்றனர். யுனான் மின்சு பல்கலைக்கழகத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் தமிழ்த்துறை தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் தமிழ் இளங்கலைப் பட்டப்படிப்பு படிக்கும்  வசதி உள்ளது.

 

இன்று இணையத்தில் மிகுதியாகப் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழுக்கே முதலிடம். இதனால் பல செயலிகள் தமிழை அலுவல் மொழியாக ஏற்றுள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் பல தமிழ்மொழி தெரிந்தவர்களை வேலைக்கு அழைக்கிறார்கள். தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் வெளியே 100 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை உள்ளது. உலகப்புகழ் பெற்ற ஹார்வேர்டு, கலிபோர்ணியா, டோரென்டோ முதலிய பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

நம் நெஞ்சு குளிர்ந்து  பெருமிதப்படும் செய்திகள்   இப்படிப் பல, இன்னும் பல நிகழ்ந்தவண்ணம் உள்ளன.  தமிழால் உலகம் சூழப்பட்டாலும் இவையெல்லாம்  தமிழை எதிர்காலத்தில் வாழ வைக்க உறுதி தருமா? இந்தத் தவிர்க்க முடியாக் கேள்வி தமிழ், தமிழர் வளர்ச்சிக்குத் தடைக்கற்களாக இருப்பவனவற்றையும் நம் கண்முன் நிறுத்துகிறது.

 

# தமிழகத்திலிருந்து ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன் சுரினாம், பிஜித் தீவு, ரியூனியன்,மொரீசியஸ், ஜமைக்கா,  தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் பணிசெய்த கரும்புத்தோட்டங்களில் தங்கள் தாய் மொழியையும் தொலைத்துவிட்டனர். இங்கெல்லாம் பல இலட்சம் தமிழர்கள் தமிழ் அறியாது வாழ்கின்றனர். பிஜித்தீவில் பெரும்பான்மை இந்தியர்கள் தமிழர்களே. ஆனால் இந்திய மொழி இந்தியே என்று அந்த அரசுக்கு  இந்திய அரசு அறிவுறுத்தி அனைத்துத் தமிழர்கள் மேலும் இந்தி திணிக்கப்பட்டு அவர்கள்  தமிழை மறந்துவிட்டனர். பர்மாவில் தமிழ்க்கல்வி ஒரு நூற்றாண்டாய் செழித்த காலம்போய் கடந்த 50 ஆண்டுகளாக முற்றிலும்  தமிழ்க்கல்வி நிறுத்தப்பட்டுள்ளது. குவாதலூப்பு(Guadeloupe) என்று பிரான்சுக்குச் சொந்தமான கரீபியன் தீவுகளிடையே அமைந்த நாட்டின் மொத்த மக்கட்தொகையில் 9% தமிழர்களே. இது இலத்தீன் அமெரிக்க தீவு நாடுகளில் மிகுதியாக தமிழர்கள் வாழும் (55,000) நாடு மட்டுமன்றி  சிறீலங்கா(18%) தவிர்த்த எந்த நாட்டையும் விட  மிகுதியான விழுக்காட்டில் தமிழர்கள் வாழும் நாடு ஆகும். (இந்தியாவில் தமிழர்கள் 5.9% மட்டுமே).ஆனால் மிக மிகச் சிலர் தவிர பெரும்பாலோர் தமிழை இங்கு மறந்துவிட்டனர். இது போலத் தமிழ் தெரியாத தமிழர்கள் உலக நாடுகளில் இலட்சக்கணக்கில் உள்ளனர்.

# ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அனைத்துலக அமைப்புகள் வற்புறுத்தும் ‘அனைவருக்குமான தாய்மொழிக் கல்வி’ என்ற அடிப்படையில்தான் மேலைநாடுகளில் அரசுகளால் தமிழ் ஆதரிக்கப்பட்டுக் கற்பிக்கப்படுகிறது. தமிழ் செம்மொழி என்பதாலோ அல்லது உலகின் பழமையான மொழி என்பதாலோ அல்ல.  ஆனால் இந்த நல்வாய்ப்பைத்  தமிழ்ப்பெற்றோர்கள் பலரும் பயன்படுத்திக்கொள்வதில்லை. தங்கள் குழந்தைகள் தமிழ் கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

