குமுறும் நெஞ்சம்:15
பொழுதுபோக்கு என்றால் - வயதானவர்கள் நெடுந்தொடர்களிலும், இளையோர் யூடியூபிலும் மிகுதியாக நேரத்தைச் செலவிடுவதே இன்றைய நிலை. இதை மீறி இலக்கிய, சமய, அரசியல் கூட்டங்களுக்கு வருவோர் எண்ணிகை சரிந்துள்ளது. இவற்றிற்கெல்லாம் நேரம் ஒதுக்க பலருக்கும் விரும்பமில்லாத நிலையில், விரும்பி வருவோரையும் துரத்துவதாக நம் மேடைப்பேச்சுகளும் செயல்பாடுகளும் அமைந்துள்ளன.
கூட்டத்திற்கு வருவோரின் கால வறுமையைப் புரிந்துகொள்ளாமல் நேர விரயம் செய்யும் போக்கு நம் பேச்சாளர்களிடையே உள்ளது. பேச வரும் செய்தியைத் தொடங்குவதற்கு முன் கால்பங்கு நேரம் மேடையில் அமர்ந்திருப்போரையும், கூட்டத்திற்கு வந்திருப்போரையும் ஒவ்வொருவராக தலைவர் அவர்களே… அங்கே அமர்ந்திருக்கும் என்னருமைத் தோழர் அவர்களே… என்று வருணித்து நேரத்தை வீணடிப்பதை மரபாக நாம் வளர்த்திருக்கிறோம். மேடையில் அமர்ந்திருப்போரையும் சிறப்புற்குரியோரையும் மரியாதை செய்வதற்காக அவையினரின் பொறுமைச் சோதிப்பது சரியா? இது வர்ணிக்கப்படுவோருக்கு மகிழ்ச்சியைத்தரலாம்; ஆனல் அவையினர் பலருக்குச் சலிப்பையே தரும். இந்த நேரத்தைச் செய்திகளின் சுவையைக் கூட்டுவதில் செலவிட்டால் பயனாக இருக்கும். பேசுவோரின் சிறப்பு அழைப்புரையில், இல்லை, கருத்துரையில்தான் உள்ளது என்பதை இவர்கள் புரிந்துகொள்வதேயில்லை. ஆங்கிலத்தில் எந்தக் கூட்டமாயினும் Ladies and Gentlemen என்று அழைக்கும் மரபு பின்பற்றுதலுக்குரியது. ‘அனைவருக்கும் வணக்கம்’ என்று கூறித் தொடங்கினால் என்ன கெட்டுவிடும்?
நம் மேடைக்கூட்டங்களில் இன்னொரு மாற்றம் தேவைப்படும் செயல்பாடு-எதற்கும் உதவாத பொன்னாடையைப் போர்த்திப் படமெடுப்பதாகும். அதுவும் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென சிலர் மேடையில் ஏறிப் பேச்சாளருக்குப் பொன்னாடை போர்த்தி ‘…..இந்த இயக்கம் சார்பாக பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்கிறேன்’ எனக் கூட்ட நேரத்தை இன்னும் இழுத்தடித்து அவையினரை எரிச்சலடைய வைக்கின்றனர்.. இப்படி அநாகரிகமாக மேடையில் ஏறி இடைச்செருகலாகத் தம்மை விளம்பரப்படுத்திக்கொள்ளும் அவலம் மிகுந்துவருவது கட்டுப்பாட்டை மறந்து வரும் நம் இனத்தின் அடையாளமாகிவிட்டது
முன்பு மாலைபோட்டதற்கு மாற்றாக இப்போது பொன்னாடை போடுகிறார்கள். இந்தப்பொன்னாடையின் ஒரே பயன் அதைக் கசங்காமல் பாதுகாத்து அடுத்த வாய்ப்பில் இன்னொருவருக்குப் போர்த்துவதுதான். இப்படி வலம் வரும் பொன்னாடைக்குப் பதிலாக குளியல் துண்டை இப்போது போர்த்தும் வழக்கம் வந்திருப்பது சற்று ஆறுதலானதாயினும் நல்ல நூல்களை வழங்குவது இன்னும் சிறப்புக்குரியதாகும்.
