எங்கள் பேட்டை நண்பர்

        நூல்: ஏர்வாடி  இராதாகிருஷ்ணன்  பொன் விழா மலர்

           எங்கள் பேட்டை நண்பர்

சென்னை அண்ணாநகரில்  நான் கடந்த 46 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். நான் இப்பகுதியில் குடியேறிய காலக்கட்டத்தில் எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து இங்கு வர ஆட்டோவை அணுகினால் ஊருக்கு வெளியே எங்கோ ஓரிடத்திற்கு அழைப்பதுபோல ஆட்டோகாரர்.  வரத் தயங்குவார். காலச்சக்கரத்தின் நன்மையான சுழற்சியில் அண்ணாநகர் நகருக்கு நடுவே அமைந்து இங்கு வாழ்வதே சிறப்பு என்ற நிலைக்கு உயர்ந்துவிட்டது. சென்னை நகரின் பல முக்கிய அரசியல் தலைவர்கள்,  உயர் அதிகாரிகள், கலைஞர்கள் முதலிய பலரும் இங்கு இப்போது வாழ்கின்றனர். சிறப்பாக அறிஞர் அண்ணாநகர் என்ற இயற்பெருடைய இப்பகுதியில் இப்போது அறிஞர்கள் மிகுதியாக வாழ்வதே இதன் சிறப்பாகும். இன்னும் சொல்லப்போனால் தமிழ் அறிஞர்கள் பலரும் நிறைந்திருக்கும்  ‘சான்றோர் உடைத்து அண்ணாநகர்’ எனலாம்.

சென்னைத் தமிழில் சொல்வதானால் எங்கள் பேட்டையான அண்ணாநகரில் 32 ஆண்டுகளாக வாழும்  எங்கள் பேட்டை நண்பரான கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தச் சான்றோர் வரிசையில் முக்கிய இடம்பெறுகிறார். அவரால் எங்கள் பகுதியே பெருமையடைகிறது என்பதால் அவரைப்பற்றிய என் உணர்வுகளை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இருபதாண்டுகளுக்கு முன்னர் எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது நான் மலேசியாவின் புகழ்பெற்ற நாளிதழான மலேசிய நண்பனின் அலுவலகத்தில்  இந்தியப் பிரதிநிதியாக இருந்த நேரம். நண்பர் ஒருவர் ஏர்வாடி அவர்களை அழைத்துவந்து அறிமுகப்படுத்தியபோது அவர் பழகிய விதமும் அவர் பேச்சில் இருந்த பண்பாடும் என்னைக் கவர்ந்தன. அவர் வேண்டியபடி அவரின் முதல் மலேசியப் பயணத்திற்கு உதவும்வண்ணம் அவருக்குச் சில அறிமுகங்களை, ஏற்பாடுகளை மகிழ்ச்சியோடு செய்துகொடுத்தேன். அவர் பயணம் முடிந்து திரும்பியவுடன் மறவாமல்  என்னைச் சந்தித்து தம் பயண அனுபவங்களைப் பகிர்ந்தார். நான் அறிமுகப்படுத்திய மலேசிய நண்பன் தலைமை ஆசிரியர் ஆதி குமணன், தலைமை நிருபர் இராஜேந்திரன் ஆகியோரின் சந்திப்புகள் அவருக்கு பயனளித்தமையைக் கூறியதுடன் நன்றிப்பெருக்கோடு ஆதி குமணன் செய்த உதவிகளை நினைவுகூர்ந்து அவரைக் கவிதை உறவு இதழின் அட்டைப்படத்தில் இடம்பெறச்செய்தார்.

அண்ணாநகர் தமிழ்ச்சங்கத்தில் அவரோடு நானும் செயற்குழு உறுப்பினராக இடம்பெற்றமையால் அவ்வப்பொழுது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு அடிக்கடி கிடைத்தது. எப்போது எங்கள் சந்திப்பு நிகழ்ந்தாலும் இன்முகத்துடன் அவருடன் உரையாடுவதும் செய்திகளைப் பகிர்வதும் எனக்கு மலர்ச்சியை ஏற்படுத்தும்.

