நூல்: வள்ளலார்- ஓர் உண்மை அறிமுகம்- ம.வீ.கி. சாமி
இந்நூலை வள்ளலார் படித்தால்…
வள்ளலாரைப் பற்றிய புறச்சான்றுகளைத் தேடிப் பிடித்து அலசி ஆயும் முயற்சியைத் தவிர்த்து நேரடி அகச்சான்றாக அருட்பாவிலும், உரைநடைகளிலும் உள்ள வரிகளை மட்டுமே வைத்து வள்ளலாரைப் புதிய கோணத்தில் அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.
மேலோட்டமாகப் பார்த்தால் வள்ளலாரை இகழ்ந்து எழுதப்பட்ட நூலாகத் தோன்றினும், ஆசிரியருடைய நோக்கம் ‘அவர் பார்வையில்’ உண்மையைக் கண்டறிவது என்பதே என்று நூலை ஆழ்ந்து படிக்கும்பபோது உணர முடிகிறது. வள்ளலாரின் பெருமைகளையும் ஆசிரியர் கரம் தட்டிப் பாராட்டவே செய்துள்ளார்.
இனிய நடையில் வள்ளலாரின் ஊற்றுக் கோலிலிருந்து சுரக்கும் பாடல் வரிகளின் உவமைகளை எடுத்துக்காட்டுகளுடன் பாராட்டி மகிழ்கிறார் ஆசிரியர். அதே நேரத்தில், ஞான சிதம்பர வெண்பா பகுதியில் புலமைச் செருக்கை வெளிப்படுத்தி வறட்டுத்தனமாகப் பாடியதையும் சுட்டுகிறார். இரக்கமே உருவான அடிகளாரின் அறச்சினம் ‘கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக’ என்ற வரிகளில் சீறி வருவதையும் அவரின் உயிரிரக்கத்தையும் மனமுவந்து வரவேற்கிறார். மக்கள் தொண்டர், திறந்த புத்தகம், மாறுபட்ட துறவி என்று ஆசிரியரால் புகழப்படும் வள்ளலார் தம் நிறுவனங்கள் ஒன்றிற்கேனும் தமது பெயரை இடாமை, தம் பெயரை இராமலிங்க சுவாமிகள் என்று வழங்க விரும்பாமை, மறைக்காது மருத்துவ அறிவை மக்களிடம் பரப்பியமை, தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள், கணவனை இழந்த மனைவி மாங்கல்யத்தை அகற்றத் தேவையில்லை என்று கூறிய புரட்சிக் கருத்து, இறைவனது புகழை உலகமயமாக்க அவாவியமை முதலிய அரிய செயல்களால் ஒரு சீர்திருத்தவாதியாக வரலாற்றில் இடம் பெறுவார் என்று குறிப்பிட்டே நூலை முடிக்கிறார்.
வள்ளலார் பற்றிய பலரும் அறியாச் செய்திகள் சிலவும் இந்நூலில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, வள்ளலார் ஓவியங்கள் அனைத்தும் கற்பனையானவை, தலை மாணாக்கர் தொழுவூர் வேலாயுதனார் கூறியுள்ள தோற்றத்திற்குப் பொருந்தாதவை என்கிறார். மேலும் ‘கடை விரித்தோம் கொள்வாரில்லை; கட்டி விட்டோம்’ என்று தம் அன்பர்களிடம் வள்ளலார் கூறியதாகக் கூறும் ம.பொ.சி.யின் கூற்றுக்கு வள்ளலாரின் பாடல்கள் எதனிலும் அகச்சான்று இல்லை என்பதை நிறுவுகிறார்.
