மாறாதா கல்விமுறை ?
இந்தியாவின் கல்விமுறை உலக அளவில் அதிர்ச்சிகரமாகப் பின்தங்கி உள்ளது. உலகப் பல்கலைக்கழகங்களின் தர வரிசைப்பட்டியலைப் பல அமைப்புகள் வெளியிட்டுள்ளன. எந்த அமைப்பின் பட்டியலிலும் இந்தியாவின் 600 க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்களின் ஒன்று கூட முதல் 175 வரை இல்லை.
குவாக்கரெலி சைமண்ட்ஸ்(க்யூஎஸ்) என்ற அமைப்பு வெளியிட்ட பட்டியலில் மும்பை ஐஐடி 177வது இடத்திலும், டில்லி ஐஐடி 185வது இடத்திலும், பெங்களூரு ஐஐஎஸ்சி 186வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.
நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் உயர்கல்வி நிறுவனங்களின் நிலையே இதுவென்றால் பள்ளிகளின் நிலை என்ன? “ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் கல்வி தொடர்பான ஆண்டறிக்கையில், 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் பாதிப்பேரால் மட்டுமே ஒரு பத்தியைப் படிக்கவோ அல்லது இரண்டாம் வகுப்பு கணக்கைச் செய்யவோ முடிகிறது என்ற அவலச் செய்தியைப் பார்க்கலாம். சில மாநிலங்களில் 10% க்கும் குறைவான ஆசிரியர்களே , ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். உ.பி, பிஹார் போன்ற மாநிலங்களில் நான்கு ஆசிரியர்களில் 3 பேருக்கு மட்டுமே 5-ம் வகுப்பு பாடத்தில் உள்ள சதவீதம் கண்டுபிடிக்கும் கணக்கைச் செய்யத் தெரிந்து இருக்கிறது. அதனால்தான் வாசிப்பு, அறிவியல் மற்றும் கணக்கில் மாணவர்களின் அறிவை அறியும் சர்வதேச மாணவர் அறிவுத் திறன் சோதனை தேர்வின் அடிப்படையில், 74 நாடுகளின் பட்டியலில் இந்திய மாணவர்கள் 73-ம் இடத்தில் உள்ளனர். கிர்கிஸ்தான் மட்டுமே நம்மைவிடப் பின்தங்கி இருக்கிறது”- இந்து தமிழ்திசை(06.03.20)
முன்னேறிய உலக நாடுகள் உதறித்தள்ளிய பலவற்றை நாம் இன்னும் மெக்கலே கல்விமுறையில் கெட்டியாகப் பிடித்துவைத்திருக்கிறோம். இதன் உள்ளீடு வணிக நோக்கமும், பிற்போக்குத்தனமும், சமூக நீதியின்மையும் ஆகும்.
1. நம் கல்வி அறிவாற்றலையும் படைப்பாற்றலையும் விட நினைவாற்றலையே முதன்மைப்படுத்துகிறது, தேர்வுகள் வழி மாணவர்களின் அறியாமையைப் புலப்படுத்துகிறது. மதிப்பெண்ணை வைத்து முன்னேற்றத்தை எடைபோடுகிறது. இதன் வாயிலாக மாணவர்களுக்குப் பதட்டத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்த முனைகிறது. உலக நாடுகளுக்குக் கூலி ஆட்களைத் தயார் செய்யும் கல்வியாகவே இஃது உள்ளது.
2. புத்தகப்படிப்பிற்கு வெளியே உள்ள எதற்கும் நம் கல்வியில் இடமில்லை. இசை, ஓவியம், விளையாட்டு, கைத்தொழில் முதலியவை இங்கு புறக்கணிக்கப்படுகின்றன. நடைமுறைக்குத் தேவையான எவையும் இங்கு இடம்பெறுவதில்லை. தூய்மை பேணுவது பற்றிக் கற்றுத்தருவதோடு, பயி்ற்சியும் அளித்தால் தூய்மையற்ற நாடு என்ற அவப்பெயர் மாறும். சாலை விதிகளை வலியுறுத்திச் சொல்லித்தந்தால் உலகில் விபத்துகள் மிகுந்த நாடு என்ற சிறுமையை மாற்றலாம். உடல் நலம் பேணுதல் பற்றிய விழிப்புணர்வை ஊட்டினால் நோய்களைக் குறைத்து நாடு நலம்பெறும்; போதைப்பழக்கம் மறையும். வரிசையில் நிற்றல், நேரந்தவறாமை, பிறருக்குத் தீங்கு நேராமல் இயங்கல், எதிலும் நேர்மையாகச் செயல்படல், உதவும் மனப்பான்மை, துணிவோடு செயல்படல் முதலியவற்றைக் கட்டாயப்பாடமாகக் கற்றுத் தருவதோடு பயிற்சி முகாமும் நடத்தினால் நாட்டில் குற்றங்கள் பெருமளவு குறையும்.
