ழகரத் தமிழமிழ்தம்

                   

                   

               நூல்: ழகரத் தமிழமிழ்தம்-  கவிஞர் தேவநாதன்                          

 

                       ழகரத் தமிழமிழ்தம் -

    ழகரக்கொலைஞர்களுக்கு அறுவை மருத்துவமாகும்!

                

பல்வகை பாக்களால் அமைந்த  கவிஞர் தேவநாதன் அவர்களின் இந்தக் கவிதைத்தொகுப்பு பல்சுவையுள்ள பண்டங்களால் உருவான கலவைத் தின்பண்டம் போலச் சுவைக்கிறது. ஆனால் காரமே மிகுதி. தமிழைத் தமிழ் என்று உச்சரிக்கமுடியாத் தமிழர்களின் நிலை கண்டு அவர் அடையும் கோபம் ழகரம் பற்றி அமையும் முதல் பகுதியில் அனலாக வீசுகிறது. இத்தகைய சத்திய ஆவேசம் கொள்ளத் தகுதியான மிகச்சிலரில் ழகரம் காக்கும் கவிஞர் தேவநாதன் முதன்மையானவராவார்.

 

ழகர உச்சரிப்பை நிலைநிறுத்துவதில் பாரதியாரும், பாரதிதாசனும் கூட தம் பங்களிப்பை வழங்கவில்லை என்ற ஆதங்கத்தை அந்தக் கவிஞர்களின் பெருமதிப்பை உணர்ந்த உரிமையுடன் வெளிப்படுத்துகிறார்:

' பன்னூறு சீர்திருத்தம் பாரதியும் சொன்னாலும்

சொன்னதில்லை, 'ழ'வொலி மாற்றுவோர்க்கு'' என்றும்,

' பாட்டில் எழுதிவைத்த பாட்டரசே! பாவேந்தே... செந்தமிழைச் செந்தம'ல்/ள்' என்பானைச் சுட்டிருக்க வேண்டாவா சொல்?'' என்றும் குறிப்பிடுகிறார். 

 

இன்று அவர்கள் உயிரோடு இருந்தால் இவர்பணியைப் பாராட்டி,இவர் கருத்தை ஆமோதித்து, இப்பணியைத் தம்தோள்மேல் சுமப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

 

'காலத்தும் பட்டிமன்றம் காசுக்காய்ப் பேசுவோரின் ஞாலத் தமி'ளோ'சை நாணுறதே' என்று புகழ்பெற்ற பட்டிமன்றப்பேச்சாளர்களின் பேச்சில் ழகரவொலி துளியும் இல்லை என்பதைக் கவிஞர் துணிவுடன் எடுத்துரைக்கிறார். தமிழை உயிர்மூச்சாகக்கொள்வதாகக் கூறும் கவிஞர்களும், எழுத்தாளர்களும், புலவர்களும், சொல்லின் செல்வர்களும் ழவை உச்சரிக்கத் தவறும் இழிநிலையைப் பல பாடல்களில் கோபம் கொப்பளிக்கச் சாடுகிறார்.

 

இந்தக்குறையைச் சுட்டினால், 'கொஞ்சமும் 'லா,ளா' பிழைதனை ஏற்காது, நஞ்சும் கொடுப்பர் நமக்கு' என்று  எதுவும் செய்யத்தயாராகின்றனர். எனினும் 'நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்' என்ற நாவுக்கரசரைப்போல, அஞ்சாது 'வாய்சரியாய்ப் பேசுகின்ற அரசு,ஆசான் வரும்வரைக்கும் என்பணியைத் தொடர்ந்து செய்வேன்' என்கிறார்.

 

ர,ழ பிறக்கும் இடங்கள் பற்றிக்கூறும் தொல்காப்பியப்பாடலுடன் ஆசிரியர் முரண்படுவது சிந்தனைக்குரியதாகும். ' ர,ழ விரண்டும் மெல்லண்ணம் நாவருட வந்திடுமாம். நன்கறியின் பேசுகையில் 'ரா' வரும்,'ழா'வராது பார்!' என்று அவர் ஆணித்தரமாகக் தொல்காப்பியருடன் மாறுபடுவது பற்றி இலக்கணப்புலவர்கள் விளக்கம் தரவேண்டும்.

