மருத்துவக் கொள்ளைக்கு முடிவு

மருத்துவக் கொள்ளைக்கு முடிவு

மருத்துவமனைகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவர்கள் ஆகியோரின் கூட்டுக்கொள்ளையால் இந்தியாவில் ஆண்டுக்கு 16 இலட்சம் பேர்கள் மாண்டுபோகின்றனர்; 65% மக்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை வாங்கமுடியா நிலையில் தத்தளிக்கின்றனர்.

நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்ளாதேஷ், நேபாளம், ஶ்ரீலங்கா ஆகியவற்றைவிட இந்தியா மருத்துவச்சேவையில் அவமானகரமாகப் பின்தங்கியிருப்பதற்கு இங்குள்ள மருத்துவக் கொள்ளைக்கு வழிவகுக்கும் மருத்துவக் கொள்கையே காரணமாகும்.

மருத்துவத்தைத் தாம் உறுதிமொழி ஏற்றதற்கு ஏற்ப சேவையாகவும் மக்கள் தொண்டாகவும் ஆற்றிவரும் உயிர்காக்கும்  மருத்துவர்கள் இங்கு உள்ளனர். காசுக்கு விலைபோகாமல், மனித நேயத்தோடு மருத்துவம் செய்யும்   இவர்கள் நம் வணக்கத்திற்குரியவர்கள். இத்தகையோர் நடத்தும் சில மருத்துவமனைகள் பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி அனைவருக்கும் சிறப்பான மருத்துவச்சேவை வழங்கி வருகின்றன  என்பது  மறுக்கமுடியா உண்மையாகும்.  

இஃது ஒரு புறம் இருக்க மருத்துவம் சேவை என்ற நிலையிலிருந்து தடம் புரண்டு வணிகமாக்கப்பட்டதன் விளைவாக வித விதமான கொள்ளைகள் நாடெங்கும் நிகழ்த்தப்படுவதாகச் சமூக ஆர்வலர்கள் கீழ்க்கண்டவற்றைப் பதிவு செய்துள்ளனர்:

# நோயாளிகளுக்கு இரத்தப்பரிதசோதனை, எக்ஸ்ரே, எம்ஆர்ஐ ஸ்கானிங்  முதலியவற்றைப்  பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு 40% வரை பரிசோதனை நிறுவனங்களிடமிருந்து  கமிஷன் பெறப்படுகிறது.  ஒரு சிறப்பு மருத்துவரை அறிமுகப்படுத்தும்போது 30%- 40% கமிஷன் வழங்கப்படுகிறது. மருத்துவம் பார்க்கும் வருமானத்தைவிட இது பலருக்கு மிகுதியாகக் கிடைக்கிறது.

# நிறுவனங்களுக்கும் மருத்துவர்களுக்கும் வருவாயும், நோயாளிக்கு வருவாய் இழப்பும் ஏற்படுத்தும் தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகளைச் செய்ய நோயாளிகள் வற்புறுத்தப்படுகின்றனர். இவை ‘டம்மி’ பரிசோதனைகள் (Sink tests) என்று புரிந்துகொள்ளும் ‘லாப்பு’கள் பரிசோதனையே செய்யாமல் எல்லாம் சரி என ‘ரிப்போர்ட்’ தருகின்றன.

# நெஞ்சுவலி என அஞ்சி வரும் நோயாளிகளைப் பரிசோதித்து அவர்களுக்கு ஒன்றுமில்லை என அறிந்தும் மாரடைப்பாக இருக்கலாம் என்று பயமுறுத்தி 3,4 நாள்கள் ஐசியுவில் படுக்கவைத்துப் பிறகு சரியாக்கிவிடோம் என்று கூறி ‘பில்’ போட்டு மருத்துவமனை வருவாய்க்கு  வழிவகுக்கின்றனர்.

# சில சிற்றூர் மருத்துவமனையில் 10 ஆம் வகுப்பில் தோற்றவர்கள். நர்சுகள், வார்டு பாய்கள் ஆகப் பணியாற்றுகின்றனர்.  குறைந்த செலவில் வேலைக்கு அமர்த்தபடும் இவர்கள் வரவேற்பில் மட்டுமன்றி ஊசி போடுதல், இசிஜி எடுத்தல், ஆபரேஷன் தியேட்டரில்  மருத்துவருக்கு உதவுதல் முதலிய  பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றனர்.

