அறிவுமணம் கமழும் பூச்செண்டு
நண்பர், பேராசிரியர் முனைவர் கு.விவேகானந்தன் அவர்கள் கேட்டார்ப் பிணிக்கும் சிறந்த பேச்சாளர்; கல்லூரி அரங்குகளிலும், ஆசிரியர் சங்கக் கூட்டங்களில் அவர் நறுக்குத்தெறித்தாற்போல செய்திகளை விளக்கும் தெளிவு, கேளாரையும் வேட்பச் செய்யும். திங்கள்தோறும் நடைபெறும் ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் சங்கக் கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக, அவர் திருக்குறளொன்றை விளக்கிச் செய்யும் சிறுபொழிவும் இத்தகையதே, அங்கு வழங்கும் நாவிருந்தான சிற்றுண்டியை விட அவர் தரும் செவி விருந்து சுவையானது.. அவர் பேச்சில் காணப்படும் சுருக்கமும், தெளிவும், எளிமையும், அழகும் அப்படியே அவர் கட்டுரைகளிலும் மிளிர்வது வியக்கவைக்கிறது. ஏனெனில் சிறந்த பேச்சாளர்கள் எழுத்தாளர்களாகவும் விளங்குவது அரிதாகும்.
மலர்கள் பல சேர்ந்து அமையும் பூச்செண்டைப்போலப் பலதிறப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக அறிவுமணம் கமழ அமைந்துள்ளது இந்நூல். முப்பது கட்டுரைகளில் பதின்மூன்று கட்டுரைகள் பண்பாடு தொடர்பானவை. ஆறு கட்டுரைகள் இலக்கியம், சமயம் பற்றியன. தமிழியல் ஆய்வு தொடர்பான செய்திகளை ஐந்து கட்டுரைகள் விளக்குகின்றன. அவரின் முனைவர் பட்ட ஆய்வுடன் தொடர்புடைய அண்ணா பற்றியும் அரசியல் பற்றியும் ஐந்து கட்டுரைகள் விரித்துரைக்கின்றன.
கட்டுரைகளின் செய்திகளுக்கேற்ப இவரின் நடை மாறுபடுகிறது. பண்பாடு தொடர்பான கட்டுரைகளில் மிக எளிய ஆற்றொழுக்கு நடை, செய்திகளின் ஆழத்தை எளிமைப்படுத்த முற்படுகிறது. இலக்கியக் கட்டுரைகளில் காணப்படும் நடை, பாயும் அருவியின் மிடுக்கோடு இலக்கியச் செய்திகளின் சுவையைக் கூட்டுகிறது.
அரைத்த மாவையே அரைக்கும் பழையவர்களின் போக்கிலிருந்து மாறுபட்டுப் புதிய செய்திகளை இவரின் கட்டுரைகள் வழங்குகின்றன. கார்த்திகை விழாவே இன்று தீபாவளியாக உருவெடுத்துள்ளது என்பதும், முற்காலத்தில் அறங்கூறும் அவையங்கள் பல இருந்தும் உறையூரில் இருந்ததே புகழ்பெற்றது என்பதும், பலரும் அறியாத செய்திகளாகும். திருவையாறு இசைவிழாவில் தண்டபாணி தேசிகர் 'பித்தா பிறை சூடி' என்ற தேவாரத் தமிழ்ப்பாடலைப் பாடிய அடுத்த விநாடி ஒலிபெருக்கி நிறுத்தப்பட்ட கொடுமையைக் கேள்வியுற்றே பாரதிதாசனிடமிருந்து 'கொலை வாளினை எட்டா' என்று போர்க்குரலை எழுப்பிய பாடல் உருவாயிற்று என்பது அறியவேண்டிய அரிய செய்தியாகும்.
இரணியன் வரலாற்றைக் கம்பர் வழிநின்று ' ஆசிரியர் விளக்கியுள்ள திறம் கம்பராமாயணத்தில் இரணியன் வதைப்படலத்தை உடனே படித்தே ஆகவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. இக்கட்டுரைக்கு 'வேதப்பொருளே! விளையாடுதியோ?' என்ற இலக்கிய மணம் வீசும் தலைப்பிட்டது அருமையிலும் அருமை.
