படிமுறைத் தமிழ்- இராசரத்தினம் சுப்பிரமணியம்

         நூல்: படிமுறைத் தமிழ்- இராசரத்தினம் சுப்பிரமணியம்            

              இலக்கண அச்சம் அகற்றும் நூல்

‘மொழி சிதைவுற்று இனம் மட்டும் வளர்வதென்பது இனத்தின் வீழ்ச்சிக்கான அடையாளம்’ என்ற உண்மை நிலையை உள்வாங்கி இந்நிலையை மாற்றும் நோக்கோடு எழுதப்பட்டுள்ளது இந்நூல். 5 கோடி தமிழர்கள் தமிழ் தெரியாதவர்களாக உள்ளனர் என்ற புள்ளி விவரம் உண்மையாயின் இந்தக் கவலைக்குரிய நிலை உடனடியாக நீக்கப்படவேண்டும். இந்நூல் இந்தச் சீரிய பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது.

அகிலம் முழுவதும் தமிழ் கற்போரை நான்கு பிரிவினராகப் பிரித்து அவர்களில் ஒரு பகுதியினர் தமிழ் கற்காது விலகியதற்கான 16 காரணங்களை ஆய்ந்து வெளிப்படுத்திய திறம் நோய் நாடுவதுடன் நோய் முதல் நாடும் ஆசிரியரின் பார்வையைக் காட்டுகிறது.

தமிழ் இலக்கணத்தை, மொழியில் கண்கொண்டு கற்பிக்கும் புது முயற்சியாக அமைந்துள்ளதே இந்நூலின் தனிச்சிறப்பாகும். தமிழ் மொழியைக் கற்பிக்கும் ஆசிரியருக்குப் பயிற்சி அளிக்கும் நூலாக மட்டுமன்றி  தமிழைச் சரியாகப் பயன்படுத்த விரும்பும் அனைவருக்குமான நூலாகவும் இதனைக் கொள்ளலாம். இலக்கணக் கல்வி பற்றிய அச்சத்தை நீக்கவும் இந்நூலாசிரியர் பெரிதும் முயன்றுள்ளார். இலக்கணம் மொழியை மொழியால் விளக்கும் ஓர் அரிய கலை என்றும், மொழியியல் அதனை அறிவியல் நெறியில் ஆராயும் துறை என்றும் ஆசிரியர் விளக்கி இரண்டையும் இணைத்து மொழி மரபு மாறாமல் இலக்கண விதிகளை விளக்கியுள்ளமை பாராட்டுக்குரியதாகும்.

மொழியின் வரிவடிவம் மாற்றம் பெறும்; ஆனால் ஒலிகள் மாற்றம் அடையாதவை என்ற பேருண்மையை உணர்ந்து மொழியின் அமைப்பியலில், ஒலியின் இன்றியமையாமையை இந்நூல் முதன்மைப்படுத்தியுள்ளது. ண, ந, ன, ர, ற, ல, ள, ழ ஆகிய எழுத்துகளைப் பிழையாக உச்சரிப்பதால் எழுத்திலும் அஃது எதிரொலிக்கிறது. இதனை ஆசிரியர்களே சரியாகக் கற்று உணரவில்லை; இதனை முறையாக மாணவர்களுக்கும் கற்பிக்கவில்லை; தமிழ் கற்பித்தலில் தடைக்கல்லாக இருக்கும் இந்த இழிநிலையை ஆசிரியர் சீற்றத்துடன் கண்டிக்கிறார். இக்குறை நீக்க உதவும் வண்ணம் தமிழின் 28 அடிப்படை ஒலிகள்- பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் ஆகியன வழியாக உருவாவதை ஓவியங்கள் மூலம் அருமையாக விளக்கியுள்ளார்.

இலக்கியமே மொழி; இலக்கியமின்றேல் மொழி இல்லை என்று கூறுவோருடன் முரண்படும் ஆசிரியர் இலக்கியம் வேறு மொழி வேறு என்பதைச் சித்திரக்காரன் கையில் இருக்கும் தூரிகையும் அவன் வரையும் ஓவியமும் வேறு வேறு என்பதைக்காட்டித் தெளிவுபடுத்துகிறார். இந்த வேறுபாட்டைத் தெரிந்துகொள்ளாமல் மொழியைக் கற்றுக்கொடுப்போர் முதலில் இலக்கியத்தைக் கற்பித்து இடர்படும் நிலையைச் சுட்டிக்காட்டுகிறார். இது  பாட நூல் எழுதுவோர் கவனிக்கவேண்டிய முக்கிய குறிப்பாகும்.

