தொட்டுவிடாதீர்கள்- ஜெயகோகில வாணி

                 நூல் : தொட்டுவிடாதீர்கள்-  ஜெயகோகில வாணி

                                      

                            கருத்துரை

 

உடனே திறந்து படிக்க வேண்டும் என்ற ஈர்க்கும் தலைப்புடன் அமைந்துள்ள இந்த நூலைத்தொட்டு, திறந்து உடனே படி என்பது போல அமைந்துள்ளது அதன் அட்டைப் படம்.

 

திருமதி ஜெயகோகிலவாணி வாசகர் உள்ளங்களை இந்த நூலில் வாயிலாக உண்மையில் ஜெயித்துக் காட்டியிருக்கிறார். வண்ண மத்தாப்புகளைப்போன்ற ஒளிபடைத்த பலதிறத்தவரின் நேர்காணல்களை நேரில் காண்பதுபோன்ற உயிர்ப்புடன் அமைத்திருக்கிறார். அச்சுக்கோர்க்கும் பணியாளராக வாழ்வைத்தொடங்கி, எழுத்துப்பணியில் தம்மை வளர்த்துக்கொண்டு, பெயர்சொல்லும் நூலைப் படைத்து உயர்ந்திருக்கும் இவரும் இவர் நேர்காணல் கண்ட சாதனையாளர் வரிசையில் இடம் பெறத்தக்கவராவார்.

 

தன்னம்பிக்கையும், எச்சூழலிலும் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற முனைப்பும் அடிநாதமாகக் கொண்ட 22 பேர்களின் வாழ்வின்  போக்கைச் சிறுகதையும் நேர்காணலும் கலந்த இனிய கலவையில் ஆக்கித்தந்துள்ளார் ஆசிரியர். இதில் இசைத்துறையைச் சார்ந்தவர்கள் மிகுதியாக 6 பேர் பாறைகளைப் படிக்கட்டுகளாக்கி இத்துறையில் சாதித்து வருவதை அறிகிறோம் . அடுத்து உடல் குறையுடையார் 5 பேர் 'நாங்கள் ஆளப்பிறந்தவர்கள் அழப்பிறந்தவர்கள் அல்லர்' என்ற தணியா தன்னம்பிக்கையுடன் எடுத்துரைப்பது மாற்றுத்திறனுடையோரின் மாண்பைப் பறைசாற்றுவதாக உள்ளது. சமூகத்தொண்டில் ஈடுபட்டோரைப்பற்றிய 3 அத்தியாயங்கள் இன்னும் இப்படி நம்மிடையே நல்லவர்கள் வாழ்கிறார்கள் என்ற மகிழ்ச்சியை வழங்குகிறது. நாடகக்கலைஞர் இருவரின் வாழ்வுப்பயண முன்னேற்றம் வளரத்துடிக்கும் கலைஞர்களுக்கு உற்சாகப்பானமாக உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இருவரின் நேர்காணல்களில் அவர்கள் சாதனைகளுக்கு முன் சந்தித்த சங்கடங்களை  வியப்புடன் உணர்கிறோம். விளையாட்டு வீரர், முதுநிலை மருத்துவர், பாம்பு பிடிப்பவர், கணினி வல்லுநர் ஆகிய நால்வரின்  வாழ்வியல் அனுபவங்கள், பாடிப்போர்க்குப் பாடமாக அமைந்துள்ளன.

 

இந்நூலில் இடம்பெறுவோர் கூறும் சில நிகழ்வுகள் நம்மை  உலுக்குகின்றன; உணர்ச்சிவயப்படுத்துகின்றன; புதிய தகல்களைத் தெரிவிக்கின்றன; பலமாகக் கைதட்ட வைக்கின்றன. அவற்றில் சில இடங்கள்:

 