3. ஆசிரியர் பணிக்கு வருவோர் பலரும் வேறு பணி கிடைக்காமல் வருகின்றனர். வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்ற நிலை மாறவேண்டும். ஆசிரியர் பணிக்கு அர்ப்பணிப்புடன் வரும் நிலையை உருவாக்க அப்பணிக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் வண்ணம் சிறந்த ஊதியமும், தகுந்த பயிற்சியும் அளிக்கப்படவேண்டும்.
4.. மருத்துவர் அல்லது பொறியாளர் ஆவதே வாழ்வின் குறிக்கோளாக மாணவர்களிடம் திணிக்கப்படும் அவலத்தை மாற்றவேண்டும். ஆர்வம் இருக்கும் எந்தத் துறையிலும் சிறப்பாகச் செயல்பட்டால் முன்னேற்றம் காணமுடியும் என்ற உண்மையை உணர்த்தவேண்டும்.
அமெரிக்கா, பின்லாந்து, சீனா, பிரிட்டன், சிங்கப்பூர், மேற்கு ஐரோப்பிய, ஸ்காண்டிநேவிய நாடுகள் கல்வியில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. கல்வி தொடர்பாக உலகில் நடைபெறும் 80% ஆய்வுகள் அமெரிக்காவிலிருந்துதான் வெளிவருகின்றன. அமெரிக்கா ஒரு வல்லரசாக உயர்ந்தமைக்கு அது கல்விக்குத்தரும் முதன்மையே காரணமாகும். அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களே உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் முதல் 100 இடங்களில் பெரும்பான்மையாக இடம்பெறுகின்றன. ஸ்டான்போர்டு, பிரின்ஸ்டன் ஆகிய முதன்மைப் பல்கலைக்கழகங்களுக்கு நேரில் சென்று பார்த்தபோது அவற்றின் வளாகப் பேருருவும் வசதிகளும் கல்விச்சூழலும் நுழைந்தவுடனேயே மலைக்க வைத்தன. உலகிலேயே மிகுதியான எண்ணிக்கையில்- 2019-20 ஆண்டில் மட்டும் இருநூறு வெளிநாடுகளிலிருந்து 10,75,496 மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை நோக்கிப் படையெடுத்துள்ளனர். இதில் ஒரு பெரும்பகுதி இந்திய மாணவர்கள் ஆவர்.
அமெரிக்காவின் பள்ளிக்கல்வியின் நிலையும் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. முதலாளித்துவ நாட்டின் கல்விமுறையி்ல் வணிகநோக்கு இல்லை. பெரும்பாலான மக்கள் இங்கு அரசு நடத்தும் பொதுப்பள்ளிகளில்தான் படிக்கின்றனர். சில அரசுப் பள்ளிகளை நேரில் சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தபோது அவை பள்ளிகளா ஐந்து நட்சத்திர விடுதிகளா என்ற ஐயமே ஏற்பட்டது. மாநில, ஒன்றிய அரசுகள் பணத்தைக் பள்ளிக் கல்விக்காகத் தடையின்றி வாரி வழங்குகின்றன.
அமெரிக்கக் குடிமக்களுக்கு மட்டுமன்றி வாழ்வோர் அனைவருக்கும் இன, சமய வேறுபாடின்றித் தொடக்கம் முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வியை இலவசமாகப் பெற உரிமை உண்டு. வாழும் பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்குக் கட்டாயம் இடம் கொடுத்தாக வேண்டும். பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் தண்டிக்கப்படுவர். புத்தகங்கள், கணினி, போக்குவரத்து முதலியன இலவசம். ஏழை மாணவர்களுக்கு மதிய உணவும் இலவசம். சீருடை இல்லை. ஆனால் ஆடை கட்டுப்பாடுகள் உண்டு. மாணவர்களுக்குக் கல்வியுடன் பிற கலைகளும், வாழ்வுக்குத் தேவையானவையும் கற்பிக்கப்படுகின்றன. கல்லூரி படிப்பில் சேர இவையும் கணக்கில் கொள்ளப்படுகின்றன.
அமெரிக்கப் பள்ளிகளை மிஞ்சும் வண்ணம் சிறப்பான கல்விமுறையைப் பின்லாந்து நாட்டுப் பள்ளிகள் வழங்கி இன்று உலகிற்கே வழிகாட்டி வருகின்றன. அவை சிறந்த மனிதர்களை உருவாக்கும் பள்ளிகள்! அரசின் தேவையையும் கொள்கையையும் திணிப்பதற்கு மாறாக மாணவர்களின் தேவைக்கேற்ப கற்றுக்கொடுக்கும் கல்வி! ஆசிரியர்கள் சொல்லிக்கொடுப்பதைவிட மாணவர்கள் தாங்களே கற்பதை ஊக்குவிக்கும் தாய்மொழிக் கல்விமுறையே இதன் சிறப்பாகும்.
