நூல்: கதாநாயகனின் கதை- சிவாஜி கணேசன்
உணர்வுரை
கணேசன் என்ற 22 வயது கலைஞன் திரையுலகில் நுழைவதற்கு முன் நாடக உலக வாழ்வில் பயணித்த மேடுபள்ளங்களை மனதில் தைக்குமாறு எடுத்துரைக்கும் இந்நூல் முன்னேறத்துடிக்கும் ஒவ்வொரு இளைஞனும் கட்டாயம் படிக்க வேண்டியதாகும்.
பராசக்தி படத்திற்குப் பிறகு உள்ள சிவாஜி பற்றி நம்மில் பலரும் அறிவோம். ஆனால், அவர் மேல் வெளிச்சம் விழாத அந்தக் கூட்டுப்புழு கால நிகழ்வுகளே நாம் கூர்ந்து கவனித்தக்கதாகும். சிவாஜி என்ற மாபெரும் நடிப்புக் கலஞனைச் செதுக்க, காலமும், சூழலும்,நாடகப் பாசறைகளும் மட்டுமன்றி, அவர்தம் இலட்சிய ஒன்றிப்பும், அளப்பரிய கலைத்தாகமும்,நடிப்பைத் தவமாகக் கொண்ட சோர்விலா உழைப்பும் எவ்வாறு காரணமாயின என்பதை உரத்த குரலில் ஒலிக்கிறது இந்நூல். சிவாஜி சொன்னதைச் சீரணித்து, சீரமைத்துத் தொகுத்தளித்திருக்கும்
பொம்மை ஆசிரியர் திரு.வி.வீரபத்திரனின் கைவண்ணம் நூலை ஒரேமூச்சில் சுவைகுன்றாமல் படிக்க வைக்கிறது.
நூலின் 120 பக்கங்களில் ஏறத்தாழ 40 பக்கங்கள் நூலுக்குத் தோரணவாயில்களாக அமைந்துள்ளன. அவை சிவாஜி பற்றி நம் கருத்தை
ஈர்க்கும் பலரின் சிறப்புரைகளாகும். அவற்றில் சிலரின் அனுபவ கூற்றுகள்
கல்லில் பதித்த எழுத்துகள் போன்றன. எடுத்துக்காட்டாக பேரறிஞர்
அண்ணா அவர்கள் ' உலகப்புகழ்பெற்ற நடிகன் மார்லன் பிராண்டோ கூட
கணேசனைப் போல நடிப்பதென்றால் கஷ்டம்தான். ஒருவேளை முயன்றால் மார்லன் பிராண்டோ, கணேசனைப் போல நடிக்கக்கூடும் ' என்று குறிப்பிட்டிருப்பது மிக உயர்ந்த பாராட்டாகும்.
மேலும் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்,' நெருங்கிப் பழகிய காலத்திலும் சரி, நெருங்கிப் பழக வாய்ப்பற்றுப்போன காலத்திலும் சரி,எங்கள் நட்புக்கு இம்மியளவு மாசு ஏற்பட்டதில்லை' என்று நினைவுகூர்ந்திருப்பது காலத்தால் அழியாத நட்புரையாகும். 'மகனைச் சான்றோன் எனக்கேட்ட நிலையில் நான் புண்ணியம் செய்தவள் ' எனப் பூரிக்கும் அன்னை ராஜாமணி அம்மையாரின்அணிந்துரை நெகிழ்ச்சிக்குரியதாகும். 'என் தெய்வம்' என்ற தலைப்பில் சிவாஜி
எழுதிய கட்டுரையை இங்கு மிகப்பொருத்தமாக இணைத்துள்ளனர். கடந்து
வந்த பாதையைத் திரும்பிப்பார்த்துத் தன்னை வாழ வைத்தப் பெருமாள்
முதலியாரை நினைவுகூரும் அக்கட்டுரை சிவாஜியின் நன்றியறியும்
உயர்பண்புக்குச் சான்றாக அமைந்துள்ளது.
