போக்குவரத்துச் சாதனங்களே ஊர்களையும் நாடுகளையும் இணைத்து மனிதர்களை ஒன்றுபடச்செய்துள்ளன. இதுவரை கண்டறியப்பட்ட வரலாற்றில் கிமு 4000 இல்தான் முதன் முதலாக காளைகளும் குதிரைகளும் ஒட்டகங்களும் போக்குவரத்துச் சாதனங்களாகப் பழக்கப்படுத்தப்பட்டன. பின்னர் கிமு 3500 இல் சக்கரங்கள் உள்ள வண்டிகள் கண்டறியப்பட்டன. அதே காலக்கட்டத்தில் நீரில் படகுகள் செலுத்தப்பட்டன. கிமு 2000 இல் தேர்கள் உருவாக்கப்பட்டன.
உலகின் முதல் பொதுப்போக்குவரத்துக் குதிரைவண்டி பாரிஸ் நகரில் கிபி 1662 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. தொழில் புரட்சி தோன்றுவதற்குக் காரணமான நீராவி எஞ்சின் 1712 இல் கண்டுபிடிக்கப்பட்டு 1814இல் முதல் நீராவி இரயில் வண்டி ஓடியது. 1817 இல் மிதிவண்டி கண்டறியப்பட்டது. 1822இல் முதல் நீராவிக்கப்பல் கடலில் பயணித்தது. 1886 இல் முதல் கார் ஓடியது. 1903 இல் விமானம் கண்டறியப்பட்டு 1914இல் முதல் பொது போக்குவரத்திற்கு வந்தது. 1942 இல் முதல் ராக்கெட், 1957 முதல் விண்கலம் என்ற அளவில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. மனித நாகரிக வளர்ச்சியில் போக்குவரத்தின் பங்களிப்பு தவிர்க்கமுடியாததாகும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏற்பட்டுவரும் போக்குவரத்து மாற்றங்களுக்கு இணையாகக் கடந்த இரு நூற்றாண்டுகளில் மட்டும் போக்குவரத்தில் மிகுந்த பாய்ச்சல் நிகழ்ந்துள்ளது. இதைவிட இனி இவற்றில் ஏற்படப்போகும் மாற்றங்கள் அதிர்ச்சிகரமானதாகும்.
இன்று உலகச் சாலைகளில் நாள்தோறும் 146.60 கோடி கார்களும், 34.9 கோடி கனரக வாகனங்களும் பயணிக்கின்றன. இந்த இமாலய வளர்ச்சி மக்களுக்குப் பெரும் வசதியை வழங்கியுள்ளது என்பது உண்மைதான். ஆயினும் இந்த வாகனப்பெருக்கத்தால் மக்களுக்கு நிகழ்ந்துள்ள கேடுகளுக்கும் குறைவில்லை. சாலை விபத்துகளால் மட்டும் ஆண்டுக்கு 13.50 இலட்சம் மக்கள் மாண்டுபோகின்றனர. இது மனிதர்களின் சாவுக்குக் காரணமான 9வது இடம் வகிக்கிறது. இது மட்டுமன்றி 15-29 வயதினரின் மரணத்திற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. ஆண்டுக்கு 2-5 கோடி மக்கள் விபத்துகளால் காயப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை முதல் உலகப்போரின் ஏற்பட்ட பாதிப்பிற்கு இணையாகும்.
இந்த வாகனங்கள் நாள்தோறும் உமிழ்ந்துவரும் கார்பன் டை ஆக்சைடு, பென்சின், பார்மால்டிகைடு போன்றவை புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பலவற்றை விளைவித்துக் கோடிக்கணக்கானவர்களை நோயாளிகளாக்குகின்றன. சிறப்பாகக் குழந்தைகளையும் முதியவர்களையும் இவை பாதிக்கின்றன. பிரிட்டனில் மட்டும் ஆண்டுக்கு 24,000 பேர்கள் உரிய வயதிற்குமுன் இறப்பதற்கு இவை காரணமெனக் கண்டறிந்துள்ளனர். இவை தவிர ஒலி மாசு இதயக்குழாய்களைப் பாதிக்கிறது; தூக்கக் குறைபாடுகளுக்குக் காரணமாகிறது; சிறப்பாக கனரக வாகனங்களும், மோட்டார் சைக்கிள்களும் ஏற்படுத்தும் அதிர்ச்சி நீண்ட நாள் தசைக் கோளாறுகளுக்கு வழிவகுக்கின்றன. அனைத்திலும் கேடானது பூமியின் சுற்றுச்சூழலுக்கு இவை ஏற்படுத்தும் பாதிப்புகளாகும்.
