உடற்பயிற்சிகளில் சிறந்தது யோகாசனமா?

உடற்பயிற்சிகளில் சிறந்தது யோகாசனமா?

4500 ஆண்டுகளாக யோகாசனம் இம்மண்ணில் மானிட இயக்கத்தைச் சீர்படுத்துவதாகக் கருதப்படுகிறது. உடல், மனம் ஆன்மாவை ஒருமுகப்படுத்தும் அற்புத ஆற்றல் யோகாவிற்கு உள்ளதாகவும் பறைசாற்றப்படுகிறது. யோகிகள் காட்டில் வாழ்ந்த விலங்குகள், பறவைகள் முதலியவற்றின் செயல்களைப் பார்த்து யோகப்பயிற்சிகளை வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது.  

உலகிலேயே சிறந்த உடற்பயிற்சியாகக் கருதப்படும் யோகாசனம் எண்ணற்ற மக்களுக்கு நன்மை பயத்திருப்பது உண்மைதான். எல்லாச் சமயத்தினரும் சாதியினரும் வயதினரும் இதனைச் செய்து பயன்பெற்றுவந்ததை மறுப்பதற்கில்லை.

இந்துக்களின் 6 முக்கிய சாத்திரங்களில் ஒன்றாக யோகா (மீமாம்சம், நியாயம், வைசேஷிகம், சாங்கியம் , யோகம், வேதாந்தம்) முன்வைக்கப்படுகிறது.  யோகத்தின் கடைசி அங்கமான ஹடயோகத்தை முதன் முதலாக உபதேசித்தவர் ஆதி நாதர் என்றழைக்கப்படும் சிவ பெருமானே என இந்து சமயம் கூறுகிறது.  இந்துத்துவ அரசியலை முன்னெடுக்கும் சூழலில்  பிரதமர் மோடியின் கடும் முயற்சியால் ஐக்கிய நாடுகள் சபை 11.12.2014 அன்று  ஜூன் 21 ஆம் நாளை உலக யோகா நாளாக அறிவித்தது. இதனைச் சமயத்தோடு தொடர்புபடுத்தி அரசியலாக்கும்போதுதான் யோகாவின் மறுபுறத்தை நோக்கும் எண்ணம் எழுகிறது. இந்துக்கள் அல்லாதோர் ஆசனம் செய்யத் தயங்குகின்றனர்.

யோகாதான் பழமையான உடற்பயிற்சி என்று சிலர் மார்தட்டி வரும் நிலையில் யோகா இந்தியாவில் தோன்றுவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தில் கிமெடிக் யோகா (Kemetic yoga) தோன்றியதை எகிப்திய அரசு ஆதாரத்துடன் பரப்புரை செய்துவருகிறது. எகிப்திய கோயில் சுவர்களில் காணப்படும் ஓவியங்களிலும் சிற்பங்களிலும் யோகா நிலையில் அமர்ந்துள்ள மன்னர்களின் தோற்றங்களைக் காண முடிகிறது.  எகிப்திலிருந்துதான் சிந்துவெளிக்கு இந்த கிமெடிக் பரவி இந்தியவயமாக்கப்பட்டுள்ளதாக யோகா ஆய்வாளர்கள் அசர் ஹபி(Asar Hapi), இர்சர் ரா ஹோட்டப் (Yirser Ra Hotep) ஆகியோர் 1970- இல் ஆய்வு நடத்தி அறிவித்தனர். ஆப்பிரிக்கக் கண்டத்தின் எகிப்திலிருந்து உலகின் மிகப்பழமையான இந்த உடற்பயிற்சி தோன்றியதால் ஐரோப்பிய, அமெரிக்கக் கறுப்பர்கள் இதனைக் கற்கப் பேரார்வம் காட்டி வருகின்றனர். கீமெட் என்றால் கறுப்பர்களின் நாடு என்பது பொருளாகும். இந்திய யோகா போல இந்தக் கிமெடிக் பயிற்சியும் உடல், மனம் ஆன்மாவை ஒன்றுபடுத்துகிறது என்ற சிந்தாந்தத்தைப் பண்டைய  எகிப்தியர்கள் முன்வைத்துள்ளனர்.

சீனத்திலும் நம்மவர்களின் யோகா போல தாய்சீ(Taichi) என்ற  தற்காப்பு, உடல்நலப்பயிற்சி புகழ்பெற்று விளங்குகிறது. தாவோயியம், கன்பூசியம் இவற்றின் இணைப்பில் தோன்றிய கலை இது. மெதுவான, விரைவான அசைவுகளைக் கொண்டு நடனத்தைப்போன்று இது விளங்குகிறது. குதித்தல், அடித்தல், தாக்குதல் போன்ற பாவனைகளைக் கொண்டது. சுவாசத்திறனைச் சீராக்கி மனமும் உடலும் அமைதியாகி மன அழுத்தம் குறைத்து நல்ல எண்ண அலைகளை அது உருவாக்கும் என்று இப்பயிற்சியினர்  கூறுகின்றனர்.  இதனை எவ்வகையினரும் கற்கலாம். நோய்கள் குணமாவது மட்டுமன்றி நோய் அணுகாமலும் காக்கும் ஆற்றல் தாய்சீக்கு உண்டு என்கின்றனர். இதே போல சீகாங் (Qigong) என்ற உடல், மன பயிற்சியும் இங்கு பலராலும் பின்பற்றப்படுகிறது.

பிரேசிலின் ஜூசிட்ஸ் (JiuJitsu) என்ற உடல்நலப் பயிற்சி பலராலும் பின்பற்றப்படுகிறது. இது மல்யுத்தம் போன்றதாயினும் உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் உகந்ததாகக் கருதப்படுகிறது. இது ஜப்பானிய ஜூடோவிலிருந்து பிரிந்து வளர்ந்த கலையாகும்.

