நூல்: கங்கைக் குழலோசை - அருட்பணி ரிச்சர்ட்
கங்கைக் குழலோசை எங்கும் ஒலிக்கட்டும்!
தமிழ்க்கவிதை வரலாற்றில் துறவியர்க்குச் சிறப்பான பங்களிப்புண்டு. ஐம்பெரும் காப்பியங்களில் சிறந்ததான சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் ஒரு துறவி; ஐம்பெரும் காப்பியங்களில் பெரியதான சீவக சிந்தாமணியை எழுதிய திருத்தக்க தேவரும் ஒரு துறவியே. இந்தப்பட்டியல் மிக நீண்டது. இதில் மேனாட்டு,தமிழக கிறித்துவத்துறவியருக்கும் முக்கிய இடமுண்டு. அருட்பணி.வி.ரிச்சர்ட் அவர்களையும் இந்த பட்டியலில் இடம் பெறும் தகுதிக்கு உரியவராக இக்கவிதை நூல் வழிவகுத்துள்ளது.
ஆசிரியர் ஆங்கிலத்தில் இதற்கு முன் எழுதிய 'இதயத்துடிப்புகள்'(பிமீணீக்ஷீtதீமீணீts)என்ற கவிதைத்தொகுப்பு அவரின் கவித்துவத்தை ஏற்கனவே அடையாளம் காட்டியுள்ளது. அன்னை தமிழிலும் அவர் பாபடைக்கும் ஆற்றல் வல்லார் என இந்தக்குழலோசை மெய்ப்பித்துள்ளது.
ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்ட இந்நூலில் உள்ள 87 கவிதைகளில் சில, முதல் தட்டிலேயே(ளீவீநீளீ) சீறும் துள்ளுந்து(ஙிஹ்ளீமீ)போலப் பார்க்கும் முதல் வரியிலேயே கருத்தை உயிர்ப்பிக்கின்றன. முதல் பகுதியில் இடம் பெறும் 'காற்றோடு கார்மேகம் கைபிடித்து நடைபோடும், கரங்குவித்துக் கோபுரத்தை முத்தமிடும்'' எனத்தொடங்கும் அன்னைநகர் ஆலயம் பற்றிய கவிதையும், 'மண்பானைப் போலன்றோ மானிடனின் வாழ்வதும்?' என்று திருநீற்றுப்புதனன்று எழுதிய கவிதையும் இத்தகையன.
துறவியாயினும் அவர் மனிதர்களைச் சரியாக எடைபோடும் உலகியல் ஞானம் உடையவர் என்பதை 'ஒருநாள் உயர்வாய்ப் புகழ்வார்கள் மறுநாள் எதிராய் இகழ்வார்கள்' என்ற வரிகளில், 'மனிதர்கள் பலவிதம்' என்ற கவிதையில், பட்டுணர்வோடு, பாட்டாக்கியுள்ளார். எனினும் முடிவில் அவர் உணர்ந்த, உணர்த்திய உண்மை, உறவும் நட்பும் கானல் நீராகிப்போயினும், ' எங்கும் நிறைந்த இறையவனே தங்கும் இதய உறவினனே' என்பதாகும்.
ஈழத்தமிழரின் இன்னலுக்கு அருமருந்தாய் அமைகிற கவிதையொன்றும் முதல் பகுதியில் இடம் பெறுகிறது. 'உற்றதோர் ஈழம் உருவாகும் நற்றமிழா! நாடுடையோம் நாமென்னும் பீடுநடைப் பாடுதனை ஏடுதனில் இன்றே எழுது ' என்று நம்பிக்கை நட்சத்திரமாய் ஒளிரும் இக்கவிதையை அன்னைநகர் ஆலயத்தில் அரங்கேற்றியது தனிச்சிறப்பாகும்.
விவிலிய நிகழ்வுகளை,வசனங்களை, 'தேடிவந்த தெய்வம்' என்ற இரண்டாம் பகுதி அழகாகச் சித்திரிக்கிறது. சீமோன் இராயப்பர் கிறிஸ்துவை மூன்று முறை மறுதலித்தபின் அவர் தம் செயலைநொந்து மனம் உடைந்து கண்ணீர் வடிக்கின்றார். 'பாவம் பண்ணி பரிகரித்த' அவரைப்,''புண்கள் போர்த்திநின்ற புண்ணியனும் - சீடன் கண்கள் நோக்கியவன் கருணை செய்தார்,'' அதுமட்டுமா ? ''பயந்த கோழைத்தனத்தைப் பாறை என்றார்- நன்றே உயர்ந்த திருஅவையை ஒப்படைத்தார்'' என்று அந்நிகழ்வுகளை நிழற்படமாகக் காட்சிப்படுத்துகின்றன கவிதை வரிகள்.
அருட்பணியாளரின் கவிதைத்தொகுப்பில் காதல் பாடல்களும் 'பல்சுவைத்துளிகள்' என்ற மூன்றாம் பகுதியில் இடம்பெறுவது அதிர்ச்சியளிக்கவில்லை. ஏன்? ''காதல் உணர்வா? இல்லை,கடவுளா? கவிபாடும்போது காதலும் கடவுளும் உள்ளூர இரண்டறக் கலந்ததாக உணர்கிறேன். உள்ளத்தைவிட்டு வெளியேறி எங்கோ இருப்பவனல்ல இறைவன், அவன் உள்ளதில் உறைபவன். அவனே காதல் தலைவன்?'' என்று ஆசிரியரே முன்குறிப்பு வழங்கிவிடுகிறார். கங்கைக் குழலோசை என்பதால் இது பாரதியின் கண்ணன் பாட்டு விளைவித்த தாக்கமோ?கண்ணன் என் காதலன், கண்ணம்மா என் காதலி என்று இறைவனைப் பாரதி காதலனாகவும் காதலியாகவும் புதுப்பித்துப்பாடிய பக்தி இலக்கிய மரபை இங்கே ஆசிரியரும் பின்பற்றியிருப்பது கிறித்துவநெறிக்குப் புதுமையானதாகும்.
இப்பகுதியில் 'உயிருள்ள ஆலயங்கள்' என்ற பாடலில் சித்தர் திருமூலரின் சாயல் தெரிகிறது. வெறும் கற்களால் ஆனதல்ல ஆலயம் என்று சித்தர் மொழியில் திருமூலர் கூறிய கருத்தை ''உண்மைக்கு உயிர்கொடுத்து உறவுக்கு உருகொடுக்கும் உத்தமர்தாம் நானுறையும் உயிருள்ள ஆலயம்'' என்று இவர் மக்கள் மொழியில் சிறப்பாக மீட்டுருவாக்கம்
செய்துள்ளார்.
பக்திப்பாடல்கள் என்று தலைப்பிட்ட நான்காம் பகுதியில் உள்ள கவிதைகளை வெறும் வறட்டுத் துதிப்பாடல்கள் என்று நினைத்தால் ஏமாற்றமே ஏற்படும். இறைபக்தி என்பதற்கு இன்னொரு பொருள் சமூக அக்கறை என்பதை இப்பகுதியில் உள்ள கவிதைகள் பறைசாற்றுகின்றன. இவை இசையமைக்கப்பட்டு கோவில்களில் பாடப்படுவதோடு, மக்கள் மத்தியிலே சமூக விழிப்புணர்வை, கிறிஸ்து வழி சமூக விடுதலையைத் தோற்றுவிக்கவும் முழங்கப்பட வேண்டும்.