நாள்காட்டிச் சீர்திருத்தம்

வீசட்டும் புதுத்தென்றல்:2

நாள்காட்டிச் சீர்திருத்தம்

இன்றைய உலகில் 40-க்கும் மேற்பட்ட நாள்காட்டிகள் வழங்கிவருகின்றன. ஆனால் உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டது அன்றாடம் நாம் பயன்படுத்தும் கிரெகொரியன் என்ற பெயருடைய (ஆங்கில) நாள்காட்டியே ஆகும்.

இதற்கு முன்னால் இருந்த ஜூலியன் நாள்காட்டியைச் செழுமைப்படுத்தியே கிரெகொரியன் நாள்காட்டி உருவானது. ரோமப்பேரரசில் நீண்ட காலமாக இருந்த நிலவு நாள்காட்டியைச் சீர்திருத்தம் செய்தே பேரரசர் ஜூலியஸ் சீசர் கிமு 45, ஜனவரி முதல் நாள் ஜூலியன் நாள்காட்டியை அறிமுகப்படுத்தினார். கிரேக்க கணிதவியலாளரும்  வானவியலாளருமான சோசிஜென்ஸ் என்பவரால் கதிரவன் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இஃது உருவாக்கப்பட்டது. 365 நாள்களைக் கொண்ட இந்த நாள்காட்டி லீப் ஆண்டையும் மனதில் கொண்டு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருநாளைக் கூடுதலாக்கும் முறையையும் அறிமுகப்படுத்தியது. அடுத்த 1600 ஆண்டுகள் மேற்கு உலகம் முழுவதும்  இந்த ஜூலியன் நாள்காட்டியே வழக்கில் இருந்தது.

ஆனால் 16 நூற்றாண்டளவில் இதிலும் குறைகள் கண்டறியப்பட்டன. இத்தாலியரான அலோயிசியசு  இலிலியசு என்ற மருத்துவர் இந்தக் குறைகளை நீக்கப் புதிய நாள்காட்டியை உருவாக்கினார். அதாவது ஜூலியன் காலண்டரில் ஓர் ஆண்டு 365.25  நாள்களாக அமையும் நிலையில் கதிரவன் பாதையை இன்னும் துல்லியமாகக் கணக்கிடுகையில் ஓர் ஆண்டு என்பது 365. 2425 என்று கண்டறியப்பட்டது. அதன்படி ஜூலியன் நாள்காட்டி 10 நாள்களைக் குறைவாகச் சுட்டுவது அறியப்பட்டது. இதனால் போப் 13வது கிரெகொரி ஈஸ்டர் தேதியையே மாற்றச் சொன்னார். ‘இந்தப் புதிய நாள்காட்டியே அறிவியல் அடிப்படையில் சரியானது. இதையே கடைப்பிடியுங்கள்’ என அறிவித்தார். அதனால் கிரெகொரியன் நாள்காட்டி என்ற பெயரில்  மேற்கு உலகெங்கும் கி.பி 1582 முதல் இது பின்பற்றப்பட்டு இன்றுவரை உலக அளவில் நடைமுறையில் உள்ளது.

ஆனால்  இந்தக் கிரெகொரியன் நாள்காட்டியிலும் பல ஒழுங்கீனங்கள் நிலவுகின்றன. ஒவ்வொரு மாதத்திலும் நாள்கள் சீராக இல்லாமைக்குப் பகுத்தறிவுப்பூர்வமான விளக்கம் இல்லை. எனவே இதனையும் சீரமைக்கப் பலரும் சென்ற இருநூற்றாண்டுகளாக முயன்று வருகின்றனர். அனைத்துலக நிரந்தர நாள்காட்டியை 1902 இல் மோசஸ் புரூயினஸ் காட்ஸ்வந்த் என்பார் உருவாக்கினார். இந்த நாள்காட்டியில்

மாதத்திற்கு 28 நாட்கள் வீதம் 13 மாதங்கள் இருக்கும். ஒவ்வொரு மாதத்திலும் சரியாக 4 வாரங்கள் அமையும். எல்லா மாதங்களிலும் தேதிகளும் கிழமைகளும் அப்படியே மாறாமல் இருக்கும். காலண்டர் கிழிக்கும் வேலையும், ஆண்டு தோறும் மாற்றும் வேலையும் இல்லை. விரல்களை மடக்கி முட்டியைப் பார்த்து ஜூலை மாதத்திற்கு எத்தனை நாள் என்று எண்ண வேண்டி இராது. இதில் அடங்காமல் எஞ்சி (28 X 13 = 364) நிற்கும் 365-வது நாள் ஆண்டின் கடைசி நாளாக,(டிசம்பர் 28க்குபின்) ‘ஆண்டு நாள்’ என்று அழைக்கப்படும். இதற்கு தேதி, கிழமை, மாதம் கிடையாது. ‘லீப்’ ஆண்டு வரும்போது 6-ஆவது மாதத்தின் கடைசி நாளுக்குப்பின் (ஜூன் 28 க்குப்பின்) தேதி, கிழமை. மாதமற்ற ’லீப் நாள்’ என்று அது பெயரிடப்படும். எல்லா மாதங்களும் கிரெகொரியன் நாள்காட்டியின் பெயராலேயே அழைக்கப்படும். 13வதான புதிய மாதம் கதிரவனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சோல்  எனப் பெயரிடப்பட்டு வெப்ப மாதமான ஜூனுக்கும் ஜூலைக்கும் இடையே 7வது மாதமாக அமையும்.

