கலையே என் வாழ்க்கையில் திசை மாற்றினாய் !

  நூல் : கலை 66  (டாக்டர கலைகோவன் 66 வது வயது மலர்)                 

              கலையே என் வாழ்க்கையில் திசை மாற்றினாய் !

அன்புள்ள நண்பர் கலைக்கோவனுக்கு,

 

வணக்கம். ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்கு முன் உங்களோடு கழித்த நாள்களை நினைத்துப்பார்த்து அசைபோடுவது எவ்வளவு பரவசமான அனுபவமாக இருக்கிறது! சென்னை இலயோலா கல்லூரியில் புகுமுக வகுப்பில்(1963-64)நாம் வெவ்வேறு பிரிவுகளில் படித்து வந்தாலும், என் நண்பன் வில்லியம் பெர்னாண்டஸ் வழியாக உங்கள் அறிமுகம் கிடைத்தது. பின் நீங்கள் சென்னை மருத்துவக்கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தபோது, மீண்டும் உங்களோடு நெருக்கமாகப் பழகும் வாய்ப்புக் கிட்டியது.

 

நான் இளங்கலை வேதியல் மூன்றாமாண்டு படித்துகொண்டிருந்தபோது எனக்கிருந்த எழுத்தார்வத்தை உங்களிடம் வெளிப்படுத்தியபோது, நல்ல சிறுகதை எழுதினால், தங்கள் அண்ணன் பணியாற்றும் சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளிவரச்செய்யமுடியும் என ஊக்கமூட்டினீர்கள். ''நட்பிற்கும் அப்பால்'' என்ற சிறுகதையை எழுதி தங்களுக்கு அனுப்பிவைத்தேன். விரைவில் அக்கதை என் பெயரில் அல்லாது, ஆர்.கே என்ற பெயரில் வெளிவந்தது. எனினும்  பாரதி பணியாற்றிய  சுதேசமித்திரன் பத்திரிகையில் என் கதை அச்சாகும் தகுதிபெற்றதைக்கண்டு வானத்தில் மிதந்தேன். என் எழுத்தெல்லாம் பத்திரிகையில் வரத்தகுதியுடையதுதானா என்று   ஏங்கியிருந்தவனின் படைப்பை  ஒரு பத்திரிகையில் வெளிவர உதவிய உங்கள்  மேல் அன்று எனக்கு பக்தியே ஏற்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து, மண்ணடி இப்ராகிம் சாகிப் சந்தில் இருந்த உங்கள் இல்லத்திற்கு வந்து, உங்களின் சிறு மாடியறையில் உங்களுடன் அளவாளாவிய கணங்கள் எனக்குப்  பேரின்பம் தந்தனவாகும். ஒரு கட்டில் மட்டுமே கொள்ளுமளவுள்ள  அந்தக்குட்டி அறையிலிருந்துதான் தமிழ் இலக்கிய உலகின் விசாலத்தை  நான் எட்டிப்பார்த்தேன். வேதியல் பட்டதாரியான எனக்குள் கனன்றுகொண்டிருந்த இலக்கிய,மொழி, எழுத்து ஆர்வத்தைதக் கொழுந்துவிட்டு எரிய  பல படைப்புகளை எனக்கு அறிமுகப்படுத்தினீர்கள். தமிழறிஞரான தங்கள் தந்தையும் தமிழாசிரியர்களான உங்கள் உடன் பிறப்புகளும் வாழ்ந்து வந்த அந்தத் தமிழ் இல்லத்தில் அவர்கள் யாருடனும் எனக்குப் பழகும் வாய்ப்பு இல்லையாயினும்,  உங்கள் வழி நிறைய தமிழறிவும், தமிழுணர்வும் பெற்றேன்.

