உலகத் தமிழ்க் களஞ்சியம் - அறிமுகம்

தமிழுக்குப் புதிய அணிகலனாக அமைந்த

உலகத் தமிழ்க் களஞ்சியம் - ஓர் அறிமுகம்

 

உலகத் தமிழ்க் களஞ்சியம் ஏன்?

தமிழ் வாழ்க என்ற வாழ்த்தொலி மட்டும் தமிழை வளர்க்குமா? தமிழின் பெருமையை, தமிழரின் பெருமையைப் பறைசாற்ற போதிய ஆவணங்களை நாம் வெளிக்கொணர்ந்துள்ளோமா? நம் மொழியையும், மண்ணையும், மனிதர்களையும் பற்றிய மிகுந்த தகவல்களை ஒருசேர விரித்துரைக்கும் முயற்சி இதுவரை செய்யப்பட்டுள்ளதா? ஆங்கிலம் போன்ற உலக மொழிகளில் பல துறைகளிலும் வெளிவந்துள்ள Encyclopedia என்று அழைக்கப்படும் களஞ்சியங்கள் போன்று தமிழில் எவ்வளவு உள்ளன?

இந்தக் கேள்விகளுக்கு ஓரளவு பதிலளிக்கும் வகையில் உருவாகியுள்ளதே இந்த உலகத் தமிழ்க் களஞ்சியமாகும். தமிழின் அறிவு எல்லையை விரிவுபடுத்தும் தன்னார்வ முயற்சியாக இந்தப் பெருநூல் அமைகிறது. நம் சமூகத்தின் இயலாமையைக் குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு இயன்றதை ஆக்கப்பூர்வமாகச் செய்து காட்டவேண்டும் என்று மௌனமாக 12 ஆண்டுகள் உழைத்த உழைப்பின் பலன் இது. இனி மாணவர்கள், எழுத்தாளர்கள், இதழாளர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் முதலியோர்கள் தமிழ், தமிழகம், தமிழர் தொடர்பான செய்திகளுக்குப் பல நூல்களையும் தேடிப் போகாமல் அனைத்தையும் இந்த ஒரே நூலில் கண்டறியலாம். தமிழகம், தமிழர் பற்றி அறிய விரும்பும் எத்துறையினருக்கும் பயனளிக்கும் களஞ்சியம் இது.

உலகத் தமிழ்க் களஞ்சிய அமைப்பு எவ்வாறு?

தமிழ், தமிழர், தமிழ்நாடு, தொடர்பான 16,000த்துக்கும் மேற்பட்ட செய்திகள், 2000த்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் உலகத் தமிழ்க் களஞ்சியம் என்ற பெயருக்கேற்ப உலக நாடுகள் பலவற்றில் வாழும் தமிழர்கள் பற்றியும் அங்குள்ள தமிழ் அமைப்புகள், தமிழ்க் கல்வி நிலையங்கள், ஆலயங்கள் முதலியன பற்றியும் உள்ள அரிய செய்திகளை இதில் காணலாம்.

தமிழகத்தில் உள்ள 600 ஊர்களைப் பற்றி, தமிழகத்தில் பாயும் 93 ஆறுகளைப் பற்றி, 800 தமிழ் இதழ்களைப் பற்றி, 720 தமிழகத் தாவரங்களைப் பற்றி, 230 விலங்குகள்- பறவைகள் ஆகியன பற்றி, 1000த்துக்கும் மேற்பட்ட பலதுறைப் பெருமக்களைப் பற்றி, அரிய செய்திகளை இக்களஞ்சியம் அள்ளித் தருகிறது. தமிழ் இலக்கணம் பற்றி 904 தலைப்புகளும், அயலகத் தமிழர் பற்றி 720 தலைப்புகளும், தமிழ் இலக்கியம் பற்றி 760 தலைப்புகளும், தொழில் நிலையங்கள் பற்றி 145 தலைப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

