மறைமலையடிகளாரின் அடிச்சுவட்டில்- மறை. தி. தாயுமானவன்

   நூல்:மறைமலையடிகளாரின் அடிச்சுவட்டில்- மறை. தி. தாயுமானவன்

                           அணிந்துரை

வடமொழிச் சிறையிலிருந்து அன்னைத் தமிழை மீட்டவர்களுள் முதன்மையானவரான மறைமலையடிகளைப் பற்றிய ஆழமும் அகலுமான குறிப்புகளைக் கொண்டுள்ள  இந்நூல் அடிகளாரைப் பற்றி இதுவரை அறியப்படாத செய்திகள் பலவற்றை அருமையாக எடுத்துரைக்கிறது.

சிவனியம் பற்றிச் சுவாமி விவேகானந்தரிடம் தருக்கம் செய்து அவரையே தம் முதற் கேள்வியில் திணறத்தடித்த அறிவாழம், பேராசிரியர் சுந்தரம் பிள்ளைக்கு அடிகளார் அகவற்பா வடிவில் எழுதிய மடலைக்கண்டு  இவரை ஆண்டில்  முதியவராகக் கருதியிருந்த நிலையில் இவரை நேரில் கண்டபோது அடைந்த வியப்பு, சென்னைக் கிறித்துவக் கல்லூரி ஆசிரியர் நேர்காணலில் துறைத்தலைவர் வி.கோ.சூ ' குற்றியலுகரத்திற்கும் முற்றியலுகரத்திற்கும் வேறுபாடு  என்னவென்றபோது, ஆம். அஃது எனக்குத் தெரியாது என்று சான்று காட்டிய நயம் - போன்ற பல அரிய செய்திகள் வழி அடிகளார் இளமையிலேயே அறிவாயுதமேந்திய  வீர்ராய் விளங்கிய பான்மையை இந்நூலாசிரியர் சுவைபட விளக்கியுள்ளார்.

அடிகள் 1898 முதல் 1950 வரை ஆங்கிலத்தில் வரைந்த நாட்குறிப்புகளின் தமிழாக்கம் அவர்கால பெருமக்களுடன் அவரின் தொடர்புகளையும், அக்கால வரலாற்று நிகழ்வுகளையும் நம் கண்முன் நிறுத்துகிறது, இதுவே இந்நூலின் சிறப்பான பகுதியாகும். இதில்  சமகால நிகழ்வுகளையும் மனிதர்களையும் பற்றிய அடிகளாரின் கருத்துகள் நம் கவனித்திற்குரியன. 'மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டுக் கூட்டத்தில் ஒருவரையொருவர் புகழ்ந்துகொள்வது  பொறுக்க முடியாததாகவுள்ளது. இதே போல் தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் சங்கம் மறைந்துவிடும்' என்று அவர் குறிப்பிட்டிருப்பது உண்மையாகியுள்ளது. இன்னொரு இடத்தில் பிரித்தானிய அரசு தொடர்ந்து ஆட்சி புரிவதையே விரும்புவதாகப் பதிவுசெய்துள்ளதும், திரு. காந்தியின் பல கருத்துகளை என்னால் ஏற்க முடியாதை என்று குறிப்பிட்டிருப்பதும் நம் சிந்தனைக்குரியன.

அவர் காலத்துச் சான்றோர்களாகிய திரு.வி.க, பெரியார் வ.உ.சி, இராசகோபாலாச்சாரியார் ,பாண்டித்துரைத் தேவர், இரா. இராகவ அய்யங்கார், மு. இராகவ அய்யங்கார், உ.வே.சா, சாமி.சிதம்பரனார், சதாசிவ பண்டாரத்தார், க.பவானந்தம் பிள்ளை, வ.சுப்பையா பிள்ளை, அபிரகாம் பண்டிதர், ரா.பி. சேதுப் பிள்ளை, கா. சுப்பிரமணிய பிள்ளை, டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார். ந.மு.வேங்கடசாமி நாட்டார், பண்டிதர் கதிரேசன் செட்டியார், டி.கே.சிதம்பரநாத முதலியார், தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஞானியார் சுவாமிகள், மயிலை வேங்கடசாமி, அண்ணல்தங்கோ வையாபுரிப் பிள்ளை,தண்டபாணி தேசிகர், சோமசுந்தர பாரதியார், மா. இராசமாணிக்கனார் முதலியோருடனான தொடர்புகளை  அவரின் நாட்குறிப்பில் காண முடிகிறது.