சில வலிக்கும் உண்மைகளை வள்ளலார் பற்றி ஆசிரியர் குறிப்பிடுவதை வள்ளலார் அன்பர்கள் ஏற்பார்களா? மறுப்பார்களா? விளக்குவார்களா? என்ற ஆவல் தோன்றுகிறது. அவற்றுள் சில:-
· வள்ளலார், ‘இந்த உலகம் முடிவதற்கு இன்னும் 27 ஆண்டு இருக்கிறது.’ (பக். 39)
· குறல் நெறிக்கு நேர் முரணான மனுநீதி கூறும் ‘மனு முறை கண்ட வாசகம்’ எழுதியுள்ளார். (பக். 39)
· ‘மரணமிலாப் பெருவாழ்வு’ பற்றி 28 பாடல்கள் பாடியவர் தமக்குள்ள மரண பயத்தைப் பற்றி பல இடங்களில் பாடியுள்ளார். (பக். 104)
· உயிரக்கக் கொள்கையை உயர்த்திப் பிடித்தவர், பெளத்த சமண மதங்களை இழித்தும் பழித்தும் பாடியுள்ளார். (பக். 135)
· காம மயக்கம் வள்ளலாருக்குச் சிறிதே ஏற்பட்டவுடன் சிவன் அழகிய பெண்களை அனுப்பி வைக்கிறார். (பக். 167)
· ‘அருட்பெருஞ்சோதி’ என்பது ஒளி வடிவமான, சாதி சமயங் கடந்த கடவுள் அல்ல, அது சிவனே! சன்மார்க்க சங்கத் தலைவனும் சிவனே! (பக். 197)
· மரணமில்லாப் பெருவாழ்வு அடிகள் வாழ்வில் நிகழவே இல்லை. (பக். 213)
· ஆண்டவன் வள்ளலாரை ஆண்டருளவே இல்லை. (பக். 222)
நூலாசிரியர் ம.வீ.கி. சாமி அவர்கள் இராமலிங்க அடிகளாரின் அருட்பா முழுவதையும், உரைநடை நூல்களையும், உரையெழுதியோர், ஆய்ந்தோர் நூல்களையும் கரைத்துக் குடித்து விட்டே இந்நூலை எழுதியுள்ளார். எத்தனை சன்மார்க்க அன்பர்கள் இவரளவு வள்ளலாரைப் படித்திருப்பார்களோ? ஆசிரியருடன் மாறுபட்ட கருத்துடையோர் இந்நூலை மறுத்தெழுதுவதாயின் இவரளவு வள்ளலாரைப் படித்தே களத்தில் இறங்க வேண்டும். எனவே வள்ளலாரை ஆழ்ந்து படிக்கும் தேவையை, வாய்ப்பை அவர்களுக்கு இந்நூல் வழங்கியுள்ளது. வள்ளலாரை விரிவாக அறியும் நன்மை இதனால் விளைவது நன்றுதானே!
நூல் முழுவதும் இழையோடும் மெல்லிய நகைச்சுவை கலந்த கிண்டல், பழைய திராவிட இயக்க எழுத்தாளர்கள் சிலரை நினைவுறுத்துகிறது. வாதத்திறமையோடு பாடல்களை (எண்களோடு) முன்னும் பின்னும் அடுக்கி வள்ளலார் பற்றிய சில புகழ்பெற்ற நம்பிக்கைகளைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்கும் முறை ஆசிரியரை ஒரு தேர்ந்த வழக்கறிஞர் போலக் காட்டுகிறது:
‘இவற்றுள் எது சரி? எது உண்மை? ஓதாதுணர்ந்தார் வள்ளலார் என்பது சரியா? ஓதி உணர்ந்தார் என்பது உண்மையா?’
வள்ளலாரின் ஆன்மிகப் பார்வையைத்தான் ஆசிரியர் பெரும்பாலும் முரண்பட்டு நோக்குகிறார்; சமூக சீர்திருத்தங்களை அல்ல. வள்ளலார் வாழ்ந்த காலம், சூழல், குறுகிய அனுபவம், முறையில்லாக் கல்வி, அவருடைய பட்டுணர்வால் பின்னாளில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி – இவற்றைக் கருத்தில் கொண்டு இராமலிங்க அடிகளாரின் பாடல்களை நோக்கும்போது ஆசிரியர் வைக்கும் சில கடுமையான குற்றச்சாட்டுகள் மறுபரிசீலனைக்குரியனவாகின்றன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.
திருநீறிடாதவர்களை 5 முறை ஒழிக என வள்ளலார் சாடி ஆன்ம நேய ஒருமைப்பாட்டு நெறிக்கு எதிராகப் பாடியதாகக் குறிப்பிடும் ஆசிரியர், பின்னாளில் வள்ளலாரே ‘அப்போது கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது’ என்று தாம் பாடியவற்றை அவரே கண்டித்துக் கொள்ளும்போது ஆசிரியர் திருநீறு பிரச்சினையைத் தனி அதிகாரம் வைத்துப் பெரிதுபடுத்தியிருக்க வேண்டுமா?
