நூல்: க.ப. அறவாணன் பற்றிய அறிஞர் பலரின் மதிப்பீடுகள்: அவர் அடையாளங்களும் ஆளுமைகளும்
மனியநேயர்
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், நான் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை இரண்டாமாண்டு படித்த நாள்களில் என் உள்ளும், புறமும், நிமிர, வகுப்பைக் கவனிக்க வைத்தவர் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள். அறிவுத்தேடலும், புதுமை வேட்டலும், இளைஞர்களை முழுமையாய் ஆட்சி செய்த அந்த நாட்களில்,ஆசான் அறவாணனின் ஈர்ப்பும், இதமும் கலந்த பேச்சு அவர் மேல் எங்களுக்குப் பெருமதிப்பை ஏற்படுத்தின.
வகுப்பு முடிந்தவுடன் மணியடித்துக் கிளம்பும் மின்ரயிலாய் ஓடிச்செல்பவர் அல்லர் அவர். வகுப்புக்கு வெளியே மாணவர்களின் ஐயங்களுக்கு அரவணைப்பான விளக்கமளிப்பார். தேடி வரும் மாணவர்களில் ஆர்வமுடையோருக்கு அறிவுவிருந்தளிப்பார். அவர்களிடம் சிறிதே ஆற்றல் இருப்பினும் பாராட்டிப் பண்படுத்துவார். மாணவர்களால் மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வந்த 'பூச்செண்டு' என்ற மாத இதழின் பொறுப்பாசிரியனாக அப்போது நான் இருந்தேன். 'படிக்கும் காலத்தில் உனக்குப் பத்திரிகை எதற்கு?' என்று எல்லா வகையிலும் என்வீட்டினர் என் இதழ் முயற்சிகளை இறுக்க முயன்றனர். 'படிப்பில் கவனச்சிதறல் கூடாது' எனச் சில ஆசிரியர்களும் இதழ்ப்பணியை இடித்துரைத்தனர்.
இச்சூழலில் ஒரு நாள் பூச்செண்டு இதழை அறவாணன் அவர்களிடம் தயக்கத்துடன் அளித்து 'சிரமத்துடன் நானும் சில நண்பர்களும் சேர்ந்து நடத்தும் இதழ் இது. படித்துப்பாருங்கள்.' என்று கொடுத்துவிட்டுச்சென்றுவிட்டேன். மறுநாள் வகுப்பு முடிந்தவுடன் என்னைத் தனியே அழைத்தார். 'அவரும், படிக்கும்போது இதழ் நடத்தக்கூடாது என்ற வழக்கமான பல்லவி பாடவே அழைக்கிறார் போலும்' என்ற எதிர்பார்ப்புடன் இருந்தபோது, ''மிக அருமையான முயற்சி. மாணவர்களாக இருந்துகொண்டு இப்படி எழுதுவதும், இதழ் நடத்துவதும் சிரமமான பணி என்பதை அறிவேன். என் உறுதுணையும், ஆதரவும் இதற்கு எப்போதும் உண்டு.'' என்று பாராட்டியதோடு நிறுத்தாமல் பூச்செண்டுக்குரிய சந்தா தொகையையும் அப்போதே என்னிடம் வழங்கினார். எழுத்தார்வமுடைய மாணவர்கள் படிப்பில் பின்தங்கிவிடமாட்டார்கள் என்று அவர் நம்பினார். பத்திரிகை நடத்துவதில் எண்ணற்ற இடர்ப்பாடுகளைச் சந்தித்த அந்த நேரத்தில் அவர் காட்டிய அன்பாதரவு எனக்கு அன்று சொல்லொண்ணா ஆறுதலும் பலமும் அளித்தது. இந்த மனிதாபிமானத்தால் அவர் மேல் நான் கொண்ட மதிப்பும் உயர்ந்தது.
