அட்சய திருதியை அவலங்கள்
வணிகர்கள் தங்கள் இலாபத்தைப் பெருக்கிக்கொள்ள தீபாவளி, பொங்கல் ஆகிய விழாக்களை மிதமிஞ்சிப் பயன்படுத்தி வருகின்றனர். புதிய உத்தியாக ஆடித்தள்ளுபடி அறிமுகமானது. இந்த வரிசையில் சில காலமாக நுழைக்கப்பட்டதுதான் அட்சய திருதியை. ஒரு புத்திசாலி நகை வியாபாரியின் மூளையில் உதித்து இன்று பாமர மக்களை முட்டாளாக்கி வணிகர்களைக் கொழுக்கவைக்கும் இந்தத் தந்திரம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. தங்கம் அதிகம் விற்பனையாகாச் சித்திரை மாதத்தில் தங்கம் அமோகமாக விற்க வழி கண்டுபிடித்துவிட்டார்கள்.
போன தலைமுறையில் இதைப்பற்றி யாரும் கேள்விப்பட்டதே இல்லை. அன்று- எத்தனையோ குறுவிழாக்களில் இதுவும் ஒன்று. இன்று இதை ஊதிப்பெரிதாக்க ஆதாரமற்ற புராணக் கதைகளை இத்துடன் இணைக்கிறார்கள். இது கிருதயுகத்தில் பிரம்மன் உலகைப் படித்த நாளாம். மகாபாரதம் எழுதப்பட்ட நாளாம். திரௌபதியின் துகிலுரிக்கப்பட்டபோது அவள் சேலை வளர்ந்த நாளாம். திரௌபதி சூரிய பகவானிடமிருந்து அட்சய பாத்திரத்தைப் பெற்ற நாளாம். திருமாலின் 10 அவதாரங்களில் ஒன்றான பரசுராமரின் பிறந்தநாளாம். கிருஷ்ணர் குசேலருக்குச் செல்வங்களை அள்ளித்தந்த நாளாம். சிவபெருமான் அன்னபூரணியிடமிருந்து தம் அட்சய பாத்திரம் நிரம்பும் அளவு உணவு பெற்ற நாளாம். கங்கை ஆறு சொர்க்கத்திலிருந்து பூலோகத்திற்கு இறங்கி வந்த நாளாம்.. குபேரன் இழந்த செல்வத்தை மீட்ட நாளாம்.
அட்சய திருதியைத் தூக்கிப்பிடிக்க இது போதுமா? இன்னும் வேண்டுமா? அட்சயதிருதியை என்ற தொடர்வண்டியில் எத்தனை புராண வண்டிகளையும் இணைத்துக்கொண்டே போனாலும் யார் தடுத்துநிறுத்தப்போகிறார்கள்? பகுத்தறிவை அடகு வைத்து எதனையும் கேள்விகேட்காமல் வசதியாக நம்பும் ஆட்களுக்கு இங்கு பஞ்சமில்லை. இப்படி நம்புவதே இன்றைய சமய நாகரிகமாகவே கருதப்படும் சூழலில் நாம் இப்போது வாழ்த்துகொண்டிருக்கிறோம் என்பதே கொடுமையானது.
அட்சயம் என்றால் எப்போது குறையாதது என்றும் திருதியை என்றால் வளர்பிறை அல்லது தேய்பிறையின் மூன்றாம் நாள் என்றும் பொருள் சொல்லப்படுகிறது. சித்திரை வளர்பிறையில் அமாவாசையை அடுத்த 3 ஆம் நாள் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் அன்னாதானம் அல்லது ஆடை தானம் செய்தால் புண்ணியம் பெருகும் என்று மக்களை அறப்பணி செய்யத்தூண்டும் எண்ணத்துடன் இவ்விழா அறிமுகப்படுத்தப்பட்டது. எதுவும் அன்று பெருகும் என்பதன் நம்பிக்கையை வைத்து வணிகர்கள் இதைத் தங்கத்திற்கும் பட்டுப்புடவைக்கும் விரிவுபடுத்திப் பார்த்து மக்களின் பாக்கெட்டிற்குள் கைவிடத்தொடங்கியுள்ளனர்.