# பிரசவ வலியால் துடித்துக்கொண்டு வரும் பெண்ணுக்குச் சிசேரியன் அறுவை தேவையில்லாதபோதும், (அவள் வலிக்கு அந்த நேர ஆறுதலாக) சிசேரியன் செய்தாகவேண்டுமென்று அறிவுறுத்தல்; அவளுக்கு அது தற்காலிய நிறைவு!  ஆனால் அவர்களுக்கோ நல்ல வருவாய்! இது போல வயிற்றில் நார்த்திசுக் கட்டி (fibroid) இருப்பதாகக் கூறிக் கருப்பையை அகற்றும் அறுவை செய்தாக வேண்டுமென வற்புறுத்தல்; பெரும்பாலான பெண்களுக்கு நார்த்திசுக் கட்டி இருப்பது இயல்பே. அதனை அகற்றியாகவேண்டுமென்ற கட்டாயம் இல்லாதபோதும் அகற்றுவது காசுக்காகச் செய்யும் கொடுமை.

# கொழுப்பை நீக்கி, உடல் எடையைக் குறைக்கும் அறுவை சிகிச்சை (Liposuction & Plastic surgery) பற்றிக் கவர்ச்சியாக விளம்பரப்படுத்துகின்றனர். இதற்காக இலட்சக்கணக்கில் தொகை வசூலிக்கப்படுகிறது. ஆனால் இத்தகைய சிகிச்சைகள் உயிர் அபாயம் உள்ளவை. இந்திய மருத்துவ கவுன்சில் இதற்கான வரைமுறைகளை வகுத்து எச்சரித்தபோதும் அவை புறந்தள்ளப்படுகின்றன.

# நோயாளி இறந்துவிட்டாரென்று தெரிந்தும் உயிர்காக்க அவசர அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டுமென்று வற்புறுத்தி, ஐசியுவில் இருப்பதால் அவரைப்  பார்க்கமுடியாது என்றும் கூறி  அறுவைக்கு உறவினரிடம் சம்மதக் கையெழுத்தும் பெற்றுகொண்டு உள்ளே கொண்டுபோய் 10 நிமிடம் கழித்து அவர் ஆபரேஷன் மேசையில் இறந்துவிட்டாரென்று கூறிப் பெரிய பில்லையும், அவர் உடலையும்  ஒப்படைக்கும் கொடுமையிலும் கொடுமையை நிகழ்த்தும் மருத்துவமனைகள் உள்ளன.

# புகழ்பெற்ற மருத்துவமனைகள் சிறப்பு மருத்துவர்களுக்குச் சொகுசு அடுக்ககங்களையோ அல்லது ஆடி போன்ற உயர்ரக கார்களையே வழங்கி நிர்வாகமே தவணை முறையில்(EMI)  தொகை செலுத்துகிறது. மருத்துவர் மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு நோயாளிகளைச் சேர்த்தாக வேண்டும். தவறினால் தவணை செலுத்தமாட்டார்கள். மருத்துவர்களே தவணை செலுத்தவேண்டும். இந்த அழுத்தத்தால் மருத்துவர்கள் வலிந்து நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

# மருந்து நிறுனங்களிலிடமிருந்து மலிவான விலைக்கு மருந்தை வாங்கி எம்ஆர்பி விலையைப் பலமடங்காக அச்சிட்டு மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக மாரடைப்புக்குப் பின் போடப்படும் அட்ரினார்(Adrenor) ஊசியை அடக்கவிலை ரூ5.77க்கு வாங்கி  ஒரு மருத்துவமனை ரூ189 என்று அச்சிட்ட விலையில் விற்கிறது. ஆனால் வெளியே ரூ 50 க்குக் கிடைக்கும் இதனை வாங்கிவந்து பயன்படுத்த அனுமதியில்லை. பெரிய மருத்துவமனைகள் பரிந்துரைக்கும் சில மருந்துகள் வெளியே கிடைக்காமல்  மருத்துவமனையில் மட்டுமே கிடைக்குமாறும் ஏற்பாடு செய்கின்றனர்.