>தம் பாசத்திற்குரிய அன்னை  இறந்தபோது கூடக் கவலைப்படாமல்  போதையில் மயங்கி பொருளோடு, உறவுகளையும் இழந்த திரு.பைசால், திருந்தி,   போதைப்பொருள் மறுவாழ்வு மையங்களுக்குத் தன்முனைப்பு கருத்தரங்குகளை நடத்துமளவு மறுபிறவி எடுத்திருக்கிறார். 'தொட்டுவிடாதீர்கள்' என்ற இந்த முதல் கட்டுரைக்கு ஆசிரியருக்குக் கிடைத்த பத்திரிகையாளர் சங்கப்பரிசை விட, இக்கட்டுரையால் இவர்போன்ற போதைப்பித்தர்கள் பலரை இந்நரகத்திலிருந்து மீட்டு வாழ்வளித்து, அவர்களிடமிருந்து ஆசிரியர் பெறப்போகும் வாழ்த்துகளே இன்னும் உயர்ந்த பரிசுகளாகும்.

 

>கண்பார்வையிழந்த 29 வயது வாசு நீச்சல் வீரரான பின்பு கூறுகிறார்: 'ஒரு காலத்தில் தண்ணீரில் எனக்குக் கண்டம். ஆனல் இப்போது தண்ணீருக்கு நான் கண்டமாகிவிட்டேன்' என்று சிரிக்கிறார். இந்தச் சிரிப்பில் மிளிரும் தன்னம்பிக்கை அவநம்பிக்கையாளர்கள் பலரின் கண்களைத் திறக்கும்.

 

>முள்ளின் நடுவே ரத்த மலராகப்பிறந்து விட்ட திருநங்கையர், பிரியா மற்றும் சிந்து வைக்கும் வேண்டுகோள்: 'நாங்கள் உங்களைப்போல சராசரி மனிதர்கள். காட்சிப்பொருள்கள் அல்லர். எங்களை உங்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து எங்களைத் தனிமையில் விட்டுவிடுங்கள்.' கவிஞர் நா.காமராசரின் 'காகிதப்பூக்கள்' என்ற புகழ்பெற்ற கவிதையில் வரும் திருமங்கையின் வேதனை வரிகளை இவர்களின் உரையாடல்கள் காட்சிப்படுத்துகின்றன.

 

>பாம்புகளைப் பிடித்துப் பராமரிக்கும் தயாளன் பாம்புகளின் எண்ணிக்கை குறைந்தால் பல பின் விளைவுகளை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்கிறார். எலிகள், தவளைகள்,பல்லிகளின் இனவிருத்தி அதிகரித்து மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியதாகிவிடுமாம். பாம்பு இனத்தைக்காப்பாற்றும் இலட்சியத்தோடு உயர்ந்த வேலையை விட்டு பாம்பு பாராமரிப்பவராக பொதுத்தொண்டாற்றும் அவரை, அப்பா இறந்து வீட்டுக்குப்போன போது ' இதோ பாம்பாட்டி வந்துவிட்டான்' என்று கூடியிருந்தவர்கள் அழைத்தபோது அவர் அம்மாவுக்கு இஃது அப்பா இறந்த சோகத்தைவிட மிகுதியாக இருந்ததாம். 'நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்' என்று வேண்டுகோள் விடுத்த புறநானூற்றுப் புலவரின் வரிகள் இன்றைக்கும் தேவைப்படுகின்றன.

 

>மலேசிய எல்.ஆர்.ஈஸ்வரி என்று அழைக்கப்படும் திருமதி அம்பிகா, அளவற்ற மகிழ்ச்சியில் உண்மையான எல்.ஆர்.ஈஸ்வரி முன்னால் பாடியபோது அவர் இவரைப் பாராட்டாதது மட்டுமன்றி பொது மேடையில் இவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால் அழுகையோடு வீட்டுக்குச்சென்றார். அதே வாரத்தில், சிங்கப்பூரில் இசைக்குயில் பி.சுசீலா முன்னிலையில் பாடியபோது, கட்டிப்பிடித்து,முத்தம் கொடுத்து வாழ்த்து மழை பொழிந்தாராம். இருவேறு பின்னணிப் பாடகியரின் முன்னணி முகத்தை இந்நிகழ்ச்சி வெளிக்கொணர்ந்துள்ளது.