 

இறைவனே தவறிழைத்தாலும் ஏற்காத நக்கீரனைப்போல, தெய்வப்புலவர் திருவள்ளுவர் ழகரப்பயன்பாட்டில் தவறிழைத்ததாகக் குறிப்பிடுகிறார் திருக்குறள் தொண்டர் தேவநாதன் அவர்கள்.

'ஞானமுடன் பாடிய வான்புகழ் வள்ளுவரும்

தேனாய்த் திருக்குறளைப் பாயவிட்டு- ஊனமுடன்

ஒன்பதில் ஏனோ இ'ழி'வை இ'ளி'வென்னும்

சொன்மயங்கச் சொல்லியது ஊறு'

( 464,654,970,971,988,1044,1066,1288,1298)

என்ற அவர் குற்றச்சாட்டிற்குக்   குறளாய்ந்த அறிஞர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

 

வேதகுலர் , தொண்டை நடுநாட்டார் ஆகியோர் மட்டுமே ழகரத்தைச்சரியாக உச்சரிப்பதாக ஆசிரியர் குறிப்பிடுவது ஓரளவு சரியானாலும், சோழநாட்டினரும் ழகர உச்சரிப்பில் கவனமுடையோரே என்பதை ஆசிரியர் ஏற்க மாட்டாரா? மூவேந்தர்களில் ழகரப்பெயருடையவர் சோழர்தானே! சேரநாட்டார் மலையாளி ஆனபின்பும் தமிழின் சிகரமான ழகரத்தைத் தவறின்றிப்பேசுவது பாரட்டிற்குரியதன்றோ?

 

தமிழ் வளர்த்ததாகப்பெருமை பேசும் பாண்டி நாட்டில் உள்ளோர் தமிழனுக்கு முகவரியான ழகரதைப் பிழையாக உச்சரிக்கின்றனர்  என்ற உண்மையை உணர்ந்து 'பாண்டியன் தண்டமிழைப் பாங்குடனே ஓம்பவில்லை' என்று கூறியிருப்பதும், தமிழணர்வுடைய ஈழத்தமிழர் கூட ஈளம் என்று  ழகரத்தைச்சிதைப்பது பற்றி வருந்துவதும் உரியவர்களின் கவனத்திற்குரியனவாகும்.

 

தமிழை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்ற நடைமுறை இருக்கும் நிலையில், 'என்னால் இப்படிப்பட்ட ஈனங்களையெல்லாம் சகிக்கமுடியவில்லையே'' என்று வெறுப்புறும் ஆசிரியர் ழகரத்தை உச்சரிக்க முனையாதானை ஒரு கட்டத்தில் 'தார் பூச்சை அவன்நாவில் பழுக்கக் காய்ச்சி, தரதரென இழுத்துவந்து பாய்ச்சின் என்ன?'' என்று வெகுளியின் உச்சத்துக்குச்சென்று விடுகிறார்.  தமிழ்ச்சமூகத்தின் மேல் உள்ள அவரின் அளவற்ற அக்கறையே கவிதையில் இப்படிக் கோபமாக வெடிக்கிறது.!

 

ழகரம் பேசத்தெரியாதோர் தமிழ் கற்பிக்க வருகின்றனர். நல்லாசிரியர் விருதுகளும் பெறுகின்றனர். அவர்களைப் பரிந்துரைக்க ஒரு துறை. அவர்களுக்குக் கொழுத்த சம்பளம் வழங்குவதற்கு ஓர் அரசாங்கம். ழகரம் போதிக்காதோரும், பேசத்திராணியற்றோரும், அவர்களுக்குப் பணிநியமனம் அளித்தவர்களும் குற்றவாளிகளே. அவர்கள் அனைவரையும் தனிச்சிறையில் அடையுங்கள். சிறை அன்று அது- ழகர வகுப்பறை. ழகரம் பயின்று திருந்தும் மட்டும் அவர்கள் அங்கிருக்கட்டும் - இப்படிக் கூறும் கவிஞரின் கருத்தை நடைமுறைப்படுத்த முடிந்தால் மட்டுமே போர்கால அவசரத்தில் தமிழ் உச்சரிப்பைத்திருத்த முடியும் என்று தோன்றுகிறது