இலக்கண நூல்கள் கூறும்  புணர்ச்சி விதிகளைக் கண்டு மயங்க வேண்டாம் எனக்கூறும் ஆசிரியர் இலக்கண அச்சம் உடையோருக்கு புதுவழியில் இலக்கணம்  கற்பிக்கிறார். புணர்ச்சி விதிகள் உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கண விதிகள்  பற்றி இதற்கு மேல் விளக்கவே முடியாது என்ற அளவில் மிக விரிவாக, எளிமையாக   விளக்குவதோடு நிற்கவில்லை; இவ்விதிகள் பலவும் மொழியியல் அடிப்படையில் எவ்வாறு காரண காரியத்தோடு அமைந்துள்ளன என்பதையும் நிறுவியுள்ளார். தமிழ் இலக்கணத்தைக் கசடறக் கற்றுத்தேர்ந்த ஆசிரியரின்  மேதைமையை இது காட்டுவதோடு இலக்கண ஆவலையும் படிப்போருக்குத் தூண்டுகிறது.

மொழிகளிடையே உயர்வு தாழ்வு இல்லை என்று ஆசிரியர் குறிப்பிடுவது ஒருபுறம் இருந்தாலும் தமிழின் தனிச்சிறப்புகளையும் அவர் கூறத் தவறவில்லை. மொழிச்சொற்களும் இலக்கணக் குறியீடுகளும் மெய்ப்பொருளுண்மைகளையும் கருத்துகளையும் உணர்த்துவது, தமிழின் தனிப்பெருஞ் சிறப்பு எனப் புதிய பார்வையில் எடுத்துரைக்கிறார். மனித உடலோடும் உயிரோடும் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகளைப் பொருத்திப்பார்ப்பதோடு, உயிரெழுத்துகளில், குறில் நெடில் என்பன குறுவாழ்க்கையுயிரையும் நெடுவாழ்க்கையுயிரையும் மெய்யெழுத்துகளில் வல்லினம், மெல்லினம், இடையினம் என்பன வல்லுடம்பையும், மெல்லுடம்பையும், இடைத்தரவுடம்பையும், நிகர்க்கும் என்பதை அவ்வப் பெயர்களே உணர்த்தும் என்று குறிப்பிட்டு தமிழ் இலக்கணக் கல்விக்கு மெருகூட்டுகிறார்.

மெய்ம்மயக்கம் பற்றி விளக்கும்போது தமிழின் அமைப்பியலைச் சிதைக்கும் வண்ணம் மொழியறிவற்ற தமிழர் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழ்மொழியின் அடையாளமற்ற அந்நியப் பெயர்களைச் சூட்டும் அடிமைமோகம் விளைவித்த மயக்கத்தைச் சாடுகிறார். மேலும் தமிழரின் வானியற்கலையிலும், சோதிடக்கலையிலும் ஆரியர் உட்புகுந்துகொண்டு தமிழ் மொழி மரபைச் சிதைக்கும் போக்கைச் சுட்டிக்காட்டி நம் அடையாளத்தை மீட்க அறைகூவல் விடுக்கிறார்.

பிழையின்றித் தமிழ் எழுதும் வண்ணம், வழக்கமாகப் பலரும் செய்யும் பிழைகளைச் சுட்டிக்காட்டியும், ஒற்றுமிகல், மிகாமை பற்றி விரிவாக விளக்கியும்  ஒரு முழுமையான இலக்கண அறிவூட்டும் நூலாக இதனை நிறைவு செய்துள்ளது நூலின் சிறப்புக்குச் சிறப்புச் செய்கிறது.

தமிழ் இலக்கணத்ததிற்குப் புதிய அணிகலனாக, தமிழ் கற்பிப்போருக்கு உற்ற நண்பனாக, தமிழைப் பயன்படுத்துவோருக்குக் கைவிளக்காக வெளிவந்திருக்கும் இந்நூலால் தமிழுலகம்  பெரும் பயனடையும் என்பதில் ஐயமில்லை.