பணியிடங்களில், அறவாணன் ஐயா அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளையும், இன்னல்களையும் நான் அறிவேன். ஆனால் அவரை நண்பர்களோ மாணவர்களோ சந்தித்து அளவளாவும்போதெல்லாம் அவர்கள் நலனையும், அவர்களின் பிரச்சனைகளையும் பற்றியே கேட்பாரேயன்றி தம் பிரச்சனைகளைப்பற்றி, வந்தோரிடம் சொல்லி ஆற்றிக்கொள்ள மாட்டார். சிலரைப்போல வருவோரிடமெல்லாம் தம் வேதனைகளைக் கொட்டிப் புலம்பமாட்டார். தமக்குத் தீங்கிழைப்போரைப்பற்றிக்கூட நான் அறிந்தவரை அவர் விமர்சித்ததில்லை. சமூக அவலங்களைச்சாடி, வருந்தி, வருந்தி விமர்ச்சிப்பாரேயன்றி, தனி மனிதர்கள் செய்யும் இழிவுகளை வெளிச்சம் போடமாட்டார். அவர்களைப் பழிவாங்கும் எண்ணமும் அவருக்கு இருந்ததில்லை. தீமைகளைத் தாக்க நன்மையையே சிறந்த ஆயுதமாகக் கொள்வார். வள்ளுவர் வழியில் அவர்களே நாணும் வண்ணம் நன்னயம் செய்வார்.
இலயோலா கல்லூரியில் அவர் தமிழ்த்துறைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியை ஏற்கும் முன் அவரைச் சில சிக்கலான பிரச்சினைகள் எதிர்கொண்டன. அவர் இதனை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்று நானும் நண்பர்களும் கவலையுடன் இருந்தோம். நான் இலயோலாவின் முன்னாள் மாணவனும், ஆசிரியனும் என்பதால், அங்கு நிலவி வந்த அரசியலை நன்கு அறிவேன். நீண்ட காலம் அங்கேயே பேராசிரியராகப் பணியாற்றியவரும், அவருக்கு அடுத்த நிலையில் பணியனுபவமுடைய இன்னும் சிலரும் இருக்க, உட்பூசல்களையும், வேறு சிக்கல்களையும் முன்னிட்டு இவர்கள் யாருக்கும் அப்பதவியைத்தர விரும்பாத நிர்வாகம், வெளியிலிருந்து அறவாணன் அவர்களைத் தமிழ்த்துறைத்தலைமைக்குத் தேர்வு செய்தது. இதனைக்கேள்வியுற்ற அனுபவம் முதிர்ந்த பேராசிரியர் கொதிப்படைந்தார். 'நானிருக்க, இன்னொரு வெளியாளை உள்ளே நுழைய அனுமதிக்கமாட்டேன். அவர் துறைக்குள் வந்தால் விபரீதங்கள் நடக்கும்.நானா அவரா என்று இரண்டில் ஒன்று பார்த்துவிடுகிறேன்' என்று ஆவேசமாக அறைகூவல் விடுத்தார். இச்சூழல் அறவாணன் அவர்களுக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினாலும், நிர்வாகத்தினர், 'நீங்கள் தயங்காமல் பணியை ஏற்றுக்கொள்ளுங்கள். எதுவும் நடக்காமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்று அழுத்தமான ஆதரவளித்தனர். என்னதான் அவர்கள் ஆதரவு வழங்கினும், இஃது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை என்பதை அறவாணன் அவர்கள் உணர்ந்தார். முதிய பேராசிரியரின் கோபத்தில் நியாயம் இருப்பதையும் உணர்ந்ததால் அவருடன் பலப்பரிட்சையில் இறங்க அவர் விரும்பவில்லை. யாரும் எதிர்பாராத அணுகுமுறையை அவர் கையாண்டார். அந்தப்பேராசிரியரின் இல்லத்திற்கே திடீரென அறவாணன் சென்றார். தம்மை அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். தாம் கோபம் கொண்டு பாய இருந்த முகம் தெரியா மனிதரை, எதிர்பாராத விதமாக முகத்துக்கு முகம் பார்த்தபோது அவர் செய்வதறியாது திகைத்தார். கோபம் கொள்ளமுடியா இனிய முகம் அவரின் கோபத்தை நீரிலிட்ட நெருப்பாக்கியது. அதுவும் தம் இல்லத்திற்கு விருந்தினர் போல் வந்தவரிடம் கடுமையாகப் பேச அவர் கற்ற, கற்பிக்கிற தமிழ் தடுத்தது. அவர் ஒரு பண்பாளர் என்பதால் அறவாணன் அவர்களை இருக்கையில் அமரச்சொல்லி உபசரித்தார். அறவாணன் அவரிடம் அமைதியாக, ''உங்களை என் பணி நுழைவு புண்படுத்தியதாக அறிந்தேன். உங்கள் தரப்பு நியாயத்தை உணர்ந்தேன். உங்களை மனச்சங்கடத்தில் ஆழ்த்தி இந்தப் பணியை நான் ஏற்கத்தயாரில்லை. நீங்கள் கூறுவதைப்பொருத்து நான் முடிவெடுக்கவே வந்திருக்கிறேன்'' என்றார்.