வள்ளலாருக்கு இரண்டு கூறுகள் இருப்பதை உணர வேண்டும். சமரச சன்மார்க்கத்தை அவர் நிறுவுவதற்கு முன்பு பாடியதற்கும், நிறுவிய பின் மனமுதிர்ச்சியும், அனுபவ அறிவும் பெற்ற பின்னாளில் பாடியதற்கும் வேறுபாடுகள் தெளிவாக உள்ளன. இதனால் அவர் பாடல்களில் எழும் முரண்பாடுகள் அவரிடம் ஏற்பட்ட வளர்ச்சி என்பதையும், மரபு வழியில் அவர் தேங்கிவிடவில்லை என்பதையும் பெருமையாகவே எண்ணிப் பார்க்க வேண்டும். இதனால்தான் ஊனுடம்பை முதலில் வெறுத்துப் பாடியவர், பிறகு உடம்பைப் பொன்னைப் போலப் போற்ற வேண்டும் என்கிறார். அதே போலத் தொடக்கத்தில் வேதங்களைப் பெருமையாகப் பாடியவர், பின்பு அவை சூதானவை என்று ஒதுக்கிவிட்டார். சமரச வேத சன்மார்க்க சங்கம் போன்ற பெயர்களில் ‘வேத’ என்ற சொல்லை நீக்கிவிட்டார்.
நிகழப் போவதாக நம்பியதை நிகழ்ந்து விட்டதாக வள்ளலார் கூறியதையும் ஒரு கவிஞனின் மனோபாவத்தில் புரிந்து கொள்ள வேண்டும். ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்று பாரதி விடுதலைக்குக் கால்நூற்றாண்டு முன்பே பாடவில்லையா? நடக்கப் போவதில் உள்ள ஆக்கப்பூர்வமான நம்பிக்கை கவிஞனை நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்திற்கு நகர்த்தும்! ‘வருமுன் வந்ததாக கொள்ளுதல் எனக்கு வழக்கம்’ என்று கவிஞர் வள்ளலாரே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறாரே! மேலும் அறிவியல் நியாயத்திலிருந்து கவிதை நியாயம் வேறானது! உணர்ச்சிவயப்படும் கவிஞன் அந்தக் கணத்தில் தோன்றும் மின்னலான உணர்வுகளைக் கொட்டித் தீர்ப்பான். அதை மட்டும் கோடிட்டுப் பார்த்து அறிவியல் பார்வையுடன் ஆய்வு நடத்துவது பொருந்தாது. பக்தி பரவசத்திலும், காதல் போதையிலும் கவிஞர்கள் பாடுவதைப் பகுத்தறிவு திராசில் எடை போட்டால் சரியாகாது – வள்ளலார் அச்சப்பட்டு அரற்றுவதும், மரணமில்லா வாழ்வை அடைந்ததாகப் பெருமிதப்படுவதும், இறைவன் தன்னை ஆட்கொண்டு விட்டதாக அகமகிழ்வதும் இந்த அடிப்படையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
ஆதாயக் கருத்து இருப்பின் பாதுகாப்பாக மரபு வழியில் பாராட்டித் தள்ளுதல் அல்லது எதிர்க் கருத்திருப்பின் கண் மூடித்தனமாகக் காறி உமிழ்தல் என்பதே பலரின் விமர்சனமாக உள்ளது. கறுப்பு அல்லது வெள்ளையை மட்டுமே சிலரால் பார்க்க முடிகிறது. கறுப்பும், வெள்ளையும் கலந்து சாம்பல் நிறமாக இருப்பதை பலராலும் காண முடிவதில்லை. பாராட்டுதலும், குறைகளைச் சுட்டுதலுமே நலந்தரும் திறனாய்வாகும்; சமுதாய முதிர்ச்சிக்கு அடையாளமுமாகும். ‘மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஒலித்த கணியன் பூங்குன்றனாரின் குரல் நம் திறானாய்வுக்கும் வழிகாட்டுவதாகும். இந்தக் கோணத்தில், வள்ளலாரைப் புகழ்வதுடன் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் குறைகளைச் சுட்டிக் காட்டும் வீரத்துடன் எழுதப்பட்ட இந்நூல் தனித்துவமுடைய ஓர் அரிய திறனாய்வு முயற்சியாகும்.
வள்ளலார் இன்று தோன்றி இதனைப் படித்தால், தன்னைப் பற்றிச் சொல்லப்பட்ட குறைகளைக் களைந்து ஆன்ம நேய ஒருமைப்பாட்டிலும், சமரச சன்மார்க்கத்திலும் அடுத்த கட்ட வளர்ச்சிக்குச் செல்ல இந்நூல் பெரிதும் துணைபுரியும் என ஆசிரியரைப் பாராட்டுவார்.