ஆங்கிலம் அகற்றப்படுமா?

வீசட்டும் புதுத்தென்றல்:

ஆங்கிலம் அகற்றப்படுமா?

ஆங்கிலம் ஆதிக்க ஆற்றலுடையது. ‘பிரிட்டிஷ் பேரரசில் கதிரவன் எப்போதும் மறைவதில்லை’ என்று கூறுமளவு உலகெங்கும் ஆங்கில ஆட்சி பரவிக்கிடந்த காரணத்தால் ஆங்கிலம் உலகெங்கும் ஊடுருவியுள்ளது.

இன்றைய அமெரிக்க வல்லரசின் பயன்பாட்டு மொழியாகவும் ஆங்கிலம் இருப்பது இம்மொழிக்கு இன்னும் வலிமை சேர்த்துள்ளது. எனவே ஆங்கிலம் இன்று  67 நாடுகளில் ஆட்சி மொழியாக உள்ளது. மேலும்  இன்று ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களே அதனைத் தாய்மொழியாகக் கொண்டோரைவிட மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர். முதல் இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்துவோரின் வியத்தகு எண்ணிக்கை 135 கோடியாக உயர்ந்துள்ளது. 28 இந்திய மாநிலங்களில் ஆங்கிலம் பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே கற்பிக்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்கப்பட்ட 22 மொழிகளில் ஆங்கிலம் இடம்பெறவில்லை. இந்திக்கு ஒன்றிய அரசு என்னதான் உயர்வளித்தாலும் அதனைப் புறந்தள்ளி ஆங்கிலவழிக் கல்வியின் மோகம்  இந்தியாவில் பெருக்கெடுத்தே ஓடுகிறது   .

உலகின் 3வது தீவு நாடான பாபுவா நியூ கினியாவின் 1.7 கோடி மக்கள் 851 மொழிகளைப் பேசினாலும் அந்நாட்டில் ஆங்கிலமே அதிகாரப்பூர்வமான முதல் மொழியாக உள்ளது.

ஆங்கிலம் இவ்வளவு சிறப்புப் பெற்றாலும் இது உலகில் மிகுதியாகப் பேசப்படும் மொழி அன்று. சீனம், ஸ்பானிஷ், ஆகிய மொழிகளை அடுத்து இது மூன்றாம் நிலையில்தான் உள்ளது.

ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்வது பிற மொழி பேசுவோருக்குச், சிறப்பாக ஆசிய ஆப்பிரிக்க நாட்டினருக்குக் கடினமானதாகும். இதன் இலக்கணம் குழப்பமானதாகவும், உச்சரிப்பு ஒழுங்கற்றும் உள்ளது. எழுதுவதுபோலப் படிக்க முடிவதில்லை.. ஸ்பானிஷ் போன்ற பிற ஐரோப்பிய மொழிகளில் இந்தக் குழப்பமும், ஒழுங்கின்மையும் இல்லை. சிறப்பாக ஸ்பானிஷ் ஆங்கிலத்தைவிட எளிமையானதாகும்.  a, e, i, o, u  ஆகிய ஆங்கில உயிரெழுத்துகள் (vowels) 15 விதமாக ஒலிக்கப்படுகின்றன. எ-டு: snake, cat, father- greet, bet- white, lit- hope, drop- you, fun. ஸ்பானிஷ் மொழியில் 5 உயிரெழுத்துகளும் ஒரே மாதிரியே உச்சரிக்கப்படுகின்றன. ஒருமை பன்மையிலும் ஆங்கிலத்தில் ஏகப்பட்ட குழப்பம்; ஒழுங்கின்மை.  Tooth க்குப் பன்மை Teeth, ஆனால் Boothக்குப் பன்மை beeth இல்லை. Goose க்குப் பன்மை   geese. ஆனால்  mooseக்குப்பன்மை   meese என்றால் சிரிப்பார்கள். இது எந்த விதத்தில் சரி?  Vegetarian உண்பது  vegetables என்றால்   humanitarian  உண்பது எதை? புதிதாக ஆங்கிலம் கற்பவர் knife என்ற சொல்லில் உள்ள k க்கு ஏன் ஒலியில்லை என்று புரியாமல் குழம்புகிறார். இலத்தீன், கிரேக்க மூலச்சொற்களைக் கையளாவதால் இந்தச் சிக்கல் எழுகிறது என்று விளக்கினாலும் அறிவியல் சிந்தனையுடைய ஆங்கிலேய, அமெரிக்கர்களால் இதனை ஏன் ஒழுங்குபடுத்த முடியவில்லை? இந்தக் குழப்பங்களைக் கண்டு  இதுபோல பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றைக்கொண்டுள்ள ஆங்கில மொழியைப்  பலரும்  விமர்சித்துள்ளனர்.  பெர்னாட்ஷா ஆங்கிலத்தின் இந்தக் கோணங்கித்தனத்தை நிறைய நையாண்டி செய்திருக்கின்றார். ஆங்கிலம் சீர்த்திருப்படவேண்டுமென்றும் அறைகூவல் விடுத்திருக்கின்றார். புதிய மாற்றங்களை விரும்பாத  ஆங்கிலேயர் இந்த விதத்தில் பழமைவாதிகள் என்பதை உலகம் உணர்ந்தாலும் வல்லான் வகுத்ததே நீதி என்ற நிலையில் ஆங்கிலம் கற்போர் இந்த அவலங்களைப் பொறுத்துக்கொள்கின்றனர். 