 

குமுதம், ஆனந்த விகடன் , தினமணி கதிர், கல்கண்டு, துப்பறியும் நாவல்கள் முதலியன மட்டுமே நானறிந்த தமிழுலகமாக இருந்த நிலையில் சங்க இலக்கியத்தின் சீர்மையைச் சொன்னீர்கள். நவீன படைப்பிலக்கியங்கள் ஏதும் அறியா நிலையிலிருந்த எனக்குக் கல்கியின் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அகிலனின் வேங்கையின் மைந்தன் முதலியவற்றை அறிமுகப்படுத்திய பின் நான் புதிய  பரிமாணங்களுக்குள் நுழைந்தேன். இவர்கள் எழுத்தின் வீச்சும் தமிழர் வரலாற்றின் பெருமிதமும் என்னை ஆட்கொண்டன.     

 

நா.பார்த்தசாரதியின் நாவல்களைக் கையில் தந்து படிக்க வற்புறுத்தினீர்கள். குறிஞ்சிமலரும், பொன்விலங்கும்   என் சிந்தனையைப் புரட்டிப்போட்டன. படிப்பார்வத்தைத் தூண்டிவிட்டதன் வாயிலாக மு.வ, காண்டேகர், ஜெயகாந்தன் நாவல்களில் உட்புகுந்தேன். அறிதோறும் அறியாமை புலப்பட, அறிவுப்பசியைக் கிளறிவிடக் காரணமானீர்கள். என்படிப்பின் பரப்பு எல்லாத்திக்கிலும் விரிவாகத் தொடங்கியது. அப்போதெல்லாம், பெரம்பூரில் உள்ள என் இல்லத்திலிருந்து  சைக்கிளை ஏறத்தாழ 10 கி.மீ மிதித்துக்கொண்டு உங்களைச் சந்திக்க மண்ணடி வருவது எனக்குச் சுகமான அனுபவமாகவே இருந்தது.

 

1967 ஆம் ஆண்டு அக்டோபரில் ஒரு நாள் நீங்களும், நானும் சில நண்பர்களும் காஷ்மீர் செல்லத்திட்டமிட்டோம். அன்றைய சூழலில் அது சக்திக்குமீறிய ஆசை. பணத்திற்கு அப்போது வழிதெரியாமையால் பலவழிகளைச் சிந்தித்தும் நிறைவேறாது அப்பயணம் பகற்கனவானது. 43 ஆண்டுகளுக்குப் பின்னரே இக்கனவு மெய்ப்பட்டது. சென்ற ஆண்டுதான் நான் விமானத்தில் சென்று காஷ்மீரை விரிவாகச் சுற்றிப் பார்க்கவும், அதுபற்றி இதழொன்றில் ஒரு பயணத்தொடர் எழுதவும் வாய்ப்புக்கிடைத்தது.

 

அக இலக்கியங்களைப் படிப்பதோடு, அழகாக நடைமுறைப்படுத்தியும் பார்த்தவரல்லவா நீங்கள்! தங்கள் துணைவியார் ஔவை அவர்களைக்  காதலித்து கசிந்துருகிய கல்லூரி நாள்களில் உங்களிடமிருந்த கவித்துவத்தை நான் இரசித்திருக்கிறேன். மருத்துவ கல்லூரி தோழர்கள், நண்பன் வில்லியம் ஆகியோருடன் தங்கள் இணையரையும் அழைத்துக்கொண்டு மாமல்லபுரத்திற்கு மகிழ்வுலா சென்றதையும், அங்குள்ள சிற்பங்களை ஆழமாக நீங்கள் இரசித்து மகிழ்ந்ததையும், கல்கியின் சிவகாமியின் சபதத்தில் வரும்  நிகழ்வுகளோடு பொருத்த்திப் பார்த்ததையும் மறக்கமுடியாது.  

 

ஆக்கப்பூர்வமான பணிகள் செய்ய 10.10.1967 இல் நாம் செல்வி கலைமன்றத்தைத் தொடங்கி, அதில் நான் தலைவனாகவும், நீங்கள் செயலாளராகவும், திரு அப்துல் ஹக் என்பவர் பொருளாளராகவும் இருக்க, அதன் முதல் கட்டமாக செல்வி கலைமன்றத்தின் வளர்ச்சி நிதிக்காக அப்போது புகழ்பெற்றிருந்த சோவின் முகமது பின் துக்ளக் நாடகத்தை சென்னை அண்ணாமலை மன்றத்தில் நடத்த ஏற்பாடு செய்தோம். வீடு வீடாக ஏறி, இறங்கி, நாடக டிக்கெட்டை மிக சிரமப்பட்டு விற்றும்,  இந்தி எதிர்ப்புப்போராட்ட சூழல் காரணமாக, நாடகம் ரத்துசெய்யப்பட்டுவிட்டது.

