ஊடகங்களில் நாள்தோறும் புற்றீசல்கள் போல் பொய்ச்செய்திகள் புறப்பட்டு வருகின்றன. பலவும் தேன் தடவிய பொய்கள். மெய்போலப் பொய்சொல்லும் இவை சில நேரங்களில் நம் உயிருக்கே உலை வைக்கின்றன.
இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 7 கோடி பேர்கள் முகநூலிலும் (face book), 20 கோடி பேர்கள் புலனத்திலும் (whatsapp), இவற்றினிடையே அசைந்தாடும் வலையொளியிலும் (you tube) நாளின் பெரும்பொழுதை ஒப்படைத்துவரும் இன்றைய நிலையில் அவற்றின் வழியாகவே பல பொய்ச்செய்திகள், தவறான தகவல்கள், குழப்பமூட்டும் வதந்திகள் உலா வருகின்றன.
கொரோனா காலத்தில் கொரோனாவைவிட வேகமாகப் பரவிவரும் கொரோனா தொடர்பான தகவல்கள் கொரோனாவைவிட ஆபத்தானவைகளாக உள்ளன. தங்களைத் தாங்களே மருத்துவர்களாக்கிக்கொண்டு அல்லது உண்மையான ஒருவரின் பெயரைச்சொல்லிக்கொண்டு இவர்கள் பரப்பிவரும் மருத்துவச்செய்திகள் சிலவற்றைப் பார்ப்போம்:
# கொரோனா வந்திருப்பதைக் கண்டுபிடிக்க எளிய வழி இதோ: 10 விநாடிகள் மூச்சைப்பிடித்துக்கொள்ளுங்கள். அப்போது மூச்சித்திணறலோ இருமலோ உங்களுக்கு இல்லையெனில் உங்களுக்கு கோவிட் இல்லை. ( கோவிட் இருக்கிறதா என்று கண்டறியும் பிசிஆர் பரிசோதனையை செய்பவர்கள் எல்லாம் விவரம் தெரியாதவர்கள் பாவம்!)
# சுடுநீரில் உப்போ வினிகரோ கலந்து தொண்டையைக் கொப்பளித்தால் நுரையீரலுக்குச் செல்லும்முன் தொண்டையில் 4 நாள் வாழும் கொரோனா நுண்ணுயிரிகள் அழியும். (இவ்வளவு எளிதாக கொரோனாவுக்கு மருந்து கண்டறிந்த இந்தப் பெயர் தெரியாத அறிவியலாளரைக் கண்டுபிடியுங்கள். நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கலாம்)
# சாம்பிராணிப் புகையில் கொரோனா ஓடிவிடும், தொடரந்து காலை மாலை சாம்பிராணிப் புகையைப் போட்டுக் கொரோனா வராமல் உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். (புகை எந்த வடிவில் இருந்தாலும் – ஊதுபத்தி புகை உட்பட அது நுரையீரலுக்குப் பகையான கார்பன்-டை-ஆக்சைடுதான். எனவே கொரோனா நுரையீரலைப் பாதிக்கப் புகை வழிவகுக்குமேயன்றித் துணை செய்யாது)
# டெட்டால், லைசால் ஆகியன கொரோனா நுண்ணுயிரிகளை உடனே அழித்துவிடும், (இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களே இச்செய்தி உண்மையில்லை என்று அறிவித்துவிட்டன)
# இஞ்சி, பூண்டு, வெங்காயம், மிளகு, மஞ்சள் முதலியவற்றை அடிக்கடி பயன்படுத்தினால், அல்லது இவற்றில் சிலவற்றைக் கஷாயம் போட்டுத் தினமும் குடித்தால், நாளும் ரசம் சோறு உண்டால் கொரோனா அண்டவே அண்டாது. (கபசுர குடிநீர் உட்பட இவை அனைத்தும் நோய் எதிர்ப்புச்சக்திக்குத் துணைநிற்குமே தவிர கொரோனாவை வரவிடாமல் தடுப்பதற்கு உத்தரவாதம் இல்லை; குணப்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை. இவற்றிற்குக் குணப்படுத்தும் ஆற்றலிருந்தால் உலக அரசுகள் கொரோனாவை ஒழிக்க ஏன் இப்படித் தவிக்கவேண்டும்?)
