வரலாற்றைத் தூசி தட்டுவோம்
உரிய ஆவணங்களை ஆதாரப்படுத்துவதால்தான் எகிப்திய, ரோமானிய, கிரேக்க, சீன வரலாறுகள் உலக மக்களிடையே முதன்மை பெறுகின்றன.
நம் வரலாறு சரியாக ஆவணப்படுத்தப்படாமையால், பாதுகாக்கப்படாமையால் அல்லது அப்படிச் செய்தும் அழிந்துபோனமையால் நம் பழமையும் பெருமையும் உலக அரங்கில் அங்கீகரிக்கப்படாமல் உள்ளது.
246 ஆண்டுகளே பழமையான அமெரிக்க ஐக்கிய நாட்டில், டெக்சாஸ் மாநிலத்தில் மட்டும் (மொத்தம் 50 மாநிலங்கள் உள) 1000 க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் அவர்கள் வரலாற்றைப் போற்றிப் பாதுகாக்கும் உணர்வுடன் செயல்பட்டுவருகின்றன. இங்கு பிரிஸ்கோ என்ற நகரில் உள்ள அருங்காட்சியத்தில் நான் கண்ட காட்சிகள் என்னை மிகவும் சிந்திக்கவைத்தன. இந்த ஊரின் வரலாறு 1895 இல் வெறும் 2000 க்கும் குறைவானவர்களுடன் தொடங்குகிறது. இன்று 2 இலட்சம் மக்களுக்கு மேல் வாழும் இந்நகரில் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை 16,000 சதுர அடியில் மிக அருமையாகக் காட்சிப்படுத்தியிருந்தனர். 1902 இல் நீராவி இரயில் வண்டி அந்த ஊரின் வழியாக வந்தமையால் அந்த ஊர் பெற்ற பெயர்; பஞ்சைச்சீராக்கும் 5 சிறு தொழிலகங்களக்கொண்ட பருத்தி விளைவிக்கும் சிற்றூர்; முதலில் தொடங்கப்பட்ட பலசரக்குக்கடை, வங்கி, அச்சகம்; முதல் அறுவை சிகிச்சை; 1922 இல் ஏற்பட்ட தீ விபத்து- போன்றவை தொடர்பான பொருள்களைத் தேடிப்பிடித்து அங்கு உயிரோட்டத்துடன் காட்சிப்படுத்தியிருந்தனர். வரலாற்றுச்சின்னங்களை அழிக்காமல் பாதுகாப்பதே வருங்கால தலைமுறைக்கு நாம் சேர்த்துவைக்கும் சொத்து என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். நாடெங்கும் பெரும்பாலான ஊர்களிலும் இதுபோன்ற வரலாற்றைக்கூறும் அருங்காட்சியகங்கள் காணப்படுகின்றன. அறிவியல் செழிக்கும் இந்நாட்டில் வரலாற்றை விரும்பிக் கற்கும் பலரையும் காணமுடிந்தது.
என் சிந்தனை நம் தமிழக நகரங்களைப் பற்றி எழுந்தது. நம் நகரங்களின் வரலாறு அனைத்தும் புராணக்கதைகளாக, கோயில் தல வரலாறுகளாக இருக்கின்றனவேயொழிய உண்மை வரலாறு எந்த ஊருக்கும் நம்பத்தக்கவண்ணம் பதிவுசெய்யப்படவில்லை.
சுயம்புலிங்கம் தோன்றிய இடத்தை மன்னன் நகரமாக்கிப் பெயர் வைக்க முயன்றபோது சிவன் தோன்றித் தம் தலைமுடியிலிருந்து சில தேன்துளிகளைத் தூவ, மதுரமான தேன் துளி பட்டதால் மதுரை என்ற பெயர் வந்ததாகக்கூறுவது மதுரையின் வரலாறு.
பிரம்மா திருமாலின் திருவுருவை நினைத்துத் தவமிருக்கையில் அவரின் தவப்பயனால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டுத்தோன்றிய இடம்தான் திருச்சி திருவரங்கம் என்கிறது வரலாறு.
நெல்லுக்கு இறைவன் வேலியிட்டுக் காத்த இடம்தான் திருநெல்வேலி நகரின் வரலாறு.
இப்படித்தான் தமிழக ஊர்கள் பலவற்றின் வரலாறு சொல்லப்படுகிறது.
383 ஆண்டுகளுக்கு முன் உருவான சென்னை நகரத்தின் வரலாற்றைக்கூட இதுவரை நாம் முறையாகக் காட்சிப்படுத்தவில்லையே.
