சோதிட மறுப்பும் வானவியல் சிறப்பும்

 நூல்: சோதிட மறுப்பும் வானவியல் சிறப்பும்- கவிஞர்.தி.பொன்னுச்சாமி
 
                            அணிந்துரை                                                                                                                                                                                                                                                                                                                                                                           
 
அரசியல் இயக்கங்களும், முற்போக்காகச் செயல்படுவதாகச் சொல்லப்படும் அமைப்புகளும் மூடநம்பிக்கைகளை வேரறுக்கும் பணிகளில் பாராமுகமாகச் செயல்படும் சூழலில், காலத்தின் தேவையறிந்து எழதப்பட்ட நூல் இது.
 
 
 
தமிழரின் முற்கால வானவியல்,  சோதிடம் என்ற பெயரில் உருக்குலைந்து அறிவியலுக்கு அந்நியமாகிப்போன அவலத்தை இந்நூல் இடித்துரைக்கிறது. ''மனித வாழ்வை நிரணயிக்கக் கூடிய கணிதமுறை சோதிடத்தில் இருக்குமானால் அறிவியல் உலகம் அதை ஏற்றுக்கொண்டிருக்கும். ஆனால் உலக விஞ்ஞானிகள் எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் சோதிடத்தை அறிவியல் அடிப்படையானது என்று ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள''என்ற ஆசிரியரின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மையாகும்.
 
 
 
பழுதாகியுள்ள பகுத்தறிவுப்பாதைக்குப் புதிய தடம் போடமுயலும் இந்நூலில் சில இடங்களில் உள்ள நெருடல்கள்  தவிர்க்கப்பட்டால் சொல்ல வந்த செய்தி இன்னும் செறிவுறும். சுட்டிக்காட்டப்படும் பாடல்கள் சிலவற்றில், ஆசிரியர் பெயரும், காலமும், பொருளும் பொருத்தமாக இல்லை. அண்மைய பாடலொன்றிற்குச் சங்க கால இடைக்காடனார் பெயர் எப்படி வரும்? சைவ - சமண போராட்டத்தில் ஏடழிந்ததை - தமிழ் ஏடுகள் பலவற்றைப் பார்பனர்கள் அழித்ததாக, அதுவும் பார்பனராகிய திருஞானசம்பந்தரே பாடுவதாகக் குறிப்பிடுவது உண்மையாகுமா? அறிவியல் விளக்கம் ஆதாரப்பூர்வமாகத் தரப்படாத சூலம் என்ற நம்பிக்கை, தமிழர்களது என்பதால், அது மூடநம்பிக்கையிலிருந்து விலக்குப் பெறுமா? மூடநம்பிக்கைகளுக்கு மூலகர்த்தர்கள், பரப்புநர்கள் பார்பனர்கள் மட்டுந்தானா? பார்ப்பனர்கள் அல்லாத தமிழர்களுக்கு எந்தப்பங்களிப்பும், பொறுப்பும் இல்லையா? சிந்திக்கத்தூண்டும் இந்நூலில் இவையும் சிந்தனைக்குரியவையே.
 
 
 
சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்று பிதற்றி வருவோர், வேதகாலத்தில் சொல்லப்பட்டவற்றையே இன்னும் கிளிப்பிள்ளையாகச் சொல்லிவருகின்றனர். அறிவியலாளர்கள் சூரிய மண்டலத்தில் புளூட்டோ முதலிய புதிய புதிய கிரகங்களைக்கண்டுபிடித்து வருகின்றனர். பழைய கோட்பாடுகள் பலவும் தகர்ந்துபோய், இதுவரை நம்பியவை தவறு என உணர்ந்தபின்  வானவியலாளர்கள் தம் தவறைத் திருத்திக்கொள்கிறார்கள். இதற்கு மாறாக, அறிவியல் வளராத காலத்தில் சொன்ன தவறான கருத்துகளை இன்னும் திருத்திக் கொள்ள மறுப்பவர்கள் சோதிடர்கள்! இதை விரிவாக விளக்கப்போகும் ஆசிரியர், ஏற்கமுடியாச் சோதிடக் குழப்பங்கள் சிலவற்றை முன்வைக்கிறார்:
 
 
 