இவை போன்ற தவறான செய்திகளின் அணிவகுப்பில் மிக ஆபத்தானது நீராவி பிடித்தால் கோவிட் முற்றிலும் நீங்கும் என்று கூறும் சீனாவிலிருந்து வந்த வலையொளியைப் பரப்புவதாகும். இதை நம்பி பலரும் காலை மாலை இரவு என்று 3 வேளையும் பிரஷர் குக்கர் வழியாக நீராவியை இழுத்தனர். இதனால் நுரையீரலில் உள்ள சிலியா, மியுகஸ், மாக்ரோபேஜ் ஆகிய 3 பாதுகாப்பு அரண்களை முற்றிலுமாக நீராவி காயப்படுத்திச் செயலிழக்கச் செய்தனர். சுடுநீரை உள்ளே விடுவதை விட மிகுந்த வெப்பத்தை நீராவி உண்டாக்கும் என்ற அடிப்படை அறிவியல் உண்மை அறியாத பலரும் குணப்படுத்த முடியா நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகியதே கண்டபலன். வீட்டில் இருந்தபடியே எளிதாகக் கோவிட்டைக் குணப்படுத்த வாய்ப்புள்ளவர்கள் இந்தக் காணொலியின் தவறான வழிகாட்டுதலால் மருத்துவமனைகளின் ‘ஐசியு’க்களில் பல நாள்கள் போராடி வெந்து போன நுரையீரலைக் குணப்படுத்தமுடியாமல் இலட்சக்கணக்கான ரூபாய் செலவுடன் இன்னுயிரை நீத்தனர்.
இது தவறான வழி என்று ஒருபக்கம் நுரையீரல் சிறப்பு மருத்துவர்கள் வெளியிடும் எச்சரிக்கை காணொலிகளைவிட இந்தத் தான்தோன்றி மருத்துவர்கள் வெளியிடும் காணொலிகள்தாம் நிறைய பேர்களைக் கவர்ந்துள்ளன என்பது தணிப்பரியாத் துயரமாகும்.
நமக்கு வரும் செய்திகளை யாரோ அனுப்புகிறார்கள், இது யாரோ ஒருவருக்குப் பயன்படும் என்று, ஆராயாது பகிர்ந்துகொள்ளும் தகவல்தான் யாரோ ஒருவரையும் கொல்கிறது.
கொரோனாவை வெல்ல உலகெங்கும் கோடிக்கணக்கில் செலவிட்டுப் பெரும் மருத்துவ நிறுவனங்கள் போராடி வரும் நிலையில் ஆர்சீனிகம் ஆல்பம்30 என்ற ஓமியோபதி மருந்தை 3 நாள் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் கொரோனா வராது என்று அடித்துக்கூறும் செய்திகள் வருகின்றன. ஆயுஷ் அமைச்சகமே இதை ஏற்பதாகவும் கூறுகின்றனர். இஃது உண்மையாயின் தடுப்பூசிகள் எதற்கு? இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான ஓமியோபதி ஆய்வு ஏதும் நடந்ததாகவோ முடிவுகள் அறிவிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. ஆயுஷ் அமைச்சகமோ உலக சுகாதார நிறுவனமோ இதனை ஏற்கவில்லை என்பதே உண்மை.