# சிங்கப்பூரில் வட இந்திய வணிகர்களின் வரவாலும் செல்வாக்காலும் 100 பள்ளிகளுக்கு மேல் இந்தியைக் கற்பிக்கின்றனர். எனவே இவர்கள் தலையீட்டால்  தமிழின் இன்றைய இடத்தைச் சிங்கப்பூரில் இந்தி விழுங்கும் ஆபத்து நெருங்கிக்கொண்டிருக்கிறது. இங்கிலாந்தில் தேசியக் கல்விப் பாடத்திட்டத்தில் இந்திய மொழிகளில் குஜராத்தி, வங்க மொழி, பஞ்சாபி ஆகியவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன. தமிழ் சேர்க்கப்படவில்லை. இம்மூன்று இனக்குழுக்களுக்கு இணையாகத் தமிழர்கள் இருந்தும் இந்நிலை! பணபலமும், அதிகார பலமும்  மொழியைக் காப்பாற்றத் தேவைப்படுகிறது என்பதே உண்மை.

# கூடிக்கலையும் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் அரசியல், வணிக, தனிமனித வளர்ச்சி முதலியவற்றிற்கே பயன்படுகின்றன. தொடங்கிய நோக்கம் நிறைவேறவில்லை. தீப்பற்றி எரியும் பிரச்சினைகளைத் தொடாமல் அரைத்த மாவையே அரைக்கும் வண்ணம் அமையும் ஆய்வுக்கட்டுரைகளால் தமிழுக்கும் தமிழருக்கும் பெரிய பயன் ஏதும் இல்லை. கவிஞர்களின் தன்முனைப்பைத் தீர்த்துக்கொள்ளும் கவியரங்குகளும், இன்னொரு பொழுதுபோக்குச் சாதனமாக வளர்ந்து வரும் பட்டிமன்றங்களும் தமிழின் உயிர்மூச்சான பிரச்சனைகளைத் தீர்க்க முயல்வதில்லை. வெளிநாட்டுத் தமிழ்ச்சங்கங்கள் பலவும்  தமிழ்ப்பணியை மறந்துவிட்டு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.

 

# தாய்த் தமிழகத்தில் தமிழின் நிலை என்ன? தமிழ் பயிலும் மாணவர்கள் தமிழில் ஆர்வம் காட்டுகிறார்களா? தமிழ் பாடம் மிகவும் கடினம் எனவே    தமிழ் வேண்டாம் பிரஞ்சு படிக்கிறேன், இந்திப் படிக்கிறேன் என்று பயந்து ஓடும் மாணவர்களின் ஓட்டத்திற்குக் காரணம் என்ன? தமிழுணர்வும் சமூக உணர்வும் ஊட்டும் தமிழாசிரியர்கள் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? தமிழைப் பிழையின்றி  உச்சரிக்கவோ பிழையின்றி எழுதவோ முடியாமல் பள்ளிப்படிப்பை முடிக்கும் இலட்சக்கணக்கான மாணவர்கள் உருவாக யார் காரணம்? இதுபோன்று எழும் எண்ணற்ற கேள்விகளுக்கான பதிலை ஆழமாகச் சிந்தித்துச்  செயல்படவேண்டியது  தமிழ் ஆர்வலர்களின் முதற்பணி. 

 

# உலகெங்கும் உள்ள தமிழர்களில், உயர்கல்வி கற்றவர்களும் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களும்  தமிழ்க் கல்வியைத் தாழ்வாக நினைக்கும் மனப்போக்கு மாறவேண்டும். வீட்டில் தமிழ் பேசாமல்  இருப்பது சிறப்பன்று அது சுயமரியாதைக்கு இழுக்கு என்று உணரவேண்டும் அல்லது உணர்த்தப்படவேண்டும்.

 

தம் வேர்களை அறிந்து, தம் முன்னோர்கள் செய்த தவறுகளை உணர்ந்து புது எழுச்சியோடு தமிழைப் புதுப்பிக்கும் இளைய தமிழ்த் தலைமுறை உலகெங்கும் நாளை உருவாகும் என்பது உறுதி. புதுத்தென்றல் வீசட்டும்.