நூல்:வரலாறு ஒரு தேனாறு- மெர்வின்
எழுத்துத் தியாகி மெர்வின்
மாணவப் பருவத்தில் மெர்வினுடன் பூச்செண்டு என்ற இதழை நடத்திவந்த அந்தப் பொற்கால நினைவுகளை மீண்டும் மீட்டும்போது இன்ப இராகங்கள் ஊற்றெடுக்கின்றன. நடக்கக் கற்றுக்கொள்ளும் குழந்தையின் குதூகலத்துடன் நாங்கள் எழுதக் கற்றுக்கொண்ட காலமது; எழுத்தின் தாக்கம் விளைவிக்கின்ற எதிரொலியைக் கண்ணாரக் கண்டு உற்சாகம் பெற்ற காலமது. ஆரம்ப சூரத்தனத்துடன் இந்த எழுதுகோலைச் சுழற்றிய எங்களில் பலரும், பின்னர் சோர்ந்தும், திசை மாறியும் அடையாளம் இழந்தோம்.
ஆனால் திசை மாறாமால், அன்று ஏந்திய எழுதுகோலை நண்பர் மெர்வின் செங்கோலாகக்கொண்டு இன்றும் எழுத்துலகில் ஆட்சி செய்து வருகிறார். வேறு பணிகள் வந்தாலும் ஏற்காமல், தம் குறிக்கோளை விட்டு சற்றும் விலகாமல், எழுத்து என்ற ஒற்றைக்காலில் தவமியற்றிவரும் குறிக்கோள் மனிதர் மெர்வின் என்றால் மிகையில்லை..
அவரின் இந்த அர்ப்பணிப்பே தொடர்ந்து அவரை 100 க்கும் மேற்பட்ட நூல்களைப் படைக்க வைத்தது; இலட்சக்கணக்கான வாசக நெஞ்சங்களை ஈர்த்து பலரின் இருண்ட வாழ்வில் தன்னம்பிக்கைச் சுடரை ஏற்றிவைக்கும் அரும்பணியை ஆற்றவைத்தது.
அவர் மாணவப்பருவத்திலேயே வெளியிட இருந்த வாழ்க்கை உன் கைகளிலே என்ற நூலிலிருந்து, பூச்செண்டில் முதன்முதலாக வாழமுடியவில்லையா ? என்ற கட்டுரையை வெளியிட்டார். இதில் தொடங்கிய அவர் வெளியீட்டுப்பணி அடுத்த அரைநூற்றாண்டுக் காலம் ஓய்வின்றித் தொடர்கிறது. இவர் நூல்களில் பலவும் 15 பதிப்புகள் வரை கண்டவை; பல்கலைக்கழக மாணவர்கள் பலரின் ஆய்வுப்பொருளாக விளங்கியவை; வாழ்வியல் எழுத்தாளர்கள் வரிசையில் இவருக்குச் சிறப்பிடம் ஏற்படுத்தியவை; தமிழக அரசின் பரிசை இருமுறை பெற்றுத் தந்தவை; பாரத வங்கி, செங்கமலத்தாயார் அறக்கட்டளை ஆகிய அமைப்புகளின் விருதுகளை ஈட்டியவை. எல்லாவற்றிற்கும் மேலாக அறிவியல் மேதை ஜி.டி. நாயுடு அவர்களின் கிடைத்தற்கரிய நேரடிப் பாராட்டினைப் பெற்றவை.
காசு இங்கே ஏசு எங்கே முதலிய அவரின் அண்மைக்கால நூல்கள் அவர் சார்ந்த கிறித்துவ சமயத்தினைச் சீரழிக்கும் கள்ள ஞானிகள், ஏசுவை விற்கும் வியாபாரிகள் ஆகியோரின் முகத்திரையைக் கிழித்தெறியும் துணிகரமான முயற்சிகளாகும், இந்த முறுக்குமீசை சிற்றெறும்புக்கு இந்தப் போலிமதவாதத் திமிங்களுங்களுடன் மோதும் யானை பலம் தன்னலமற்ற நேர்மையால் வந்தது என்பதே உண்மை.
அழியும் செல்வத்தை ஈட்டமுனையாமல், என்றும் நிலைக்கும் அறிவுச்செல்வத்தை அரும்பாடுபட்டு ஈட்டி அடுத்த தலைமுறைக்குத் தம் நூல்கள் வாயிலாக இவர் விட்டுச்செல்கிறார்.
யாருக்கும் அஞ்சாமல், பொருளாசைக்கு மடியாமல், அஞ்சா நெஞ்சுடன், நியாயத்தின் வெற்றிக்காகத் தன்னை வருத்திக்கொண்டு நூல்களை வடிக்கும் இவர், ஓர் எழுத்துத் தியாகியாகவே எதிர்காலத்தில் உயர்த்தப்படுவார்.