புலனத்தில் (whatsapp) ஓர் எச்சரிக்கை வருகிறது: ‘’நாளைமுதல் நீங்கள் அனுப்பும் செய்திக்கு 3 சரி குறி (Tick) வந்தால் அரசு உங்களைக் கவனித்துவிட்டது என்று பொருள். அதில் ஒன்று சிவப்பானால் அரசு நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று பொருள். இரண்டும் சிவப்பானால் அரசு நடவடிக்கை எடுத்துவிட்டது, விரைவில் உங்களுக்கு நீதிமன்ற அழைப்புவரும் என்று பொருள்’’. - குரூர மனம்படைத்த கதைசொல்லி ஒருவரின் கற்பனைதான் இது. நம் செய்திகளையோ படங்களையோ அரசு உட்பட யாரும் பார்க்கமுடியாவறே புலனம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு ஓர் எச்சரிக்கை விடுக்குமாயின் அரசு இணைய தளங்களிலும், செய்தித்தாள்களிலும், முக்கிய தொலைக்காட்சிகளிலும் தலைப்புச்செய்தியாக வந்திருக்குமே! ஒவ்வொரு பேசியையும் கவனிக்கும் அளவுக்கு அரசிடம் திட்டம் ஏதுமில்லை என்பதே உண்மை.
தவறான செய்தி எங்கிருந்து தொடங்குகிறது என்பதைக் கண்டுபிடிப்பது எளிதாக இல்லை. எனவே இப்படித் தவறான செய்திகள் பரவுவதைத் தடுக்கும் நோக்கோடுதான் புலனத்தகவலை ஒரே நேரத்தில் 5 பேருக்குமேல் பகிரமுடியாதவாறும் மிகுதியாகப் பகிர்ந்த செய்தியை ஒருவருக்கு மேல் பகிரமுடியாதவாறும் புலன நிறுவனத்தினர் முடக்கியுள்ளனர்.
இது போன்ற தவறான தகவல்கள் பல துறைகளிலும் உண்டு. வரலாற்றுப் பாட நூல்களிலும் ஏன் புகழ்பெற்ற இதழ்களிலும் கூடத் தஞ்சை பெரிய கோயில் கோபுர நிழல் தரையில் விழாவண்ணம் அமைக்கப்பட்டதாகவும், விமான கோபுரம் 80 டன் எடையுள்ள ஒரே கல்லால் அமைக்கப்பட்டுள்ளது என்றும் எழுதப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான செய்தியாகும். நேரே சென்று பா்ரத்தால் கோபுரத்தின் நிழல் காலை நேரத்தில் கோபுரத்தின் பின் பக்கமும், மாலை நேரத்தில் முன்பக்கமும் விழுவதைக் காணமுடியும். விமானகோபுரத்தை ஒரே கல்லால் இன்றி ஆரஞ்சுப்பழச் சுளைபோலப் பல கற்களை அடுக்கியே அமைத்துள்ளனர் என்பதை மேலே ஏறிச்சென்று உறுதிப்படுத்தியுள்ளனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
அண்மையில் வந்துள்ள இன்னொரு பரபரப்பான புதுச்செய்தி- மாமன்னன் இராசராச சோழனின் கல்லறை உடையாளூரில் இருப்பதாகவும் அங்கு ஒரு நினைவுச்சின்னம் எழுப்பவேண்டுமென்றும் சிலர் குரல் எழுப்பி வருகின்றனர். இதேபோல மாமன்னன் இராசேந்திரனின் கல்லறை செய்யாறு அருகே நாட்டேரி பிரம்மதேசத்தில் இருப்பதாக வலையொளியில் படத்துடன் பரப்பிவருகின்றனர். இவையெல்லாம் சிலரின் சுய ஆதாயம் கருதிச் செய்யப்படும் ஆதாரமற்ற பொய்ச்செய்திகளே என்று இதனை ஆய்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அறிவியல் துறைகளிலும் சில தவறான செய்திகள் பெரும்பாலான மக்களால் நம்பப்பட்டு வருகின்றன. அல்சர் என்ற குடற்புண்ணுக்கு நாள்பட்ட மன அழுத்தமும், கார உணவு உண்பதுமே முக்கிய காரணங்களாகப் பலரால் கருதப்பட்டு வந்தன. ஆனால் இவற்றைவிட எச். பைரோலி( Helicobacter Pylori) என்ற நுண்ணியிரியே குடற்புண்ணுக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுபோல மாதவிடாய் நேரத்தில் உறவுகொண்டால் குழந்தை பிறக்காது என்பதும் மார்பகப் புற்றுநோய் ஆண்களுக்கு வராது என்பதும், முடியை வெட்டினால் வேகமாக வளரும் என்பதும், இறந்த பின்பும் முடி வளரும் என்பதும் பொதுவாக நம்பப்படும் தவறான செய்திகளாகும்.