தமிழின் முதல் திரைப்படம் தொடங்கி பிப்ரவரி 2016 வரை வெளிவந்துள்ள ஏறத்தாழ 4000 திரைப்படங்களைப் பற்றிய செய்திகளும் இதில் உள்ளன. தமிழகத்தில் உள்ள திருத்தலங்கள்; ஈழம் பற்றிய அனைத்துத் தகவல்கள்; தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகள்; தமிழ்நாட்டின் மறந்துபோன விளையாட்டுகள்- இதுபோல பல பயனுள்ள செய்திகள் குவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு வெளியே மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் உள்ள அத்தனை ஆலயங்களையும், தமிழ்ச் சங்கங்களையும், அங்குள்ள தமிழ்ப் பெருமக்களையும் பற்றிய செய்திகளையும் திரட்டித் தந்துள்ளது இக்களஞ்சியம்.

அனைத்துச் செய்திகளும் அகர வரிசையில் இடம் பெற்றுள்ளன. எனினும் அகராதி, அமைப்பு, ஆடை- அணிகலன்கள், இசுலாம், இசை, இதழியல், இலங்கைத் தமிழர், இந்து- சமண- பௌத்த சமயங்கள், இலக்கணம், இலக்கியம், உணவு,ஊர்கள், கணினி, கல்வி, கிறித்துவம், சட்டம், சித்தம், சிற்பம்- ஓவியம், சுற்றுலா, சோதிடம், தாவரவியல், திரை, தொல்லியல், தொழில் நிலையங்கள், நடனம், நாட்டுப்புறவியல், நாடகம், நூலகம், பழக்கவழக்கங்கள்- நம்பிக்கைகள், புவியியல், பெருமக்கள்,மருத்துவம், வரலாறு, விலங்கியல், விழா, விளையாட்டு, வேளாண்மை ஆகிய 39 தலைப்புகள் வழியாகவும் செய்திகளைத் தேடும் வசதி இந்நூலில் உள்ளது. சலிப்பூட்டும் நீண்ட கட்டுரைகளாக இல்லாமல், செய்திகளின் தேவைக்கேற்ப இரண்டு வரியிலிருந்து ஒரு பக்கம் வரை செய்திகள் இடம்பெற்றுள்ளன. செய்திகளின், நடை எளிய, இனிய தமிழில் அமைந்துள்ளதோடு. செய்திகளை விளக்க 550 படங்கள் இடம்பெற்றுள்ளன. மூன்று தொகுதிகளாக இக்களஞ்சியம் அமைந்துள்ளது.

உலகத் தமிழ்க் களஞ்சியத்தை உருவாக்கியோர் யார்?

மலேசியாவின் முன்னணி பதிப்பகங்களில் ஒன்றான உமா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. இதன் உரிமையாளர் தமிழ்த்தொண்டர் டத்தோ ஆ. சோதிநாதன் அவர்கள், இன்றைய சூழலில் பலரும் செய்ய முன்வரத் தயங்கும் இம்மாபெரும் தமிழ்க் களஞ்சிய வெளியீட்டுப் பணியை, இலாப நோக்கத்தைப் புறந்தள்ளி, துணிந்து நின்று அறநோக்கோடு பெரும் பொருட்செலவில் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்.

இக்களஞ்சியப் பணியைத் திட்டமிட்டு அமைத்த த.பெ. ஜெயின் கல்லூரியின் முன்னாள் தமிழ்த் துறைத் தலைவரும், சுட்டி இதழின் நிறுவனரும், எழுத்தாளரும், இதழாளருமான டாக்டர் இ.ஜே. சுந்தர் அவர்கள் இந்நூலின் முதன்மைத் தொகுப்பாசிரியர் ஆவார். 12 ஆண்டுகள் இக்களஞ்சியப் பணிக்காக இவர் இலவசமாகத் தம் உழைப்பை நல்கியுள்ளார்.

