பஞ்சாபி மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட ஆசிரியர் திரு எஸ்.கே.டோக்ரா தம் முதல் படைப்பு என்று நம்பமுடியாதபடி, தமிழில் இந்த நுட்பமான உளவியல் நாடகப் படைப்பை மனதில் நிற்கும் வண்ணம் வழங்கியிருக்கிறார்.
குடும்ப உறவுகள் சிதைந்து, சீர்கெட்டு, அதன் விளைவாக எழும் உளவியல் பிரச்சினைகள் நாளுக்கு நாள் மிகுந்து வரும் இன்றைய சூழலில் இவற்றுக்கெல்லாம் தீர்வு சொல்லும், மாமருந்தாக வெளிவந்துள்ளது 'குடும்பமே கோயில்!' என்ற இந்நாடக நூல்.
பெற்றோர், தங்கள் மகிழ்ச்சிக்காக ஒழுக்கங்களை வீசியெறிந்து வாழ்ந்ததற்கு விலையாக, அவர்களின் குழந்தை அனுபவிக்கும் உளநோய் படிப்போர் நெஞ்சைத்துளைக்கிறது.
பாதிக்கப்பட்ட மகள் மீனா, தாய் சுசீலாவிடம் வேதனைபடுகிறாள்: '' நீ ஜெயித்தாலும், அவர் ஜெயித்தாலும் எனக்குத் தோல்வி மட்டும் தான். எனக்கு இருவரும் வேண்டும்...வெற்றியடைந்த சந்தோஷத்தில் நீ ஆடுவதைப் பார்த்தும் சாவேன். தோல்வியடைந்து சோகத்தில் மூழ்கியதைக் கண்டும் சாவேன்''
பெற்றோர் பூசலால் நைந்துபோகும் ஒரு மகளின் மனநிலையை இப்படித் தத்ரூபமாக நிறுத்துகிறார் ஆசிரியர்.
கட்டிய மனைவிக்குக் தொற்றுநோய் வந்ததற்காக அவளைத் தள்ளிவைத்து, அவள் வேதனையை மிகுவிக்கும் வண்ணம், செயலிழந்த அவள் முன்பே, வேறொருத்தியுடன் வாழும் ஆண்கள் மிகுந்த சமூகத்தில், தான் காதலிக்கும் பெண் மனநோயாளி என்று தெரிந்தும் அவளை உயிருக்குயிராய்க் காதலித்து, 'கடலாகிய உன் மனதைத் தாங்கி நிற்கும் பூமியாக,பூமியும், கடலும் இருக்கும்வரை இருப்பேன்' என்று வாழ்க்கை தர முன்வரும் ரவீந்திரன் போன்றோரே இன்றைய இளைஞர்களுக்கு உண்மையான வழிகாட்டிகள் ஆவர்.
மனநோயை மருந்தின்றி குணப்படுத்துவது மாசற்ற அன்பே என்பதை ஆசிரியர், ரவீந்திரன் பாத்திரத்தின் மூலம் புலப்படுத்தியிருக்கும் காட்சி-9, நாடகத்தின் மிகச்சிறப்பான பகுதியாகும். மனநோயாளியான மீனாவைத்திருமணம் செய்வதில் உள்ள சிக்கல்களைக்கூறி, மருத்துவர் இந்திரா எச்சரிக்கும்போது, ''ஒரு மனநோயாளியுடன் வாழ்வதன் வேதனையைப்பற்றிப் பேசினீர்கள். அவளது வேதனையைக் குறைப்பதால் கிடைக்கும் சுகம் பற்றிப் பேசவில்லையே'' என்று ரவீந்திரன் கூறுவது எத்தனை உண்மையானது ! ''நீங்கள் தான் மீனாவுக்கு உண்மையான மருத்துவர்.'' என்று மருத்துவர் இந்திராவே ரவீந்திரனுக்குச் சான்றிதழ் வழங்குவது மிகப்பொருத்தமானதாகும்.
வாழக் கற்றுக்கொடுக்கும் வாழ்க்கையின் முதலாவது பள்ளிக்கூடமான குடும்பம் என்ற அமைப்பு காக்கப்படவேண்டும் என்ற ஆசிரியரின் தணியாத வேட்கையை நாடகத்தின் பலவிடங்களில் காணமுடிகிறது. '' உன் அப்பா உனக்கு வாரிசு சொத்தாகக் கொடுத்தது ஒரு சிறிய வீடும் பல்லாயிரமாண்டு பழமை மிக்க உலகத்திலேயே மிகச்சிறந்த குடும்ப வாழ்க்கைப் பாரம்பரியமும். நீயோ எனக்குத் தந்தது ஒரு பெரிய மாளிகையும் ஓர் உடைந்து போன குடும்பப் பாரம்பரியமும்'' என்று மகள் தாயிடம் புலம்பும் இந்த வரிகள், தடம் மாறும் தாய்மார்களை உலுக்குவதாகும்.
மக்களைக் காக்கும் பணியில் தம்மை அர்ப்பணிக்கும் காவல் துறையின் உயர் அதிகாரியிடம் இருக்கவேண்டிய மனித நேயமும், சமூக அக்கறையும் இவரிடம் இருப்பதாலேயே இப்படியொரு நாடகம் பிறந்திருக்கிறது, எல்லாத் துறைகளிலும்,சமூக மதிப்பீடுகள் நலிந்தவரும் சூழலில் இப்படியொரு உயர் அதிகாரி குடும்பத்தின் உயர் மதிப்பீடுகளை ஓங்கி ஓலிப்பது காவல் துறைக்குப்பெருமை சேர்ப்பதாகும்.
நாடகத்தின் கடைசிக் காட்சியில் ஆசிரியர் தாம் சொல்ல விரும்புகிற கருத்துகளை ஒரு பேச்சாளர் வழி சொல்லும் முறை படிப்போரின் சிந்தனையைத்தூண்டுகிறுது. இது படிக்கத்தக்க நாடகமாக இருப்பின் இப்பிரச்சாரம் நன்றே. ஆனால் இதுவே நடிக்கத்தக்க நாடகமாயின் பார்போருக்கு இந்நீண்ட சொற்பொழிவு சலிப்புத் தட்டுவதாக அமையுமோ என்ற ஐயம் எழுகிறது. இந்நாடகம் நடிக்கப்படும்போது இதுபற்றி ஆசிரியர் மறுபரிசீலனை செய்வது நன்று.
இந்நாடகத்தில், ஆசிரியர் பஞ்சாபிய மொழி சிந்தனை வடிவை தமிழில் உணர்த்த முயலும் போது இதுவரை இல்லாத புது நடையும், சொல்லாக்கமும் உருவாகியுள்ளது. இது தமிழுக்குப் புதுமை சேர்த்துள்ளது. ஆசிரியர் தம் அடுத்த படைப்புகளில் இந்நடையை மேலும் பட்டைதீட்டிச் செம்மைப்படுத்தினால் அவருடைய சொல்லாட்சியிலும், சிந்தனை முறையிலும் தனித்தன்மையோடு மிளிர்வார்.
பஞ்சாபியராயினும், தமிழ்ச்சூழலோடும், தமிழ்மொழியோடும், இரண்டறக்கலந்து தமிழில் இப்படியொரு சமூக, உளவியல் நாடகத்தைப் உருவாக்கியுள்ள திரு.எஸ்.கே. டோக்ரா அவர்களுக்கு, தமிழ்ச்சமூகம் நன்றிகூறக் கடமைப்பட்டதாகும்.