எந்த மருத்துவமுறை சிறந்தது?
இந்தியாவில் ஏறத்தாழ 75% மக்கள் வாழ்வில் ஒருமுறையேனும் மரபு சார்ந்த மருத்துவச் சிகிச்சை பெறுகின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். நவீன மருத்துவமான அலோபதி தவிர மரபு சார்ந்த மற்றும் மாற்று மருத்துவ முறைகள் இங்கு பலராலும் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றில் எது சிறந்தது என்ற முடிவுக்கு வருமுன் ஒவ்வொன்றையும் பற்றி நாம் அறிந்துகொள்வது நல்லது. சித்த மருத்துவம் என்கிற தமிழ் மருத்துவமே இந்த மண்ணின் மரபு மருத்துவம் என்பது சிந்துவெளி அகழ்வாய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆரியர் வருகைக்கு முன் வாழ்ந்தவர்கள், இன்றைய தமிழ் மருத்துவர்களும் ஆயுர்வேத மருத்துவர்களும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகின்ற சிலாசித்து, மான்கொம்பு, பவழம், தாளகம் போன்றவற்றை மருந்தாகப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. பக்க விளைவுகள் இன்றி அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தியச் செப்புக்கத்திகள் கிடைத்துள்ளன. சிந்துசமவெளி மருத்துவமுறையின் வளர்ச்சியே தமிழ் மருத்துவம் என்ற சித்த மருத்துவமாகும். இந்த மண்ணின் மூல மருத்துவமான தமிழ் மருத்துவத்தை உள்வாங்கியே ஆயுர்வேதத்தைப் பின்னர் வந்த ஆரியர்கள் உருவாக்கினர். அதர்வண வேதத்தில் இந்த மருத்துவத்தை நுழைத்தனர். வாயு, பித்தம், கபம் என்பதன் அடிப்படையிலேயே உடல் நலத்தை வகைப்படுத்தும் தமிழ் மருத்துவத்தின் கோட்பாட்டை ஆயுர்வேதமும் ஏற்றது. இரு மருத்துவ முறைகளும் உடல் ஐம்பூதத்தால் ஆனது என்கின்றன. இரண்டுமே நாடி பார்த்து நோய்களைக் கணிக்கின்றன. இரு மருத்துவமுறைகளிலும் ஏறத்தாழ ஒரே வகை மூலிகைகளும் பிற மருந்து பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. சித்த மருத்துவர்கள் மூலிகைகளைத் தாண்டி தாதுப்பொருட்களையும்(Minerals), உலோகங்களையும்(Metals), காரசாரங்களையும்(Salts), பாஷாணங்களையும்(Arsenic Compounds), உபரசங்களையும் (Secondary Minerals) மருந்தாகப் பயன்படுத்தும் அடுத்த நிலைக்குச் சென்றனர். யோகா எனும் உடற்பயிற்சி ஆயுர்வேதத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் யோகா எனும் சொல்லே ஓக அல்லது ஒரு வடிவத்தை ஒக்க (போல) உடலை இருக்க வைப்பது என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது என்றும் கருதுவர். மேலும் வர்மம் எனும் ஒருதனித் துறையும் சித்த மருத்துவத்தில் உள்ளது.
.
யுனானி மருத்துவம் கிரேக்கத்தில் ஹிப்போகிரட்டஸ் (கிமு 460-377) அவர்களால் உருவாக்கப்பட்டு, எகிப்திற்குப் பரவி பின் அரேபியாவில் வளர்ந்து முகலாயர் ஆட்சியில் இந்தியாவில் அறிமுகமானது. கோழை, இரத்தம், மஞ்சள் பித்தம், கரும் பித்தம் ஆகியவற்றின் சமநிலையின்மையே நோய்களுக்குக் காரணம் என்பது யுனானியின் அடிப்படை. மனித உடலுக்கு வரும் நோய்களை நிலம், காற்று, நீர், நெருப்பு என்ற நான்கின் சமநிலையின்மையாகவும் இது பார்க்கிறது. மேலும் வளரிளம் பருவம், வளர்ந்த பருவம், நடு வயது, முதுமை என்று வாழ்க்கை நிலைகளையும் நான்காகக் கணக்கிடுகிறது. யுனானி மருத்துவம், முழுமையாக மனித உடலையும் மனதையும் இணைத்துப்பார்ப்பதாகும்.