 

இதனை எல்லா இடங்களிலும் கொண்டு செல்ல ஒரு அமைப்பே 1923 இல் உருவாக்கப்பட்டது. ஈஸ்ட்மென் கோடாக் நிறுவன அதிபர் ஜார்ஜ் ஈஸ்ட்மென் இந்த நாள்காட்டிக்கு ஆதரவளித்து தம் நிறுவனத்தில் 1928 முதல் இதனைப் பயன்படுத்திப் பரப்புரையும் செய்தார். கோடாக் நிறுவனம்  1989 வரை இந்த நாள்காட்டியையே பயன்படுத்தியது. 130 சீர்த்திருத்த நாள்காட்டிகளில், இந்த அனைத்துலக நிலையான நாள்காட்டியையே உலக நாடுகள் சங்கம் தேர்வு செய்தது. ஆனால் இதனை உலக அளவில் பரிந்துரைக்கமுடியாது 1937 இல் கைவிட்டது.

 

இதற்கு எதிர்ப்பு நேர்ந்தமைக்குப் பல காரணங்கள் கூறப்பட்டன.  தீவிர கிறித்துவ, இசுலாமிய மதவாதிகள் தங்கள் சிறப்பு நாள்கள் இதனால் பாதிக்கப்படும் என்றனர். கிரெகொரியன் நாள்காட்டியிலுள்ள நாள்களை இதற்கேற்ப மாற்றம் செய்ய பெரும் செலவினம் ஏற்படும் என்றும் அஞ்சினர். ஒரு திருவிழாவுக்கான விடுமுறை நாளாக ஞாயிறு அமைந்தால் ஒவ்வொரு ஆண்டும் அது ஞாயிறாகவே அமையும். எனவே இன்னொரு நாள் புதிதாக விடுமுறை விட வேண்டிய நிலை ஏற்படலாம். இந்த நாள்காட்டியில் 13 மாதங்கள் இருப்பதால் காலாண்டிற்கு ஒருமுறை கணக்குப்பார்ப்பதும் வட்டி வழங்குவதும் குழப்பமாகும் என்று நிதி நிறுவனங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

 

