வீசட்டும் புதுத்தென்றல்:1
இக்காலமே பொற்காலம்
மாற்றம் ஒன்றே மாறாதது; தவிர்க்கமுடியாதது. மனித வரலாற்றில் இந்த 21 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் ஈடு இணையற்றவை. மாற்றம் எந்தத் துறையையும் விட்டுவைக்கவில்லை. அதுவும் புதுப்புது மாற்றங்கள் நிகழாத நாளில்லை.
பழமைவாதிகளுக்கு அதிர்ச்சியாகவும் ஏற்கமுடியாததாகவும் இருக்கும் இந்த மாற்றங்களைச் சகிக்க முடியாது அவர்கள் இறந்தகாலத்தை நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் மீட்ருவாக்கம் செய்ய முயல்கிறார்கள். இயற்கை விதிகளுக்கு எதிரான இந்த முயற்சி என்ன முயன்றாலும் படுதோல்வியை அடைந்தே தீரும்.
முதல் புகைவண்டித்தொடர் திருச்சியிலிருந்து சென்னைக்கு விடப்பட்டபோது மேல்சாதியினர் மற்ற சாதியினருடன் கலந்து அந்த வண்டியில் ஒரே பெட்டியில் ஏற மறுத்தனர். உயர்சாதியினருக்குத் தனிப்பெட்டி கோரினர். ஆங்கிலேய இரயில்வே நிறுவனம் இதற்கு ஒப்பவில்லை. அவர்களை ஏற்றிக்கொள்ளாமலேயே குறித்த நேரத்தில் வண்டி கிளம்பியது. பல நாள்கள் போராடித் தோற்று மற்றவர்களுடன் சேர்ந்து பயணிக்கவேண்டிய நிலை அவர்களுக்குத் தவிர்க்கமுடியாததாயிற்று.
கம்பம் நட்டு மின்சாரம் வழங்க ஆங்கிலேய அரசு முதலில் முயன்றபோது மொத்தமாக மக்களைச் சிறைப்பிடிக்கும் முயற்சி என அதற்கு எதிர்ப்பு! பிளேக் நோய் மராட்டியத்தில் கடுமையாகப் பரவியபோது ஆங்கிலேய அரசு நோய்க்குக் காரணமான எலிகளைக் கொல்ல முற்பட்டபோது மதரீதியான எதிர்ப்பு! அதுவும் பால கங்காதரத் திலகரிடமிருந்து! நிழற்படக்கருவி அறிமுகமானபோது அதில் படமெடுத்தால் உயிருக்கு ஆபத்தாகும் என ஓடி மறைந்தவர்கள் பலர். 1960 களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மளிகைக்கடைகள் வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்டபோது கடைக்காரர் எவ்வளவு விளக்கியும் அதை வாங்க மக்கள் அஞ்சினர்..
எந்த நல்ல மாற்றமும் உடனே ஏற்கப்படுவதில்லை. மாற்றம் தவிர்க்கமுடியாதது என்பதால் மாற்றத்திற்குத் தக்கபடி நம் மனநிலையை மாற்றி அதனை வரவேற்று, அதனை நம் வசதிக்கேற்ப தகவமைத்துக்கொள்வதே அறிவுடைமையாகும்.
நாம் 21ஆம் நூற்றாண்டின் முதல் கால்பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பின்னோக்கிப் பார்த்தால் நாம் கண்டுள்ள முன்னேற்றம் நமக்குப் புரியும். எடுத்துக்காட்டிற்கு, பொற்காலமாகப் போற்றப்படும் சோழர் காலத்திற்குச் சென்று 1000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த இராசராச சோழன் காலத்துச் சமூகச் சூழலைப் பார்ப்போம். அண்டை அரசுகள் பலவற்றை அழித்துச் சோழநாட்டு எல்லைகள் விரிந்தன. ஆனால் பெரும்பாலான பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் சுருங்கியது. மேல்சாதியினருக்குப் பல சலுகைகள்! வரியில்லா வருவாய்! போர்களுக்கும், கோயில் செலவுகளுக்கும் அரசனது அரண்மனை ஆடம்பரச் செலவுகளுக்கும் பொது மக்கள் மீது 400 க்கும் மேற்பட்ட வரிகள் சுமத்தப்பட்டன.