நான் ஓய்வு பெற்றதிலிருந்து உலகத் தமிழ்க்களஞ்சியத்தின் உருவாக்கத்தில் தலைமைப்பொறுப்பேற்று பணியாற்றிக்கொண்டிருந்தபோது அதன் முன்னேற்றம் பற்றி அவ்வப்பொழுது ஆர்வமுடன் கேட்டு அவர் உற்சாகப்படுத்துவார். ஒவ்வொரு முறையும் அவரிடம் நேரில் மட்டுமன்றி தொலைபேசியில்  பேசும்போதும் எனக்குப் புதுத்தெம்பு ஏற்படும். இப்படி சிலரிடம் மட்டுமே இந்த புதுத்தெம்பை நாம் பெறமுடிவதற்கு அவர்களிடம் உள்ள சில அரிய பண்புகளே காரணம்.

இத்தகைய அரிய பண்புகள் ஏர்வாடியாரிடம் இருந்தமையே அவரின் மாபெரும் வளர்ச்சிக்குக் காரணமாகும். தாம் உயரும்போது தம்முடன் இருப்பவர்களையும் உயர்த்தும் மனித நேயமே இவரின் தலையாய பண்பு. பாரத ஸ்டேட் வங்கியில் எழுத்தராக வாழ்வைத் தொடங்கி உயர் அதிகாரியாக உயர்ந்த நிலையில் தம் உயர்வின் வாயிலாக அவர் தமிழுக்கும் தமிழர்க்கும் செய்த பணிகள் சிறப்புமிக்கவை. வங்கி நடைமுறையில் மக்கள் பயன்படுத்தும் 15,000 சொற்களைத் தொகுத்து கலைச்சொல் அகராதி உருவாக்கியபோது அதனை வெளியிட்ட முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் ‘நிறைவான இப்பணியில் தமிழுக்கு லாபம் ஈட்டியுள்ளது பாரத ஸ்டேட் வங்கி’ என்று பாராட்டினார். 1972 இல் இந்த வங்கியின் சார்பில் தொடங்கப்பட்ட எஸ்பிஓஏ பள்ளியின் வளர்ச்சிக்காக ‘மச்சானைப் பார்த்தீங்களா?’ என்ற நாடகத்தை அரங்கேற்றி ரூ80,000 நிதி திரட்டி பள்ளியின் வளர்ச்சிக்கு உரமூட்டினார். 500க்கும் மேற்பட்ட  வானொலி நாடகங்கள், 5 கவிதைத்தொகுதிகள், 12 சிறுகதைத்தொகுதிகள், 7 நாடக நூல்கள், 100 க்கும் அதிகமான இசைப்பாடல்கள் , 86 நூல்கள் என்று விரியும் இவரின் இலக்கியச்சேவை அவர் பணியாற்றிய வங்கிக்கே பெருமை சேர்ப்பதாகும். எனவே இந்த வங்கியில் 39 ஆண்டுகள் இவர் செய்த நிர்வாக இலக்கியப் பணிகளைச் சிறப்பித்து இவரின் பெயரால் ஓர் இலக்கியப்பரிசை வங்கி நிர்வாகம் அளிக்க முன்வந்தபோது என் படைப்புகள் தெரிந்தால் போதும் என்னைத் தெரியவேண்டாம் என்ற உயரிய கொள்கையுடைய இவர் தம் பெயரில் வழங்குவதைத் தவிர்த்து  ‘ பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய விருது’ என்று மாற்றி அமைக்கச்செய்தார்.

 

புகழுடன் சென்னையில் வாழ்ந்தாலும், சிறப்புடன் உலகநாடுகள் பலவற்றிற்குச் சென்றாலும் தாம் பிறந்து வளர்ந்த மண்ணான நெல்லைச்சீமையின்  ஏர்வாடியை என்றும் மறவாதவர். அங்கு வாழ்ந்த இளமைக்காலங்களை  நினைக்கையில் விலாப்புறத்தில் சிறகுகள் முளைக்கும் என்று கூறும் இவர் இதனாலேயே தம் பெயரோடு ஊர் பெயரை இணைத்துள்ளார், அவர் பெயரைவிட ஊர்பெயரே அவர் பெயரானது தம்  மண்ணுக்கு அவர் செய்த நன்றிக்கடனாகும்.