‘குன்றிமணி அளவாவது தங்கம் வாங்குங்கள் உங்கள் வீட்டுத்தங்கம் பெருகும்’ என்று தொடர்ந்து முழங்கும் விளம்பரங்கள் மக்களை மூளைச்சலவை செய்து வருகின்றன.
பொன்னாசை கொண்ட பெண்களை ஏமாற்ற இது எளிய வழி. பக்கத்துவீட்டுப்பெண்ணைப் பார்த்துக் கூட்ட மனப்பான்மையில் சுய சிந்தனையை அடகுவைப்போரைச் சிக்க வைக்கும் தந்திரம். மதச் சாயம் பூசினால் மயங்கிவிடுவோரை மடக்கிப்பிடிக்கும் மாய வலை.
சென்ற ஆண்டு அட்சய திருதியைக்குத் தங்கம் வாங்கியவர்கள் வீட்டில் இன்று தங்கம் எவ்வளவு பெருகியிருக்கிறது என்று கேட்டால் யாரிடமும் சரியான பதில் இல்லை. தங்கம் வாங்கினால் தங்கம் சேருமென்றால் தங்கம் விற்கிறவனிடம் வறுமை தாண்டவமாட வேண்டுமல்லவா? ஆனால் வாங்கிய பலர் கடனாளியாவதும் விற்ற வியாபாரி மேலும் பணக்காரனாவதுமே உண்மையாக உள்ளது. காசிருந்தால் எல்லா ஆண்டும் தங்கம் பெருகும் என்பது மட்டுமே பேருண்மை.
வியாபாரப்போட்டியில் ஒரு புகழ்பெற்ற நகைக்கடை நிறுவனம் ஒரு உண்மையைப்போட்டு உடைத்துள்ளது. கடவுள் நம்பிக்கையுள்ள அந்த நிறுவனமே கடவுளின் பெயரில் ஏமாற்றலாமா என்று தலைப்பிட்டு நாளிதழில் முழுப்பக்கம் விளம்பரம் கொடுத்துள்ளது. அந்த வாசகத்தைப் படிக்கிறேன் :
‘ கிராமுக்கு ரூ.52 தள்ளுபடி!... சவரனுக்கு ரூ.520 தள்ளுபடி!... இலவசப் பரிசு! என்று அட்சய திருதியை நன்னாளை முன்னிட்டு, பல நகைக் கடைகள் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் சலுகைகளை நீங்கள் காணலாம். தீர விசாரிக்கும் பொழுதுதான் இதில் உள்ள தந்திரம் தெரியும்! கிராமுக்கும், சவரனுக்கும் தள்ளுபடி அளிக்கும் இக்கடைகள், நகைகளின் சேதாரத் தொகையை அளவிற்கு அதிகமாக வசூலித்து இதுபோன்ற தள்ளுபடியில் அதை மறைக்கிறார்கள் என்பதுதான் உண்மை மேலும் பல சலுகைகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கும்’.
இப்படி விளம்பரம் செய்துள்ள அந்த நிறுவனம் நல்ல பிள்ளையாகத் தம் நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்து மேலும் விவரிக்கிறது. அட்சய திருதியை மோசடிகளை அட்சய திருதியையை வைத்து வியாபரம் செய்யும் நிறுவனமே வணிகப்போட்டியில் வணிகப் பொய்களை வெளிச்சம் போட்டுள்ளது.
உழைத்து உழைத்து ஓடாய்ப் போன ஒரு கூட்டம் அரைவயிறு நிரம்பாமல் அல்லாடிக்கொண்டிருக்க, தின்ற சோறு செரிக்காமல் நகைவாங்க கடைகடையாய் ஏறி இறங்கும் கூட்டம் அலைமோதுவது இந்தப் புண்ணிய பூமியில்தான்.
சரி அட்சய திருதியை அன்று எல்லாம் பெருகும் என்போரிடம் ஒரு வேண்டுகோள்- இந்த நாளில் காவேரியில் கொஞ்சம் தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்யுங்கள் ஆண்டு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடட்டும். தமிழ்நாட்டின் தண்ணீர் பஞ்சமாவது தீரட்டும்.