 

>மலேசிய நடிகை, சகலகலாவல்லி தேவராணி, இயக்குநர் படியிலிருந்து விழவது போன்ற காட்சியில் நடிக்கச் சொல்லும்போது, அக்காட்சி இயல்பாக இருக்கும் வண்ணம் யோசிக்காமல் படியிலிருந்து நிஜமாகவே விழுவாராம். அப்படிப் பலமுறை விழுந்து மண்டை உடைந்திருக்கிறதாம். இந்தத் தொழில் அர்ப்பணிப்பு இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறது.

 

>ஒன்பதாவது வயதிலேயே மேடைகளில் பாடி கைத்தட்டல்களைப்பெற்ற இளங்குயில் ஸ்ருதி ஜெயசங்கர், இந்தப் பொம்மை வேண்டும், அந்தப்பொருள் வேண்டும் எனக்கேட்கும் வயதில் இருந்துகொண்டு இதுவரை 20,000 வெள்ளிகளுக்கு மேல் கோவில்களுக்குத் தம் குறுந்தட்டு விற்பனையின் மூலம் பெற்ற வருவாயை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் என்பது அவருடைய கலைத்திறனைவிடக்  கொடைப்பண்பை வியக்க வைக்கிறது.

 

>புகழ்பெற்ற பாடகர் ஸ்ரீ சண்முகநாதன்  சிறுவனாக இருந்தபோது மேடையில் பாடி பலரும் பாராட்டியபோது, அவரின் கண்டிப்பான தந்தையோ, பாடியதற்காக, தோட்டமே வேடிக்கை பார்க்க மரத்தில் கட்டிவைத்து அடித்தாராம். அதே தந்தை இவர் முதன்முதலாகத் தொலைக்காட்சியில் தோன்றிப் பாடியபோது தொலைக்காட்சியை வாடகைக்கு எடுத்து தோட்டமக்களிடம் 10 காசு வீதம் வசூலித்து, 'என் மகன் சிறப்பாகப் பாடுகிறான்' என்று தோட்ட மக்களிடம் பெருமைப்பட்டுக் கொண்டாராம். இந்த மனமாற்றம் புகழ்பெற்ற பின் தாமதமாகவே  பழைய தலைமுறையினரிடம் வருகிறது. இளையோரின் திறமைகளை உரிய நேரத்தில் உரிய முறையில் பாராட்டும் மனநிலையை முதியோர் பெற்றால் திறமைகளை இன்னும் மேம்படச்செய்யலாமே!

 

நிலவுக்கும் களங்கம் இருப்பது போல் இந்நூலிலும் சில குறைகள் இல்லாமலில்லை. நூலின் உள்வடிவமைப்பில் இன்னும் கவனம் செலுத்தி, தொடர்புடையோரின் படங்களைச் சேர்த்திருந்தால் நூலின் மெருகு கூடியிருக்கும். ஒற்றுப்பிழைகளையும், அச்சுப்பிழைகளையும் ஆங்காங்கே காண்பது சோற்றில் கல்லாக நெருடுகிறது. முதல் நூல் என்பதால இக்குறைகளைப் பெரிதுபடுத்துதற்கில்லையெனினும் தம் அடுத்த நூலில் ஆசிரியர் இக்குறைகளை முற்றிலும் நீக்குவாரென நம்புகிறேன்.

 

தாம் வழங்கிய அணிந்துரையில் நூலாசிரியரின் அன்புக்கணவர் திரு. எம். இராஜன் அவர்கள் இந்நூல் உருவாக ஒரு சிறிய துரும்பைக்கூட இதில் நான் எடுத்துப்போட்டது கிடையாது என்று அடக்கத்தோடு குறிப்பிட்டாலும் அவர் அளித்த தார்மீக ஆதரவும், பாரட்டும், ஒத்துணர்வும் திருமதி கோகிலாவிற்கு இந்நூல் அமைய அடித்தளமாக அமைந்துள்ளது.   ஆம் 'கணவர் கைகொடுத்தால் கடலையே தாண்டி விடலாம்' என்று கூறும் சகலகலாவல்லி தேவராணியின் கூற்று இவர் வகையில் உண்மையே!

 

ஆசிரியர் இதைவிடச்சிறந்த நூல்களை அடுத்தடுத்து எழுத வாழ்த்துகிறேன்.