 

எனினும்  டிக்கெட் வாங்கியவர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக,   நடிகர் ஏ.வி.எம் ராஜனின் மகிழம்பூ நாடகத்தை அதே அண்ணாமலை மன்றத்தில் சில வாரங்கள் கழித்து நடத்தினோம். எனினும் எதிர்பாரத்த அளவு டிக்கெட்டு வருவாய் இல்லை. விற்கச்சென்ற நண்பர்களிடமிருந்து பணமும் சரியாக வந்து சேரவில்லை.. நாடக்குழுவிற்குத் தரவேண்டிய தொகை ரூ800 இல் எவ்வளவு முயன்றும் ரூ500 க்கு மேல் திரட்டமுடியவில்லை.  நம் மேல் நம்பிக்கை வைத்து முன்தொகை வாங்காமல் நாடகத்தை நடத்தி முடித்தார்கள். நாடகம் முடிந்தவுடன் ஏ.வி.எம்.ராஜன் அவர்கள் கையில் இத்தொகையை மட்டும் கொடுத்து, பாக்கிகள் வந்து சேரா எங்கள் பரிதாப நிலையைப் பயந்துகொண்டு விளக்கியபோது, அவர் சற்று கோபப்பட்டாலும், பிறகு அனுபவமில்லா இந்த இளைஞர்களுக்காக இரங்கி, ''மீதித்தொகை விரைவில்    நாடகமேலாளர் திரு. பொன்னம்பலம் என்பவரிடம் கொடுங்கள். அவரைச் சமாதானப்படுத்துவது உங்கள் பொறுப்பு. அவர்  ஒப்புகொண்டால் எனக்கு ஆட்சேபணையில்லை.'' என்றார். தங்கசாலை வீதியில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த அந்த மேலாளரை நாம் இருவரும் சந்தித்து, மீதித் தொகையை விடக் குறைவான ஒரு  சிறிய தொகையைத் தயங்கித் தயங்கி  கொடுத்தபோது, அவர்  ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொள்ள, நிம்மதிப் பெருமூச்சுடன் திரும்பினோம்.

 

நாடக முயற்சி தோல்வியில் முடிந்தாலும் மனந்தளராது அடுத்த வித்தியாசமான முயற்சியில் ஈடுபட வேண்டுமென எண்ணியிருந்தோம். அப்போது  என் குடும்ப நண்பரும்,  எஸ்.ஐ.வி.இ.டி கல்லூரி முதல்வருமான பேராசிரியர் திரு. இராசேந்திரன் அவர்கள் பூச்செண்டு என்ற தரமான மாத இதழை நடத்திக் கொண்டிருந்தவர், சில மாதங்களாக நடத்தமுடியாமல் இதழை நிறுத்தியிருந்தார்.   'நிறுத்தப்பட இந்த இதழைச் செல்வி கலைமன்றம் ஏன் பொறுப்பேற்று நடத்தக்கூடாது?' என்று    உங்களிடம் நான் கேட்டபோது, 'இது அருமையான யோசனை! உடனே அதன் ஆசிரியரைப் பார்ப்போம்' என்று கூறினீர்கள்.  பேராசிரியர் இராசேந்திரன் தாமே, பதிப்பாசிரியராக இருந்துகொண்டு, நம் பொறுப்பில் இதழை விட மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார். நீங்களும், நானும் வில்லியமும் ஆசிரியர் குழு பொறுப்பைப் பகிர்ந்துகொண்டோம். முதல் இதழ் மார்ச் 1968- இல் வந்தது.  செல்வி கலைமன்றம் பூச்செண்டின் பொறுப்பேற்பது பற்றி,  நீங்கள், எங்கள் எண்ணம் என்ற பெயரில் அந்த இதழில் விளக்கமாக எழுதினீர்கள். 30 காசு விலையில்  ஆண்டு சந்தா ரூ4 என்ற கட்டணத்தில் 64 பக்கங்களுடன் 20 வயதில் நாம் பத்திரிகை நடத்தியதை நினைத்துப்பார்க்கும்போது இன்று மலைப்பாக இருக்கிறது.