உழவர்கள் பலருக்குக் கோயில் நிர்வாகம் 12% வட்டியுடன் கடன் கொடுத்தது. விளைச்சல் இல்லாமையால் அவர்கள் கடன் கட்டத் தவறியபோது நிலம் கோயிலுக்குச் சொந்தமாக்கப்பட்டது. கடனுக்காக உழவர்கள் அடிமையாக்கப்பட்டு அவர்கள் முதுகில் சூட்டுக்கோலால் சூடு போட்டு கோயில் நிலங்களில் அவர்களைப் பணிசெய்ய வலியுறுத்தினர். இதுபோல 15 காரணங்களால் ஆயிரக்கணக்கானோர் அடிமைகளாக்கப்பட்டுச் சமுதாயத்தில் இழிவாகக் கருதப்படும் பணிகளைச் செய்ய வற்புறுத்தப்பட்டனர்.
உத்தரமேரூர் கல்வெட்டுகளின் வழி சிறப்பாகப் பேசப்படும் குடவோலை முறை என்ற மக்களாட்சி முறை எல்லா மக்களுக்குமானதாக இல்லை. இது பிராமணர்கள் வாழும் பகுதியில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டது. பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட குடியிருப்புகளுக்கு முழு வரிவிலக்குகள் வழங்கப்பட்டதுடன் அரசனின் ஆணைகளும் அவற்றினுள் செயல்படா வண்ணம் அவை அமைந்தன.
மன்னர்கள் நிறுவிய பள்ளிகள் யாவும் பிராமணருக்கு மட்டும் வடமொழிப்பயிற்சி அளித்தன. வேத பாடச்சாலைகளுக்குச் சலுகைகள்! கற்பித்த ஆசிரியர்களுக்கு நெல்லும் பொன்னும் ஊதியம்! ஆனால் ஊர்ப்பொதுமக்களுக்குத் தமிழ்க்கல்வி உரிய முறையில் அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அரசாணைகளையும், ஆவணங்களையும் கல்லில் பொறித்த முக்கியத் தமிழ்க் கல்வெட்டுகளில்கூட ஏராளமான எழுத்துப்பிழைகள் கண்ணில் நெருடுவது இதற்குச் சாட்சி.
இராசராச சோழன் 400 க்கும் மேற்பட்ட பெண்களைக் கோயில் பணிகளுக்காக அவர்கள் பாதங்களில் சூலக்குறியிட்டு தேவரடியார்களாக மாற்றினான். இப்பெண்கள் அரசனின் அந்தப்புரத்திற்கு இழுத்துசெல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன. கோவில் பூசாரிகள், பெருநிலவுடமையாளர்களின் காமவெறிக்குப் பலியான தேவரடியார் குலப்பெண்கள் மீண்டெழுந்து இன்று மறுவாழ்வு பெற ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்கவேண்டியதாயிற்று.
‘நல்ல தம்பி’ என்ற திரைப்படத்தில் உடுமலை நாராயண கவி எழுதி என்.எஸ். கிருஷ்ணன் பாடிய பாடல் வரிகளில் சில இன்றும் பொருந்துகிறது:
மனுசனை மனுசன் ஏச்சுப் பொழைச்சது அந்தக் காலம்
அது அந்தக் காலம்
மடமை நீங்கி நமதுடைமை கோருவது இந்தக் காலம்
இழிகுலமென்றே இனத்தை வெறுத்ததந்தக் காலம்
அது அந்தக் காலம் மக்களை
இணைத்து அணைக்க முயற்சி பண்ணுவதிந்தக் காலம்
த்ரோபதை தனை துகிலை உரிஞ்சான் அந்தக் காலம்
பெண்ணைத் தொட்டுப் புட்டா சுட்டுப் புடுவான் இந்தக் காலம்
சாத்திரம் படிப்பது அந்தக் காலம். சரித்திரம் படிப்பது இந்தக் காலம்
கோத்திரம் பாப்பது? அந்தக் காலம். குணத்தைப் பாப்பது? இந்தக் காலம்
பக்தி முக்கியம் அந்தக் காலம். படிப்பு முக்கியம் இந்தக் காலம்
கத்தி தீட்டுவது? அந்தக் காலம். புத்தி தீட்டுவது? இந்தக் காலம்
இறந்த காலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இக்காலமே பொற்காலம் என்று எண்ணி நிறைவடைவதற்குப் பல காரணங்கள் உள்ளன.
