மெய்ப்பொருளை உணர்த்தும் வரலாற்றுப்பதிவு

          மெய்ப்பொருளை உணர்த்தும் வரலாற்றுப்பதிவு

சமகாலத்தைப் பதிவு செய்தாலும் காலங்கடந்து வாழப்போகும் ஓர் அரிய நூலாகத் தமிழ் உலகிற்கு ஓர் அருங்கொடையாகக் கிறித்துவப் பாசறையிலிருந்து புறப்பட்டிருக்கிறது இந்நூல்.

நம் வாழ்வு இதழ் வந்தவுடன் ஒரு தொடர்கதையைப் படிக்கும் ஆர்வத்துடன் அருட்திரு குடந்தை ஞானியின் தலையங்கத்தை விரைந்து படிப்பேன்.  என்னைப்போலவே  நம் வாழ்வு வாசகர்கள் பலரும் இந்தத் தலையங்கத்தின் வரவை ஆர்வமுடன் படித்து உணர்ச்சி வயப்படுவதுடன் புத்தொளி பெறுவதாகவும் அறிகிறேன்.

அரசியல், சமூகம், பொருளாதாரம் கிறித்துவம் என்று அவர் தலையங்கம் தொடாத துறையில்லை.. அவற்றில் காலத்தின் தேவையுணர்ந்து அறிவார்ந்த அழுத்தமான கருத்துகளை அச்சமின்றிப் பதிவு செய்யும் நேர்த்தி எந்த வாரமும் விடுபட்டதில்லை.

அவரின் அறச்சீற்றம் வெளிப்படும் வரிகள் அரசியலாளரை அதிரவைக்கும் ஆற்றல் படைத்தவை. ‘ பிணங்களிலும் சாதிபார்த்து, வாழும் மனிதர்களில் மதம் பார்த்துச் செயல்படும் இந்த யோகி இந்திய ஜனநாயகத்தின் கரும்புள்ளி. இவர் காவி போர்த்திய கருப்பு ஆடு. உத்தரப்பிரதேசம்- இது ஜனநாயகத்தைச் சுட்டெரிக்கும் உக்கிரப் பிரதேசம்’ என்று மனங்குமுறுகிறார். நம்மையும் குமுறவைக்கிறார்.

சௌக்கிதாரின் யோக்கியதை என்ற தலையங்கத்தில் ஒரே சொற்றொடரில் முற்றுப்புள்ளி வைக்காமல் பிரதமர் மோடியின் கபடச்செயல்களைப் பல வரிகளில் வெளிச்சம் போட்டுக்காட்டி அவர் எழுதியது கருத்திலும் எழுத்திலும் புதுமை படைப்பதாகும்.

புள்ளிவிவரங்களை அள்ளித்தருவதில் இவர் வல்லவர்; தம் கருத்திற்கு அணி சேர்ப்பவர். ‘பிரதமர் மோடி அரசு சுய விளம்பரத்திற்காகச் செலவிட்ட ரூ4880 கோடியை வைத்து 57 இலட்சம் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இலவச மதிய உணவு வழங்கலாம்; 20 எய்ம்ஸ் மருத்துவமனைகளை நிர்மாணித்திருக்கலாம். 5 கோடியே 98 இலட்சம் கழிப்பறைகளைச் சுவட்ச் பாரத் திட்டத்தின் கீழ் கட்டிக்கொடுத்திருக்கலாம்’ என்று புள்ளிவிவரங்களை அடுக்கி உண்மைகளை உலகுக்கு உணர்த்துகிறார். இதே போல மோடி ஜூம்லா..நல்ல பொய்யன் என்ற தலையங்கத்தில் பிரதமர் இதுவரை சொல்லிய பொய்களை ஐயத்திற்கிடமின்றி நிறுவுகிறார்.