கதாநாயகனின் கதை திருச்சி சங்கிலியாண்டபுரத்திலிருந்து தொடங்குகிறது. 'இப்படியா இருந்தார் சிவாஜி' என்று வியக்கவைக்கும் நிகழ்வுகள் பல அணிவகுக்கின்றன. வெறும் 15 மாத பள்ளி வாழ்க்கைதானா இவர் கற்றகல்வி? கற்றுத்துறைபோகிய தமிழறிஞர்களைவிட இவரால் எப்படித் தமிழைத்திருத்தமாக, எழில்மிளிர உரைவீச முடிந்தது? ஆண்மை செறிந்தகதாநாயகனான இவர் முதல் நாடகத்தில் அறிமுகமானது அழகு சுந்தரியான கல்யாண சீதையாகவும், சூர்ப்பனகையாகவும்,இந்திரஜித்தாகவும் என்பதை நம்பவே முடியவில்லையே! அரிச்சந்திரன் நாடகம் காந்தியாரின் வாழ்க்கையைத் திசை திருப்பியது போல, சிறுவன் கணேசனின் சிந்தனைப்போக்கை ஒரு கட்டபொம்மன் நாடகம் புரட்டிப்போடாவிட்டால் இன்று ஒரு நடிகர் திலகம் நமக்குக் கிடைத்திருப்பாரா? குருகுலவாசமாக இருந்த நாடக கம்பெனி வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு , பாசத்தை நெஞ்சில் அடக்கிக்கொண்டு 6 ஆண்டுகள் பெற்றோரைக் கூடப்பார்க்கமுடியாத அவர் வேதனை,கலைத்தவத்தை மீறி எட்டிப்பார்க்கிறது. 'தமையனார் இறந்ததற்குக் கூட அனுதாபம் தெரிவித்தார்களேயொழிய விடுமுறை தரவில்லை' என்ற வரிகளில் அவர்தம் சோகம் பீறிடுகிறது.
'ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும்படி வேண்ட மாட்டேன். ஆபத்துகளைச் சந்திக்க எனக்கு அஞ்சாமையைக் கொடு' என்ற இரவீந்தரநாத் தாகூரின் வேண்டுதலே இவருடையதாகவும் இருந்திருக்குமோ?அழுத்தப்பட்ட நிலக்கரியாய், சுடப்பட்ட பொன்னாய் வாழ்ந்த அவர், அந்த வாழ்க்கையைமனதார நேசித்தார் என்பதே சிவாஜியின் கலை வாழ்வின் வெற்றிக்கு அடித்தளமாகும்.
'பாடம் சரியாகச் சொல்லாவிட்டாலோ, தப்புதண்டா செய்துவிட்டாலோ
அடி,உதை நிச்சயம் கிடைக்கும்... அந்த இடத்திலேயே படுக்கவைத்து வெறும் உடம்பில் ஓங்கி பிரம்பால் அடிப்பார்கள். அடிப்பவர் கை ஓயும் வரை அடிப்பார்கள். இந்தப் பிரம்புப்பரிசை நானும் வாங்கியிருக்கிறேன்...கம்பெனியில் என்னை மாதிரி உதை வாங்கியவர்கள் கிடையாது. பெரியவனாகியும் அதாவது 1944 இல் கூட திரு.கே.சந்தானத்திடம் , கைப்பிரம்பு இரண்டாக உடையுமளவுக்கு உதை வாங்கியிருக்கிறேன்...இப்படி அடி உதை வாங்கிக் கற்ற தொழில் இது...இம்மாதிரி அடி,உதை வாங்கியதெல்லாம் எனக்குநிரம்பவும் பயனளித்தன.'- என்ற வரிகளில் அவர் அனுபவித்த இன்ப
வேதனை புரிகிறது.
கலைத்தாகம் அடி, உதையை மட்டுமல்ல, வறுமையையும் தாங்கிக்கொள்ளும் மனவலிமையை அளித்திருப்பதை மேலூர் நாடக வாழ்வு புலப்படுத்துகிறது. மேலூரில் நாடக வசூல் கிடைக்காததால், ஒரு நாளைக்கு ஒரு வேளை சோறு என்ற நிலைமை கூட மாறி,பல நாட்கள் வெறும் மோர் சாதம் மட்டுமே சாப்பிட்டுக் காலத்தை ஓட்டியபோதும் நாடக வாழ்வு மகிழ்ச்சியாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். குமார பாளையத்தில் இருந்தபோது நாடகச்சிறுவர்களோடு பவானி ஆற்றில் குளிக்கப்போய் வெள்ளத்தில் மூழ்கிக் காப்பாற்றப்பட்டது அவருடைய மறுபிறப்பு போன்றது என்ற செய்தி அதிர்ச்சியடைய வைக்கிறது.
அந்ததக் காலத்து பாய்ஸ் கம்பெனி வாழ்க்கையை இச்சுயவரலாறு
ஆவணப்படம் போல காட்டுகிறது. நாடகச்சிறுவர்களின் அன்றாடவாழ்க்கைமுறை, அவர்களுக்குத்தரும் பயிற்சிகள், அவர்களின் எளிய மகிழ்ச்சிகள், ஆற்றலை மிகுவிக்கப் பயன்படுத்தும் உத்திகள் முதலியவை கவனிப்பிற்குரியன. இன்றைய மிகச்சிறந்த கல்விக்கூடங்களில் கூடப்பயிற்றுவிக்கப்படாத கட்டுப்பாடும், ஒழுக்கமும், எச்சூழலிலும் வாழப்பழகலும் நாடகச்சிறுவர்களால் அன்று பெறமுடிந்திருக்கிறது.