மருந்து நிறுவனங்கள் செய்யும் கொள்ளைகள் பொறுக்கமுடியாதவை. 25% மருந்துகள் தயாரிப்பு விலையை விட 12 மடங்கு இலாபத்திற்கு விற்கப்படுகின்றன. ஆனால் கடைகளில் விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்களுக்கு 16% ம்  மொத்த விற்பனையாளர்களுக்கு 10%ம் மட்டுமே அளிக்கப்படுகிறது. இந்தியாவின் நம்பர்-1 மருந்து நிறுவனமான ரான்பாக்சியின் ரிவைட்டல் மாத்திரைகள் 858% இலாபத்திலும், இந்த நிறுவனத்தின் ஆண்டிபயாடிக் மருந்தான சிஃப்ரான் 423% இலாபத்திலும்,   ஜி.எஸ்.கே நிறுவனம் தயாரிக்கும் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கும் சைலோரிக்  என்ற மருந்தைத் 1122% இலாபத்திலும்,  யு.எஸ் நிறுவனம் தயாரிக்கும் கிளைகோமேட் 746% இலாபத்திலும் விற்கப்படுகின்றன. அரசு விதிக்கும் இலாப எல்லைகள் கன்னாபின்னாவென்று மீறப்பட்டுள்ளன. இந்நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக ஏப்ரல்’22 முதல்   800 அத்தியவாசிய மருந்துகளின் விலை 10.7% உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையமே அறிவித்துள்ளது.

மருந்துகளின் இறுதி நாள்(Expiry date) குறிப்பு உள்ள 100  மருந்துகளை ஆய்ந்ததில் 90% மருந்துகள் 15 ஆண்டுகள் வரை நல்லமுறையில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. உயிர்காக்கும் மருந்துகள், திரவ மருந்துகள், ஊசி மருந்துகள் தவிர பெரும்பாலான வலி நிவாரண மருந்துகள், அலர்ஜி மருந்துகள் முதலியன இறுதி நாளைக் கடந்து பயன்படுத்தக்கூடியவை என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இறுதி நாளைக் குறிப்பிடுவதில் வணிக நோக்கமே மேலோங்கியுள்ளது.

அரசுகள் தரும் மருத்துவ இலவசங்களும், காப்புறுதிகளும் ஓட்டையாக, தரமற்று, இழுத்தடிப்புகளுடன் உள்ளன. உரிய மருத்துவம் செய்ய இயலாமையால் 2001-2015 வரை மட்டும் 3.8 இலட்சம் இந்தியர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகப் புள்ளிவிவரம் உள்ளது. தற்போது இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்.

ஏதேதோ பிரச்சினைகளுக்குக் கதறிக் கூச்சல் போட்டு வெளிநடப்பு செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மருத்துவக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி ‘நலவாழ்வு நம் பிறப்புரிமை’ என்று குரல் எழுப்பும் நாள் வருமா? மருத்துவம் செய்ய நாதியின்றி வேறு வழிதெரியாமல் கையூட்டு வாங்கும் கடைநிலை ஊழியனை வாய் கிழிய ஏசுபவர்கள் கொள்ளையடிக்கும் மருத்துவக் கார்ப்பரேட் நிறுவனங்களை மருந்துக்கும் ஒரு வார்த்தை எதிர்ப்பதில்லை.

32 உலக நாடுகளில் மருத்துவக் கவலையின்றி மக்கள் வாழும்நிலையை அரசுகள் ஏற்படுத்தியுள்ளன. நாமும் மக்கள் நல அரசு என மார்தட்டினால் ஓட்டைகளின்றித் திட்டமிட்டு இங்கும் மருத்துவத்தை அரசுடைமை ஆக்கவேண்டும். அதுவே மருத்துவக் கொள்ளையை முடிவுக்குக் கொண்டுவரும் என்பதே மெய்ப்பொருளாகும்.

மெய்ப்பொருள் காண்க:12