லூக்காஸ் பங்கு புதிய பேராலய மலர்
புனித லூக்காஸ் பங்கின் வரலாறு
இன்றைய புனித லூக்காஸ் பங்கின் மாபெரும் வளர்ச்சியைத் திரும்பிப் பார்க்கையில் பெருமிதம் கலந்த வியப்பு மேலிடுகிறது. 03.12.1972 அன்று ஓர் அறையில் 3 குடும்பங்கள் மட்டுமே கலந்துகொண்ட முதல் பூசையில் பங்கின் விதை முளைத்து, இன்று 1400 குடும்பங்களுடன், சென்னையின் பெருமைமிக பங்காகவும், அண்ணாநகரின் அடையாளமான பேராலயத்துடனும் இது பெரும் ஆலமரமாக வளர்ந்துள்ளது..
1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சென்னை- மயிலைப் பேராயர் டாக்டர் ஆர். அருளப்பா ஆண்டகை அவரகள், வடக்கு, மேற்கு இந்திய மாநிலங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த புனித சின்னப்பர் சபையினரைத் தமிழ்நாட்டிற்கு அழைத்தார். அரண்மனைக்காரத் தெருவில் புனித மரியன்னை ஆலய வளாகத்தில் உள்ள நல்லாயன் பதிப்பகம், அச்சகம் ஆகியவற்றைப் பராமரிக்கும் பொறுப்பை இச்சபையினரை ஏற்க வேண்டினார். இதன் பொருட்டு அருட்திரு எம், கே. பால் அவர்களின் தலைமையில் வந்த இச்சபை குருக்கள் சென்னை அண்ணாநகரில் எஸ் பிளாக்கில், பிளாட் எண் 4255 இல் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடியேறினர். வீட்டின் ஓர் அறையைச் சிற்றாலயமாக மாற்றினர்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் தோன்றி சென்னையின் நெரிசல்களுக்கு அப்பால் விலகி நின்ற அன்றைய அண்ணாநகரில் விரல்விட்டு எண்ணக்கூடிய கத்தோலிக்கர்களும் கால் பதித்திருந்தனர். 4 கி.மீ தொலைவில் உள்ள கீழ்ப்பாக்கத்து நேர்ச்சை ஆலயத்திற்கே அவர்கள் ஞாயிறு பூசை காண செல்ல வேண்டிய நிலையில், குருக்கள் அண்ணாநகரில் குடியேறிய செய்தியை அறிந்தனர். இந்தக் குருக்கள் இல்லத்தில் அமைந்த சிற்றாலயத்தில் தாங்களும் பூசை காண வேண்டினர். அதன் விளைவாக அவர்கள் சிற்றாலயத்தில் அனுமதிக்கப்பட்டு, அண்ணாநகர் கத்தோலிக்கருக்கான முதல் பூசை 3 குடும்பங்களுடன் 3, டிசம்பர் 1972 புனித சவேரியார் திருநாளன்று நடந்தேறியது. 1973 இறுதியில் அண்ணாநகர் கத்தோலிக்கரின் எண்ணிக்கை 500 ஆகப் பெருகியபோது ஞாயிறன்று இரு பூசைகள் வைக்கும் நிலைக்கு வளர்ந்தது. எண்ணிக்கை மேலும் பெருகிய நிலையில் 1975 இல் சிற்றாலயம் அஞ்சல் நிலையத்திற்கு அருகே பிளாட் எண் 2312 க்கு மாறியது.
பெருகிவரும் அண்ணாநகரின் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை பற்றிய செய்தி பேராயரின் கவனத்திற்கு வந்ததும் அவர் அண்ணாநகர் பங்கைத் தனியாக உருவாக்க முடிவுசெய்து இங்குள்ள புனித சின்னப்பர் சபையினரிடம் இந்தப் பணியை ஏற்க வேண்டினார். இச்சபையினருக்கு இப்பணி புதிது. இதில் பயிற்சியும் இல்லை. எனவே சபையின் உயர்மட்ட தலைவர்களுடன் பேராயர் அருளப்பா அவர்கள் தொடர்பு கொண்டபின் அவர்கள் ஆதரவான பதில் தந்தனர். இதன் தொடர்ச்சியாக பங்கு ஆலயம் அமைக்க, 1975 இல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடமிருந்து சென்னை-மயிலைப் பேராயம் 8 கிரவுண்டு நிலத்தை விலைக்கு வாங்கியது. 27.02.1976 அன்று புனித சின்னப்பர் சபையின் அதிபர் அருட்திரு. பி. பெரீரோ ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டி மந்திரித்தார்.