ஆங்கிலம் கற்றுக்கொள்வது கடினம் என்பதும், அதன் இலக்கண விதிகள் ஒழுங்கற்றவை என்பதும் ஒருபுறம் இருக்க ஆங்கிலத்தால் இருபெரும் தீமைகள் உலகில் நிகழ்ந்துள்ளன என்பதே கண்டனத்திற்குரியதாகும். ஆங்கிலம் பல நாடுகளில் புழங்கிவந்த தாய்மொழிகளை வழக்கொழியச் செய்துவிட்டது. ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்கத் தொடங்கிப் பின் வசதி கருதி, நாகரிக மோகம் கருதி அதனை முதல்மொழியாக மாற்றிக்கொண்டு தங்கள் தாய் மொழிப்பயன்பாட்டை இழந்தவர்கள் கோடிக்கணக்கானோர். இன்று உலகில் பேசப்படும் ஏறத்தாழ 7000 மொழிகளில் 25 மொழிகள் அழியும் நிலையில் உள்ளனவென்றும், அதில் தமிழ் 8வது இடத்தில் உள்ளதென்றும் யுனெஸ்கோ செய்த எச்சரிக்கை நம் கவனத்திற்குரியது. இந்த ஆபத்தை விளைவிப்பதில்  ஆங்கிலத்தின் பங்களிப்பை மறுக்கமுடியாது.

இரண்டாவதாக, ஆங்கிலம் ஒரு மொழியாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. ஆங்கிலம் சார்ந்த அனைத்தும் ஒரு மேதகு  கலாச்சாரமாகப் பார்க்கப்படுகின்றன.  . காலனி ஆதிக்கத்தால் விளைந்த கேடு என்னவெனில் ஆங்கிலம் நுழைந்த இடங்களில் தாய்மொழிகள் அடிமைகளின் மொழிகளாகத்(vernacular language) தாழ்த்தப்பட்டு அம்மொழி பேசுவோர் தாழ்வாகக் கருதப்படும் நிலை உருவாக்கப்பட்டது. ஆங்கிலம் விளைவித்த தாழ்வு மனப்பான்மையால் ஆங்கிலேயர் சார்ந்த உணவு, உடை, பழக்கவழக்கங்கள் மேலானதாகவும், உள்நாட்டவை கீழானதாகவும் கருதப்படும் பேரவலம் நிகழ்ந்துள்ளது.

