சித்தப்பா அளித்த பரிசு
(இ.ஜே.சுந்தர், அருட்திரு சின்னதுரை அவர்களின் அண்ணன் மகன்)
வளரிளம்பருவத்தின் நுழைவாயிலில் நான் இருந்த நாள்கள் என்னைச் செதுக்கிய நாள்களாகும். நான் என் பெற்றோரைப் பிரிந்து சென்னையிலிருந்து திருச்சிக்கு என் சித்தப்பா திரு சின்னதுரை அவர்களின் கண்காணிப்பில் கல்வி கற்க அனுப்பப்பட்டேன். அந்தப் பெரிய வீட்டில் கண்தெரியாத என் கொள்ளுப்பாட்டி, என் சித்திப்பாட்டி மற்றும் என் தங்கை மரியா ஆகியோர் இருந்தோம். என் பள்ளியிறுதி வகுப்பு வரை 4 ஆண்டுகள் திருச்சி புனித வளனார் பள்ளியில் பயின்றேன். சித்தப்பாவிடம் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றது நான் பள்ளியில் கற்றதைவிட மேலானதாகும்..
ஒழுங்கும், நேரந்தவறாமையும், திட்டமிடலும், எச்சரிக்கையுணர்வும் அவர் கற்றுத்தந்த வாழ்க்கைப் பாடங்களாகும். காலை 6 மணிக்கு திருச்சி மலைக்கோட்டையில் மணி அடிக்கையில் எழுந்தாக வேண்டும். அதேபோல மாலை 6 மணிக்கு மலை மணி அடிக்கையில் மேரீஸ் தோப்பு விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தால் அதற்குள் பாடம்படிக்க வீட்டிற்கு வந்தாக வேண்டும். பின் 7 மணிக்கு இரவு உணவு முடித்துவிட்டு தோப்புக்கோயிலில் 7.30க்கு நடைபெறும் செபமாலையில் கலந்துகொள்ளவேண்டும். இரவு 10 மணிக்கு மலை மணி அடிப்பதற்குள் தூங்கியாக வேண்டும். இந்த ஒழுங்கை சில நேரங்களில் செயல்படுத்துவது கடினமாக இருப்பினும் நயந்து சொல்லி அவற்றைக் கடைப்பிடிக்கவைப்பார். என்னோடு திருச்சியில் வளர்ந்த என் தங்கை மரியாவையும் இதே போல கண்காணித்து வழிநடத்தினார்.
இரவு படுக்கச்செல்லும் முன் மறுநாள் செய்யவேண்டிய பணிகளை ஒரு துண்டுத் தாளில் எழுதித் திட்டமிடச் சொல்வார். எனவே மறுநாள் விரைவாகவும் நிறைவாகவும் பணிகள் முடியும். புதிதாகப் புத்தகங்கள் வாங்கிவந்தால் அவற்றைப் புரட்டும்போது பழுதுபடாமல் இருக்க மேலட்டை ஒன்றைத் தைத்து நூலைப் பாதுகாக்க உதவுவார். நோட்டுப்புத்தகங்களையும், நூல்களையும் ஓரம் கசங்காமல் புதிதாகவே பராமரிக்கும் வழிகளைக் கற்றுத்தருவார். பாடநூல்களைப் புதுமெருகு மாறாமல் வைத்திருக்கும் கலையை அவரிடம் கற்றுணர்ந்தோம்.
என் வகுப்பில் மாணவர்கள் பலரும் செருப்புப் போடுவதில்லை. அந்நாட்களின் நிலை அப்படி. எனவே கூட்ட மனப்பான்மையுடன் நான் செருப்புப்போடாமல் நடக்கவே விரும்புவேன். செருப்பு சில நேரங்களில் சிரமமாகவே இருக்கும். ஆனால் செருப்புப் போடாமல் வெளியே செல்வதால் ஏற்படும் தூய்மைக்குறைவை விளக்கிச் செருப்புப் போடாமல் வெளியே செல்வதைத் தடுப்பார். வெளியே சென்று வீட்டிற்குள் நுழைந்தவுடன் கால், கை, முகம் கழுவியே உள்ளே நுழைவதை வற்புறுத்துவார். நல்ல பழக்கங்களின் நாயகர் அவர்.
தீபாவளி நேரங்களில் பட்டாசு வெடிப்பதை விரும்பமாட்டார். அதற்குப் பதில் ஓசையின்றி மத்தாப்பு கொளுத்துங்கள் என்பார். என் தோழர்கள் எல்லோரும் பட்டாசு வெடிக்கிறார்கள் என்னைத் தடைசெய்கிறீர்களே என்று நான் அவரிடம் முறையிட்டபோது அவர் பட்டாசின் ஆபத்தை விளக்கி பின் எனக்காக ஒரு நீண்ட குச்சியில் கிளிப் ஒன்றை இணைத்து அதில் பட்டாசைப் பொருத்திப் பாதுகாப்பாக வெடிக்கச்செய்தார். பாதுகாப்பிற்கு அவர் மிகவும் முதன்மை வழங்குவார்.