புகழ்பெற்ற தமிழறிஞரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் க.ப. அறவாணன் இவர்கள் இக்களஞ்சியத்தின் சிறப்பு அறிவுரைஞராக உள்ளார். சிறந்த மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளரும், தமிழ் ஆர்வலருமான திரு. நலங்கிள்ளி அவர்கள் இக்களஞ்சியத்தின் சீராளர் ஆவார். மருத்துவர்கள் டாக்டர் தெய்வநாயகம், டாக்டர் கு. சிவராமன், பேராசிரியர்கள் கா. பட்டாபிராமன், டாக்டர் தெ. ஞானசுந்தரம், டாக்டர் மறைமலை இலக்குவனார், இதழாளர்கள் திரு. லேனா தமிழ்வாணன், திரு. அ.மா. சாமி, நாட்டாரியல் அறிஞர் டாக்டர் காவ்யா சண்முகசுந்தரம், வரலாற்றறிஞர் டாக்டர் கலைக்கோவன், பறவையியல் அறிஞர் க. ரத்னம் முதலிய 50க்கும் மேற்பட்ட பல்துறை அறிஞர்கள் இதில் பங்களிப்பு வழங்கியுள்ளனர். இவர்களில் மலேசியத் தமிழறிஞர் டாக்டர் முரசு நெடுமாறன், அமெரிக்கத் தமிழ்ச் சான்றோர் அழகப்பா ராம்மோகன், ஈழத்துத் தமிழறிஞர் டாக்டர் ஆ.வேலுப்பிள்ளை, கனடா தமிழறிஞர் ராசரத்தினம் முதலிய வெளிநாட்டு அறிஞர்களும் அடங்குவர்.

தமிழ்க் களஞ்சியத்தில் உங்கள் பங்களிப்பு என்ன?

தமிழ்ப் பாசறைக்கு வலிமை சேர்க்கும் இன்னொரு புது அறிவாயுதமாக உருவாக்கப்பட்டுள்ள இக்களஞ்சியம் மலேசியாவில் கருக்கொண்டு, தமிழகத்தில் பிறந்து, உலகிற்கே பொதுச்சொத்தாக விளங்கும் குழந்தையாக வெளிவந்துள்ளது.

அரசோ அல்லது பல்கலைக்கழகமோ பல ஆண்டுகள் செய்யவேண்டிய மாபெரும் பணியை இந்தச் சிறிய குழு தமிழ் மேல் கொண்ட மாசற்ற பேரன்பினால், எளிய கட்டமைப்புகளைக் கொண்டு சிறப்பாக உருவாக்கியுள்ளது. இந்தத் தமிழ்க் களஞ்சியத்தின் வெற்றி, நீங்கள் இதை வாங்குவதிலும், பலரை வாங்கச் செய்வதிலும் அமைந்துள்ளது. களஞ்சிய முயற்சிகள் இதற்கு முன் வெற்றி பெறாமல் போனதற்கு இப்பணியைத் தமிழர்கள் செய்யத் தவறியதே காரணம்.

எல்லாத் தமிழர் வீடுகளிலும், நூலகங்களிலும், கல்வி நிலையங்களிலும், அலுவலகங்களிலும் தமிழ்க் களஞ்சியம் இடம்பெற வேண்டும். இடம்பெறச் செய்ய வேண்டும். இக்களஞ்சியத்தின் மூன்று தொகுதிகளுக்குமான விலை ரூ.3000/- மட்டுமே.

களஞ்சியம் பற்றிய உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க, முதன்மைத் தொகுப்பாசிரியர் டாக்டர் இ.ஜே. சுந்தர் அவர்களைத் தொடர்பு கொள்க: கைப்பேசி: 9841068832, மின்னஞ்சல்: ejsundar@gmail.com  

நூல் இந்தியாவில் கிடைக்குமிடம்:

ரிதம் நூல் பகிர்வாளர்

93, ஜீனீஸ் சாலை, சைதாப்பேட்டை,

சென்னை-600 015.

தொலைபேசி: 2436 0888 / 2436 1801

மின்னஞ்சல்: senthil@rhythmbooks.in

www.rhythmbooksonline.com