ஆளுவோரின் மொழிகளாகக் கோலோச்சிய இலத்தீன், கிரேக்கம், வடமொழி போன்றவற்றின் இறுமாப்பைக் காலம் துடைத்தெறிந்தது. ஆங்கிலத்திற்கும் ஒருநாள் இது நேருமா என்பது கேள்விக்குறிதான்.

ஐநா தம் அதிகாரப்பூர்வமான மொழிகளாக அரபிக், சீனம், ஆங்கிலம், பிரஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ் ஆகிய 6 மொழிகளை ஏற்றுள்ளது. இவற்றில் மிகுதியாகப் பேசப்படும் சீனம் தன் வளர்ந்துவரும் வல்லாதிக்கத்தால் ஆங்கிலத்தின் இடத்தைக் கைப்பற்றுமா என்ற கேள்விக்குப் பலரும் எதிர்மறையான காரணங்களை முன்வைக்கின்றனர். சீனம் ஆங்கிலத்தைவிடக் கடினமான மொழி. பெரும்பாலான சீனர்கள் ஆங்கிலம் படிக்கத்தொடங்கியதுபோலச் சீனத்தை ஆங்கிலம் அறிந்தோர் படிப்பதில்லை. அரசியலில் மட்டுமன்றி, வணிகம், இணையம், திரைப்படம், பொழுதுபோக்குச் சாதனங்கள் என அனைத்துத் தளங்களிலும் ஆங்கிலம் தவிர்க்கமுடியாதபடி தன் ஆளுமையை நிலைநாட்டிவிட்டதால் கண்ணுக்கெட்டிய கால தூரத்தில் ஆங்கிலத்தை அப்புறப்படுத்துவது சாத்தியமில்லை.

எனினும் ஒரு சிற்றுளி பெருமரத்தைச் சாய்ப்பதுபோல அண்மையில் ஒரு முயற்சி நடைபெற்றுள்ளது. ஆதிக்கம் செலுத்தித் தாய்மொழிகளை அழிக்கும் மொழிகளுக்கு மாற்றாக உலகப் பொதுமொழியாக எஸ்பெராண்டோ என்ற கட்டமைக்கப்பட்ட ஒரு மொழி உருவாக்கப்பட்டுள்ளது. போலந்தின் தலைநகர் வார்சா நகரத்துக் கண்மருத்துவர் எல். எல். சாமன்ஹோஃப் (L.L. Zamenhof) என்பவர் 1887 இல் பெரும் நம்பிக்கையுடன் உருவாக்கிய செயற்கை  மொழி இது. எஸ்பெராண்டோ என்பதற்கே ‘நம்பிக்கையுடையோன்’ என்றுதான் பொருள். இந்த மொழி எந்த நாட்டிற்கும் இனத்திற்கும் உரியதன்று. எந்தச் சமயத்தையும், கலாச்சாரத்தையும் தன்னகத்தே கொண்டதுமன்று. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழ்ச் சிந்தனையின்  மொழிவடிவமே இது. தாய்மொழிக்கு இது மாற்று இல்லை; தாய்மொழிக்குத்  தீங்கு நேராதபடி அடுத்த நிலையில் தொடர்பு மொழியாக உதவவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தோ ஐரோப்பிய மொழிகளிலிருந்து வேர்ச்சொற்களை எடுத்துள்ளது; 26 ரோமான்ஸ் எழுத்துகளில் . 4 எழுத்துகள் நீக்கப்பட்டு 6 புதிய எழுத்துகள் உருவாக்கப்பட்டு 28 எழுத்துகளால் இயங்கும் மொழி;  குறைந்த சொற்களை வைத்து மிகுந்த செய்தித்தொடர்பு ஏற்படுத்தும் வண்ணம் அருமையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. 920 வேர்ச்சொற்களும்,16 இலக்கணவிதிகளும்  இதனைக் கற்க எளிதாக்கியுள்ளன. ஒரே சீராகப் பெயர்ச்சொற்கள்(Noun) o-விலும் பெயரடைகள்(Adjectives) a- யிலும், வினையடைகள்(proverb) e- யிலும் பன்மைகள்(Plural) j- யிலும் முடியும்வண்ணம் சொற்கள் அமைந்துள்ளது அருமை.