அரணை நக்கினால் அரைநிமிடத்தில் மரணம் என்ற பழமொழியால் அரணையைக் கண்டு பலரும் பயந்து நடுங்குகின்றனர். தமிழ்க்களஞ்சியமான அபிதான சிந்தாமணி ’இதன் கடி கெடுதி என்பர். அரணை கடித்தால் மரணம் என்பர்’ என்று குறிப்பிடுகிறது. ஆனால் அரணை கறுப்பு எறும்பை விடச் சாதுவானது. நஞ்சற்றது. நம் வீட்டுச் சுவரெல்லாம் மேயும் பல்லியைவிட அரணை ஒன்றும் ஆபத்தானது அன்று. சென்னைக் கிண்டிப் பூங்காவில் பாடம் செய்யபட்ட அரணையைப் பாட்டிலில் அடைத்துவைத்து அதனடியில் ‘யாருக்கும் தீமை செய்யாத நஞ்சற்ற அரணையைப் பற்றிய அச்சம் அவசியமற்றது’ என்று பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வண்ணம் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று பாட்டிலும் ஏட்டிலும் சொல்லப்படுவதும் உண்மையன்று. இதுவரை அறிந்த அறிவியலின்படி மனிதனுக்கும் குரங்குக்கும் பொதுவான ஓர் உயிரினம் இருந்து அதன் ஒரு பிரிவிலிருந்தே மனிதன் தோன்றியதாகத் தெரிகிறது. இந்த உயிரினத்தின் படிமத்தை ஜெர்மனியில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதற்கு ஐடா என்று பெயரிடப்பட்டுள்ளது. அது மனிதனையும் குரங்கினத்தையும் இணைக்கும் முன்னோராக இருக்கலாம் என்று நம்பபடுகிறது. அதே போல லூசி என்ற இறந்த பெண் உயிரினத்தின் படிமமும் எத்தியோப்பியாவில் கண்டறியப்பட்டது. அதன் முகம் குரங்கின் தோற்றத்தையும் மனிதனின் உடலமைப்பையும் கொண்டிருந்தது. இந்த லூசி, ஐடாவிலிருந்து பரிணமித்து வந்திருக்கலாம் என்று கருதுகினறர். மற்ற உயிரினங்களைப்போல குரங்கும் நம் உறவினரே அன்றி நமக்குப் பாட்டானர் அன்று என்பதே ஆய்வாளர்களின் கருத்தாகும்.
தவறாக உலாவரும் தகவல்களை ஆய்ந்து உண்மைகளை வெளிப்படுத்த கூகுள் நிறுவனம் டேட்டா லீட்ஸ்,
இன்டர் நியூஸ், பூம் லைப், ஃபர்ஸ்ட் டிராப்ட் போன்ற நிறுவனங்களுடன் கைகோத்துள்ளது. போலியான செய்திகளைக் கண்டறிய இந்தியாவில் பயிற்சி வகுப்புகளையும் நடத்திவருகிறது.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் / எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள்: 355, 423) என்று வள்ளுவர் கூறும் தமிழ் அறம் உண்மையறிய நமக்குச் சிறந்த வழிகாட்டியாகும்
கேட்கும், பார்க்கும், படிக்கும் செய்திகளை அப்படியே ஏற்பதும், அது நமக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக அதன் உண்மை தன்மை அறியாது அப்படியே அதனைப் பிறர் மீது வாந்தியெடுப்பதும் நிறுத்தப்படவேண்டும்.
பகுத்தறிவும், அறிவியல் பார்வையுமே நம்மை மெய்ப்பொருள் காணச்செய்து உண்மையே நோக்கி இட்டுச்செல்லும். உண்மையே வெல்லும்! (அடுத்த இதழில்: சாகாமை சாத்தியமா?)
(தொடர்பிற்கு மின்னஞ்சல்: ejsundar@gmail.com)