இந்தக்குறைகளைச் சரிசெய்யும் வண்ணம் 1930 இல் நியூயார்க்கில் எலிசபெத் அச்சீலிஸ் என்ற அம்மையார் ஒரு புதிய நாள்காட்டியை அமைத்தார். இது கிரெகொரியன் நாள்காட்டியைப்போல 12 மாதங்களுடன் விளங்கும். எனவே நிதி நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. காலாண்டும் சமமாக 91 நாள்களுடன் இருக்கும். ஒவ்வொரு காலாண்டிலும் 31,30,30 என்று நாள்கள் அமையும். அதாவது ஜனவரி,ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களில் மட்டும் 31 நாள்களும் பிற 8 மாதங்களில் 30 நாள்களும் அமையும். 91x4= 364 நாளாக இருப்பதால் 365 வது நாளாக டிசம்பர் 30 க்கு அடுத்த நாள் உலக நாளாகக் கிழமை, மாதமின்றி அமையும். ஜனவரி முதல் நாளும், டிசம்பர் இறுதி நாளும் ஞாயிறாக அமையும். ஒவ்வொரு ஆண்டும் மாற்றப்படாத நாள்காட்டியாகவே இது விளங்கும். முந்திய நாள்காட்டியில் உள்ள பல குறைபாடுகள் இதில் நீக்கப்பட்டுள்ளன. இதனைப் பரப்புதல் செய்ய அச்சீலிஸ், உலக நாள்காட்டிச் சங்கம்(World Calendar Association) நிறுவினார். இதனை விளக்க 5 நூல்களை எழுதினார். உலக நாடுகள் சங்கத்திலும் அதன் தொடர்ச்சியாக உருவான ஐக்கிய நாடுகள் அவையிலும் இதன் சிறப்பை எடுத்துக் கூறினார். ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பினரான ஐக்கிய அமெரிக்கா இதற்கு அங்கீகாரம் வழங்கவேண்டுமாயின் தம் மக்கள் பங்கேற்பு அமைப்பான காங்கிரசில் இது ஒப்புதல் பெறவேண்டுமென்றது. சமயவாதிகளின் எதிர்ப்பாலும், வரி விதிப்பில் பாதிப்பு நேரும் என்று காரணம் காட்டியும்  இதற்கு ஒப்புதல் மறுக்கப்பட்டது. எனவே ஐநா அங்கீகாரம் இதற்குக் கிடைக்கவில்லை. தம் தாய் நாட்டிலேயே இதற்கு ஆதரவு கிடைக்காமைக்கு  இந்த அம்மையார் மனம்வருந்தி இந்த முயற்சியை 1956 இல் கைவிட்டார். எனினும் இந்த அமைப்பின் பிற ஆட்சிக்குழுவினர் இந்தச் சங்கத்தை உயிர்ப்பித்துத்  தொடர்ந்து இந்த நாள்காட்டியை உலகம் அங்கீகரிக்க இன்றுவரை முயன்று வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க இந்தியாவிலும் நாள்காட்டிச் சீர்த்திருத்தத்திற்கான தேவை மிகுந்துள்ளது. பெரும்பாலான வட இந்திய நாள்காட்டிகள் நிலவின் இயக்கத்தைச் சார்ந்து அமைக்கப்பட்டவை. எனவே நிலவுப் பாதையின்படி மாதக்கணக்கிடுகையில் 29.5 நாள்களே அமையும். எனவே 354 நாளாக ஓர் ஆண்டைக் கணக்கிட்டே  இந்த நாள்காட்டிகள்  தவறிழைக்கின்றன. இவை போன்றே இசுலாமிய திபெத்திய நாள்காட்டிகளும்  நிலா நாள்காட்டிகளாக உள்ளன. ஆனால் தமிழ், கேரள, வங்காள நாள்காட்டிகள் முற்றிலும் கதிவரன் நாள்காட்டிகளாகும். எனவே கதிரவன் நாள்காட்டியான கிரெகொரியன் நாள்காட்டியில் ஒரே நாளில் மாற்றமின்றி பெரும்பாலும் பொங்கல், சித்திரைத்திருநாள் ஆகியன வருகின்றன. ஆனால் வட இந்தியப் பண்டிகைகளான தீபாவளி, இசுலாமிய பண்டிகையான  ரம்ஜான் போன்றவை ஒவ்வொரு ஆண்டும் மாறி மாறி வருவது இதனால்தான்.

இந்து நாள்காட்டிகளும் பஞ்சாங்கங்களும் அறிவியலுக்கு எதிரானவை என்று கருதிய நேருவின் ஆலோசனைப்படி மேக்நாட் சாகா தலைமையில் நாள்காட்டிச் சீர்திருத்த குழு ஒன்று அமைக்கப்பட்டது.  மேக்நாட் சாகா இந்தியாவின் ‘சாகா’ எனும் தீண்டப்படாத சமூகத்தில் பிறந்த உலகம் போற்றும் வானியல் விஞ்ஞானி என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

‘அயனியாக்கக் கோட்பாடு சமன்பாடு’ என்ற அவரது கண்டுபிடிப்புதான் பேரண்டம் தொடர்பான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தது..

பஞ்சாங்கக் கணக்கீடுகள் அறிவியலுக்கு எதிரானவை என்பதை குழு விரிவாக விளக்கி, அறிவியல் அடிப்படையில் புதிய நாள்காட்டியையும் உருவாக்கித் தம் அறிக்கையை 1955 ஆம் ஆண்டு நேரு அரசிடம் சமர்ப்பித்தது.

முக்கியமாக இந்துப் பண்டிகை நாள்கள் உரிய பருவங்களை விட்டு ஏற்கனவே 23 நாள்கள் தள்ளி அமைந்துள்ளதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. ஆனால் பலநூறு ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்தத் தவறை ஒரேயடியாக மாற்றுவது குறித்து இந்த அறிக்கை தயக்கம் காட்டியது. எனவே இந்த 23 நாள் வேறுபாட்டை நிலையான வேறுபாடாக வைத்துக் கொண்டு கணக்கீடுகளைச் செய்து கொள்ள பரிந்துரைத்தது

அரசு கோப்புகள், ஆவணங்கள், நடவடிக்கைகள்,சட்ட செயல்பாடுகள் போன்றவற்றைப் பஞ்சாங்கங்களில் இருந்து விடுவிக்க இந்த முற்போக்கான பரிந்துரைகள் வழிவகுத்தன. எனினும் பழம் பஞ்சாங்கங்களைத் திருத்தமுடியாமல் போனது வருத்தமானதாகும்.

அறிவியல் அடிப்படையிலான நாள்காட்டி ஒருநாள்  வந்தே தீரும் . வீசட்டும் புதுத்தென்றல்.