புது ஆலயத்திற்குப் புனித லூக்காசின் பெயரை வைக்க முடிவுசெய்து கோயில் கட்டடத்தின் முழுச்செலவையும் பேராயர் ஏற்க முன்வந்தார். புனித சின்னப்பர் சபை குருக்கள் தங்கும் இல்லத்தின் கட்டுமானச் செலவை அச்சபையினர் ஏற்றனர். 02.10.1977 அன்று லூக்காஸ் ஆலயத்தின் திறப்பு விழா நடைபெற்றது. பேராயர் டாக்டர் ஆர் அருளப்பா ஆண்டகை ஆலயத்தினை முறைப்படி ஆசீர்வதித்து, முதல் பலிபூசை நிறைவேற்ற, அருட்திரு பி. பெரீரோ உட்பட நூற்றுக்கணக்கான குருக்களும், இறையன்பர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வு சிறப்பாக நிறைவுற்றது. ஆலயத்தின் முதல் பங்கு குருவாக அருட்திரு. எம், கே. பால் நியமிக்கப்பட்டார். ஆலயத்தின் தொடக்கக் காலச் சவால்களை ஏற்றுப் பணியாற்றிய குருக்கள் மற்றும் அவர்களின் பக்கபலமாக நின்ற பங்குத் தொண்டர்கள் முதலிய முன்னோடிகளின் முயற்சி என்றும் நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
இரண்டாவது பங்குக் குருவாக 02.10.1981 அன்று அருட்திரு ஸ்டீபன் புல்லன் பொறுப்பேற்றார். ஜூலை 1982 இல் அண்ணாநகர் பங்கின் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு அப்பகுதி தனிப்பங்காகி, அதன் விளைவாக நம் பங்கின் தெற்கு எல்லை பூந்தமல்லி நெடுஞ்சாலையாகக் குறுகியது.
அடுத்த கட்ட நிகழ்வாக 04.12.1983 அன்று கிறிஸ்துநாதர் மற்றும் தேவமாதா திருவுருவங்கள் மந்திரிக்கப்பட்டு கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டன. கிட்டத்தட்ட இதே காலக் கட்டத்தில்தான் மணிக்கூண்டும் கோயில் வாசலருகே கட்டப்பட்டு கோயிலுக்குச் சிறப்பு சேர்த்தது. பங்கு வேகமாக விரிவடைந்து வந்த நிலையில் எதிர்காலத்தில் பங்கினைப் பிரிக்கும் நிலையை ஊகித்து, 1986 இல் முகப்பேரில் 8 கிரவுண்டு நிலம் வாங்கப்பட்டது.
அருட்திரு ஸ்டீபன் புல்லன் 5 ஆண்டுகள் பணியாற்றி முடித்தபின் அடுத்த பங்குக் குருவாக அருட்திரு எம். டோமினிக் அவர்கள் 02.10.1986 அன்று பொறுப்பேற்றார். பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் இக்காலக்கட்டத்தில் மரியாயின் சேனை, வின்சென்டிபால் சபை முதலிய பலவும் நிறுவப்பட்டு தீவிரமாகச் செயல்படத் தொடங்கின. அருட்திரு டோமினிக் அவர்கள் தலைவராகவும், திரு மாத்யூ அவர்கள் துணைத்தலைவராகவும, திரு எப்ரீம் அவர்கள் செயலராகவும் நியமிக்கப்பட்டு, 02.08.1987 அன்று முதல் பங்குப்பேரவை செயல்படத் தொடங்கியது. கிழக்கு அண்ணநகரின் சில பகுதிகள் புனித லூக்காஸ் பங்குடன் இணைக்கப்பட்டன. பங்கு நிகழ்வுகள் மிகுந்த நிலையில் அவற்றிற்காகக் கோயிலையொட்டி தரைத்தளத்தில் ஒரு சமூகக்கூடம் கட்டப்பட்டு குருக்கள் தங்க இரண்டாவது மாடியில் புது அறைகள் கட்டப்பட்டன. நாளும் பங்கு மக்கள் எண்ணிக்கை மிகுந்த நிலையில் காலை, மாலை தினசரி பூசைகளும், ஞாயிறன்று, தமிழிலும், ஆங்கிலத்திலும் சேர்த்து ஐந்து பூசைகளும் என மிகுதியாக்கப்பட்டும், ஞாயிறு பூசைக்கு வருவோர் வெளியே நிற்கும் நிலை ஏற்பட்டது. எனவே ஆலயத்தை விரிவாக்கும் கட்டாயத்தேவை ஏற்பட்டது.
