1926-ஆம் ஆண்டிலிருந்து சினிமா பார்த்துவரும் எழுத்தாளர் சாண்டில்யன் தமக்கே உரிய நகைச்சுவையும், கிண்டலும் கலந்த சரவெடி நடையில் இந்நூலை எழுதியுள்ளார். இதிலுள்ள அறியப்படாத அரிய தகவல்களும், புதின எழுத்தாளருக்கே உரித்தான, சுவைபடச் சொல்லுகின்ற முறையும், இந்நூலைத் தெவிட்டாமல் படிக்க வைக்கின்றன.
'இண்டர்மீடியட் வகுப்பில் திருச்சியில் படிக்காமலிருந்தபோது எதைவிட்டாலும் நான் நாடகத்தை விட்டதில்லை.' என்று குறிப்பிடும் ஆசிரியரின் கலைத்தாகம் அவரை இரசிக்க வைத்த மற்றும் இம்சித்த அவர் காலத்துப் படங்களை நம்முன் கொண்டு நிழலாட வைக்கிறது. பத்திரிகை தொடர்கதை மாதிரி, தொடர்கதைப் படங்களாக வெளிவந்த மௌன ஆங்கில டைட்டில் படங்கள் பற்றிய செய்திகள் நம்மை வியக்க வைக்கின்றன. அன்றைய அந்தப் பேச முடியாதச் சினிமாவில் நடிப்போர் கண்களாலும், நடிப்பினாலும் பேசினார்கள்- என்று அருமையாக விளக்கமளிக்கிறார் சாண்டில்யன்.
'எல்லீஸ்.ஆர்.டங்கன் மூவியை மூவியாகவே எடுத்தார்' என்கிறார் சாண்டில்யன். டங்கனின் தனித்தன்மையை இதைவிட இரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிடமுடியாது. இந்த வரலாற்று நாவலாசிரியர் தமக்கே உரிய கம்பீரமான வரிகளில் வாசனைப் பற்றிக் குறிப்பிடும்போது,'இமயத்தில் இலச்சினைப் பொறித்த செங்குட்டுவனைப்போல் பம்பாயில் தமது இலச்சினையைப் பொறித்தவர் வாசன்' என்னும்போது நமக்கே பெருமிதம் ஏற்படுகிறது.
அக்காலத்தில் ஏற்பட்ட நடிகர்,நடிகையர் பஞ்சம் பற்றிக்குறிப்பிடும் ஒரு தகவல் நகைச்சுவையானது; பல தொழில்நுட்ப வசதிக்குறைவுகளைத் தாண்டி, சரியாகப் பாடக்கூடிய நடிகர்,நடிகைகள் கிடைப்பது கடினமாயிருந்தது. இதனால் குடும்பப் பெண்களைச் சினிமாவில் இழுக்க வேண்டியதாயிற்று, இந்தப் பஞ்சத்தால் லட்சுமி என்ற ஸ்கூல் டீச்சரை அழைத்து வந்து சீதையாக்கினர் தமிழ்நாடு டாக்கீசார். அந்த டீச்சரம்மா இராமனுடன் நெருங்கி உட்காரவே மறுத்து, இயக்குநரால் பக்கத்தில் அமர வற்புறுத்தப்படும்போது படத்திலிருந்து விலகவே தயாரானாராம். எனவே இராமனும், சீதையும் பிரிந்திருக்கும் லவ குசா கதையாக இது அமைந்துவிட்டதால், சீதை, இராமனருகே உட்காராமலே படத்தை எடுத்து முடித்தார்களாம் . அந்தக் காலத்து சினிமா பற்றி இப்படிப் பல தகவல்கள், வயிறு குலுங்கச் சிரிக்கவும் வைக்கின்றன.
தொடர்ச்சியான பிரவாகமாக விளங்கிய வாகினி ஸ்டூடியோவின் வரலாற்றை ஆசிரியர் விளக்கும்போது, அதன் பின்னணியில் இருந்த திறம்படைத்த மனிதர்களான பி.என்.ரெட்டி, ராம்நாத்,சேகர் ஆகியோரின் செயல் தூய்மையையும், பணி நேர்மையையும் பளிச்சிடுகின்றன. இக்காலத்து திரைப்படத்துறையினரும் இவர்களின் வழித்தடங்களைப் பின்பற்றினால் மகத்தான மறுமலர்ச்சியை இங்குத் தோற்றுவிக்கலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
ஆயினும், ஆசிரியர் தமிழ்த்திரையுலகின் மேல் வைக்கும் சில விமர்சனங்களை ஏற்கத் தயக்கமாயுள்ளது. 1950-க்குப் பிறகு மக்களைச் சளைக்க அடித்து சினிமாத் தொழிலின் வசூலையும், மானத்தையும் தமிழ்ப்படமுதலாளிகள் அழிக்க ஆரம்பித்ததாகச் சொல்லப்படும் ஒட்டுமொத்தக் குற்றச்சாட்டு மறுபரிசிலனைக்குரியதாகும். இன்றைய இந்தியத்திரையுலகில் இந்திப் படங்களை அடுத்து தமிழ்ப்படவுலமே உயர்த்திப் பேசப்படுகிறது என்பதை மறுக்கமுடியாது. இதற்கு அடித்தளமிட்டச் சாதனையாளர்கள் பலரும் 1950-க்குப் பிறகு வந்தவர்களே! காலங்கடந்து வாழும் தரமான திரைப்படங்களை எடுத்த பீம்சிங், ஏ.பி.நாகராஜன் முதலியோரைப் பற்றி ஒரு வரியும் குறிப்பிட ஆசிரியர் மறந்தது ஏனோ? எழுதி வந்த தொடரில் தொடர்ச்சியும், வரலாற்றுப் பார்வையும் சற்றே நெருடுகின்றன.
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் தங்கள் சக்திக்கு மீறிப் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதும், இவர்கள் இருவரையும் திருப்திப்படுத்த திரைப்படத்துறையினர் செய்த சமரசங்களுமே தமிழ்ப்பட உலகம் வீழ்ச்சியடைந்ததற்குக் காரணங்கள் என்பதால் தமிழன் ஓடினான் - ஓடினான் மற்ற மொழிப் படங்களின் எல்லைக்கே ஓடினான் - என்று கருத்தும் நம் சிந்தனைக்குரியதே.
அரசியலையும், ஆபாசத்தையும் படத்தில் புகுத்தாதீர்கள்! மனித நட்சத்திரங்களைவிட கதைக்கருத்தே சிறந்தது! - முதலிய இறுதி அறிவுரைகள் எழுத்தாளர் சாண்டில்யன் திரையுலகினருக்கு இந்நூல்வழி விட்டுச் சென்ற அழியாச் செல்வங்களாகும்.