‘மிகச் சிறந்த இலக்கியங்களைப் படைத்துக் கொடுத்த பழந்தமிழர்கள் வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறித்துவைக்காமற் போனது வியப்பினும் வியப்பாக உள்ளது.’ என்பார் வரலாற்றறிஞர் கே.கே.பிள்ளை
நாம் நம்மைப்பற்றிப் பதிவு செய்ததைவிட அயல்நாட்டினர் நம்மைப்பற்றிப் பதிவுசெய்து பாதுகாத்ததே மிகுதியாக உள்ளது.
இப்படி நம்மைப்பற்றி அயல்நாட்டார் பதிவுசெய்து பாதுகாத்துவரும் குறிப்புகள் இன்னும் ஏராளமாக உள்ளன. ஆனால் நம்மிடம் இருப்பதையே நாம் கண்டுகொள்வதில்லை.
இந்தியத் தொல்லியல் ஆய்வு மையம் (2005 அறிக்கை) கண்டறிந்த ஏறத்தாழ ஒரு இலட்சம் கல்வெட்டுகளில், ஏறத்தாழ 60,000 தமிழ்நாட்டில் உள்ளனவாயினும் அவற்றில் ஆயிரக்கணக்கானவை இன்னும் படியெடுக்கப்படாமல் உள்ளன என்பது நம் அக்கறையின்மையைக் காட்டுகிறது.
அருங்காட்சியகங்கள் ஒரு முறைசாரா கல்விநிறுவனங்களாக இருப்பதாக அருங்காட்சியகங்கள் துறை கொள்கைவிளக்கக் குறிப்பு கூறுகிறது. ஆனால், தமிழகத்தின் மாவட்டத்தலைநகரங்களில் 20 இடங்களில் மட்டும் அருங்காட்சியகங்கள் அந்த நகரின் மக்கள் பலரே அறியாவண்ணம் ஏதோ கடனுக்காக நடைபெற்றுவருகின்றன.
பாதுகாக்கப்படாமை மட்டுமன்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள், நடுகற்கள் முதலியன அழிக்கப்பட்டும் வருவது கொடுமையிலும் கொடுமை! தர்மபுரி மாவட்டத்து இராயக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டத்து ஓசூர் இலியாட் லாக், திருவண்ணாமலை மாவட்டத்து வந்தவாசிக்கோட்டை, தண்டாரம்பட்டுச் சிற்பக்குளம், புதுக்கோட்டை மாவட்டத்து திருமயம் கோட்டை முதலியன அழியும் நிலையில் உள்ளன. தமிழகத்தில் பலவிடங்களில் சிறப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்றை உள்வாங்கிய கல்திட்டைகள் சீர்குலைவுக்கு உள்ளாகியுள்ளன.
அண்மைக்கால வரலாற்றுச்சின்னங்களின் நிலையும் இத்தகையதே. ஆங்கிலேயரை எதி்ர்த்து மாண்ட கான்சாகிப்பின் கால் புதைக்கப்பட்ட எழி்ல்மிகு ஜாகிர்தார் அரண்மனை ஆரணியில் தன்மூச்சை எந்த நேரமும் விட்டுவிடும் நிலையில் இடுபாடுகளிடையை நிற்கிறது.
ஆங்கிலேயேர்கள் அக்கறை காட்டாமல் இருந்திருந்தால் மாமல்லபுரத்துச் சிற்பங்களுக்கும் இந்நிலையே நேர்ந்திருக்கும். 1788 இல் மாமல்லபுரத்துச் சிற்பங்களைக் கண்டு வியந்த முதல் ஆங்கிலேயர் வில்லியம் சேம்பர்ஸ் ஆவார். அப்போது கல்லிலே கலைவண்ணம் கண்ட பலவும் மண்மூடியும் சில முற்றிலும் மண்ணில் புதைந்தும் காணப்பட்டதாகத் தெரிகிறது. வரலாற்று ஆர்வலரும் தலைமை நிலஅளவையாளருமான காலின் மெக்கன்சி மண்மூடிய சிற்பங்களைத் தோண்டியெடுக்க ஏற்பாடு செய்தார். பிறகு 1830-40 களில் இந்தியச்சிற்பங்களைப் பார்வையிட வந்த ஆங்கிலேய கட்டடக்கலை வரலாற்றாளர் ஜேம்ஸ் பெர்குயூசனை மாமல்லபுரத்துச் சிற்பங்கள் திடுக்கிட வைத்தன. இந்தியாவின் தனிச்சிறப்புடைய அரிய சிற்பங்கள் என்று அவர் வியக்கும் அனைத்தும் புதர் மண்டி சிதைந்துவரும் நிலையை அவர் ஓவியமாகத் தீட்டினார். இந்த ஓவியங்கள் பிரிட்டிஷ் நூலக இணையதளத்தில் இன்றும் உள்ளன. மாமல்லபுரச் சிற்பங்கள் இருந்த பகுதிகளும், அதனை அடுத்துள்ள கிழக்கு கடற்கரை கல்குவாரிகளும் ஒரு முதலியார் குடும்பத்தினரிடம் இருந்தன. கல்குவாரிக்கு வெடிவைப்பதால் சிற்பங்கள் பாதிக்கப்படலாமென அஞ்சி உள்ளூர் ஆட்சியாளர்கள் 1893 இல் பிரிட்டிஷ் பிரைவி கவுன்சில் நீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் தொல்பொருள் பாதுகாப்புச்சட்டம் இன்னும் முறையாக இயற்றப்படா நிலையில் முதலியார் குடும்பத்தினரின் செயலை நீதிமன்றம் தடுக்கமுடியவில்லை. அதன்பின் ஜேம்ஸ் பெர்குயூசனின் ஓவியங்களும், ஆர்வலர்களின் அழுத்தமும், அதன்பின் 1895 இல் திருத்தப்பட்ட சட்டமும் துணைநிற்க முதலியார் குடும்பத்தினரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி மாமல்லபுரச் சிற்பங்களை ஒருவழியாக ஆங்கில அரசு மீட்டது.