வாகனங்களால் ஏற்படும் தீமைகள் ஒருபுறம் இருக்க, பெருகிவரும் வாகனங்களை நிறுத்த இடமின்றித் தத்தளிக்கும் நிலை உலக நகரங்களெங்கும் பெரும் பிரச்சினையாகி வருகிறது. மிகுந்த நிலப்பரப்பு உள்ள அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலேயே மக்கள் வாகனங்களை நிறுத்த அவதிப்படும் நிலையில் குறைந்த நிலப்பரப்பு உடைய பிற நாடுகளில் இந்தப் பிரச்சினை மிகக் கடுமையாகிவருகிறது. டோக்கியோ நகரில் கார் நிறுத்த இடமிருப்பதை மெய்ப்பித்தால்தான் கார் வாங்கவே அனுமதி கிடைக்கிறது.
இந்தியாவில் 2001 முதல் 2015 வரை மட்டும் தனியார் வாகனங்களின் பெருக்கம் 400% அதாவது 5.5 கோடியிலிருந்து 21 கோடியாக உயர்ந்துள்ளது. காரோட்டிகள் டில்லியில் ஓர் ஆண்டுக்கு 80 மணிநேரம் நிறுத்துமிடம் தேடும் வேட்டையிலேயே செலவிடுவதாகக் கணக்கிட்டுள்ளனர். நிறுத்த இடம்தேடும் பயத்தாலேயே பெரும் நெருக்கம் நிறைந்த சாலைக் கடைகளுக்கோ, கடைத்தொகுதிகளுக்கோ திரைப்பட அரங்குகளுக்கோ வாகனங்களில் செல்ல மக்கள் அஞ்சுகின்றனர். வாகனங்களை நிறுத்த இடமின்றி குறுகிய நகரச்சாலைகளின் இரு புறமும் நிறுத்திச் சாலைகளின் அளவுகளே குறைக்கப்படுகின்றன. அப்பகுதியில் குடியிருப்போரும் அங்கு நடந்துசெல்வோரும் படும் அவதிகள் சொல்லொண்ணாதவை.
நகரங்கள் நரகங்களாகிவரும் நிலையில் இதற்குமேல் வாகனங்கள் பெருகினால் இந்த உலகம் தாங்காது என்பதை உணர்ந்து இப்பிரச்சினைகளைத் தீர்க்க உலகெங்கும் தீவிர ஆய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன. உலகம் வெப்பமயமாதலைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பாடாவண்ணம் சில புதிய வழிகளும் கண்டறியப்பட்டுச் சில நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றன. இன்னும் 10 ஆண்டுகளில் கீழ்க்கண்டவை செயல்பாட்டிற்கு வந்தே தீரும்.
1. ஓட்டுநர் இல்லாத் தானியங்கிக் கார்கள் 2025 அளவில் செயல்படத் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிலும் சீனாவிலும் இவை பரிசோதனைக்காக விடப்பட்டு ஓரளவு வெற்றிபெற்று வருகின்றன. செயற்கைக் கோளின் வழி இயங்கும் இந்தக் கார்கள் செல்பேசியின் அனுப்பும் குறுஞ்செய்தியில் உங்கள் வீட்டின் முன் வந்து நின்று நீங்கள் விரும்பும் இடத்திற்கு அழைத்துச்செல்லும். விபத்துகள் குறையும். சொந்தமாகக் கார் வாங்கவேண்டிய தேவை மறையும். தேவையற்று நின்று கொண்டிருக்கிற கார்களுக்கு இனி வேலை இருக்காது. இதுபோல பேருந்துகளும் விரைவில் இயங்கும். வாகனங்கள் நின்று விழுங்கிய 17% நிலங்கள் மீட்கப்படும். ஓட்டுநர் உரிமம் என்பதே இல்லாத காலம் வரும். வாகனங்கள் அனைத்தும் மின்கலங்களால் இயங்கப்போவதால் இனி ஓசை, புகை மாசுகள் அறவே ஒழியும்.