நாடக நாட்களில் சிவாஜியின் வாழ்வில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள். அவர் நாடக்குழுவில் 'ராதா அண்ணன்' வந்து சேர்ந்தபோது அத்தனை பேரும் உற்சாகம் அடைந்துள்ளனர். கம்பெனி சிறுவர்களைக் குளிப்பாட்டுவது, தலைசீவி ஒழுங்காக ஆடைஅணிவிப்பது என்ற பணிகளை உடன் பிறவா அண்ணனாக இருந்து செய்ததை அவர்பாசத்துடன் குறிப்பிட்டுள்ளார். எழுதப்படிக்கத் தெரியாதவராயினும் எம்.ஆர்.ராதா அவர்கள் மின்சாரத்தொடர்பான நுணுக்கமான வேலைகளிலும்,புதிய மின் உபகரணங்களை அமைத்துத் தந்திரக்காட்சி அமைப்பதிலும், ரேடியோ, பம்பு செட்டு முதலியவற்றைப் பழுது பார்ப்பதிலும் வல்லவர் என்ற அதிகம் அறியப்படாத செய்தியையும் தெரிவித்துள்ளார். சிறுவன் சிவாஜி
புல்லரிப்புடன் முதலில் சென்னையில் காலடி எடுத்துவைக்கக் காரணமானவரும் அவரே என அறிகிறோம். அங்கு அவர் புதுச்சட்டை வாங்கிக்கொடுத்து ஊரையெல்லாம் சுற்றிக்காட்டிய மகிழ்ச்சியை நன்றியுடன் நினைவுகூர்கிறார். திரைப்பட வில்லன் எம்.ஆர்.ராதா நிஜவாழ்வில் பாசங்காட்டும் பண்பாளர் என்பதை சிவாஜி பல இடங்களில் பதிவு செய்துள்ளார்.
நாடக வாழ்வில் தொய்வு விழ, குடும்ப நிலையை உணர்ந்து பிழைப்பிற்காக மோட்டார் மெக்கானிக்காகவும் 7 மாதங்கள் பணியாற்றியிருக்கிறார் சிவாஜி என்பது வேதனைக்கும்,வியப்பிற்குமுரிய தகவல். எனினும் கலைத்தாகம் அவரை மீண்டும் நாடகத்திற்கே விரட்டியிராவிட்டால் நாம் ஒரு நடிகர்திலகத்தை இழந்திருப்போம். சென்னை சௌந்தர்ய மகாலில் பெரியார் தலைமையில் நடந்த 'சிவாஜி கண்டஇந்து ராஜ்யம்' நாடகம் வி.சி.கணேசனை, சிவாஜி கணேசன் ஆக்கியது தம் வாழ்வின் திருப்பமாக அமைந்து இதயத்தை நிரப்பியது என்கிறார். அதற்குஅடுத்த திருப்புமுனையாக பராசக்தி கணேசனான நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார். இதன் தொடர்ச்சியாக சிவாஜி நாடக மன்றம் தொடங்கி,அவர் உள்ளம் கவர்ந்த 'வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகத்தை 100 நாட்கள் வெற்றிகரமாக நடத்திய விவரம் புல்லரிக்க வைக்கிறது.
நடிகர் சிவகுமார் அவர்கள் இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் ஆழ்ந்து,ரசித்து வழங்கியிருக்கும் அணிந்துரை இந்நூலுக்கு மகுடமாக விளங்குகிறது.
பொருத்தமான அட்டைப்படமும், உயிரோட்டமும்,கூர்மையும் உள்ள அரிய ஒளிப்படங்களும்,வடிவமைப்பு நேர்த்தியும், தெளிவான அச்சமைப்பும், நூலின் சிறப்புக்குத் துணைநிற்கின்றன.
காலங்கடந்து வாழும் கதாநாயகனின் கதையை வெளியிட்டுள்ள விஜயா
பப்ளிகேஷன்ஸ் திரு.பி.விஸ்வநாத ரெட்டியின் இப்பணி காலத்தை வெல்வதாகும்.
தன்வரலாறுகள் எழுதப்பட்டால்தான் புகழ்பெற்றவர்களைப் பற்றிய பொய்வரலாறுகள் பொசுங்கிப்போகும். பலரும் எழுதத்தவறிய தன்வரலாற்றை, சிவாஜி கணேசன் அவர்கள், பொம்மை இதழில் எழுதக்காரணமான, திரு.வி.வீரபத்திரனின் முயற்சி அரிய சேவையாகும்; என்றென்றும் சிவாஜி ரசிகர்களின் நன்றிக்குரியதாகும்.