அறவாணனின் இந்த மனிதாபிமானம் பேராசிரியரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இத்தகைய உயர்ந்த உள்ளத்தைப் புண்படுத்திப்பேசியதற்கு வருந்தியதுடன், இந்தப்பண்பாளரின் தலைமையை ஏற்கவும் தயாரானார். ''உங்களை யாரென்று தெரியாமல் எதிர்ப்புத்தெரிவித்துவிட்டேன். நீங்கள் துறைத்தலைவராகப் பொறுப்பேற்பதில் எனக்கு எந்தத் தடையுமில்லை. உங்களுக்கு என் முழு ஒத்துழைப்பைத் தருகிறேன்'' என்று மகிழ்ச்சியுடன் அறவாணன் அவர்களை வழியனுப்பி வைத்தார். எதிர்காலத்தில் சிறந்த ஒத்துழைப்பும் நல்கினார். அறவாணன் அவர்கள் தலைவராகப்பொறுப்பேற்றபின் இலயோலா தமிழ்த்துறை, அதுவரை இல்லாத அளவு புதுமையும், தரமும் மிளிர்ந்து,பாய்ச்சலுடன் வளர்ந்து வரலாறு படைத்ததை யாவரும் அறிவர்.
வறுமையை தம் இளமையில் சுவாசித்துப்பார்த்த அறவாணன் ஐயா அவர்கள் தமக்கு நேர்ந்த நிலை தம் மாணவர்கள் சிலருக்கு நேர்ந்தபோது உடுக்கை இழந்தவன் கைபோல அவர்கள் கல்விக்கடலைக் கடக்க பொருளுதவி செய்வதைக் கவனித்திருக்கிறேன். ஆனால் இந்தக்கல்வி உதவிகளை அவர் வலக்கரம் செய்வது இடக்கரம் அறியாது. அவர் அளித்த உதவியைத் தோணியாகக்கொண்டு பலர் கல்விக்கடலைக் கடந்து இன்று பெரும் பதவிகளில் உயர்ந்திருப்பதையும் அறிவேன். தேவையற்ற செலவுகளைத்தவிர்க்க, சிக்கனம் காட்டும் அவர், தேவையானவர்களுக்கு உதவ தாராளம் காட்டத் தயங்கியதில்லை.
எண்பதுகளின் கடைசியில் நான் பணியாற்றிக்கொண்டிருந்த த.பெ.ஜெயின் கல்லூரியில் ஆசிரியர் சங்கப்பிரச்சினைகளின் எதிரொலியாக நான் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தேன. அப்போது என் கல்லூரிச்சூழலே மிகவும் கசப்பாக மாறியிருந்த அந்த நேரத்தில் ஒரு நாள் அறவாணன் அவர்களிடம் பேச நேர்ந்தது. என் பணிச்சூழல் பற்றி அவர் அக்கறையுடன் விசாரித்தபோது என் மனக்குமுறல்களை நான் அவரிடம் கொட்டாமல் இருக்க முடியவில்லை. என் வேதனைகளை மனதார உள்வாங்கி வருந்தினார். வாய்ச்சொல்லில் மட்டும் வருத்தத்தை வெளிப்படுத்தாது,'' கவலைப்படாதீர்கள். உங்கள் கல்லூரிச்சூழல் புரிகிறது. என் முயற்சியால் இலயோலா கல்லூரித்தமிழ்த்துறையில் உங்களுக்கு வேலைமாற்றம் பெற்றுத்தருகிறேன். நிம்மதியாக இருங்கள்.'' என்று என் நிம்மதிக்காக தம் அரிய செல்வாக்கைப் பயன்படுத்தி இலயோலாவில் எனக்குப்பணி பெற்றுத்தர முன்வந்த பெருந்தகைமை என்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. ஆயினும், தன்னை வருத்திக்கொண்டு மனிதாபிமானத்துடன் அவர் செய்ய முன்வந்த உதவியை ஏற்க என் மனம் மறுத்தது.