பிற அரசியல் சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர் கிறித்துவத்தில் புரையோடிவரும் அவலங்களையும் மனசாட்சிக்கு மாசின்றிச் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ‘இயேசு எருசலேம் ஆலய முற்றத்தில் எடுத்த சாட்டையை இன்னும் கீழே வைக்கவில்லை என்பதை மேய்ப்பர்களே மறவாதீ்கள்’ என்று குறிப்பிடும்  இவர் திருடர்கள் ஜாக்கிரதை என்ற தலையங்கத்தில்  துணிவுடன் கிறித்துவ ஆன்மீக வாதிகளையே சாடுகிறார்.. ‘இன்றைய இளைய தலைமுறை கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நிலையில் அறிவார்ந்த அடுத்த தலைமுறை திரு அவையில் இல்லை என்பது கண்கூடு. ஆகையால்தான் சமூக இடைவெளி விட்டு நாம் நின்றுகொண்டிருக்கிறோம்.  அறிவார்ந்த அடுத்த தலைமுறையைப் பிரசவிக்க இயலாமல் தமிழகத் திரு அவை தள்ளாடுகிறது.’’... என்று இவர் வெளிப்படுத்துவது பலரின் ஆதங்கமுமாகும்.

மேலும், ‘’அயலக மறைப்பரப்பாளர்களைவிட உள்நாட்டு மறைப் பரப்பாளர்கள் செய்த இலக்கியச் சேவை மிகவும் குறைவு’. ‘திரு அவையில் படைப்பாளர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்பது போய் கடைவிரிக்கவே ஆட்கள் இல்லாத நிலைதான் இன்று ஏற்படுகிறது. திரு அவைத் தலைவர்கள் புரவலர்களாக இல்லை.தமிழக அரசே நூலகங்களுக்கு நம் வாழ்வு இதழை வாங்கும்போது நம் மறைமாவட்ட குருக்களும், துறவற இல்லங்களும் நம் வாழ்வு வார இதழை வாங்காத நிலை, வாங்க மறுக்கிற நிலை மாறவேண்டும்’’ என்று அவர் மனம் வருந்திக்கூறியுள்ளார். ‘அறிவுதான் கிறித்துவத்தின் எட்டாவது அருட்சாதனம்’ என்று பிரான்சிஸ் சலேசியார் போற்றுவதை மேற்கோள் காட்டிப் பேசுவோர் மனம் மாறுவார்களா?

மேலும் இதன் தொடர்ச்சியாக ‘கத்தோலிக்கச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கட்டிட அமைப்புகளாகச் செயல்பட்டனவே அன்றி தட்டியெழுப்பும் அமைப்புகளாக வளர்த்தெடுக்கப்படவில்லை’ என்று கூறி அதற்குத் தீர்வாக ’கிறிஸ்துவர்கள் அரசியல்படுத்தப்படவில்லையெனில் கிறித்துவத்திற்கு எதிர்காலமில்லை. இயேசுவின் அரசியல் நமதாக வேண்டும் . அரசியல் இயேசு நம் இயக்கமாக வேண்டும்’’ என்று அவர் உரத்தக்குரலிடுவது பலரைச் சிந்திக்கவைப்பதாகும்.

சனாதனக்கொடுமை, இந்துத்துவ வெறியாட்டம், ஜனநாயகப்படுகொலை, சாதிவெறி, அரசின் எதேச்சதிகாரம் போன்றவை தலைவிரித்தாடும்போது  இயேசு எடுத்த அதே  சாட்டையை இவரும் எடுத்து விளாசத் தவறுவதில்லை. தூத்துக்குடித் துப்பாக்கிச்சூடு பற்றி அவர் மனங்குமுறி எழுதியவையும்  அத்தகையன. ஜாலியன் வாலா பாக் படுகொலை வரிசையில் தூத்துக்குடி படுகொலை வரலாற்றில் இடம்பெறும் என்று குறிப்பிட்டு இது  கொலை- அரசே அரசால் அரசுக்காக என்று தலைப்பிடுகிறார். குடியுரிமைச் சட்டத்தின் கொடுமை உணர்ந்து திருத்தாதீர்கள்! திருந்துங்கள்! திருத்தப்படுவீர்கள்! என்று தலைப்பிலேயே எச்சரிக்கிறார். தமிழக விவசாயிகளின் நிலங்கள் வணிக நலன்களுக்காகப் பறிக்கப்படும் ஆபத்து நிகழ்ந்தபோது ‘கள்வர்கள் கையில் அகப்பட்ட வழிபோக்கனைப்போல நம் தமிழக டெல்டா விவசாயிகள் உள்ளனர்’ என்று விவிலிய உவமையுடன் சரியாக ஒப்பிட்டு உணர்த்துகிறார். ஐயப்ப பக்தர்களாகப் பெண்கள் சபரிமலைக் கோயிலில் நுழைய எதிர்ப்பு ஏற்பட்டபோது’ ‘கருவறையில் உள்ளது பெண் தெய்வம்தான். கருவறையில் உறையும் தெய்வமும் மதிப்பது இந்த நடமாடும் கருவறைகளைத்தான்’ என்று உள்ளத்தில் உணர்த்தும் வண்ணம் குறிப்பிடுகிறார். சிலர் கையில் போட்டிருக்கும் தீண்டாமைக்கயிறு தமிழனத்தின் தூக்குக் கயிறு என்று சாடும் இவர் ஒரு கத்தோலிக்க குருவானவரே தினத்தந்தி தொலைக்காட்சி நேர்காணலில் தம் சாதியைக் குறிப்பிட்டுப் பேசியதை மறைக்காமல் சுட்டிக்காட்டி வருந்தவும் தவறவில்லை.