2. பெரும்பாலான மக்கள் விரைவான பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது கார்களின் எண்ணிக்கை மிகவும் குறையும். காந்த விசையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் அதிர்ச்சியில்லா அதிவேக ‘மாக்லெவ் ரயில்கள்’ கடந்த சில ஆண்டுகளாகச் சீனா, ஜப்பான்,தென்கொரியா ஆகிய நாடுகளின் 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இவை 110கிமீ முதல் 600 கிமீ வரை சுற்றுச்சூழல் மாசின்றி விரைகின்றன. இந்தத் தொழில் நுட்பத்தின் அடுத்த வளர்ச்சியாக ஒரு குழாயின் வழியாக 1220 கிமீ வேகம் வரை செல்லும் ‘ஹைப்பர்லூப்’ என்ற வாகனம் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் இதனைப் பொதுப்போக்குவரத்திற்குக் கொண்டு வர முயன்று வருகிறார். சான்பிரான்சிஸ்கோவிலிருந்து லாஸ்ஏன்செல்ஸ் வரை உள்ள 600 கிமீ தொலைவை 35 நிமிடத்தில்- விமானத்தைவிட 15% விரைவாகச் செலுத்தும் ஏற்பாடுகளைச் செய்தார். சில பிரச்சினைகளால் தற்போது இது தடைபட்டாலும் பல நாடுகளில் ஹைப்பர்லூப் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தியாவில் இதனை நடைமுறைப்படுத்த ஹைப்பர்லூப் ஒன் என்ற நிறுவனம் முயன்று வருகிறது. இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல 20 நிமிடங்களும், சென்னையிலிருந்து மும்பை செல்ல 50 நிமிடங்களும் மட்டுமே ஆகும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மராட்டிய அரசு பூனேயிலிருந்து மும்பை செல்லும் 150 கிமீ தொலைவை 25 நிமிடத்தில் செலுத்தும் திட்டத்திலும் ஆந்திர அரசு அமராவதியிலிருந்து விஜயவாடா செல்லும் 20 கிமீ தொலைவை 6 நிமிடத்தில் கடக்கும் திட்டத்திலும் ஆர்வம் காட்டியுள்ளன. சென்னை ஐஐடி இந்தியாவிலேயே இதனை வடிவமைக்க இந்திய இரயில்வேயுடன் இணைந்து திட்டமிட்டு வருகிறது. பொது போக்குவரத்தில் ஹைப்பர்லூப் நடைமுறைக்கு வரும்போது வேலைக்காக நகரத்தில் மக்கள் வாழத் தேவையின்றித் தம் ஊரிலிருந்தே வேலைக்கு வரும் வாய்ப்பு ஏற்படும். நகரத்தில் நெரிசல் குறையும். நெல்லையிலிருந்து சென்னைக்கு நாள்தோறும் வேலைக்குச் சென்று திரும்பும் வசதியை நினைத்துப்பாருங்கள்.
3. இன்று 12 நிறுவனங்கள் உணவு , மருந்து முதலிய பொருள்களை டிரோன்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக அனுப்பத் திட்டமிட்டு வருகின்றன. தற்போது அமேசான் நிறுவனம் டிரோன்கள் வழி பொருள்களை அனுப்பும் (Amazon Prime Air Delivery ) புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிரோன்கள் வானத்தில் 100 அடியில் 5 பவுண்ட் எடையை தாங்கக்கூடிய அளவு திறன் கொண்டவை என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இது முதல்கட்டமாக அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அதன் பிறகு உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் வெற்றி பெற்றால் சாலைகளில் வாகனங்கள் கொண்டு வரும் பொருள்கள் அனைத்தும் மிக விரைவாக டிரோன்கள் வழி வந்து சேரும். சாலைகளை மொய்த்து அம்புபோலப் பாய்ந்து வரும் இருசக்கர வாகனங்கள் நாடெங்கும் திரிந்ததும், சுகி, ஊபர் உணவுப்பெட்டிகளைச் சுமந்து இரவு பகலாக இருசக்கர நபர்கள் வீடுவீடாக அலைந்ததும், சாலைகளில் சரக்கு லாரிகள் பூமியதிரச் சென்றதும் பழங்கதையாகும். இதே போல வான்வெளியில் வாடகை டிரோன்களில் மக்கள் விரைவாக பயணிக்கும் காலமும் தொலைவில் இல்லை.
போக்குவரத்தில் நாம் நினைத்துப் பார்க்காத மேலும் சில முன்னேற்றங்கள் இன்னும் 10 ஆண்டுகளுக்குள் நிகழவிருக்கின்றன. இவையெல்லாம் இந்தியாவில் நம் காலத்தில் வருமா எனக் கொட்டாவி விடவேண்டாம். இந்தியா உலகின் மிகப் பெரும் சந்தை என்பதால் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வரும் கண்டுபிடிப்புகள் அங்கு சந்தைப்படுத்தப்படும் முன்பே இங்கு வந்துசேருகின்றன. ஆக்கப்பாதையில் அறிவியலைச் சரியாக வழிநடத்திச்சென்றால் இனி வரப்போகும் காலம் போக்குவரத்தின் பொற்காலம் என்பதே மெய்ப்பொருளாகும்.