வெறும் ரூ28,000 கையிருப்புடன் தொடங்கி பங்கு மக்கள் பலவகையிலும் கொடுத்த ஆதரவால் நிதி திரட்டப்பட்டு ஆலய விரிவாக்கப்பணி 100 நாளில் முடிந்தது. அதுவரை பூசை முதலிய சடங்குகள் புதிதாகக் கட்டிய சமூகக்கூடத்தில் நடைபெற்றன. விரிவாக்கப்பட்ட ஆலயம் 23.12.1990 அன்று பேராயர் டாக்டர் காசிமிர் ஞானாதிக்கம் ஆண்டகையால் முறைப்படி மந்திரிக்கபட்டு பூசை நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே வாங்கிய 8 கிரவுண்டு நிலத்திற்கு மேல் மேலும் 6 கிரவுண்டு நிலம் முகப்பேரில் இப்பங்கின் நிதியிலிருந்து வாங்கப்பட்டது. 13.06.1994 அன்று அங்கே புனித திருத்துவ ஆலயம் கட்டப்பட்டு புனித லூக்காஸ் பங்கின் குழந்தையாகப் புதுப்பங்கு ஒன்று உருவாயிற்று.
அண்ணாநகர் பங்கிற்குப் பெரும் பங்காற்றிய அருட்திரு டோமினிக் அவர்கள் பணிமாற்றலாகி அதன் பின்னர் 03. 07. 1994 முதல் அருட்திரு மைக்கேல் ராஜ் பங்கு குருவாகப் பொறுப்பேற்றார். 1996 இல் நற்கருணை ஆராதனை ஆலயம் உருவாக்கப்பட்டது. 1998 இல் அண்ணாநகர் பங்கின் கிளையாக என்.எஸ். கே நகரில் புது சிற்றாலயம் கட்டப்பட்டது. அதே ஆண்டு 21 அன்பியங்கள் உருவாக்கப்பட்டு பங்கு மக்களின் பங்களிப்பு மிகுதியாக்கப்பட்டது.,
புனித லூக்காஸ் பங்கு மக்களிடம் திரட்டிய நிதியை முதன்மையாகக் கொண்டு கிழக்கு அண்ணாநகரில் 29.06.2003 இல் இரக்கத்தின் ஆண்டவர் ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் அண்ணாநகர் பங்கிலிருந்து இரக்கத்தின் ஆண்டவர் பங்கு தனியாகப் பிரிக்கப்பட்டது. அருட்திரு மைக்கேல் ராஜை அடுத்து அருட்திரு கிரகோரி, அருட்திரு ரிச்சர்ட் ஆகியோர் பங்குக் குருக்களாக விளங்கினர். இவர்களை அடுத்து கோயில் நிர்வாகத்தில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது.
சென்னை- மயிலை பேராயர் புனித லூக்காஸ் பங்கை நடத்திவந்த பால் சபையினரிடமிருந்து பொறுப்பை மீட்டுப் புது பங்கு குருவாக அருட்திரு இக்னேஷியஸ் பிரசாத் அவர்களை நியமித்தார். பேராயத்தின் நேரடி கண்காணிப்பிற்கு ஆலயம் வந்த பின் பங்கு ஆலயத்தின் வளர்ச்சி வேகமெடுத்தது.
ஞாயிறு பூசைக்கு வரும் அண்ணாநகர் கத்தோலிக்கர்களுக்குக் கோயிலில் போதிய இடமில்லை என்ற நிலையை மாற்ற எண்ணினர்.. ஆனால் கோயிலை விரிவுபடுத்த கட்டட அமைப்பு இடம் கொடுக்கவில்லை. எனவே அதனை முற்றிலும் இடித்துவிட்டு புதுக் கோயில்- அதுவும் எதிர்கால மக்கட்பெருக்கத்தையும் மனதில் கொண்டு கட்டத் திட்டமிடப்பட்டது..
