படித்தவன் செய்யும் பாவங்கள்

குமறும் நெஞ்சம்:3                   

திருட்டைப்பிடிக்க வேண்டிய காவல்துறை பெண் ஆய்வாளர் பேரங்காடியில் போய் திருடுகிறார். அவரைவிட மெத்தப்படித்த, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றவேண்டிய ஐபிஎஸ் அதிகாரி, ஐஏஎஸ் தேர்வெழுதச்சென்று ப்ளுடூத் வழியாகக் காப்பியடிக்கிறார். மக்கள் நலம் பேணவேண்டிய உயர்நிலையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி மணல் திருட்டுக்கு உதவி கையூட்டுப் பெறுகிறார். மாணவர்களுக்கு நல்லொழுக்கம் போதிக்கவேண்டிய தலைமையாசிரியர் தம் பள்ளிச் சிறுமியையே பாலியல் வன்முறை செய்கிறார்.

இவையெல்லாம் அண்மையில் நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளிவந்த, நம் நெஞ்சைக் குமுற வைத்த செய்திகள் அல்ல.. குமுறிக் குமுறிச் சோர்ந்து போய் இங்கு இப்படித்தான் என்று  கையறுநிலையில் நம்மை நலியவைக்கும் நிகழ்வுகள்.

ஏனெனில் இவையெல்லாம் என்றோ நடக்கும் நிகழ்வுகள் அல்ல. அன்றாடம் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெறும் கொடுமைகள்.

நாம் வாழ்வது நாடா அல்லது மிருகங்கள் வாழம் காடா என்று ஐயுற வேண்டியதில்லை; நாம் வாழ்வது  மனித மிருகங்கள் வாழும் நாட்டில்தான்.

வல்லரசாகப் போகிறோம் என்று வாய் கிழியப்பேசி வரும் நம் நிலை உலக அரங்கில் எப்படியுள்ளது? ஆசியாவிலேயே ஊழல் மலிந்த நாடுகளின் பட்டியலில் நமக்கு முதலிடம்.

உலகில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளில்  7 ஆண்டுகளுக்கு முன்பு 4வது இடத்திலிருந்து இன்று நாம் முதலிடத்திற்கு முன்னேறிவிட்டோம். .  ஆப்கனிஸ்தானையும், சிரியாவையும் நாம் பின்னுக்குத்தள்ளிவிட்டோம்.

உலக வாகனங்களில் 1% மட்டுமே இந்தியாவில் ஓடினாலும், உலக விபத்துகளில் (15%) முதலிடம் இந்தியாவிற்குத்தான். அதிலும் இந்தியாவிலேயே தமிழகத்திற்குத்தான் முதலிடம். அதிலும் வாகன விதிகளை மிகுதியாக மீறுபவர்கள் படித்தவர்களே என்கிறது புள்ளி விவரம்.

பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சி அதிவேக முன்னேற்றத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 11 குழந்தைகள் காணாமல் போகின்றன. குழந்தைகள் அதிகம் கடத்தப்படும், காணாமல் போகும் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறது.

நான்கு மதங்களை உருவாக்கியதாகச் சொந்தம் கொண்டாடும் நாட்டில் அறவுணர்வு இவ்வளவு பரிதாபத்திற்குரிய நிலையில் இருப்பதற்கு என்ன காரணம்? நீதி நூல்களும், அற இலக்கியங்களும் இங்கு போல் எங்கும் இல்லை. ஆனால் இங்கு  நீதியும் இல்லை அறமும் இல்லை என்பதற்கு என்ன காரணம்? 'ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' என உரைக்கும்  திருக்குறள் நெறி ஏட்டிளவில் உள்ளதே தவிர மக்கள் வாழ்வில் ஏன் இல்லை? 

இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்பதில் காட்டும் ஆர்வம் யாருக்கும் நல்லரசாக்க வேண்டும் என்பதில் இல்லை. இதன் எதிரொலியை நாம் கல்விக்கூடங்களில் பார்க்கிறோம். ஒழுங்கையும், ஒழுக்கத்தையும், நேர்மையையும், சமூக உணர்வையும் கிஞ்சித்தும் வளர்க்காத இந்தக் கல்விமுறை உருவாக்கும் படித்தோரிடம் எப்படி உயர்பண்பை எதிர்பார்க்கமுடியும்?

பந்தயத்தில் வெல்ல, தூரத்தில் தெரியும் புல்கட்டை நோக்கிப் பாய்ந்தோடும் தெனாலிராமனின் நோஞ்சான் குதிரையைப்போல மாணவர்கள் முடுக்கிவிடப்படுகிறார்கள். நீட் தேர்வுக்குப்படி; மருத்துவராகி பைநிறைய பைசா சேர்.  ஐஏஎஸ் பயிற்சி வகுப்பில், படிப்பை முடிப்பதற்குள் சேர்ந்துவிடு; ஆட்சியாளரானால் நிறைய அள்ளலாம். கணினி வல்லுநராகி அல்லது, ஆடிட்டராகிக் கைநிறைய காசுசேர்.  எப்படியேனும் உயர்நிலைக்கு உன்னை ஏற்றிவிட்ட கல்வி ஏணியைப் பயன்படுத்திப் பின் தூர எறி. இந்த நோக்கில் தான் நம் கல்வித்திட்டமும். நம் பெற்றோரின் மனோபாவமும் மாணவர்களைச் சுடும் இரட்டைத் துப்பாக்கிகளாகக் குறிபார்க்கின்றன.

பள்ளியில் முதல்மணி நல்லொழுக்கப்பாடம் என்று இருந்த நாள்கள் பழங்கதையாகிப்போயின. குடிமைப்பயிற்சி என்று இளம் உள்ளத்தில் சமூக சிந்தனைகளைத் தோற்றுவித்த பாடம் நீக்கப்பட்டு பல ஆண்டுகளாயிற்று.

ஒழுக்கமற்ற எந்தத் தேசமும் வல்லரசாக முடியாது என்ற அடிப்படை உண்மையை இந்தத் தேசம் புரிந்துகொள்ளாதவரை இங்கு படித்தவர்கள் பலரும்  பணக்காரப் பாவிகளாகவே இருப்பார்கள்.                                             _.சுட்டி சுந்தர்