 

எனக்கு எழுத்தார்வம் என்பதைத்தவிர வேறு எந்த முன் அனுபவமும் இல்லை. நானும் வில்லியமும், ஒரு துண்டு நோட்டீஸ் அச்சகத்தில் எப்படி அச்சாகிறது என்பதைக் கூடப்பார்த்ததில்லை. மெய்ப்புத் திருத்தவோ, இதழ் உருவாக்கம் பற்றியோ, தாள்கள் பற்றியோ எங்களுக்குச் சுத்தமாகத் தெரியாது. உங்கள் தந்தையாருடனும், தமையனாருடனும் இருந்த அனுபவத்தில் நீங்கள் இவற்றை ஓரளவு அறிந்திருந்ததால் , எங்களுக்கு இதழின் அடிப்படைகளைப் பயிற்றுவித்தீர்கள். உங்களுடன் கவிஞர் கண்ணதாசனை அணுகி பூச்செண்டு என்ற தலைப்பில் ஒரு கவிதை பெற்றோம்; புகழ்பெற்ற சில எழுத்தாளர்களைச் சந்தித்து தரமான கதைகளைப் பெற்றோம்; நீங்களறிந்த ஓவியர் மாருதியைச் சந்தித்து, கிடைத்த புகழ் பெற்ற எழுத்தாளர்களின் கதைகளுக்கும், அட்டைப்படக் கதைக்கும்,   அழகான ஓவியங்கள் வரையச் செய்தோம்.

 

மூதறிஞர் இராஜாஜி வீட்டெதிரே, கீழ்ப்பாக்கம், 19,நவரோஜி தெருவில் பேராசிரியர் இராசேந்திரன் வீட்டின் ஓர் அறையில் நம் அலுவலகம் அமைந்தது. ஆண்டர்சன் தெருவில் அலைந்து திரிந்து, குறைந்த விலையில் நியூஸ் பிரிண்ட் தாள் வாங்குவதும்,   பிராட்வே பண்டாரி அச்சகத்தில் இரவு பகலாக தங்கி இதழ் திருத்தங்களைச் செய்வதும், கல்லுரிகள் பலவற்றிற்கு நேரில் சென்று மாணவர்களை விடுதிகளில் சந்தித்து சந்தாதாரர்களாக்குவதும், வணிக நிறுவனங்களில் ஏறி இறங்கி விளம்பரப்பிச்சை கேட்பதும், அடுத்த சில மாதங்களுக்குப் பழகிப்போனது.பல மாணவர்கள் இதழ்பணியில் நம்மோடு இணைய பூச்செண்டு இரண்டாவது இதழில்  மாணவர்களால் நடத்தப்படும் தமிழின் முதல் மாணவர் இதழ் என்ற சிறப்பு அறிவிப்பு வெளிவந்தது.

 