அண்ணா தொடர்பான கட்டுரைகளில், ஆசிரியரின் பல்லாண்டு ஆய்வு உழைப்பு நன்கு புலப்படுகிறது. தம் நுண்ணிய ஆய்வின் பயனாக அண்ணா பற்றியும், திராவிட இயக்கம் பற்றியும் பல பயனுள்ள செய்திகளை அவர் வாரி வழங்கியுள்ளார். அண்ணா 15 ஆண்டுகள் தம்பிகளுக்கு எழுதிய கடிதங்கள் எதிலுமே கூறியது கூறல் இல்லை என்று அவர் கவனித்திருப்பது சிந்தனைக்குரியதாகும்.
தமிழியல் ஆய்வு செய்வோர்க்கும், தமிழ் வகுப்பு நடத்தும் ஆசிரியர்க்கும் வழிகாட்டும் விளக்கங்கள் பலவற்றைப் பேராசிரியர் விவேகானந்தன் எடுத்துரைத்திருப்பது இன்றைய சூழலில் மிகவும் தேவையானதாகும். விமானப் பயணி குறைந்த அளவுள்ள பொருள்களையே தம்முடன் கொண்டு போவது போல் ஆராய்ச்சியாளனும் செறிவுடைய சொற்களையே பயன்படுத்தவேண்டும் என்ற கருத்து மிகவும் ஏற்புடைத்தாகும். இன்றைய ஆய்வாளர்கள் பின்பற்றவேண்டிய பல ஆய்வு நெறிகள் உரையாசிரியர்களின் உரையில் பொதிந்து உள்ளதை ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ளது கவனத்திற்குரியது.
சைவ சமயச்சிந்தனைகள் என்ற கட்டுரை, எச்சமயத்தினரும் ஏற்கும் நற்சிந்தனைகளின் தொகுப்பாக விளங்கும் நெறிகளைச் சுட்டிக்காட்டி இன்றைய அவசிய அவசர தேவையான சமரச நோக்கிற்கு அணிசெய்கிறது.
நடுநிலையில் நின்று பலவற்றைத் திறனாயும் ஆசிரியர் சிலரில் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை. அகிலனின் சித்திரப்பாவை என்ற புதினத்தின் சிறப்புகளைக் குறிப்பிடுவதோடு புதினத்தின் முடிவு தவறானதும், பண்பாட்டுக் குறையுடையதுமாகும் என தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார். ஈ.சா. விசுவநாதனின் ஆய்வு நெறிமுறைகள் என்ற நூலை 'ஆய்விலக்கண நன்னூல்' எனப் புகழ்ந்துரைத்தாலும் அதில் பெரியாரை, நாயக்கர் என்று குறிப்பிட்டிருப்பது பெரியாரின் அடிப்படை குறிக்கோளைத் தகர்ப்பதாக உள்ளது எனக் கடிந்துரைக்கவும் தயங்கவில்லை. பாரதியும் தாகூரும் பற்றிய அருமையான செய்திகள் பொதிந்த கட்டுரையில் பாரதி, தாகூரை விஞ்சி நிற்கும் இடங்களைச் சுட்டிக்காட்டியிருப்பது எண்ணி வியக்கத்தக்கதாக உள்ளது.
இந்த வேறுபட்ட அளவிளான 30 கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகளாகவும், வானொலி உரைகளாகவும், வகுப்பில் எடுத்த குறிப்புகளாகவும் தொகுக்கப்பட்டவை என்பதால் ஒரே செய்திகள் மீண்டும் சில கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன என்பது புரிந்துகொண்டு புறக்கணிக்கத்தக்க ஒரு குறைபாடாகும்.
எனினும் இந்நூல் அறிவுமணம் கமழும் பூச்செண்டு என்பதில் ஐயமில்லை.