எனினும் இது கடந்தவந்த பாதை கசப்பானது. ரஷ்யாவின் ஜார் மன்னர் இம்மொழிக்குத் தம் நாட்டில் தடைவிதித்தார். இட்லர் இது பரவாமல் தடுத்து நிறுத்தினார். ஐரோப்பிய யூனியன் 1970 இல் இதனைப் பொதுமொழியாக ஏற்க முன்வந்து பின்வாங்கியது. எனினும்   இன்று 120 நாடுகளில் 20 இலட்சம் மக்கள் இதனைப் பேசக் கற்றுள்ளனர். சீன மொழி கற்று c-1 என்ற நிலையை அடைய 2200 வகுப்பு நேரங்கள் தேவை. ஆங்கிலம் கற்க 1500ம், இத்தாலியம் கற்க 1000ம் இதற்கு ஆகும் நிலையில் எஸ்பெராண்டோ கற்க வெறும் 150 வகுப்பு நேரங்கள் போதும். சீனா இம்மொழியில் வானொலி நிகழ்ச்சி நடத்துவதுடன், நாளிதழும் வெளியிட்டு வருகிறது.எந்த நாடும் தம் மொழியாக இதனை அங்கீகரிக்காவிடினும் ரோஸ் தீவு, மொலாசியா போன்ற சில குறுநாடுகள் இம்மொழியைத் தம்மொழியாக ஏற்றுள்ளன. ஆசிய நாடுகள் பலவற்றின் பாடத்திட்டத்திலும் இம்மொழி இடம்பெற்றுள்ளது,1921 லேயே நியூயார்க் டைம்ஸ் இதழ் சிறந்த வணிக மொழி என்று இதற்குச் சான்றளித்துள்ளது. ஐநாவின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் இம்மொழியை அங்கீகரித்ததுடன் சுற்றுலாத் துறையில் இம்மொழியைப் பயன்படுத்த பரிந்துரைத்தது. இம்மொழி கற்ற சில புகழ்பெற்றோர், நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் வில்லியம் டிரஸ், முன்னாள் ஆஸ்டிரிய அதிபர்கள் பிரான்ஸ் ஜோனாஸ், ஹய்ன்ஸ், வியட்நாமின் முதல் அதிபர் ஹோசிமின், யூகோஸ்லோவாக்கிய முன்னாள் அதிபர் டிட்டோ, போப் 2வது ஜான்பால், திரைப்படத்தைக் கண்டறிந்த லூயிஸ் லிமியர் ஆகியோராவர். லியோ டால்ஸ்டாய் இம்மொழியால் கவரப்பட்டுச் சில மணிநேரங்களில் இதனைக் கற்றுத்தேர்ந்தாராம். பாகிஸ்தான் அறிவியலாளர் முஸ்டர் அப்பாசி குரானை எஸ்பெராண்டோவில் மொழிபெயர்த்துள்ளார். உருவாகி 136 ஆண்டுகளே ஆன  இம்மொழியில் 25,000 நூல்களும், 100 இதழ்களும், விக்கிப்பீடியாவில் 2,51,000 கட்டுரைகளும் வெளிவந்துள்ளன

எஸ்பெராண்டோ தாய்மொழியை மறப்பதற்கு எதிரானது; உலகமயமாக்கலுக்கு உடன்படாதது; கல்வியறிவு, பரந்து கற்றல், நல்லவற்றை ஏற்றல், மாறுபாடுகளைப் பொறுத்தல் ஆகிய  விழுமியங்களின் அடித்தளத்தில் உருவாகியுள்ள இம்மொழி ஒருநாள் ஆங்கிலத்தை அகற்றக்கூடும். புதுத்தென்றல் வீசட்டும்.