கடந்த காலங்களில் மக்கள் பட்ட எண்ணற்ற துன்பங்கள் இப்போது மறைந்துவிட்டதை மறுக்கமுடியுமா? கல்வி கற்க யாருக்கும் தடையில்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகளைக் களைய உலகெங்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. பள்ளிக்கல்வி பல நாடுகளில் கட்டாயம்; இலவசம்!
பெரியம்மை, காலரா, பிளேக், தொழுநோய், காசநோய் இனி மக்களை விழுங்க வழியில்லை. புற்றுநோய் என்றால் சாவுதான் என்பதற்கும் சாவு மணி அடித்தாயிற்று. செயற்கை இதயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இனி மாரடைப்பும் விரைவில் மறையும். உலகின் எந்த மூலைக்கும் 24 மணிநேரத்திற்குள் செல்ல முடியும். திறன் பேசி என்ற அலாவுதீன் அற்புத விளக்கு எல்லோருடைய கையிலும் எளிதாகத் தவழ்ந்து எண்ணற்ற செயல்களைச் செலவின்றிச் செய்கிறது. உலகெங்கும் பார்த்தபடி தொலைபேசுவது இலவசமாகிவிட்டது.
பட்டினியால் சாவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்துவிட்டன. பல நாடுகளில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. சாதி, மத, நிற வேறுபாடுகள் முழுவதுமாக மறையாவிட்டாலும் வெளிப்படையாக இவற்றைப் பெருமையுடன் பறைசாற்றவோ, ஒருவரை மற்றவர் தள்ளிவைக்கவோ இனி இயலாது. ஏழை பணக்காரர் வேறுபாடுகள் உலகெங்கும் குறைந்துவருகின்றன. எந்த அநீதியையும் தட்டிக்கேட்கவும், தடுத்து நிறுத்தவும் உலக அளவில் வாய்ப்பும் வசதியும் உள்ளன. ஒரு நாடு இன்னொரு நாட்டின் மேல் படையெடுத்தால் ஆக்கிரமிப்பாளன்மேல் உலகமெங்கும் எதிர்ப்புக்குரல் ஒலிக்கிறது. எந்தப் பாதிப்பு நிகழ்ந்தாலும் உலகின் எல்லாத் திசைகளிலிருந்தும் உதவி கிடைக்கிறது.
உலகெங்கும் கல்வித்திட்டம் அறிவுத்தேடலை மட்டும் முன்வைக்காமல் சமூகப்பொறுப்பை, மனித நேயத்தை மேற்கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. நிர்வாக மேலாண்மையும் எண்ணியமாக்கலும் (digitalisation) செயற்கை நுண்ணறிவும் மனித நாகரிகத்தைப் பெரும் வசதியை நோக்கிப் பாய்ச்சலுடன் முன்னேற்றி வருகின்றன. இவை அனைத்திலும் குறைகளும், கேடுகளும் உண்டுதான். எந்த நல்லவற்றில்தான் தீமைகள் உட்புகாமல் இல்லை? அல்லவற்றைக் களைந்து நல்லவற்றைத் தேர்வுசெய்வது நம் கையில்தான் உள்ளது.
தமிழ் இலக்கணத்தைப் பல நூற்றாண்டுகளாக வழி நடத்திவரும் நன்னூலின் ஆசிரியர் பவணந்தி முனிவர்,
‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையினானே’
என்று ஆணித்தரமாக அறிவித்தது பழமைவாதிகளின் சிந்தனைப்போக்கைச் சீர்திருத்தும்.
பெற்றோர்களைவிடப் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பார்கள். அப்படி இருப்பது பெற்றோர்களைவிட இந்த உலகிற்கே மகிழ்ச்சி அளிக்கும்:
‘தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்உயிர்க்கு எல்லாம் இனிது’ என அடுத்த தலைமுறையினரின் புதுமைகளைப் போற்றப் பரிந்துரைக்கிறார் திருவள்ளுவர்.
புதியவர்களின் புதுமைகளை வரவேற்போம். வீசட்டும் புதுத்தென்றல்!