நாம் பெருமையடித்துக்கொள்ளும் பல வரலாற்றுச்சின்னங்களை ஆங்கிலேயேரே பலவிடங்களிலும் மீட்டுக்கொடுத்தனர் என்பதே உண்மை. கடந்த 50 ஆண்டுகளில் திருட்டுப்போன நூற்றுக்கணக்கான கலைச்செல்வங்களில் 17 கலைப்பொருள்களை மட்டுமே இந்தியா மீட்டுள்ளது.
திருச்சியில் கண்மருத்துவராகச் சிறப்பிற்றிருந்த டாக்டர் கலைக்கோவன் ஒருமுறை 1300 ஆண்டுகள் பழமையான திருச்சி பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலுக்குச் செல்கையில் அங்கு உள்ள தூணில் ஒருவர் சைக்கிள் ஓட்டுவது போன்ற சிற்பம் கண்டு வியந்தார். அதனைப்பற்றிக் கோயில் நிர்வாகத்தினரிடமும், வரலாற்று அறிஞர்களிடமும் கேட்டும் யாராலும் இதனை விளக்கமுடியாமை அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரே ஆய்வில் இறங்கி அது 1920 அளவில் கோயில் சீரமைப்பு பணியின் போது செதுக்கப்பட்டதைக் கண்டறிந்தார். வரலாற்று அறிவும் ஆய்வும் இங்கு மழுங்கியுள்ளதை எண்ணி வருந்தித் தாமே தம் மருத்துவத்தொழிலைப் புறந்தள்ளி வரலாற்று ஆய்வாளரானார். டாக்டர மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் நிறுவி மாணவர்க்கும் மற்றவர்களுக்கும் வரலாற்று உணர்வைப் புகுத்திவருகிறார் என்பது ஆறுதலான செய்தியாகும்.
100 ஆண்டுகள் பழமையான கட்டடங்கள், குகைகள், பாறைஓவியங்கள், சிற்பங்கள் முதலியவற்றைப் பாதுகாக்க 1958 இல்தான் சட்டமே இயற்றப்பட்டது. இவற்றைச் சீர்குலைப்போருக்குக் குறைந்தபட்ச தண்டனையாக 3 மாத சிறை அல்லது ரூ5000 அபராதம் என்பதுகூட நடைமுறையில் தீவிரமாக செயல்படாமையால் இச்சட்டங்களை மேலும் கடுமையாக்கவேண்டுமென வரலாற்று ஆர்வலர்கள் வற்புறுத்துகின்றனர். மாநிலத்தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் 88 இடங்களும், நடுவண அரசுத்துறைக் கட்டுப்பாட்டில் 413 இடங்களும் மட்டுமே உள்ளன. தமிழகத்தில் வெறும் 25 ஊர்களில்தான் கள ஆய்வே நிகழ்ந்துள்ளது. வருவாய்க்கு வழி இல்லாததாகக் கருதப்படுதவதால் இத்துறை அனாதையாக அலைமோதியே வருகிறது. வரலாற்றுப்பாடங்கள் கல்லூரிகளில் மூடப்பட்டு வருகின்றன. வரலாற்று உணர்வற்ற இளைய தலைமுறை தம் முகவரியை இழந்துவிடும் என்பதை உணர்த்தும் நடவடிக்கை கல்விக்கூடங்களிலிருந்து தொடங்கப்படவேண்டும்.
பழஞ்சின்னங்களைக் காப்பாற்றாமல், உண்மை வரலாற்றைத் தூசி தட்டி மீட்காமல் ஆதாரமற்ற பழம்பெருமைகளை மட்டுமே பேசினால் உலகம் நம்மைக்கண்டு எள்ளி நகையாடும் என்பதே மெய்ப்பொருளாகும்.
மெய்ப்பொருள் காண்க:13