குமறும் நெஞ்சம்:2
வேதமும் விஞ்ஞானமும் இணையுமா?.
அறிவியல் பார்வையும், அதன் வழியான செயல்பாடுகளுமே நம் பிரச்சினைகள் அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வாகும். இதுவே பகுத்தறிவு பாதை. அறிவியலால் பொய் பேச முடியாது .அதற்குப் பாரபட்சம் காட்டத் தெரியாது. மத மாச்சரியத்திற்கு இணங்கத் தெரியாது. உணர்ச்சிவசப்படத் தெரியாது. உண்மையைத் தவிர வேறெதுவும் தெரியாது.
அண்மைக்காலமாக மதவாத முகாம்களிலிருந்து அறிவியல் மாறுவேடம் போட்டுக்கொண்டு பல நசிவுக் கருத்துகள் புற்றீசல்கள் போலப் புறப்படத் தொடங்கியுள்ள கொடுமையை என்னென்பது?
வேதத்தில் சொல்லியிருப்பதைத் தான் இன்றைய விஞ்ஞானமும் சொல்கிறது என்று சொல்லும் அபத்தத்தை அடிக்கடி கேட்கிறோம். வேதத்தில் சொல்லாததே இல்லை என்பது இன்னொரு 'சான்றோர் வாக்கு'. எல்லாவற்றையும் யாரும் எந்த நூலிலும், முழுமையாகச் சொல்லி முடித்துவிட முடியாது என்பதே உண்மை. திருக்குறளில் இல்லாதது எதுவும் இல்லை என்று கூறுவோரும் உளர். மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று கூறிய வள்ளுவரே இப்படிச் சொல்வோரைத் தலையில் குட்டுவார். அறிவு எல்லையில்லாமல் வளரும் இயல்புடையது. மனித இனம் இதுவரை கற்றதும் கற்பித்ததும் கைமண் அளவுதான் என்பதே சரியான கருத்தாகும்.
வேதமும், அது தொடர்பானவையும் முடிந்த முடிவுடன் தேங்கி நிற்பவை. புதிதாக எதுவும் சொல்லமுடியாதவை. எக்காலத்திற்கும் அப்படியே பயன்படுத்த முடியாதவை.
ஆனால் அறிவியல் நாள்தோறும் வளரும் ஆற்றலுடையது. நேற்று சொன்னது சரியில்லயென நிரூபிக்கப்பட்டால் இன்று தன் கருத்தைத் தயங்காமல் மாற்றிக்கொள்ளும் இயல்புடையது. ஆய்வு, கவனிப்பு, கண்டுபிடிப்பு ( Experiment, Observation, Inference) என்பதே அது பயணிக்கும் உன்னத மெய்வழிச்சாலை. வேதமும் விஞ்ஞானமும் வணிக விளம்பர உத்திக்காக இணையலாமே தவிர உண்மையில் இணைய முடியவே முடியாது. அறிவியல் கண்கொண்டு பார்த்தால் வேத, புராண கருத்துகள் பலவற்றை ஏற்கவே முடியாது. ஒரு நீண்ட பட்டியலே இதற்குப் போடலாம். இஃது ஒருபுறமிருக்க வேதகாலத்தில் உள்ள புரட்டுகளை மேலும் புரட்டிப்போடும் அதிமேதாவித்தனங்களும் சில நிகழ்கின்றன.
மகாபாரத காலத்திலேயே சோதனைக்குழாய் குழந்தை பிறந்ததாகவும், இணையம் பயன்படுத்தப்பட்டதாகவும், இராமாயண காலத்தில் புஷ்பக ஜெட் விமானம் புழக்கத்தில் இருந்ததாகவும், ஐன்ஸ்டைனின் புகழ் பெற்ற E=mc2 என்கிற சமன்பாட்டைக் காட்டிலும் முக்கிய சமன்பாடுகளை வேதங்கள் கூறுகின்றனவென்றும், எல்லா நோய்களுக்கும் நம் வேதகால மருத்துவமுறையிலேயே மருந்து இருப்பதாகவும், சிலர் கூறிவருகின்றனர். இவர்கள் பாமர மக்கள் அல்லர்; அரசின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள்தான் இப்படிப் பிதற்றி வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக வாட்ஸ் ஆப்பிலும், இணையத்திலும் வரும் மருத்துவப் பொய்கள் இன்னும் ஆபத்தானவை. புற்றுநோயையும், சர்க்கரை நோயையும் முற்றிலும் குணப்படுத்துவதாக இத்தகையோர் சொல்லும் பல மூலிகைகளும், காய்கனிகளும் இதுவரை எந்த மருத்துவ சோதனைகளிலும் நிரூபிக்கப்படவில்லை. இது உண்மையாயின் கோடிக்கணக்கில் செலவிட்டு உலகெங்கும் அறிவியல் ரீதியாக நடத்தப்படும் மருத்துவ ஆய்வுகளை நிறுத்திவிடலாம். மருத்துவ மனைகளை மூடிவிடலாம். இப்படிப் பொறுப்பற்ற முறையில் பரப்பப்படும் மருத்துவ அரைவேக்காட்டுச் செய்திகளை நம்பி அப்பாவி மக்கள் உயிரை மாய்த்து வருகின்றனர்.
மருத்துவர்களையும், அறிவியலாளர்களையும் வைத்து இதனைச் சொல்ல வைப்பது பெருங்கொடுமை. பகுத்தறிவை அடகு வைக்கும் அறிஞர்களுக்கு நம் நாட்டில் பஞ்சமில்லை. ஆனால் இவர்களுக்கு நோய் வந்தால் அப்பல்லோவிற்கு மட்டுமே செல்வார்கள்.. -'சுட்டி' சுந்தர்