கல்வி வணிகமயமாக வழியே இன்றி அனைவருக்கும் அரசு நடத்தும் பள்ளிகளில் இலவசமாகக் கட்டாயக்கல்வி வழங்கப்படுகிறது. குழந்தைகள் ஏழு வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர். அடுத்த 9 ஆண்டுகளுக்குத் தேர்வுகளே இல்லை. வீட்டுப்பாடங்கள் இல்லை. குழந்தைகள் குழந்தைகளாக இருக்கவேண்டுமென்பதற்காக பாடநேரத்தை ஒரு நாளைக்கு 4 மணிநேரமாக்கி அவர்கள் விருப்பப்படி பிற திறமைகளை வளர்த்துக்கொள்ள நேரம் ஒதுக்கப்படுகிறது. சமைத்தல், தூய்மை செய்தல், தச்சுப்பணி முதலிய வாழ்வியல் பயிற்சிகளுக்கும் நிறைய இடம்உண்டு. ஒரு வகுப்பில் 16 மாணவர்கள் மட்டுமே; முதல் 6 ஆண்டுகளுக்கும் ஒரே ஆசிரியர்; அரசு வகுத்த பாடத்திட்டத்தில் தேவைக்கேற்ப ஆசிரியரே மாற்றங்களை வகுத்துக்கொள்ளலாம். மாணவர்களுக்குள் போட்டியை உருவாக்காமல் குழுவாக இணைந்து வெற்றிகாணும் வழிகள் கற்பிக்கப்படுகின்றன. கற்கும் திறன் குறைந்த மாணவர்களுக்குச் சிறப்பு உதவிகள் வழங்கப்படுகின்றன.
பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர், பொறியாளர்களுக்கும் மேலாக மதிக்கப்படுகின்றனர். ஆசிரியராவது பலரின் நிறைவேறாத கனவாக உள்ளது. பள்ளியில் ஆசிரியராக முதுகலைப் படிப்பும், 5 ஆண்டு ஆசிரியர் பயிற்சிப் படிப்பும் கட்டாயம். தகுதிபெற்றவர்களில் 10 இல் ஒருவரே ஆசிரியராகத் தேர்வாவதால் மருத்துவராவதைவிட ஆசிரியராவது கடினம். உயர்ந்த ஊதியமும் சமூக மதிப்பீடுகளும் ஆசிரியரை உயரத்தில் நிறுத்துவதால் கல்வியும் உயர்ந்து நிற்கிறது.
ஒரு குழந்தை தாயின் கருவிலிருக்கும்போதே அரசு உதவி தொடங்குகிறது. இளமையில் வறுமை நுழையாவண்ணம் குழந்தைகளை வளமாக வளர்க்கப் பெற்றோருக்கு அரசு மாதம் 100 யூரோ வழங்குகிறது. இரண்டாவது குழந்தைக்கு இன்னும் மிகுதி.
நியூயார்க் நகரவைவிடக் குறைவான மக்கட்தொகையுடைய பின்லாந்து நாட்டு மாணவர்கள் அமெரிக்க மாணவர்களைப் போட்டித்தேர்வுகளில் வென்று வருகின்றனர்.
பின்லாந்து கல்விமுறையின் வெற்றிக்கு அந்த நாடு போற்றும் சமூக நீதியே முதன்மையான காரணமாகும் என்று அறிஞர்கள் கணிக்கிறார்கள். இக்கல்வியால் நேர்மை, நியாய உணர்வு, சமத்துவப் பண்பு முதலியன பின்லாந்து மக்களின் வாழ்வில் ஆழமாகக் கலந்துள்ளன.
நம் கல்விமுறை இதற்கு நேர்மாறாக ஏற்றத்தாழ்வுகளுடன் தீவிரமாக வணிகமயமாகிவருகிறது. நாட்டில் உள்ள அரசு பள்ளிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளும் தரமிழந்த காரணத்தால் தனியார் பள்ளிகள் பெருகத் தொடங்கியுள்ளன. தனியார் தேர்வுப் பயிற்சி மையங்கள், நீட் பயிற்சி மையங்கள் வணிகத்தில் செழித்துவருகின்றன. ஏழை சிற்றூர் மாணவர்களுக்கும், வசதியுள்ள நகர மாணவர்களுக்கும் கல்விவாய்ப்பில் பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி தொடர்பான பாடத்திட்டங்களைக் கற்பிக்கும் எந்த நிறுவனமும் இலாப நோக்குடன் செயல்படக் கூடாது என அண்மையில் சீன அரசு தடையுத்தரவு விதித்துள்ளது நம் கவனத்திற்குரியது, சீனா, கல்வியில் அமெரிக்காவுடன் போட்டியிட, கல்வியில் அது கடைப்பிடிக்கும் சமூக நீதியே காரணமாகும்.
நீட் தேர்வு வழி சமூகநீதிக்குப் பாதகம் இழைக்கும் அரசு புதிய கல்வி முறையில் 3, 5, 8 ஆம் வகுப்புகளில் கூடப் பொதுத்தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதில் தோல்வியடையும் மாணவர்களைப் பள்ளிகளை விட்டே விரட்டும் சூழலை உருவாக்கிவருகிறது.
சமூக நீதியற்ற வணிகமயமாக்கப்பட்ட பிற்போக்குத்தனமான கல்விமுறை மாற்றப்பட்டால்தான் கல்வியில் இந்நாடு எழுச்சிபெறும் என்பதே மெய்ப்பொருளாகும்,
மெய்ப்பொருள் காண்க:14