கவிஞர் கண்ணதாசனால் கவிதை உலகிற்கு அறிமுகமான ஏர்வாடி அவர்கள்  தம்மைப்போன்ற கவிஞர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணர உருவாக்கியதே கவிதை உறவு என்ற மனிதநேய இலக்கிய இதழாகும். இது பாரதி தலைமுறையையும், பாரதிதாசன் தலைமுறையையும் ஒரே குடையின் கீழ்க்கொண்டுவரும் அரிய முயற்சி! மரபென்றும் புதுக்கவிதையென்றும் பிரித்துப்பார்க்காமல் அழகியலான எந்தக் கவிதையையும்  அரங்கேற்றுவது இதன் சிறப்பு! இளைய தலைமுறையினரின் படைப்பாற்றலை இனங்கண்டு ஊக்குவிப்பது இதன் தலையாயப் பணி! ஓரிதழ் கூட விடுபடாமல் கடந்த 35 ஆண்டுகளாகக் குறையாத பொலிவுடன் வெளிவருவது இதன் சாதனை! மேலும் கவிதை உறவு அறக்கட்டளையின் மூலம் நூல்கள் வெளியிட வாய்ப்பில்லாதவர்களுக்கு இவர் நிதியுதவியளித்து உதவுகிறார். இவரின் இந்த அறக்கட்டளை ஏழைச்சிறார்களுக்குக் கல்விநிதியும் வழங்குகிறது.

இவை தவிர கலைமாமணி விக்கிரமன் விருதினைச் சிறந்த கவிதைக்கும், துரைசாமி நாடார் ராஜம்மாள் இலக்கியப் பரிசுகளை 3 சிறந்த கவிஞர்களின் கவிதை நூல்களுக்கும், சுப்பையா – தங்கம்மாள் இலக்கியப் பரிசை  மனிதநேயச்செல்வர்கள் இருவருக்கும் வழங்கி வருகி்ன்றார். இப்படி இவரின் “கவிதை உறவு’ ஒரு மாபெரும் இயக்கமாக விரிந்திருக்கிறது. மாதத்தின் இறுதி புதன் கிழமையன்று  இவர் வாழும் மலர்க்குடியிருப்பின் பூங்காவில் இவர் நிகழ்த்தும் கவிதை இரவு நிகழ்ச்சிகள் பலரைக் கவிதை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளன. பல புகழ்பெற்ற மனிதர்களை அந்த நிகழ்ச்சிக்கு வரவழைத்துள்ளன.

உலகத்தமிழ்க் களஞ்சியத்தின் வெளியீட்டு விழா 2019 ஆம் ஆண்டு சென்னைப் புத்தகக்காட்சி அரங்கில் நடைபெற்றது. அப்போது விழாவிற்கு  வரவிருந்த சிறப்புப் பேச்சாளர்களில் ஒருவர் வரவியலாமல் போன நிலையில் அங்கு பார்வையாளராக வந்திருந்த ஏர்வாடி அவர்களைச் சந்தித்து நீங்கள் வந்து விழாவில் பேசி அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். சிறிதும் தயங்காமல், அவர் மேடைக்கு வந்து தயாரிப்பின்றி மிக அருமையான உரையாற்றி விழாவினைச் சிறப்பித்தார். அது மட்டுமன்றி மறுநாள் என் இல்லத்திற்கே வந்து களஞ்சிய முயற்சிக்குத் தம் பாராட்டைத் தெரிவிக்கும் வண்ணம் ரூ3000 மதிப்புள்ள களஞ்சியத்தின் 3 தொகுதிகளையும் வாங்கி ஆதரவளித்தார். 12 ஆண்டுகள் 50 அறிஞர்களின் உழைப்பில், தமிழ், தமிழர், தமிழ்நாடு தொடர்பான 16,000 செய்திகளை உள்ளடக்கிய  உலகத் தமிழ்க் களஞ்சியத்தைத் தமிழ் வளர்ச்சித்துறையின் கவனத்திற்கும் எடுத்துச்சென்றார். தமிழ்ப்பணி புரிவோருக்கு எந்த எதிர்பார்ப்புமின்றி உதவும் இவரின் நல்ல உள்ளத்தை உணரும் வாய்ப்பை நான் பெறேன்.

‘மனித நேயம், மாண்புமிகு வாழ்க்கை, மண்ணில்  எவர்க்கும் அஞ்சாமை’ என்று குறிக்கோளுடன் இதழ் நடத்தும் இவர் இலக்கியம் பற்றியும் சமூக ஊடகங்கள் பற்றியும் தெரிவித்த சில கருத்துகள் என் சிந்தையைக் கவர்ந்தன. அவற்றில் சில:-

·         கவிதை, தமிழர்களாகிய நமக்குப் பொழுதுபோக்கன்று; வாழ்க்கை! வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தையும் சுவையையும் அளிப்பது கவிதை. கவிதை எழுதுகிற தன்மையும், அதை ரசிக்கிற தன்மையும்தான் மனிதர்களை மனிதர்களாக – அவர்களை மனிதநேயம் மிக்கவர்களாக வைத்திருக்க உதவுகிறது. கவிதையைத் தொலைத்து விடுகிற ஒரு சமூகத்தில் அமைதியும் தொலைந்து போய்விடும்.