என் கல்லூரிப்பிரச்சினைகளைக்கண்டு புறமுதுகிடாது, துணிவுடன் எதிர்நோக்கி வெல்லவும், அங்கேயே சாதிக்கவும் முடிவு செய்தேன். ஐயா அவர்கள் நடந்து வந்த பாதையும், அவர் மேற்கோள் காட்டும் கவிஞர் தாகூரின் வேண்டுதல் மொழிகளும் எனக்கு அதற்குரிய வல்லமையை வழங்கின. ''ஆபத்திலிருந்து காப்பாற்றும்படி பிரார்த்திக்க மாட்டேன். ஆபத்துகளைச் சந்திக்க எனக்கு அஞ்சாமையைக்கொடு. வாழ்க்கை என்னும் போரில் எனக்குத் துணைகேட்க மாட்டேன். சுய பலத்தைக்கொடு. எதிர்பார்ப்புகள் என்ன ஆகுமோ என்ற பயத்திலிருந்து காப்பாற்றும்படி வேண்ட மாட்டேன். நம்பிக்கையுடன் இருந்து வெற்றியடைய பெறுமையைக்கொடு'' என்று ஐயா அவர்கள் எனக்கு அறிமுகப்படுத்திய இந்தப் பிரார்த்தனையே என்னை வழிநடத்திச்சென்றது. சில ஆண்டுகளில் ஆசிரியர் சங்கத்தலைவராகவும், சென்னைப்பல்கலைக்கழகக் கல்விக்குழு உறுப்பினராகவும்,கல்லூரித்தேர்வுக்கட்டுப்பாட்டாளராகவும்,தமிழ்த்துறைத்தலைவராகவும் நான் அதே கல்லூரியில் இருந்தே பணிகளை வெற்றிகரமாகச் செயல்படுத்திக்காட்டியமைக்கும் இதுவே உந்து சக்தியானது.
அறவாணன் ஐயா அவர்களின் எழுத்திலும் பேச்சிலும் மேலோங்கி நிற்கும் தமிழ்ச்சமூக அக்கறையும் கோபமும், அவர் மனிதாபிமானத்தின் வெளிப்பாடகவே உணரமுடிகிறது. வெறும் இலக்கிய, இலக்கண கட்டுரைகள், நூல்கள் எழுதி வரும் தமிழறிஞர்கள் மத்தியில் அவர் தமிழ்ச்சமூகத்தின் அவலத்தைத்துடைக்க தம் தமிழை ஆயுதமாக்கி எழுத்துப்போர் நிகழ்த்திவருகிறார். அவரின் மனிதாபிமானம், அவரிடம் மாணவர்களாகவும், பழகியவர்களாகவும் இருப்பவர்களுக்கும் தொற்றிவிடும் ஆற்றல் உடையது. அவரைப்போன்று இருக்கவேண்டும் என்று எண்ணச்செய்யும் ஈர்ப்பு உடையது.
அறவாணன் அவர்கள் கடந்த இரு நூற்றாண்டுகளின் சிறந்த தமிழறிஞர்களில் ஒருவர்; பல மொழிகள் கற்ற வித்தகர்;கடமையையும், காலந்தவறாமையையும் இருகண்களெனப்போற்றுபவர்; மானிடவியல் அறிஞர்; பூமிப்பந்தில் உள்ள நாடுகள் பலவற்றிற்குப்பயணம் செய்து பல்லின மக்களைக் கண்டு பட்டறிவு பெற்றவர்;கேட்டாரைப்பிணிக்கும், கேளாரும் வேட்கும் பேச்சாளர்; அயர்வறியாப் படிப்பாளி; சோர்வறியா பல்துறை எழுத்தாளர்;கண்துஞ்சா, பசிநோக்கா ஆய்வாளர்;இக்கட்டுகளை இதமாக்கும் தேர்ந்த நிர்வாகி; மிக உயர்ந்த பரிசுகள் பெற்ற திறமையாளர் - இப்படி அவரின் அரும்பெரும் ஆற்றல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த எல்லாச்சிறப்புகளுக்கும் மணிமகுடமாக அவர் ஒரு சிறந்த மனிதாபிமானி என்பதே அவரை வரலாற்றில் வாழ வைக்கும்.