பண்டைய கிரேக்கமே இன்றைய மேற்கத்திய உடற்பயிற்சி தொடர்பான பலவற்றிற்கு முன்னோடியாகும். பெருங்கல்லை வீசல், ஈட்டி எறிதல், நீளத்தாண்டல், உயரத்தாண்டல், நீச்சல் போட்டி, டிரில் பயிற்சி, தேர்ப்போட்டி, கயிற்றில் ஏறல் முதலிய பலவும் கிரேக்கத்திலிருந்து பெறப்பட்டனவாகும். மாணவர்கள் உடல் நலம் பேண கல்வி நிறுவனங்கள் பலவும் பின்பற்றுவனவுமாகும்.

தசைகளை வலுவாக்கவும், உடல் தோற்றத்தைப் பொலிவுறச் செய்யவும், உடல் எடையைக் குறைக்கவும் கலோரிகளை எரிக்கும் ஜிம் பயிற்சிகள், ஓடல், நீச்சல், மிதிவண்டி ஓட்டல் போன்றவையே  யோகா முதலியனவற்றை விடச் சிறந்தனவாகும்.

யோகா செய்வதில் சில ஆபத்துகளும் உள்ளன. சரியான பயிற்சியாளரின்றிச் செய்யும் சில ஆசனங்கள் எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியன. ஆசனங்களால்  முதியவர்களுக்கு உபாதைகள் ஏற்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு சில ஆசனங்களைத் திரும்பத் திரும்ப செய்து கழுத்து, தோள், கீழ் முதுகு,  முழங்கால் ஆகிய உறுப்புகளை மிகுந்த அளவு வளைப்பதால் சில உறுப்புகளிலுள்ள தசைநாண், குறுத்தெலும்பு ஆகியவற்றில் காயங்கள் ஏற்படுகின்றன. மிகுந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், மூச்சுப் பிரச்சினைகளால் துன்புறுவோர்,  நீரிழிவு விழித்திரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்  யோகாசனம் செய்வது ஆபத்தானதாகும்.

எல்லா உடற்பயிற்சிகளிலும் சில சிக்கல்கள் உள்ளன. ஆனால் எல்லா வயதினரும் சிக்கலின்றிச் செய்யக்கூடிய சிறந்த உடற்பயிற்சி நடைப்பயிற்சிதான். நடைப்பயிற்சி சிரமமில்லாதது; எல்லார்க்கும் ஏற்றது; செலவற்றது; குரு தேவையில்லாதது; எந்நாட்டார்க்கும் பொதுவானது; மதச்சார்பற்றது; உச்சிமுதல் உள்ளங்கால் வரை உரமேற்றக்கூடியது; பல நோய்களுக்கும் செலவற்ற மருந்து. எனவேதான் இஃது உடற்பயிற்சியின் அரசன் எனச் சிறப்பிக்கப்படுகிறது.

நீரிழிவை கட்டுப்படுத்தவும், மாரடைப்பைத் தடுக்கவும், சுவாச நோய்களைக் கண்டிக்கவும்,. முழங்கால் மூட்டுவலியைத் தடுக்கவும், கால்தசைகளை இரண்டாவது இதயமாக மாற்றி இரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் நடைப்பயிற்சி அருமருந்தாகும். வாரத்தில் குறைந்தது 5 நாள்கள் அல்லது 150 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

உடல் நலத்திற்கு மட்டுமன்றி மனநலத்திற்கும் நடை நல்லது. நடைப்பயிற்சியில் எண்டார்பின் ஹார்மோன் சுரப்பதால் இது மன அழுத்தத்தைக் குறைத்து  மன அமைதிக்கு  வழிவகுக்கிறது. அனைத்து மருத்துவர்களும் கருத்துவேறுபாடின்றிப் பரிந்துரைக்கும்  உடற்பயிற்சி நடைப்பயிற்சிதான்.

நோயின்றி 100 ஆண்டுகளுக்கு மேலாக  மக்கள் மிகுதியாக வாழும் 5 இடங்கள்  நீலப்பகுதிகள்(Blue Zones)  என  அழைக்கப்படுகின்றன. இவை இகாரியா(கிரேக்கம்), ஒக்கினாவா(ஜப்பான்), சார்டீனியா(இத்தாலி), லோமா லிண்டா (கலிபோர்னியா), நிக்கோயா தீபகற்பம் ( கோஸ்டோ ரிகா) ஆகியன. இங்குள்ளோரின் நீண்ட ஆயுளுக்குக்குக்கான இரகசியத்தை அறிய அறிவியலாளர்கள் முயன்று வருகின்றனர். இவர்கள் வாழ்க்கை முறை,உணவு முறை, சிந்தனை முறை முதலியவற்றில் சில ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் காணப்பட்டாலும், இந்த அனைத்து இடங்களிலும்  ஓர் ஒற்றுமை காணப்படுகிறது. இப்பகுதியினர் அனைவரும் தவறாமல்  செய்துவரும் நடைப்பயிற்சிதான் இவர்களிடையே காணப்படும் ஒற்றுமையாகும்.  நடைப்பயிற்சியே சாவைத்தள்ளிப்போடும் அற்புத  மருந்து.

எனவே உடற்பயிற்சிகளில் யோகாசனம் உள்ளிட்ட அனைத்தையும் விடச் சிறந்தது நடைப்பயிற்சிதான் என்பதே மெய்ப்பொருளாகும்.   

மெய்ப்பொருள் காண்க:11