தனித்தமிழ் இயக்கத்தின் முன்iனோடி, பன்மொழி அறிஞர். ஒப்பற்ற இலக்கிய ஆய்வாளர், கேட்டாரைப் பிணிக்கும் பேச்சாளர் முதலியன மட்டுமே அவரின் பன்முக ஆற்றல்கள் அல்ல. அவர் மருத்துவத்திலும் தம் ஆழ்ந்தகன்ற ஆய்வு முடிவுகளைப் பதிவுசெய்துள்ளதை ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார். தம் பாட்டனாரின் மற்ற சிறப்புகளைவிட அவரின் மருத்துவ நூல்களே ஆசிரியரை ஈர்த்தன. எனவேதான்  'மறைமலையடிகள் நோக்கில் உடல்நலம்' என்ற தலைப்பில் தம் நிறைஞர் பட்ட ஆய்வை நிகழ்த்தியுள்ளார். இந்நூலில் 44 பக்கங்களில் விரிவான இயற்கை மருத்துவ கருத்துகளை அடிகளின் நூல்களைச் சார்ந்து விளக்கியுள்ள திறம் அனைவருக்கும் பயனளிக்கும் வண்ணம் உள்ளது. ஆசிரியரின் தந்தையாரும் அடிகளாரின் மூன்றாம் மகனுமாகிய  மறை திருவநாவுக்கரசின் இளம்பருவத்தில் வருத்திய இளப்பிருமல் நோய் மருத்துவர்களின் சிகிச்சைக்குக் கட்டுக்கடங்காமால் போன நிலையில் அடிகள் தாமே முயன்று தாம் கற்றுணர்ந்த அறிதுயில் மூலம் அவரை குணப்படுத்திய நிகழ்வு அடிகளாரின் மருத்துவ மேதைமையை மெய்ப்பிக்கிறது.

தம் மகள் நீலாம்பிகையுடன் அடிகள் தம் இல்லத்தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்தபோது வள்ளலாரின் பாடல் வரியில் உள்ள தேகம் என்ற வடமொழிச் சொல்லுக்குப் பதில் யாக்கை என்ற தமிழ்ச் சொல் இருக்குமாயின் இச்செய்யுளின் ஓசை இன்பம் இன்னும் மிகும் என்று கூறியுள்ளார். அப்போது மகள் இனி அயன்மொழிச்சொற்களை நீக்கித் தனித்தமிழில் பேசவும் எழுதவும் வேண்டும் என்று வேண்டியபோது அடிகளாருக்கு ஏற்பட்ட எழுச்சியே தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றுவாய் என்பதை ஆசிரியர் தனித்தமிழ் இயக்கம் பற்றிய பகுதியில் குறிப்பிட்டிருப்பது பலரும் அறிய வேண்டிய வரலாற்றுச் செய்தியாகும்.

நூலின் பிற்பகுதியில் தமிழ்மொழிக்கு ஏற்பட்ட இன்னல்கள விரிவாக எடுத்துக்காட்டித் தனித்தமிழுக்கு நாம் ஆற்றவேண்டிய பணிகளைப் பற்றி ஆக்கப்பூர்வமான கருத்துகளை ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார் . மறைமலையடிகள் பற்றி 30க்கும் மேற்பட்ட பெருமக்கள் அளித்திருக்கும் பாராட்டினைச் சுட்டிக்காட்டும் பகுதியைக் காண்கையில் மறைமலையடிகளின் மாண்பு  குன்றின் மேலிட்ட விளக்காக ஒளிர்கிறது.

இந்நூலினை அடிகளாரின் அருமைப் பெயரனே எழுதி அவரின் வழித்தோன்றல் என்பதை எண்பிக்கும் முறையில் அவர் பணியைத் தமிழகத்திலும் அயலகத்திலும் செய்துவருவது பெருமைக்குரியதாகும்.

மறைமலையடிகள் பாதையில் தமிழ்த்தொண்டாற்றிய நீலாம்பிகை அம்மையார், பாவேந்தர் பாரதிதாசன், தேவநேயப்பாவாணர்,  பெருஞ்சித்திரனார், ஆகியோரின் பணிகளை விளக்கி நூலினை நிறைவுசெய்திருக்கும் திறம்  மெச்சத்தக்கதாகும்.

மறைமலையடிகளார் விட்டுச்சென்ற பணியை நாம் தொடரவேண்டும் என்ற உணர்வை உறுதியாக இந்நூல் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.