விடுமுறை நாள்களில் மதியம் சிறிது நேரமாவது உறங்கவேண்டுமென்று கட்டாயப்படுத்துவார். மனதிற்குப் புத்துணர்ச்சி தருமென்பார். ஆனால் நான் அந்நேரத்தில் விளையாட வெளியே ஓடவே விரும்புவேன். அவர் ஒரு சாய்வு நாற்காலியில் கண்களின் மேல் ஒரு கைக்குட்டையைப்போட்டு மூடித் தூங்குவார். அவர் தூங்கிவிட்டார் என்று கருதி நான் படுக்கையைவிட்டு ஓசைப்படாமல் எழ முயன்றாலும் உடனே அவர் எப்படியோ கண்டுபிடித்து எழுந்துவிடுவார். அவரை ஏமாற்றி வெளியே செல்வது மிகவும் கடினம். தரையில் படுத்து உறங்கும்போது உருண்டு அறையில் வேறெங்கோ சென்றுவிடும் குறைபாடு எனக்கிருந்தது. எனவே கட்டிலில் படுத்து ஒரே இடத்தில் தூங்கிப் பயிலவேண்டுமென்பார். அதற்காகப் பயிற்சியும் அளித்தார். கட்டிலைவிட்டு நான் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக கயிற்றுக்கட்டில் தயாரிக்கும் ஒரு குறவரை வரவழைத்து எனக்காகக் கட்டிலின் இருபுறமும் பாதுகாப்பாக மூங்கில் கம்பு பொருத்தித் தயாரிக்கும் வழிமுறையை விளக்கினார். அதற்காகச் சற்றுச் செலவு மிகுந்தாலும் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு அதனை ஏற்பாடு செய்தார். அப்போது சாதாரண கயிற்றுக்கட்டில் விலை ரூ5 இருக்க இந்தச் சிறப்புக் கட்டிலுக்காக அவர் ரூ7 கொடுத்ததாக நினைவு.
எந்தப் பாடத்தில் ஐயம் ஏற்பாட்டாலும் அவரிடம் கேட்டால் விடை கிடைக்கும். வகுப்பில் ஆசிரியர் நடத்துவது சில நேரங்களில் விளங்காதபோது சித்தப்பா அதனை எளிமைப்படுத்தித் தெளிவாகப் புரியவைப்பார். அவரை நாடி வீட்டிற்கு மாணவர்கள் பலரும் வருவர். எத்தனை பேர்வந்தாலும் அவர்களுக்காக நேரம் ஒதுக்கி அவர்கள் கேட்கும் ஐயங்களைத் தீர்ப்பார். பிரச்சினைகளோடு வரும் மாணவர்களுக்கு வழிகாட்டுவார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களும் மாணவராக இருந்தபோது சித்தப்பாவைச் சந்தித்து ஐயம் கேட்க அடிக்கடி இல்லம் வருவதுண்டு. சளைக்காமல் மணிக்கணக்கில் பேசினாலும் சோர்ந்து போக மாட்டார். பேச்சு வெறும் அரட்டையாக இல்லாது மிகவும் பயனுள்ள பொருள்செறிந்த செய்திகளை உள்ளடக்கியதாக இருக்கும். வீட்டிற்கு வந்த மாணவர்கள் மனநிறைவோடு திரும்புவதைப் பல நேரங்களில் நான் கவனித்திருக்கிறேன். என் சித்தப்பாவோடு பிறந்த மற்ற 6 பேர்களை ஒரு தராசுத் தட்டில் வைத்தால் இவரை ஒரு தட்டில் வைக்கலாம் என்று என் சித்திப்பாட்டி அடிக்கடி கூறுவது மிகையன்று.
உணவு உண்பதில் மிகவும் கட்டுப்பாடுடன் இருப்பதோடு எங்களையும் எண்ணெய் பதார்த்தங்கள் உண்பதைத் தவிர்க்கச்சொல்வார். மாலை பள்ளியைவிட்டு வருகையில் என் சித்திப்பாட்டி வடை, பஜ்ஜி என்று வாங்கிவருவார். ஆனால் சித்தப்பா டீயுடன் ரஸ்க் சாப்பிடுவதைத்தான் விரும்புவார்.