ஓமியோபதி மருத்துவம் டாக்டர் சாமுவேல் ஹானிமன் என்பவரால் 1796 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது . முள்ளை முள்ளால் எடுப்பது என்பதுபோல எதனால் நோய் வருகிறதோ அதனாலேயே நோயை குணப்படுத்துவது இதன் கோட்பாடு. ஒரு பொருளின் அளவு குறையக் குறைய அதன் வீரியம் மிகும் என்பது இதன் கொள்கை. உலகின் 2வது பெரிய மருத்துவ முறையாக ஓமியோபதி திகழ்கிறது.
உலகெங்கும் சீன மருத்துவம் புகழ் பெற்று விளங்குகிறது. கன்பூசியஸ் தத்துவத்தின் அடிப்படையில் இந்த மரபுவழி மருத்துவம் உடல் உறுப்புகளை 5 இயற்கைப் பொருள்கள்மேல் இணைத்துப் பார்க்கிறது. அவையாவன: நெருப்பு- இதயம், சிறுகுடல், பூமி- மண்ணீரல்,வயிறு, உலோகம்- நுரையீரல், பெருங்குடல், நீர்- சிறுநீரகம், சிறுநீர்ப்பை, மரம்- கல்லீரல், பித்தப்பை. வாழ்வில் இரவும் பகலும், எதிரும் புதிரும், எதிா்மறையும் நோ்மறையும் எப்படி ஒன்றையொன்று இயற்கையிலேயே சார்ந்துள்ளன என்பதையும் எப்படி ஒன்றிலிருந்து மற்றொன்று துலங்கும் என்பதையும் விளக்கும் இன் யாங் தத்துவத்துவமே இதற்கு அடிப்படை. மூலிகைகள், விலங்குகளின் உறுப்புகள், மனித உறுப்புகள் முதலிய 13,000 பொருள்கள் சீன மருத்துவத்தில் இடம்பெறுகின்றன. 40% சீனர்கள் இம்மருத்துவமுறையைப் பின்பற்றுகின்றனர்.
ஆப்பிரிக்காவின் பலநாடுகளில் பயன்படுத்தப்படும் மரபுவழி மருத்துவம் மூலிகைகளையும் ஆன்மிகத்தையும் அடிப்படையாகக் கொண்டது. ஆன்மிகச் சமநிலை மாறுகையில் நோய் ஏற்படுவதாக இதில் நம்பப்படுகிறது. புற்றுநோய், வலிப்பு, ஆஸ்துமா முதலிய சவாலுக்குரிய நோய்களை இம்மருத்துவம் குணப்படுத்துவதாகக் கூறுகின்றனர். சகாராவை அடுத்துள்ள நாடுகளில் 85% ஆப்பிரிக்க மக்கள் இம்மருத்துவத்தையே நாடுகின்றனர். அங்கு 200 பேருக்கு ஒரு நாட்டு மருத்துவர் என்ற விகிதம் மலைப்பூட்டுகிறது.
தென் அமெரிக்க நாடுகளின் பழங்குடி மக்கள் மருத்துவத்தில், தென் சிலியில் நடைமுறையில் உள்ள மாபுச்சி (Mapuche) மருத்துவம் புகழ்பெற்றது. இயற்கை மீறிய சக்திகளே நோய் வருவதற்குக் காரணம் என்பது இவர்கள் நம்பிக்கை. இது ஒரு மந்திர- சமய கூட்டு மருத்துவமுறை. சடங்குகளாலும், வெப்பநீராலும், மூலிகைகளாலும் நோய்களைக் குணப்படுத்துகின்றனர். மூலிகைகள் பற்றி ஆழமான அறிவுடைய இவர்கள் எலும்புமுறிவை மூலிகைப் பசைகளைக்கொண்டு குணப்படுத்துகின்றனர். 71% சிலி மக்கள் ஏற்கும் மருத்துவம் இது.