நடிகர் சிவகுமார் திரையுலகில் அறிமுகமான தொடக்க காலம் அது. அவர் சிறந்த ஓவியர் என்பது அபோது பலரும் அறியாத செய்தி. இச்சூழலில் மே '68 இதழில்   நடிகர் சிவகுமாரை நீங்கள் சந்தித்து, நேர்காணல் செய்து ''மாடர்ன் ஆர்ட் புரியவில்லை என்று முகம் சுளிப்பவர்க்கு ஒரு  பதில்- ஓவிய நடிகர் சிவக்குமார் சொல்லுகிறார்'' என்று எழுதியது அருமையாக  அமைந்தது. இதுவரை முற்றுப்பெறாத நிலையில் உள்ள  உளவியல் நுணக்கங்களை ஆய்வதும், அதுதொடர்பான பலதுறைகளில் ஈடுபடுத்திக் கொள்வதும் அப்போது உங்கள் விருப்பமாக இருந்தது. அதுதொடர்பான பல நூல்ளையும் என்னிடம் காட்டிப் பேசியிருக்கிறீர்கள். மேற்படிப்பாக, உளவியல் மருத்துவக்கல்வியைப் பயின்று உளவியல் மருத்துவராக நீங்கள் சிறப்பீர்களென  நான் நினைத்திருந்தேன். ஆனால் ஏனோ கண்மருத்துவராக  காலம் உங்களைத்  தீர்மானித்துவிட்டது. உங்கள் உளவியல் ஆர்வம் காரணமாக புகழ்பெற்ற உளவியல் மருத்துவர் தைரியம் அவரகளை நீண்ட நேரம் சந்தித்து அளவளாவி ஒரு விரிவான, செய்திச்சாரம் மிக்க நேர்காணலை வெளியிட்டீர்கள். பூச்செண்டின் தரத்தை உயர்த்திய  சிறந்த நேர்காணல்களில் அஃது ஒன்றாகும்.     

 

 

மாணவர் இதழ் என்பதால் தமிழகக் கல்லூரிகளைப் பற்றித் தொடர் கட்டுரைகளை எழுதும் திட்டத்தை நீங்கள் முன்வைத்து, அதன் முதல் முயற்சியாக மதுரைக் கல்லூரிகள் பற்றி எழுதுவது என முடிவெடுத்து, நீங்களும், நானும், வில்லியமும் கையில் மிகக்குறைந்த தொகையுடன் மதுரைக்குப் பயணமானோம். உங்கள்  குடும்ப நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கி, அவர்களின் அன்பான விருந்தோம்பலை ஏற்று, மதுரையில் சில நாள்கள் இருந்து  முக்கிய கல்லூரிகளுக்குச் சென்றோம். உங்கள் வழிகாட்டுதலில், பாத்திமா கல்லூரி, லேடி டோக் கல்லூரி, தியாகராயர் கல்லூரி, மதுரைக்கல்லூரி, மீனாட்சி மகளிர் கல்லுரி ஆகியவற்றின் முதல்வர்களையும்,பேராசிரியர்களையும், மாணவர்களையும் நேர்காணல் செய்த அனுபவம் மறக்கமுடியாததாகும்.

 

பயணத்தின் ஒரு பகுதியாக, திருப்பரங்குன்றத்திற்கு எங்களை அழைத்துச்சென்று அங்குள்ள சிற்பங்களின் நேர்த்தியை நீங்கள் விளக்கியபோது, எதிர்காலத்தில் ஒரு வரலாற்று அறிஞராக, கல்வெட்டு ஆய்வாளராக புகழ்பெறுவீர்கள் என நினைத்துப் பார்க்கவில்லை.  அப்போதே உங்கள் அடிமனதில் இந்த ஆர்வக்கனல் ஒளிந்திருந்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். சென்னைக்குத் திரும்பி வரும் வழியில் கூட, அடுத்த இதழ் பக்கங்களை நிரப்புவது பற்றியே  சிந்தித்து வந்த நீங்கள், இரயில் பெட்டியில் இருந்த பயணச்சீட்டுச் சோதனையாளருடன் உரையாடி,  அடுத்த இதழில் ' ஓடும் புகைவண்டியில் ஒரு மணிநேரம் ' என்றொரு சுவையான நேர்கணானலை வெளியிட்டீர்கள்.

 

பூச்செண்டை நாம் ஏற்றதிலிருந்து 6 மாதங்கள் மட்டுமே நீங்கள் எங்களோடு இருந்தீர்கள். அதன்பிறகு எதிர்பாரா நிகழ்வுகளால் பிரிந்து போனீர்கள்.   நீங்கள் போட்ட அடித்தளத்தில் 25 இதழ்கள் வரை வெளிவந்து தமிழகத்தில் பலராலும் பாராட்டும்படியான இதழாக பூச்செண்டு மணம் பரப்பி மறைந்தது.