·         கவிஞன் என்பவன் சமூக மருத்துவன். பல நேரங்களில் யதார்த்தம் அறியாத கற்பனை உலகிலேயே வாழும் நோயாளியாகவும் வாழ்ந்து மறைந்து போகிறான். பார்த்ததைப்  புதிதாய்ப் பார்ப்பவன் பாவலன். பார்த்ததையே மீண்டும் பார்ப்பவன் பாமரன். கவிஞன் என்பவன் தலைசிறந்த ரசிகனாகவும் இருக்கிறான் 

·         தனியார் பண்பலை வானொலிகள்:  உடலுக்குத் துரித உணவு எப்படித் தீங்கிழைக்கக்கூடியதோ, அதே போன்று மனித மனங்களுக்குத் தீங்கிழைக்கக்கூடிய செவிவழி துரித உணவு இது. பண்பாட்டுச் சீரழிவு களில் ஒன்றாகவே இதைக் கருதவேண்டி இருக்கிறது. வானொலியின் சாத்தியக் கூறுகள் புதையல்போல் கொட்டிக் கிடக்கும்போது, வெறும் சினிமா நிகழ்ச்சிகளாகவும் சினிமா பாடல்களாகவும் நேயர்களுடன் வெட்டி அரட்டை அடிப்பதாகவும் முடிந்து போய் விடுகிறது. இன்னும் ஒருபடி அதிகம் போய், காதலர்களின் அரட்டையை ஒலிபரப்பும் வானொலிகளைக் காதுகொடுத்துக் கேட்க முடியவில்லை.

·         பட்டி மன்றத்தின் வெற்றி, கவியரங்கத்தைக் காவு வாங்கியதோடு நின்றுவிடவில்லை. சாலமன் பாப்பையா போன்ற  பெரிய தமிழறிஞர்க ளைக்கூட காமெடியன்கள் ஆக்கிவிட்டது. முன்பெல்லாம் கல்லூரி விழாக்களுக்கு மாணவர்கள் ஏற்பாடு செய்வது இலக்கிய கூட்ட மாகவோ அல்லது கவியரங்கமாகவோ இருக்கும். இப்போது அவர்க ளும் தமிழறிஞர்கள் கோணங்கிகளாக அர்த்தமற்ற நகைச்சுவை அரட்டை அடிக்கிற பட்டி மன்றங்களை ஏற்பாடு செய்வது துரதிஷ்டவசமாக இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் கவியரங்கத்தைப் புத்துயிர் செய்து மீட்டெடுக்க வேண்டுமானால், கவியரங்கக் கவிதையில் நகைச்சுவையை முன்னிலைப்படுத்த வேண்டும்.

·         பொதுவாக விளம்பரம் என்பது அதிக செலவு பிடிக்கக்கூடியது. அந்தப் பணத்தில் மனித நேயத்துடன் பல பணிகளைச் செய்ய முடியும் என்பது என் அனுபவம். மிக முக்கியமாக, கவிஞன் அல்லது ஒரு படைப்பாளி அறியப்படும் முன்னரே அவனது படைப்பு அறியப்பட வேண்டும். என் கவிதைகளைத் தெரிந்தால் போதும்; என்னைத் தெரிய வேண்டாம்.

சிறந்த - நிர்வாகி, கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், நாடகாசிரியர், இதழாசிரியர், பதிப்பாளர், தமிழக அரசின் - கலைமாமணி விருது, பாவேந்தர் விருது, சிறந்த நூலுக்கான விருது முதலியன பெற்றவர்.  உலக நாடுகள் சிலவற்றில் சிறப்பிக்கப்பட்டவர்.  இப்படி இவர் சாதனைகளின் பட்டியல் நீள்கிறது.

இந்தச் சாதனைகள் அனைத்தையும் விட அன்பெனும் பிடியுள் அகப்பட்ட மலையாக உள்ள இவரின் மனித நேயமே வரலாற்றில் இவரை வாழவைக்கும்.