நூல் : அண்ட சராசரமே- பானு மாதவன்
அறிவியல் தமிழுக்கு ஒரு புதிய அணிகலன்
நம் உலகின் கோடிக்கணக்கான ஆண்டு பரிணாம வரலாறு, பிரபஞ்சத்தின் வரலாற்றில் ஒரு நிகழ்வே இல்லை.
பூமியின் நாயகனான கதிரவனின் தோற்றமும் மறைவும் பற்றிய வரலாறு கூடப் பிரபஞ்ச நாட்குறிப்பில் ஒரு வரி கூட எழுதப்படுவதற்கில்லை. ஏனெனில் பிரபஞ்சத்தில் உள்ள 100,000,000,000,000,000,000 விண்மீன்களில் கதிரவனும் ஒன்று.
நம் சூரியன் இடம்பெறும் உடுமண்டலமான பால் வீதியில் உள்ள பத்தாயிரம் கோடி விண்மீன்கள் சிதறலில் நம் கதிரவனே ஒரு சிறு வெளிச்சப் புள்ளி என்பதை உணரும்போது நம் பூமியின் சிறுமை புரியும்.
இந்தப் பேருண்மைகளை நாம் உணரும்போது நமக்கு ஏற்படும் அதிர்ச்சிக்கு அளவே இல்லை. இந்தப் பேருண்மைகள் நம் ஆணவத்தை அகற்றும்; அறிவுத்தேடலை அகலப்படுத்தும்; பொருளற்ற சாதி, சமயப் போர்களை அழிக்கும்; எல்லாத் துன்பங்களும் துயரங்களும் இந்தப் பேரண்டத்தின் அளப்பறிய தோற்றம் பற்றிச் சிந்திக்கையில் சிறுத்துத் தூசியாகும். எனவே பூமியில் வாழும் அனைவருக்கும் வானவியல் அறிவு நம் வாழ்க்கை நெறியை வளப்படுத்த இன்றியமையாததாகும்.
இந்த இன்றியமையா அறிவைப் புகட்டும் நூல்கள் தமிழில் குறைவாகவே உள்ளன. இவற்றிலும் பொதுமக்கள் படித்துத்தெரிந்துகொள்ளும் வண்ணம் எளிமையாக எழுதப்பட்டவை மேலும் அரிது. இவ்வகையில் குறைந்த கல்வியறிவுடையோரும் அடிப்படை வானவியலை அறிந்துகொள்ளும் வண்ணம் கதைவடிவில் எழுதப்பட்ட திரு சேதுமாதவன் அவர்களின் அண்ட சராசரமே நூல் இந்த அரிதானவகையைச் சார்ந்ததாகும்.
ஒரு சிற்றூரில் நிகழும் ஊர்த்திருவிழா நிகழ்ச்சிகளைக் காணவரும் ஒரு பட்டணத்து இளைஞனுக்கு வானவியல் அறிவைப்புகட்டுவதுபோல வாசகருக்கு சலிப்புத்தட்டாமல் கதையை அமைத்துள்ளார் ஆசிரியர்.
பட்டணத்து இளைஞன் மனோகரன் மொட்டை மாடிக்கு உறங்கச்செல்கையில் வானத்து விண்மீன்களைப் பார்த்து வானவியல் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது அவன் முன் தோன்றுகிறார் பேண்ட்- கோட்- டை அணிந்த கால தேவர். மனோகரனின் ஐயங்களைப்போக்க மாமனாரில் வீட்டில் அவன் தங்கியிருந்த 12 இரவும் தம் விண்வெளி காரில் கூட்டிச்சென்று விண்ணுலக அனுபங்களை அவனுக்குக்காட்டி வானவியல் பாடம் நடத்துகிறார். அவன் கேட்ட பல பாமரத்தனமான கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதிலளிக்கிறார். கோள்களுக்கு மட்டுமன்றிப் பெருவெடிப்பு நிகழ்ந்த காலத்திற்கே காலங்களைப் பின்னோக்கி அவனை அழைத்துசெல்கிறார். மேனாட்டு அறிவியல் புனைக்கதைகளைப்போல இஃது அமைந்தாலும் காலதேவன் சொல்லும் செய்திகள் அனைத்தும் புனைவற்ற அறிவியல் உண்மைகள் ஆகும்.
பெருவெடிப்பு, பூமி, நிலவு, கதிரவன், புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், பால்வெளி அண்டம், மனிதர்கள் நிகழ்த்திய விண்வெளிப்பயணங்கள் ஆகியவற்றைப்பற்றி விரிவாகவும் எளிதாகப்புரியும் வண்ணமும் கதையையும் ஒருபுறம் நகர்த்திக்கொண்டே ஆசிரியர் விளக்குகிறார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான வண்ணக் காரில் மேற்கொள்ளும் பயணத்திற்கேற்ப காலதேவனும் நாளொரு மாறுபட்ட வண்ண ஆடையணிந்து தோன்றும் காட்சிகள் நகைப்பையூட்டுவனவாகும். இது பள்ளி மாணவர்களும் இந்நூலைச் சலிப்புத்தட்டாவண்ணம் படிக்கச்செய்யும் உத்திபோலத் தோன்றுகிறது.
