நூல்: திருக்குறள் கதைச்சுரங்கம்- பானுமாதவன்
இது ஒரு திருக்குறள் கதைச்சுரங்கம்
எல்லா வயதினரையும் ஈர்க்கும் ஆற்றல் கதைகளுக்கு உண்டு. இதனால் தான் புத்தரும் , ஏசுநாதரும், சான்றோர் பலரும் தங்கள் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க கதை வாகனத்தில் ஏறிப் பயணித்தனர். ஒரு மணிநேர சொற்பொழிவைவிட ஐந்து நிமிடத்தில் சொல்லும் கதை மக்கள் நெஞ்சில் ஆழமாக பதிகிறது; சொல்ல வந்த செய்தியைச் சிறப்பாகச் சென்று சேர்க்கிறது.
இவ்வுத்தியைப் பின்பற்றி ஆசிரியர் பானுமாதவன் சுவையானக் கதைகளைச்சொல்லிக் குறட்பாக்களைப் படிப்போர் மனதில் நிலைநிறுத்த முயன்றுள்ளார். அவை அத்தனையும் முத்தான, சத்தான கதைகள். இவர் கதைசொல்லும் பாணி ஈர்ப்பும் எளிமையும் கொண்டது. முதல் வரியைப் படித்தவுடனேயே மேலே படிக்கத்தூண்டும் மாயாஜாலம் இதில் இருக்கிறது. எடுத்துக்காட்டிற்கு, பண்டரிபுரத்து பண்ணையார் பரஞ்சோதிக்கு வயது அறுபது ஆகிவிட்டது என்று தொடங்குகிறது நல்ல பாம்பு என்ற கதை. முதல் வரியைப் படிப்பவர்கள் இரண்டாவது வரியைத் தொடர்ந்து படிக்கவேண்டும்; பிறகு அடுத்தடுத்த வரிகளைப் படித்தே ஆகவேண்டும் என்ற ஈர்ப்புடன் கதைகள் ஆர்வமூட்டும் நிகழ்வுகளை முன் வைக்கின்றன. கதை முடிவுகளும் நிறைவாக அமைந்து திருக்குறள் கருத்தோடு இணைகின்றன. ஒரு குதிரைப்பந்தயம் போன்ற விறுவிறுப்புடன் சிறுகதையின் தொடக்கமும் முடிவும் இருக்கவேண்டுமென மேனாட்டுத் திறனாய்வாளர் ஸெட்ஜ்விக் கூறுவது இவர் கதைகளுக்கு மிகச்சரியாகப் பொருந்துகிறது.
இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம் ஆகிய இரு திருக்குறள் அதிகாரங்களில் உள்ள 20 குறள்களுக்கேற்ற 20 கதைகளை இவர் மிக நேர்த்தியாகப் பின்னியுள்ளார். படிப்பவர்களுக்குச் சலிப்புத்தட்டா வண்ணம் கதைக்களம்- நகர சூழல், கிராமிய சூழல், மன்னர் காலச்சூழல், 18 ஆம் நூற்றாண்டுச் சூழல் என மாறுபடுகிறது.
பாத்திரப்படைப்புகளிலும் உரையாடல்களிலும் மாதவனின் எழுத்தாற்றல் தனித்தன்மையுடன் மிளிர்கிறது. பெரும்பாலும் நல்ல மகளிரும், சில தீய பெண்டிரும் இவர் கதைகளில் இடம்பெற்றாலும் கதையைப் படித்துமுடித்தவுடன் அவர்களின் செயல்கள் நம் நினைவில் நீண்ட நேரம் தங்கிவிடுகின்றன.