அதற்கான அடிக்கல் நாட்டுச் சடங்கு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஆண்டகையால் 06.09.2016 அன்று நிகழ்ந்தேறியது. இடித்த இடத்தில் அரசு அனுமதி பெற்று புது ஆலயக் கட்டுமானப்பணிகள் 28.12.2016 அன்று தொடங்கப்பட்டன. தற்காலியமாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பக்கத்தில் உள்ள ஜெசி மோசஸ் பள்ளியின் அரங்கமே கோயிலானது. சிஎஸ்ஐ நிர்வாகம் கோயில் பணி முடிவடையும் வரை நம் பங்கிற்கு இந்த இடத்தை வாடகைக்கு விட ஒப்பியது கடவுள் பேரருளே. அதே போல சங்கடமின்றி குருக்கள் இல்லம் கோயிலுக்கு எதிரே உள்ள அடுக்ககத்திற்கு மாற்றப்பட முடிந்ததும், பங்கு அலுவலகம் கோயில் எதிரே அமைந்த தெருவில் உள்ள வீட்டின் பகுதிக்குப் பெயர்ந்ததும் இறைச்செயலே.
பல சோதனைகளையும், சவால்களையும் கடந்து புது லூக்காஸ் பேராலயம் அண்ணாநகர் கோபுர மெட்ரா நிலையத்தின் நுழைவாயிலருகே மிகக் கம்பீரமாக உயர்ந்து நின்று, வான வீதியில் அனைவரையும் அண்ணாந்து பார்க்கவைத்து, நம் அடையாளத்தைச் பறைசாற்றுவதுபோல உருவாகி 08.12.18 சென்னை மயிலைப் பேராயர் மற்றும் பல பெருமக்கள், ஆதரவாளர்கள், பங்கு மக்கள் அணிதிரள திறப்பு விழா காணவிருக்கிறது.
பங்குத் தந்தை அருட்திரு இக்னேஷியஸ் பிரசாத் அவர்களின் இரவு பகல் பாரா அயார உழைப்பும், மனங்கலங்காது எதிர்வந்த எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்கொண்ட மனத்துணிவும் இந்தப் பேராலயம் உருவாக முக்கிய காரணங்களாகும். இரண்டு ஆண்டுகள் ஆலயப்பணியை அவர் ஒரு தவமாக மேற்கொண்டார் என்றே கூறலாம்.
கோயில் அமைந்த 8 கிரவுண்டு இடத்தில் மெட்ரா ரயில் நிலையத்திற்காக இழந்த 400 ச. அடி நிலப்பரப்பை ஈடுகட்டும் வண்ணம் மிகச்சிறப்பாக ஆலயம் திட்டமிடப்பட்டது. கோயிலுக்கான பல்வேறு வடிவமைப்புகளை அறிவிப்புப் பலகையில் மக்கள் பார்வையிட வைத்து பெரும்பாலானோர் தேர்ந்தெடுத்த வடிவமைப்பின்படி கோயில் நிர்மாணிக்கப்பட்டது. கீழ்தளத்தில் 800 பேர் அமரக்கூடிய ஆலயமும் முதல் தளத்தில் 200 பேர் அமரக்கூடிய உப்பரிகையும் அமைந்துள்ளன. கார்களும், இருசக்கர வாகனங்களும் வசதியாக நிறுத்த கோயிலுக்குக் கீழே சுரங்கத்தளத்தில் பெரிய இடம் ஒதுக்கபட்டுள்ளது. கோயிலின் 2வது தளத்தில் நிகழ்ச்சிகள் நடத்த ஒரு பேரரங்கம் உள்ளது. இதைத்தவிர ஞானோபதேச வகுப்புகள், கூட்டங்கள் முதலியன நடத்த ஒரு சிற்றரங்கமும், அலுவலக அறைகளும், குருக்கள் தங்கும் அறைகளும் கோயிலின் பிற தளங்களில் அமைந்துள்ளன.
தமிழகத்தின் மிகச்சிறந்த ஆலயங்களில் ஒன்றாக லூக்காஸ் பேராலயம் விளக்கப்போவதில் ஐயமில்லை.