 

பிறகு நான் தமிழ்முதுகலை படித்ததும், தமிழ்இதழியலில் முனைவர் பட்டம் பெற்றதும், தமிழ்ப்பேராசிரியரானதும்,  சுட்டி மாத இதழை 108 இதழ்கள் வரை நடத்தியதும், மலேசிய நாளிதழான மலேசிய நண்பனின் இந்தியச் சிறப்பு நிருபராக இருந்து முதலமைச்சர்கள் முதல் முக்கிய மனிதர்கள் பலரை நேர்காணல் செய்ததும்... உங்களை நான் வாழ்வில் சந்தித்திராவிடில் இவை சாத்தியமாகியிராமல், நான் ஒருசமயம் வேறு பாதையில் சென்றிருக்கக்கூடும்.

 

 

வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் திசை மாறிப்போனது. உங்களை அதன்பிறகு கால்நூற்றாண்டு கடந்து  நான் சந்திக்க நேர்ந்தபோது நீங்கள் புகழ்பெற்ற கண்மருத்துவராக மட்டுமன்றி, சிறந்த வரலாற்றறிஞராக, கல்வெட்டு ஆய்வாளராக, சமூக சேவகராக, ஆசிரியராக, சொற்பொழிவாளராக, சிறந்த எழுத்தாளராக, இதழாளராக பன்முக ஆற்றலுடன் ஓளிவீசிக்கொண்டிருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் பணிகள் மேலும் ஓங்கி வளர்ந்து வரலாற்றில் இடம்பெற வேண்டுமென  இந்த 65வது பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறேன். 

தங்களன்புள்ள,

இ.ஜே.சுந்தர்

 

........................................................................................................................................................................

மலேசிய இதழொன்றில் தொடர்கட்டுரையாக வெளிவந்து, பின் மலேசியாவில் வெளியிடப்பட்டு 7 பதிப்புகள் கண்ட  'கறுப்புத்தமிழனே கலங்காதே !' என்ற என் நூல் , சில தமிழகப் பல்கலைக்கழகங்களிலும் பாடநூலாக இருந்தது. அதன் முன்னுரையில் நான் எழுதிய சில வரிகளை  இங்கு மீண்டும் குறிப்பிடுவது எனக்கு மகிழ்வளிக்கிறது:

 

''....இதுவரை என் வாழ்வில் சந்தித்த மனிதர்களில் மூவர் என்னைக் கடுமையாகப் பாதித்து, இன்றைய என் நிலைக்குக் காரணமானவர்கள்.முதல்வர், தமிழ்ப் பேராசிரியர் இராசமாணிக்கனாரின் மகன் திரு. கலைக்கோவன். நான் அறிவியல் படித்தபோது, மருத்துவக் கல்லூரி மாணவராக இருந்த அவரின் பேச்சிலும் எழுத்திலும் என்னைப் பறிகொடுத்திருக்கிறேன். பூச்செண்டு இதழ் தொடங்கிய ஆரம்ப நாட்களில் அவர் என்னோடு இருந்து, எழுத்தில் அழகுணர்ச்சி ஏற்படுத்த ஆசையூட்டியவர். இதுவரை நான் ஆர்வம் காட்டாத பிரபல புதினங்களைப் படிக்கத் தூண்டியவர். என் முதல் சிறுகதையை 'சுதேசமித்திரன்' இதழில் வெளியிடச் செய்தவர். சுருக்கமாகச் சொன்னால் என்னில் இருக்கும் எழுத்தாளனை எனக்குக் காட்டியவர். அவரை கால் நூற்றாண்டுக்கு மேலாக சந்திக்க வாய்ப்பில்லாவிடினும், 'கலையே என் வாழ்க்கையில் திசை மாற்றினாய்...' என்ற பாட்டைக் கேட்கும் போதெல்லாம் அவரின் நினைவுகள் பசுமையாக எனக்கு வரத் தவறுவதில்லை...''.