வாரந்தோறும் எப்படி இவரால் சோர்ந்துவிடாமல் சூடு குறையாமல் வேகமாகவும், விவேகமாகவும் இந்தத் தலையங்கங்களை எழுதமுடிகிறது என்பது வியப்பிற்குரியது. தற்போதைய எந்தத் தமிழ் இதழ்களின் தலையங்கங்களையும் விடச் சிறப்பாக, பொறிபறக்கும் நடையில் ஆழமான செய்திகளுடன் எழுதும் இவரின் பேராற்றலைக் கிறித்துவச் சமூகம் மட்டுமன்றித் தமிழ்ச் சமூகமே உரிய முறையில் போற்றிப் பயன்படுத்தவேண்டும்..     

கிறித்துவ மதக்குருவாக இருந்தும் கிறித்துவம் உணர்த்தும் மனிதத்தை அவர் போற்றுவதால் ‘மதத்திற்கு மதம் பிடித்தால் மனிதம் மரித்துப்போகும்’  என்றும் ‘ மதம் இருபுறமும் கூர்மையான கத்தியைப் போன்றது.. சரியான முறையில் கையாளவில்லையென்றால் அதனைப் பிடித்திருப்பவனையும் குத்திக்கிழித்துக் காயப்படுத்திவிடும். மதம் வீட்டிற்குள்ளும் வழிபட்டுத் தளத்திற்குள்ளும் இருக்கும் வரை பாதுகாப்பானது. அது தெருவுக்கும் தெருமுனைக்கும் வந்துவிட்டால் ஆபத்து’’ என்றும் அவர் கூறுவது கிறித்துவத்திற்குக் கிடைத்த விவேகானந்தராக அவரை அடையாளப்படுத்துகிறது.

இந்தப் புரட்சித் துறவியின் எழுத்துகள் அரைநூற்றாண்டுகளுக்கு முன்பாக பேரறிஞர் அண்ணாதுரை  ஏடுகளில் எழுதிய கூர்மையான தலையங்கங்களையும் கட்டுரைகளையும் நினைவுபடுத்துகின்றன. அண்ணாவின் அதே வேகம், கூர்மை, நையாண்டி, அனைத்தும்  இவர் எழுத்திலும்  மிளிர்வதை உணர்கிறேன். அன்று அண்ணா பிற்போக்குச்சக்திகளுக்கு எதிராக நடத்திய எழுத்துப்போரை இன்று குடந்தை ஞானியாரும் அவரின் வழித்தடத்தில்  தொடர்கிறார் என்பது உண்மை! வெறும் புகழ்ச்சியன்று.

‘பேனா முனையை விட வலிமையான ஆயுதம் இவ்வுலகில் இன்றளவும் இல்லை. காட்சிகள் கனவாகிப்போகும், வார்த்தைகள் காற்றோடு போகும். எழுத்து மட்டும்தான் நிலைத்து நிற்கும் என்பதை வரலாறு உணர்த்தி இருக்கிறது. இனியும் உணர்த்தும்’ என்று இவர் உரைத்திருப்பது இந்த நூலுக்கும் பொருந்தும்.

மெய்ப்பொருளை உணர்த்தும் இவரின் எழுத்துகள் உறங்குவோரையும் எழுப்பும்! இளைஞருக்கு வழிகாட்டும்!  இவை வரலாற்றுப்பதிவுகள் என்பதைக் காலம் மெய்ப்பிக்கும்.