இன்னொரு கண்ணகியாகப் பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு, மழைபொழிச்செய்து தன் கணவன் ஆதித்தனை மீட்ட சொக்கம்மாள் (சொக்கம்மா)
தன் கற்பைச்சூறையாட வந்த கயவனைக் கருநாகமிருந்த கூடைக்குள் கையை நீட்ட வைத்துத் தந்திரமாகத் தப்பிப் பாடம் புகட்டிய செண்பகம் (நல்ல பாம்பு)
சாபத்தால் கிழக்கோலம் உற்ற கணவனைக் கண்மணிபோல் காத்துத் தன் கற்பையும் காத்துக் கணவனின் இளமையை மீட்ட முத்தழகி (கற்புக்கரசி)
கணவனை மதிக்காமல் வீட்டை விட்டுத்துரத்திய பணக்காரத் தந்தையின் குடும்பத்தினர் முன் சபதமிட்டுக் கணவனை அமைச்சர் நிலைக்கு உயர்த்தி, குடும்பத்தினர் அவரை வணக்குமளவு சிறப்பித்த மாலதி (சபதம்)
கணவனுக்குத் தெரியாமல் தன் கல்லூரி நண்பனால் தான் பாலியல் தொல்லைக்கு ஆளாக நேர்ந்தபோது துணிவுடன் போராடி வென்ற ஸ்நேகா (நண்பேன்டா)
மனைத்தக்க மாண்புடையவர்களான இப்பெண்களின் கதைகள் வள்ளுவர் விளக்கும் சிறந்த வாழ்த்துணைவியர்களுக்கு எடுத்துக்காட்டாய் அமைகின்றன.
எப்படி ஒரு வாழ்க்கைத்துணைவி அமையக்கூடாது என்பதற்கும் இந்நூலில் சில பெண் பாத்திரங்களை ஆசிரியர் மனதில் தைக்கும்படி முன்நிறுத்தியுள்ளார்.
கணவன் சந்திரன் மிகுந்த பெருந்தன்மையுடன், பொறுமையுடன் விட்டுக்கொடுத்தபோதும் அவன் வாழ்வைச் சோதனைக்குள்ளாக்கிய லிலிதா (வல்லமை தாராயோ), புகழ்பெற்ற நடிகன் உதயனின் வாழ்வைத் தம் தகாத செயல்களால் சீரழித்த சுமித்ரா (மனைவி அமையவதெல்லாம்) முதலியோர் இத்தகையோர் ஆவர். பெண்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்கு மிக நேர்த்தியான எடுத்துக்காட்டுகள் இவர்கள்.
தமிழ் என்னும் போர்வாள் என்ற கதையில் வரும் தமிழரசன் தமிழை முறையாகப் பயன்படுத்திப் படிப்படியாக நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த வளர்ச்சி தமிழ்படித்தோருக்கு உத்வேகம் அளிப்பதாகும், வையத்து வாழ்வாங்கு வாழ்வோர் எய்தும் சிறப்பிற்கு இக்கதை மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
கதைச் சுரங்கமாக விளங்கும் இக்கதாசிரியர் பானுமாதவன் அவர்களைத் திரைத்துறையும், பிற ஊடகத்துறைகளும் பயன்படுத்தினால் சிறப்பான பயன் விளையும். குடத்தில் உள்ள இந்தக் கதைச்சொல்லியைக் கோபுரத்தில் ஏற்றி ஏற்றம் காணவேண்டும்.
திருக்குறளுக்கு உரை எழுதுவது மாணவர்களுக்கும், திருக்குறளைக் கற்கத் தொடங்குவோருக்கும் மட்டும் குறளைப் புரிய வைத்து பயனளிக்கும். ஆனால் திருக்குறளுக்குக் கதை எழுதுவது திருக்குறளைப் பாமர மக்களுக்கும் புரிய வைப்பதோடு திருக்குறளை மேலும் ஆழ்ந்து படிக்கவேண்டும் என்ற ஆவாவைத் தோற்றுவிக்கும், இவ்வகையில் ஆசிரியர் இந்நூலின் வழி சிறந்த குறள் பரப்பும் பணி புரிந்துள்ளமை மிகுந்த பாரட்டிற்குரியதாகும்.