இந்தோனேசியாவில் பயன்படுத்தப்படும் ஜாமு என்ற மூலிகை மருத்துவம் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. ஐரோப்பாவின் பலநாடுகளில் நாடோடி மருத்துவம் இன்னும் பழக்கத்தில் உள்ளது. இப்படி உலகெங்கும் மக்கள் மரபுவழி மருத்துவத்தை இன்னும் பின்பற்றி வருகின்றனர்.
ஒரே மனித உடலை இத்தனை கோணங்களில் ஒவ்வொரு மருத்துவ முறைகளும் பார்க்கின்றனவே அவற்றில் எது சரி என்று அறிவியலாளர்களைக் கேட்டால் ‘அனைத்தும் மெப்பிக்கமுடியாத் தவறான நம்பிக்கைகளால் வளர்ந்தவை. சில மிகவும் ஆபத்தானவை. பிளாசிபோ என்ற நம்பிக்கை ஆற்றலால்தான் பல நோய்கள் குணமாகின்றன’ என்கின்றனர். குருடர்கள் தேடும் யானையைப்போல இம்மருத்துவமுறைகள் உடலைப்பற்றி, நோயைப்பற்றிக் கணித்தாலும் அவை இதுவரை கோடிக்கணக்கான மக்களின் நோய்களைக் குணப்படுத்தி வருவதை மறுப்பதற்கில்லை.
அலோபதி மருத்துவம் என்று ஓமியோபதி மூலவர் ஹானிமனால் கிண்டலாகப் பெயரிடப்பட்ட இன்றைய நவீன மருத்துவம் முற்றிலும் அறிவியல் அடிப்படையில் அமைந்துள்ளது. நம்பிக்கைகளைச் சாராமல் மெய்ப்பிக்கப்படும் விதிகளால் இயங்குவது. மரபு மருத்துவம் போலத்தேங்கிவிடாமல், தன் குறைகளைச் சரிசெய்துகொண்டு நாள்தோறும் வளர்ந்துகொண்டிருப்பது. எனவே இதுவரை உலகம் கண்டிராத மாபெரும் மருத்துவ வெற்றிகளைச் சாதித்துக்கொண்டிருக்கிறது. காலங்காலமாக மக்களை வதைத்துக்கொண்டிருந்த காசநோய், போலியோ, அம்மை நோய்கள், தொழுநோய் முதலிய பல கொடிய நோய்களை மிக எளிதாக முறியடித்தது; அச்சத்திற்குரிய பல நோய்களை உலகை விட்டே நிரந்தரமாக விரட்டியுள்ளது. பெருந்தொற்றால் கோடிக்கணக்கான மக்கள் சென்ற நூற்றாண்டுகளில் மடிந்தநிலையை அண்மைய நூற்றாண்டுகளில் மாற்றிக்காட்டியது. கொடிய கொரோனாவை நம் கண்முன்னே புறமுதுகிடச்செய்து வருகிறது.
எனவே உலகின் அத்தனை மருத்துவ முறைகளையும் மாற்று மருத்துவம் என்ற நிலைக்குப் பின்தள்ளியுள்ளது. ஆயிரம் குறைபாடுகள் இருப்பினும் இது செல்லும் அறிவியல்வழியே இதன் வெல்லமுடியா ஆற்றலாகும்.
எனினும் இதனால் எளிதாகக் குணப்படுத்த முடியா நோய்கள் பலவற்றை மரபு மருந்துகள் மலிவாகக் குணப்படுத்தி வருகின்றன. வசதியற்றவர்களின் இருண்ட வாழ்வில் கைவிளக்காக மரபு மருத்துவம் விளங்கிவருவதையும் மறுப்பதற்கில்லை. நோய் குணமாகவேண்டுமென்பதே நோயாளியின் குறிக்கோள். எனவே நவீன மருத்துவத்தோடு மரபு மருத்துவத்தையும் இணைத்துச் செயல்படுவதே சிறந்த வழி என்பதே மெய்ப்பொருளாகும்.
மெய்ப்பொருள் காண்க:10