 

பெரும்பாலான தமிழர்களால் 'தமிழ்' என்று சரியாக  உச்சரிக்கமுடியாத நிலையில் தமிழ் செம்மொழி உயர்வைப் பெற்றுவிட்டது என்று நாம் பெருமைப்படுவது வெற்று ஆரவாரமே. 'தமிழ் ழகரம் பேசத்தெரியாத தமிழனே நாட்டில் இல்லை என்ற நிலை என்று வருமோ,அன்று தான் தமிழ் செம்மொழியாகும்' என்ற ழகரக்காவலரின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

 

ழகர உச்சரிப்பை மீட்க எந்த வழிமுறைக்கும் தயாராகவுள்ள கவிஞர் இதற்காக வழக்குமன்றம் ஏறவும் உடன்படுகிறார். '' இதற்காக ஒரு பொதுநல வழக்குப்போட முடியுமா? முடியுமானால் போட்டுத்திருத்தலாம் வாரீர்'' என்று ஆதரவாளர்களை அழைக்கிறார்.  கல்விக்கூடங்களில் ழகரப்பயிற்சியைக் கட்டாயமாக்க,  நீதிமன்றம் உதவமுடியுமா என வழகுரைஞர்கள் வழிகாட்டி உதவிடவேண்டும்.

 

கவிதைத்தொகுப்பின் பிற்பகுதியில் அமைந்துள்ள தமிழ் விருத்தப் பாப்பூஞ்சோலை என்று பகுதியில் அமைந்துள்ள கவிதைகளில் தாவரத்தின் தாய்மையைப்போற்றும் கவிதை(பக்83) சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்குத் தென்பூட்டுவதாகும்.

 

'தேவை இன்னொரு காந்தி'(பக்:87) என்ற கவிதையில் காந்தியைக் கோட்சே சுட்டதற்கான காரணத்தை விளக்கிய விதம் சிந்தனைக்குரிய கற்பனையும், புதிய பார்வையில் நாட்டின் அவலத்தைச் சுட்டுவதுமாகும். அர்ச்சகரும், கருமாரும் கூட வெளிநாடுகளுக்கு வேலைதேடி ஓடிவிடும் நிலையில், விவசாய நிலத்தைத் தூக்கிக்கொண்டு செல்லாமுடியாக் காரணத்தால், எப்போதும் இந்தியனாய் இருப்பவன் விவசாயி மட்டுமே என்று குறிப்பிடும் 'எப்போதும் இந்தியனாய்'(பக;98) என்ற கவிதை கருத்தறிவிப்பில்  வித்தியாசமானதாகும்.

 

தெய்வங்களுக்குச் சிலைவைப்பதைவிட நம்மைக்காக்கும் 'அறிவியலார்களுக்குச்சிலை வைப்போம்'(பக;99) என்று அறைகூவல் விடுக்கும் கவிதை அறிவார்ந்த சிந்தனையைப் பரப்புவதாகும்.

 

தமிழ் உச்சரிப்பில் தூய்மை பேணுவதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டைத் டமில் நாடு என்று ஆங்கிலத்தில் தொடர்ந்து  எழுதி வரும் அவலத்தைத் 'தமிழர்களே விழத்தெழுங்கள்'(பக்:58)  என்ற கவிதையில் சாடுகிறார். தமிழின் கற்பு ழகரத்தில் இருப்பதால், இதனைத்தொடர்ந்து   அனுமதிக்கும் தன்மானம் பறிக்கும் தரமற்ற செயலால் 'தமிழ்நாடு இழந்தோம்' என்று அவர் குறிப்பிடுவதில் தவறேயில்லை.

 

எந்தச் சமரசமும் இன்றி, யாருக்கும் விலைபோகாமல், கொண்ட கொள்கைக்காகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட இவரின் உட்கிடக்கையான இந்நூல் ழகரக்கொலைஞர்களுக்கு அறுவை மருத்துவமாகும்; தமிழ் ஆர்வலர்களுக்குப் புத்துணர்வூட்டும் இளஞ்சூரியனாகும்.