இன்று கண்டறியப்பட்ட 8 கிரகங்களுக்குப் பதில் 6 கிரகங்களே இருப்பதாகச்சொல்கிறது சோதிடம். அது சூரியனை ஒரு கிரகம் என்கிறது. சூரியன், நிலையாக இருக்கும் பூமியைச்சுற்றிவருவதாகக் கூறுகிறது. இல்லாத ராகு,கேதுவைக் கிரகம் என்கிறது. கிரகங்களின் இருப்பிட வரிசையைத் தவறாகக் குறிப்பிடுகிறது. பூமியின் துணைக்கோள் சந்திரனைச் சோதிடத்தில் சேர்த்துக்கொண்டவர்கள், செவ்வாய், வியாழன், சனி இவற்றின் துணைக்கோள்கள் முறையே 2,16,22 என்று உள்ளதைப் பற்றி அறியவே இல்லை. இப்படி அறியாமையில் திளைக்கும் சோதிடத்தைச் சிலர் அறிவியல் அடிப்படையானது என்று கூறுவதை ஆசிரியர், கவிஞர்.தி.பொன்னுச்சாமி எடுத்துக்காட்டுகளுடன் எள்ளி நகையாடுகிறார். 
 
 
 
ஒவ்வொரு கிரகத்தின் தன்மையைப் பற்றியும் அறிவியல் விளக்கங்களைத் தரும் ஆசிரியர் இந்தக் கிரகங்களைப் பற்றிச் சோதிடம் கூறூம் அபத்தங்களையும் கூடவே விளக்குவது சோதிட நம்பிக்கையாளர்களை நிச்சயம் மனம்திருப்பும். ஸ்பிரிட் என்ற ஆய்வுக்கலத்தை அமெரிக்கா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி அங்குள்ள பாறைகள் அடுக்குத்தன்மை கொண்டவை என்பதையும், ஒரு பாறைக்கு நம் பண்பாட்டினை அங்கீகரிக்கும் விதமாகப் 'பொங்கல்' என்று பெயரிட்டத்தையும், பாறையொன்றில் தண்ணீர் ஓடியதற்கான அறிகுறி தெரிந்ததையும் இன்ன பிற புதிய செய்திகளையும் குறிப்பிட்டுவிட்டுக் கூடவே நம் சோதிடர்கள் எவ்வளவு அற்புதமான ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள் என்பதையும்  விளக்குகிறார்: செவ்வாய் பாவக்கிரகமாம், புதன் அதற்குப் பகையாம். சூரியன், சந்திரன்,வியாழன் நட்பாம். அதற்கு அன்னம், சேவல் வாகனமாம். இதற்குப் பிறகும் செவ்வாய் தோஷம் என்று நம்புகிறவர்களை அப்பாவிகள் என்பதா, அறிவற்றவர்கள் என்பதா என்ற ஆசிரியரின் ஆதங்கம் படிப்பவர்களுக்கும் எழுகிறது.
 
 
 
இத்தகைய சோதிடர்களால் பூமிக்கு வரவிருந்த எந்த ஆபத்தையும் கணிக்கமுடியவில்லை. ஆபத்துகளுக்குப் பரிகாரம் சொன்னதெல்லாம் விபரீதத்தில் முடிந்திருக்கும் நிகழ்வுகள் பலவற்றை ஆசிரியர் எடுத்துக்காட்டி எச்சரிக்கிறார். சோதிடத்தை நம்பி மோசம் போனவர்களைப் பத்திரிகைச் செய்திகள் வழி பட்டியலிட்டுக் காட்டுகிறார். இந்தியாவில் சோதிடத்தை வைத்துப் பிழைப்பு நடத்தும்  10 இலட்சம் பேர், கோடிக்கணக்கான மக்களை முட்டாளாக்கும் இருட்பணியை இடையறாது செய்து வருகின்றனர். சோதிடம் எந்த நாட்டிலும் இல்லாதபடி இங்குப் பத்திரிகைகள் வாயிலாக ராசிபலன் என்ற பெயரில் படித்தவர்களையும் தடம்புரட்டித் தன்னம்பிக்கைத் தேய்த்து வருகிறது. எனவே சோதிடம் தடை செய்யப்பட்டு, சோதிடர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஆசிரியரின் முடிவான கருத்தாகும்.
 
 
 
இவை நடைமுறைப்டுத்தப்படும் நாளை விரைவில் கொண்டுவர, இயக்கரீதியான செயல்படுகளைத் தீவிரப்படுத்தப்படுத்த, இந்நூல் ஓர் உந்து சக்தியாகும்.