மேடைப் பேச்சே மதுப்பழக்கம் போல மாறி அதற்கு வாய்ப்புத்தேடி ஆலாய் பறக்கும் கூட்டமும் உள்ளது. பயனில சொல்லாமை என்ற திருக்குறள் அதிகாரத்திற்கு எடுத்துக்காட்டான இவர்கள் தம் அரிப்பைச் சொரிந்துகொள்வதற்காக எதைவேண்டுமாயினும் நேர உணர்வின்றி பேசுவார்கள். நேரம் தவறி கூட்டத்திற்கு வரும் இவர்கள் தலைப்பைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. துண்டுச்சீட்டுக்கொடுத்து மிக முயன்றே இவர்களை ஒலிபெருக்கியிலிருந்து அப்புறப்படுத்த முடியும். விழாவின் முடிவில் விருந்து என அறிவித்தும் கூட இத்தகைய பேச்சாளர்களின் வாய்க்கழிவைப் பொறுக்கமுடியாமல் வந்த சிலரில் பலரும் விழா நிறைவடையும்முன் கழன்றுகொள்கின்றனர். மரியாதை நிமித்தம் கடைசிவரை இருப்போர் இறுதிப் பேருந்தையும் தவறவிட்டு பல மடங்கு கட்டணம் செலுத்தி ஆட்டோவில் திரும்பும் நிலை!
அழைப்பிதழில் போட்டபடி விழா தொடங்குவதும் குறித்தபடி முடிவதும் பெரும்பாலும் தமிழகத்தில் நிகழ்வதில்லை. நேரத்தின் அருமை உணரா தமிழ்ச் சமூகம் வெட்டிப்பேச்சில் வீணாவதைத் தடுத்து நிறுத்தினாலன்றி தமிழன் தலைநிமிர முடியாது. காலந்தவறாமையை அரும்பண்பாக தமிழ்ச்சான்றோர் பலரும் கடைப்பிடித்து வந்துள்ளனர். என் ஆசான் பேராசிரியர் க. ப. அறவாணன் அவர்கள் திங்கள்தோறும் நிகழ்த்திவந்த ‘சிந்திக்க வாங்க வாசிக்க வாங்க’ என்ற கூட்டம் மூன்றாம் சனிக்கிழமை மாலை 5.30 க்குச் சரியாகத் தொடங்கும். 5.31 க்கு அன்று. இரண்டு பேர்களே கூட்டத்திற்கு வந்திருந்தாலும் கூட்டத்தை 5.30 க்குத் தொடங்கிவிடுவார். இந்த ஒழுங்கைக் கண்டு பலரும் கூட்டத்திற்குச் சரியான நேரத்தில் வரத்தொடங்கினர். அதேபோல கூட்டம் சரியாக 7 மணிக்கு முடிந்துவிடும். பேசுவோர் பலரும் சொற்செட்டுடன் 5 நிமிடமே பேசுவர். பேசுவோருக்கு முன்கூட்டி அவர் முடியும் நேரத்தை எச்சரித்தும் பேசிக்கொண்டிருந்தால், , நிறுத்திக்கொள்ளுங்கள் நேரமாகிவிட்டது என அறிவித்துக் கூட்டத்தை முடித்துவிடுவார். இக்கூட்டத்திற்கு வருவோர் நம்பிக்கையுடன் அடுத்த நிகழ்வை நேரப்படி அமைத்துக்கொள்ளலாம். அல்லது உறுதியாகக் குறித்த நேரத்தில் வீடு போய் சேரலாம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், கல்விநிலையங்கள் முதலியன உரிய நேரத்தில் தொடங்கி முடிவது சாத்தியாகும்போது கூட்ட நிகழ்வை மட்டும் ஏன் காலதாமதமின்றி நடத்த முடியாது?