அண்டங்கள், விண்மீன்கள், கோள்கள் முதலியன பற்றிய துல்லியமான புள்ளி விவரங்களையும் அரிய செய்திகளையும் பலவிடங்களில் முயன்று அவர் திரட்டிய திறம் அவரின் கடும் உழைப்பைப் பறைசாற்றுகிறது.
.
இதுவரை அறிவியாளர்கள் கண்டறிந்ததை மட்டுமே ஆசிரியர் இந்நூலில் விளக்குகிறார். புனைக்கதை என்பதால் கற்பனையான செய்திகளை அறிவியலுக்கு மாறாகக் கூறாமல் ஆசிரியர் கடைப்பிடித்த கட்டுப்பாட்டு உணர்வு பாராட்டிற்குரியது, இது வானவியல் புகட்டும் அறிவியல் நூல் என்ற கவனத்தோடு கதையைக் கையாள்கிறார். எனவே காலதேவன் அழைத்துச்செல்லும் விண்வெளிப்பயணங்கள் யாவும் தொலைவிலிருந்து விண்பொருள்களைக் காட்டுவதாகவே அமைகின்றன. நமக்கு வியாழனிலோ, வெள்ளியிலோ இறங்கிப்பார்க்கும் ஆசை ஏற்பட்டாலும் அந்த ஆசையை காலதேவன் நிறைவேற்றுவதாக இல்லை. அறிவியலாளர்கள் அறிந்தவற்றிற்கு மேலாக எதனையும் காலதேவன் காட்டுவதாக இல்லை. இஃது அறிவியல் நூல் என்ற நிலையிலிருந்து வெறும் புனைக்கைதையாகக் குறுகிவிடும் என்பதை உணர்ந்தே காலதேவனை வானவியல் ஆசிரியரைப்போலப் பேசவைத்துள்ளார் நூலாசிரியர்.
கதாநாயகன் மனோகரன் கேட்கும் பல கேள்விகள் நாமும் கேட்க நினைக்கும் கேள்விகளே. காலதேவனிடம் அவன் கேட்கும் அத்தகைய கேள்விகள் சில வருமாறு:
# 60,000 மைல்கள் வேகத்தில் பூமி சுற்றும்போது காடு, மலை,ஆறு, கடல் எல்லாம் மோதாமல் இருப்பது ஏன்?
# பூமியைவிட நான்கில் ஒரு பங்காக உள்ள நிலவு பிருமாண்டமான சூரியனைக் கிரகணத்தன்று மறைப்பது எப்படி?
# சூரியனுக்கு ஆயுட்காலம் எவ்வளவு? அதன் முடிவு என்னவாகும்?
# மற்ற கோள்களில் உயிர்கள் வாழும் சாத்தியம் உள்ளதா?
# 1321 மடங்கு பூமியை உள்ளடக்கிய வியாழனில் பெரும்புயல்கள் வீசுவதும், நிறைய துணைக்கோள்கள் அதற்கு இருப்பதும் ஏன்?
# கறுப்பு ஆற்றல் என்றால் என்ன ?
வானவியலை எளிதாக விளக்குவது எளிதன்று.. எனினும் இக்கேள்விகளுக்குக் காலதேவர் தரும் பதில்கள் எளிதாகப் புரியும் வண்ணம் அமைத்துள்ளமை பாராட்டிற்குரியது.
வானவியலுடன் நாட்டுப்புறவியலும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது மற்றொரு சிறப்பாகும். திருவிழா நிகழ்வில் நாள்தோறும் நடக்கும் நிகழ்ச்சிகளோடு மறைந்துகொண்டிருக்கும் நாட்டுப்புற கலைகளுக்கும், சிற்றூர் வாழ்க்கை முறைகளுக்கும் ஆசிரியர் உயிரூட்டியுள்ளார். மறைந்துவரும் சாதி வேறுபாடுகளைக் கலைந்து ஒன்றுபட்டு மக்கள் படையல் செய்யும் முற்போக்கான நிகழ்வை விளக்கியிருப்பது வழிகாட்டுதலுக்குரியதாகும்.
கதையின் இறுதியில் காலதேவன் மனோகரனுக்கு மோதிரம் அணிவித்து கட்டிப்பிடித்துக் கண்ணீருடன் விடைபெறும் நெகிழ்ச்சிக்குரிய காட்சி பட்டணத்தில் பூதம் திரைப்படத்தில் வரும் ஜீபூம்பா பூதம் விடைபெறும் நிகழ்வை நினைவூட்டுகிறது.
பல மணிகள் கோர்த்த மாலைபோல பல அண்டங்கள் இணைந்து சரம் சரமாக உள்ளதைச் சுட்டிக்காட்டி இந்நூலுக்கு அண்ட சராசரமே என்ற தலைப்பிட்டதற்கான காரணத்தை ஆசிரியர் விளக்குவதும் பொருத்தமாக உள்ளது.
அறிவியல் தமிழுக்குப் புதிய அணிகலனாக இந்த நூல் அமைந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.