பன்னிரண்டு வயதில் நான் சைக்கிள் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வந்தேன். என் தோழர்கள் சிலர் சின்ன சைக்கிளை வாடகைக்கு எடுத்து வருவர். அவர்களிடம் நான் சைக்கிளில் மைதானத்தை இரண்டு சுற்றுச் சுற்றிவரக் கெஞ்சிப்பெறுவேன். அரைகுறையாகச் சைக்கிள் ஓட்டுவதுகூடத் தனிச்சுகம்தான். சித்தப்பாவின் சைக்கிளை ஓட்டிப்பழக அவரிடம் மன்றாடுவேன். ஆனால் விழுந்தால் எனக்குக் காயம்பட்டுவிடும் என்று அஞ்சி சித்தப்பா, ‘’இன்னும் கொஞ்சம் பெரிய பையனானதும் கற்றுக்கொள்ளலாம் இப்போது வேண்டாம்’’என்பார். மிகவும் வேண்டியபின் அவர் எனக்கு வழங்கும் அரைமணிநேரத் தவணையில் குரங்குப்பெடல் அடிப்பேன். விமானத்தில் பறக்கும் சுகம் அது. ஆனால் கூடவே சித்தப்பா என்னோடு ஓடி வருவார். பள்ளியிறுதி வகுப்பிற்கு முந்திய வகுப்பில் நன்றாகவே சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொண்டேன். தெருவில் ஓட்ட நம்பிக்கை வந்தும் சித்தப்பா சைக்கிளைத் தர அஞ்சுவார். சித்தப்பாவின் சைக்கிள் தனித்துவமானது. இரண்டாம் உலகப்போர் நேரத்தில் புகழ்பெற்ற ஒரு நிறுவனத் தயாரிப்பில் ஒருவரால் அது வாங்கப்பட்டதாம். சித்தப்பா அதனை 1950 களில் அந்த ஒருவரிடம் வாங்கித் தம் உயரத்திற்கு ஏற்ப அதன் இருக்கையை மாற்றியமைத்ததாகக் கூறுவார். அதன் பெருமையை அடிக்கடி சொல்லி மகிழ்வார். சைக்கிள் எப்போதும் தூசியின்றிப் பளபளப்பாக இருக்கும். பறக்கும் மகிழ்வை எனக்கு அது முதலில் வழங்கியதால் என்னைப் பொருத்தவரை அது கனவு வாகனம். பின்னால் கார் ஓட்டக்கற்றுக்கொண்டது கூட இத்தனை மகி்ழ்ச்சியளித்ததில்லை.
என் சித்தப்பாவைத் திருமணம் செய்துகொள்ளும்படி பலரும் வற்புறுத்திவந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அந்தப் பேச்சை யார் எடுத்தாலும் விலகிச்செல்வார். கொள்ளுப்பாட்டியைக் கடைசிவரை பாரமரிக்கும் பொறுப்பை ஏற்றவர், அவர் இறந்தபின்தான் தம் முடிவை வெளிப்படுத்தினார். பாட்டி இறந்த சில மாதங்களில் தாம் யேசுசபை குருவாகும் முடிவை அறிவித்தார். நான் அவரிடம் இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த முடிவு எனக்கு அதிர்ச்சியளித்தது. என் அன்பிற்குரிய கொள்ளுப்பாட்டியின் மரணத்தைவிட இவரின் பிரிவு என்னைத் துன்பத்தில் ஆழ்த்தியது. அவர் திண்டுக்கல்லிற்குக் கிளம்பும்முன் கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை. எனினும் ஓர் உயரிய பணிக்காக அவர் விடைபெறுவதை நினைத்து என் துயரை அடக்க முயன்றேன். கிளம்பும் முன் அவர் எனக்கு அளித்த பரிசு இந்தச் சோகத்தில் எனக்குப் பெரும் ஆறுதலளித்தது. ‘’எச்சரிக்கையாகச் சைக்கிளில் பள்ளிக்கு இனி சென்றுவா’’ என்று தாம் பயன்படுத்திய சைக்கிளை அவர் எனக்குப் பரிசளித்தார். பரிசுச்சீட்டில் கோடி ரூபாய் விழுந்த மகிழ்ச்சியை அப்போது நான் அடைந்தேன். அந்த சைக்கிள் என்றும் அவர் நினைவாக உடனிருந்து நான் சென்னை சென்று என் பட்டப்படிப்பை முடிக்கும்வரை எனக்குத் துணைநின்றது. அவர் கற்றுக்கொடுத்த பாடங்கள் எனக்கு இன்று வரை துணைநின்று என்னை வழிநடத்தி வருகின்றன. அவையே விலைமதிப்பற்ற பரிசுகளாகும்.